அழகிய
வண்ணங்களும் அபாயச் சின்னங்கள் ஆகிப் போயினவே!!!
“சார் இவன் என்னை புடிச்சி தள்ளி விட்டு என் பேகை கிழிச்சிட்டான் சார்“ என்றொரு வழக்கு
“நீ எந்த ஊரு?“ தலைமையாசிரியர்
“--- சார்“
“எந்த தெரு?“
“---தெரு சார்“
ஒரு
முடிவுக்கு வந்தவராய் அந்த வழக்கின் விசாரணையை அந்த பையனின் சாதியைச் சார்ந்த ஆசிரியரை அழைத்து விசாரிக்குமாறு பணித்தார்.
இந்த அவலம் நான் பணியாற்றிய பள்ளியில் நடந்தது. ஆனால் அந்த தலைமையாசிரியர் வருவதற்கு முன்னரே அவரின் பயத்தையெல்லாம் அர்த்தமற்றதாக்கி வைத்திருந்தோம்.
நான் பணியேற்ற புதிதில் வழக்கு விசாரணையானது மேலே உள்ள தோரணையில் ஆரம்பிக்கும். பையன் ஒரு ஊரின் பெயரை சொன்னதுமே சிறு கண்டனத்துடன் தள்ளுபடி செய்யப் படும்.
ஆசிரியர்களின் பயம் மாணவனின் எதிர் காலத்தை சீரழிக்கும் நச்சு விதை என்பதை ஏனோ பாவம் பெரும்பாலான ஆசிரியர்கள் உணர்வதே இல்லை.
2002
ம் ஆண்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் உட்கோட்டை பள்ளியில் இந்தமாதிரி ஊர் பேரைக்கேட்டு வழக்கை தள்ளுபடி செய்யும் வழக்கம் ஒழிந்தது. இதனால் ஓரிரு முறை மாணவர்களின் வசவுகளை காதுபடக் கேட்க நேரிட்டது. ஆனால் ஊரின் பெயர் நமக்கு பாதுகாப்பு என்ற ரீதியில் மாணவர்கள் எதற்கும் துணியும் மனப்பான்மை துடைத்து எரியப்பட்டது. இப்போதும் அந்த ஊர் மாணவர்கள் வேறெந்த மாணவர்களைக் காட்டிலும் என்பால் பேரன்பு உடையோராகத் திகழ்கின்றனர்.
பெயரின் பின்னால் வடநாட்டினர் சாதிப் பெயரை சேர்த்துக் கொண்டு இருந்த அதே வேளையில் பெயரின் பின்னால் இட்டுக் கொள்ளும் சாதிப் பெயரானது நல் விருந்தின் ஓரத்தில் வைக்கப்பட்ட மலமாக எண்ணி அருவருப்புடன் அதை கைவிடச் செய்தவர் பெரியார். என்னதான் சாதிப் பற்றும் ஈடுபாடும் இருந்தாலும் பெயரின் பின்னே சாதிப் பெயரை இட்டுக் கொள்ள தமிழகத்தில் எவரும் தயாரில்லை.
ஆனால் இப்போது பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒரு பழக்கம் நாகரிகப் போர்வையில் நுழைந்து கொண்டு வருகிறது. தன் சாதிக் கட்சி அடையாள வண்ணத்தை கைகளில் பட்டையாக அணிந்து வருவது, சாமிக் கயிரு போல பின்னி வருவது மற்றும் கைக்குட்டையாக எடுத்து வருவது என்று விஷ விருட்சமாக வளர்ந்து வருகிறது.
பட்டையை கழட்டச் சொன்னால் நம்மை அந்த சாதிக்கு எதிரானவன் என்ற கருத்து வந்து விடுமோ என்ற பயத்தில் ஆசிரியர்கள் சிலர் வாலாவிருந்து விடுகின்றனர்.
(அடியேன்
கூட சக ஆசிரியரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டேன். அவர் பார்க்கும் போதெல்லாம் நான் சாராத ஆனால் அவர் சார்ந்த பட்டையை கழட்டியிருக்கிறேன் தற்செயலாக, விளைவு இவர் இவர்களின் பட்டையை மற்றும் கழற்றும் சாதி வெறி பிடித்தவர் என்று தவறாக புரிந்து கொள்ளப் பட்டேன்)
பட்டைதானே இருந்து விட்டு போகட்டுமே அதிலென்ன தவறு என்று நினைக்கலாம். பட்டை அணிய ஆரம்பித்த பின்னர் மாணவர்கள் வண்ண வாரியாக குழுவாக செயல் படுகின்றனர்.
