Saturday, April 27, 2024

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை
ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்டும்" என்று தொண்டை நரம்பு புடைக்க சொல்வார்கள். ஆனால் சிஸ்டம் என்றால் என்ன என்கிற தெளிவு பெரும்பாலும் இருப்பதில்லை. முக்கியமாக "நாம் எவ்வளவு மோசமான கட்டமைப்பை வைத்திருந்தாலும் ஒரு நல்ல ஆசிரியர் ஒருவர் இருந்தால் அந்த மோசமான கட்டமைப்பிலும் மிகச்சிறந்த மாணவர்களை அவரால் உருவாக்கி காமிக்க முடியும் என்று ஏற்கனவே அறிந்த உண்மையை இந்த நூலின் வழியாக மீண்டும் கண்டு கொண்டேன். இந்த நூல் முக்கியமாக ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளும் அனைத்து மாணவ ஆசிரியர்களுக்கும் பாடமாக வைக்கப்பட வேண்டும் . ஆசிரியர் பயிற்சி எடுத்துக் கொள்ளும் மாணவர்களுக்கு நாம் எதை சொல்லித் தருகிறோமோ இல்லையோ அவர்களது டீச்சிங் ஆட்டிட்யூட் வளர்த்துக் கொள்வதற்கு நல்ல பல புத்தகங்களை பரிந்துரை செய்ய வேண்டும். அந்த புத்தகங்களை அவர்கள் நன்கு உள்வாங்கிக் கொண்டு உள்ளார்களா என்பதையும் சோதித்து அறிய வேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் சிலர் பி எட் பட்டங்களை "வாங்கி" விடுகிறார்கள் கேட்டால் Irregular Mode என்கிறார்கள். இந்த நூலுக்கு முன்னுரை எழுதி இருப்பவர் சா மாடசாமி அவர்கள். தனது முன்னுரையில் மாடசாமி அவர்கள் "ஆசிரியர்களே தேவையில்லை என்று ரூசோ சொன்ன அதிரவைக்கும் வாக்கியத்தோடு நூல் தொடங்குகிறது ஆனால் ஆசிரியர் வகுப்பறையின் பிராணவாயு என்கிற இவனோவ் கருத்தை நோக்கி நூல் நகர்கிறது" என்கிறார். நான் முன்பு குறிப்பிட்டது போல ஒரு பள்ளியின் கட்டட மற்றும் தளவாட வசதிகளையும் அப்பள்ளி அமைந்துள்ள சமூகப் பொருளாதாரச் சூழல்களையும் கடந்து தனிமனித ஆசிரியர் பங்களிப்பு கல்வித்தரத்தை பெருமளவு உயர்த்த முடியும் என்பது தான் இந்த நூலின் அச்சாணி. இந்த கருத்தை அனைவரும் அடிக்கோடிட்டு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நூலில் நான் தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்ட ஒரு தகவல் என்னவென்றால் ரஷ்ய கல்வியாளர் ஆண்டன் மகரன்கோ என்பவர் தான் பள்ளிகளில் பிஇடி பீரியட் என்ற ஒன்று உருவாக காரணமானவர். ஆம், 1920 க்கு பிறகு தான் விளையாட்டு பாடவேளை பள்ளிக்குள் வந்தது. அவருடைய புகழ்பெற்ற வாசகம் "குழந்தைகளோடு விளையாடு ஒரு போதும் விளையாட்டை வழிநடத்தாதே" புத்தகத்தின் முதல் பகுதி முழுவதும் பல்வேறு நாடு மத இன குழு குழுக்களில் கல்வி என்பது எப்படி எல்லாம் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை மிக விரிவாக அலசுகிறது. இரண்டாவது அத்தியாயத்தில் தான் நூலின் தலைப்பான இது யாருடைய வகுப்பறை தொடங்குகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலம் தொட்டு ஒவ்வொரு முறையும் கொண்டுவரப்பட்ட கல்வி கொள்கைகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறார். கல்வித்துறை சார்ந்த அனைத்து அலுவலகங்களும் அமைந்துள்ள வளாகம் DPI வளாகம் என்று அழைக்கப்படுகிறது அதில் டிபிஐ என்பது DEPARTMENT OF PUBLIC INSTRUCTIONS என்பதை குறிக்கும் அதாவது கல்வி என்பதை போதனை என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ஆங்கிலேய அரசு கல்வியை போதனையாய் மாற்றி வெறும் கவனிப்பவராக அடிபணிபவராக மாணவர்களை வைத்தது என்கிறார். ஆங்கிலேயர்கள் வந்தது வந்தபின் கல்வி அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஒன்றாக விரிவுபடுத்தப்பட்டது என்று நாம் சிலாகித்தாலும் கூட அவர்கள் என்னவோ அவர்களுக்கு தேவையான எழுத்தர் போன்ற பணிகளுக்கு உகந்தவாறு மட்டுமே கல்வியை இங்கே கட்டமைத்து உள்ளனர். அதனால்தானோ என்னவோ இன்று வரை நாம் சேவகர்களை மட்டுமே உற்பத்தி செய்து கொண்டுள்ளோம். ஒருபோதும் முதலாளிகளையோ பெரிய விஞ்ஞானிகளையோ அதிக அளவில் உருவாக்க வில்லை. மூன்றாவது அத்தியாயம் சற்று சுவாரசியமான தலைப்போடு "உங்களுக்கு அறிவியல் தெரியும் ராமலிங்கத்தை தெரியுமா?!" நான் கூட ஏற்கனவே ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கிறேன் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தார்கள் என்றால் அந்த 50 மாணவர்களுக்கும் 50 விதமான முகங்களை ஆசிரியர் கொண்டிருக்க வேண்டும் அதாவது தனியாள் வேறுபாடு அறிந்து அனைவரையும் அரவணைத்தும் அனைவருக்கும் கல்வி சென்று சேரும் வகையிலும் ஆசிரியர் போதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை தான் ராமலிங்கத்திற்கு அறிவியல் நடத்த வேண்டிய ஆசிரியர் ராமலிங்கத்தின் சமூக பொருளாதார பின்னணி குறித்து தெள்ளத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்கிற பொருளில் எழுதியுள்ளார். மதிப்பீட்டு முறை என்பது மாணவர்கள் கல்வி கற்றுள்ள அளவினை அறிந்து கொள்ள உருவாக்க உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறை ஆனால் தற்போதைய நமது கல்வி கட்டமைப்பில் ஒட்டுமொத்த கல்வியும் அந்த தேர்வு என்ற ஒன்றையே சுற்றி சுற்றி ஓடி வருகிறது என்றால் அது மிகையாகாது. நூலாசிரியர் இதையே ஆசிரியர் என்பவர் யார் என்ற கேள்விக்கு மூன்று பதில்களாக கொடுத்துள்ளார். 1. ஒன்று தேர்வுக்கு பயிற்றுவிற்பவர். 2. தேர்வு கண்காணிப்பாளர். 3. தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டாளர் ஆமாம், மேல்நிலை வகுப்புகளைப் பொறுத்த வரையில் பார்த்தோம் என்றால் மொத்த வேலை நாட்களில் ஜூன் முதல் நவம்பர் வரை மட்டுமே பாடங்களை போதிக்கிறோம். அதன்பிறகு டிசம்பர் துவங்கி மார்ச் வரையில் தொடர்ந்து தேர்வுகளை வைத்து விடைத்தாள் திருத்தி மீண்டும் தேர்வுகளை வைத்து விடைத்தாள் திருத்தி பொது தேர்வுக்கு மாணவர்களை கூர்மைப்படுத்துகிறோம் அதாவது மொத்த வேலை நாட்களில் 40 விழுக்காடு நாட்களை தேர்வை நோக்கி மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி என்றால் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட அந்த நூல்களின் உள்ள பாடப்பொருளை வெறும் ஐந்து மாதங்களில் நடத்தி விட முடியுமா இந்த ஒரு விஷயம் போதும் நாம் எந்த அளவுக்கு தேர்வினை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள. நான்காவது தலைப்பு சற்றே அதிர்ச்சிகரமான தலைப்பு "வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது" கும்பகோணம் தீ விபத்து சம்பவங்களின் போது சம்பவத்தின் போது ஆசிரியர் வாயில் கை வைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் என்று சொல்லிச் சென்ற கட்டளையை நிறைவேற்றும் வண்ணம் வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்த அந்த நிலையிலும் மாணவர்கள் எழுந்து ஓட முயற்சிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்திருக்கிறார்கள் சில குழந்தைகள் வாயில் கை வைத்த வண்ணமே கருகி இருந்து இருக்கிறார்கள் என்றெல்லாம் கூட ஆசிரியர் கூறி இருக்கிறார். அதாவது நமது கல்வி முறையில் மாணவர்களை எந்த அளவுக்கு ஒழுக்கம் என்ற பெயரில் அடக்கி ஒடுக்குகிறோம் என்று சற்று காட்டமாக இந்த அத்தியாயத்தில் கூறியிருக்கிறார். பள்ளிகளில் பிரதானமாக நாம் கடைப்பிடி கடைபிடிக்கும் பல மரபுகளை விதிகள் என்கிற அடிப்படையில் இங்கிலாந்து சேர்ந்த கல்வியாளர்கள் ஆயிரக்கணக்கான பள்ளிகளையும் வகுப்பறைகளையும் ஆய்வு செய்து பட்டியலிட்டு உள்ளனர் அதில் மொத்தம் 4,184 விதிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது இவற்றை தொகுத்த போது உலகத்தில் உள்ள மிக நீண்ட அரசியல் சட்டமான இந்திய அரசியல் சட்டத்தில் கூட இத்தனை ஷருத்துகள் இல்லை என்று வியந்து போகிறார். நூலாசிரியர் பொருளாதாரம் பகூறி பல நுணுக்கமான வியக்க தக்க உண்மைகளை அங்கங்கே கூறியுள்ளார். ஆத்தர் ஜோன்ஸ் ஸ்டீபன் ஆல்பர்ட் போன்ற சமூக விஞ்ஞானிகள் லட்சக்கணக்கான குடும்பங்களின் மீது நடத்திய ஆய்வுகளின் முடிவில் அதீத உற்பத்தி தொழில்துறையின் புதிய முகவரியாய் மாறியபோது ஒரு வீட்டிற்கு ஒரு டிவி எனும் நிலையை உடைத்து அதே நான்கு சிறு குடும்பங்களுக்கு ஒரு டிவி பிரிட்ஜ் என்று விற்க வேண்டிய சந்தை நிர்பந்தங்களுக்காக கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனித்தனி குடும்பங்களாக பிரிந்திருக்கும் நுணுக்கத்தை சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஒரு அசாதாரண வளர்ப்பு செல்லப்பிராணியாக பாவிக்கின்றனர். உதாரணமாக என் வீட்டு நாய் குட்டிக்கரணம் அடிக்கும் பூனை தலைகீழாய் நடக்கும் எங்கள் வீட்டு கிளி பேசும் என்பது போல ஒரு குழந்தையை பாட வைப்பது கராத்தே வீணை வகுப்பு ஹிந்தி கிளாஸ் என தொடங்கி கல்விக்கான நேரம் போக மீதியை குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் குதூகலமாய் விளையாட அனுமதிக்காமல் உருப்படியாய் எதையாவது கற்க பணம் செலவழித்து உற்றார் உறவினரிடம் என் குழந்தைக்கு