சென்ற ஆண்டில் தனிப்பட்ட வயதுக்குரிய எதிர் பாலின் ஈர்ப்பு சார்ந்த போட்டியை சாதி விவகாரமாக ஆக்கிவிட்டார்கள். சரியான நேரத்தில் அது விசாரிக்கப் பட்டு பிரச்சனையின் சாதியப பரிமாணம் தவிர்க்கப் பட்டது.
பேருந்துகளில் மோதிக் கொள்ளும் நேர்வுகளின் போது அடையாளத்தை பாதுகாப்பு கவசமாக நினைக்கிறார்கள்.
பள்ளிக் கல்லூரி காலங்களில் சாதி வேறுபாடில்லாமல் “மாமா“ “மச்சான்“ என்று பழகியதெல்லாம் பழங்கதை ஆகி விடும் போல தெரிகிறது. “மாமனையும்“ “மச்சானையும்“ சொந்த சாதிக்குள்ளேயே தேடிக் கொள்கிறார்கள்.
திராவிடக் கட்சிகளில் இட ஒதுக்கீடு போல சாதிய பிரதிநிதித்துவம் வழங்கப் படாத காரணத்தால் சாதிக்கு என்று தனிக் கட்சிகள் தோன்ற ஆரம்பித்தன. அவை தங்கள் அரசியல் வளர்ச்சிக்கு வெறுப்பைத் தூண்டிவிட்டு அரசியல் செய்கின்றன.
மத அரசியலும் சரி சாதி அரசியலும் சரி அவை தங்களின் வளர்ச்சிக்கு உரமாக பாமர மக்களின் மனதில் வெறுப்பை தூண்டி அதன் விளைவாக ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தங்களின் கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
நம்மிடையே வசித்து வரும் கிருஸ்த்துவ மற்றும்
இஸ்லாமிய மக்கள் என்ன வேறு தேசத்தில் இருந்தா வந்தார்கள். அவர்கள் ஏற்கனவே அணிந்திருந்த உள்ளாடை சவுகரியமாக இல்லாத காரணத்தினால் வேறு ஒரு உள்ளாடை அணிந்து கொண்டனர். அதன் காரணமாக அவர்கள் பால் வெறுப்பு ஏற்படலாமா? நான் அணிந்து உள்ள அதே உள்ளாடை தான் என் நண்பனும் அணிய வேண்டும் என்று வற்புறுத்துதல் தகுமோ?
மக்கள் அனைவரும் நட்புறவோடு தான் பழக எண்ணுகிறார்கள். அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக விளைவுகளை பற்றி எண்ணாமல் தங்களின் நெருப்பை கக்கும் வெறுப்பு வார்த்தைகளால் ஒற்றுமைக்கு தீ வைக்கிறார்கள். அது பற்றி எரியும் போது குளிர் காய்கிறார்கள். மேலும் அது அணைந்து போகாமல் பாதுகாக்கிறார்கள்.
பணக்கார மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இந்த பிரச்சனை இல்லை. பணக்காரர்கள் மத்தியில் சாதியே இல்லை. ஏழை எளியோர் தான் இலகுவாக உணர்ச்சி வசப் படுவார்கள். அதனால் அவர்களை அக்கினிக் குஞ்சுகளாக வளர்த்து தங்கள் சுயலாபத்திற்கு பயன் படுத்திக் கொள்ள சாதிக் கட்சிகளும் மதக் கட்சிகளும் எண்ணுகின்றன.
மாணவர்களை இந்த விளையாட்டில் பலிகடாவாக ஆக விடாமல் பாதுகாக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. சாதிப் பாசத்தை விடாமல் பிடித்துக் கொண்டு உள்ள மாணவர்களிடம் உட் சாதி தீண்டாமை பற்றி கூறுங்கள். சாதிகள் ஒன்றாக இருந்தாலும் ஏழையை ஏற்க பணக்காரன் தயாராக இல்லை. அனைத்து சாதியிலும் காணப்படும் ஒரே ஒற்றுமை ஏழை பணக்காரர் இடையே ஆன நவீன தீண்டாமைதான். அப்படியே ஏற்றாலும் ஏதேனும் ஒரு சுயலாபம் இருக்கும். முடிந்தவுடன் “கை கழுவி“ தீட்டு கழித்து விடுவார்கள்.
No comments:
Post a Comment