இந்த விஷயங்கள் தெரியும் என பிரஸ்தாபிப்பது வெளிப்படையான சமூக அம்சமாக இன்று மாறி உள்ளது. தங்கள் குழந்தைகளை இன்று வீட்டின் ஆடம்பர அலங்கார அழகு சாதனமாக கருதுகிறார்கள். RTE சட்டம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்த காரணிகளையும் அந்த சட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும் ரொம்ப மிகவும் தெளிவாக ஆசிரியர் கூறியுள்ளார். குழந்தைகளின் குரலுக்கு செவி மடுக்காத வகுப்பறை பற்றி மிகவும் காத்திரமாக நூலாசிரியர் கூறியுள்ளார் "குழந்தைகளின் குரலுக்கு செவி மடுக்காத வகுப்பறைகள் சவக்கிடங்கை விட உயிரற்றதாக போர்க்களத்தை விட வன்முறை மிக்கதாகவே இருக்க முடியும்" என்கிறார். "தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005" (NCF2005) ஆவணம் பற்றி எத்தனை ஆசிரியர்களுக்கு தெரியும் என்று நூலாசிரியர் ஆதங்கப்படுகிறார். யஷ்பால் கமிஷனின் ஐந்து கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1. பள்ளிக்கு வெளியில் உள்ள வாழ்க்கையை பள்ளியறிவோடு தொடர்பு படுத்துவது. 2. கற்றலை பொருள் உணர மனப்பாட முறையில் இருந்து மாற்றுவதை உறுதி செய்வதோடு புரிந்து கற்றலை முன் வைப்பது 3. பாட நூல்களுக்கு அப்பாற்பட்டு படிக்கும் வகையில் கலைத்திட்டத்தை பெருமைப்படுத்துவது 4. தேர்வு முறைகளை மேலும் நெகிழ்வாக்குவதுடன் வகுப்பறையில் செயல்பாடுகளின் மூலம் புதிய வகை மதிப்பிடுதல் முறையை முன்மொழிவது. 5. நாட்டின் ஜனநாயக பன்முகத் தன்மைக்கு உட்பட்டு புறக்கணிக்கப்பட்ட தனித்துவங்களை அக்கறையோடு வளர்த்தெடுத்தல். இந்த ஐந்து விஷயங்கள் தான் தேசிய கலைத்திட்ட வடிவமைப்பின் மிக முக்கிய முதுகெலும்பாகும். உங்கள் வாழ்நாளில் நீங்கள் அறிந்த ஒரு நல்லவரை குறிப்பிடுங்கள் என்று சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனல் கேட்டபோது 99% ஏதாவது ஒரு ஆசிரியரின் பெயரை எழுதினார்களாம். அப்படி என்றால் ஆசிரியர்களான நாம் எவ்வளவு சமூக பொறுப்புடன் கலந்து கொள்ள வேண்டும். நான் துவக்கத்தில் சொல்லியது போல கட்டமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தாலும் ஒரு நல்ல ஆசிரியர் நல்ல மாணவர்களை உருவாக்க இயலும் என்பதை கல்வியியல் வல்லுநர்கள் ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளனர். அதில் அவர்கள் கூறிய முக்கியமான மூன்று விஷயங்கள் 1. கற்பித்தலில் ஆசிரியர் காட்டும் முழுமையான ஈடுபாடு 2. குழந்தைகள் மீதான ஆசிரியரின் நேசம் பிணைப்பு விருப்பு. 3. தன் வேலை விஷயத்தை யாருடைய கண்காணிப்பும் இன்றி முக்கிய கடமையாக கொள்ளுதல். மேற்கண்ட இந்த மூன்று சிறப்பியல்புகளோடு கற்றல் கற்பித்தலின் நுணுக்கங்கள் பாடத்தில் வல்லமை ஆகியவை இணையும் போது ஆசிரியர்கள் மிகச்சிறந்த வகுப்பறையை கட்டமைக்கிறார்கள் என்று அவர்களின் ஆய்வு முடிவு கூறுகிறது. அடுத்ததாக வாட்ஸ் அப் மூலமாக நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் உலகத்திலேயே கல்வியில் தலைசிறந்த நாடாக இருப்பது பின்லாந்து என்பதாகும். அதை நூலாசிரியர் "கல்வியின் மெக்கா பின்லாந்து" என்கிறார். அந்த நாட்டின் கல்வி முறையை பற்றி நேரடியாக தெரிந்து கொள்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் கல்வியாளர்கள் அங்கே சுற்றுலா செல்கிறார்களாம் அந்த கல்வி சுற்றுலா மூலமாக 27 விழுக்காடு அந்நிய செலாவணி அந்த நாட்டிற்கு குவிகிறது என்றால் அந்த நாட்டு கல்வி முறை மீது நமக்கு மிகப்பெரிய மரியாதை உண்டாகிறது. அங்கே 13 வயது வரை குழந்தைகளில் முதலிடம் இரண்டாம் இடம் என்கிற தரப்படுத்துதல் என்கிற விஷயம் கிடையாது. நாம் அநேகமாக அனைத்து சிற்றூர்கள் வரை கல்வியில் கணினியின் பங்கினை ஐசிடி என்று பெருமிதமாக கொண்டு சென்றுள்ளோம். ஆனால் கல்வியில் உலக அளவில் முதல் இடம் பிடித்துள்ள பின்லாந்தில் வகுப்பறைகள் இன்று வரை கணினி மயமாக்கப்படவில்லை. எத்தனை கணினி மற்ற இன்னபிற தொழில்நுட்பங்கள் வந்தாலும் ஒரு வகுப்பறையில் அற்புதங்களை ஆசிரியர்தான் நிகழ்த்த முடியும் என்பதை நம்புவதால் தான் அந்த நாடு கல்வியில் முதலிடத்தில் உள்ளது. மேலும் அங்கே ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை தாங்களே தயாரிக்கின்றனர். இங்கே உள்ளது போல ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒரே நூல் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பாடத்தினை நடத்த வேண்டும் என்பன முதற்கொண்டு இப்போது உள்ள எமிஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேல் இடத்திலிருந்து கட்டளைகள் பாய்ந்த வண்ணம் உள்ளது. பின்லாந்துக்கு அடுத்தபடியாக கியூபாவும் கல்வியில் மிகச் சிறப்பான பணிகளை செய்து கொண்டுள்ளது. கியூபாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவன் படிப்புடன் சேர்ந்து பல்வேறு பணிகளை தெரிந்து வைத்துள்ளான். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் ஒலிப்பெருக்கி பழுது பட்ட போது அங்கு வந்திருந்த ஒரு கியூபா மாணவன் தன்னிடம் உள்ள டூல் கிட் ஐ எடுத்துக்கொண்டு சென்று உடனடியாக அதனை சரி செய்தானாம். இங்கே எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள் கூட வீட்டில் பியூஸ் போனால் அவர்கள் அதை சரி செய்ய இயலாத கையறு நிலையில் தான் உள்ளனர். நான் எங்கள் ஊர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்துவார். அவர் ஒரு பாட வேளையில் அதிகபட்சமாக ஐந்து பாடங்களை முடித்து அசத்தினார். அப்படி என்ன செய்தார், வகுப்பில் தங்கு தடை இன்றி சரளமாக வாசிக்கக்கூடிய மாணவர்களை எழுப்பி பாடத்தை சத்தமாக வேகமாக வாசிக்க கூறுவார். அவர் இடையிடையே "அதான் பாரு அதான் பாரு" என்று கூறுவது தான் அந்த பாடம் குறித்து அவர் அளிக்கும் விளக்கம். இன்றைய நமது கல்விமுறையில் பெரும்பாலான இடங்களில் இந்த எடுத்துக் கூறுவது என்கிற நோய் தான் பிடித்துள்ளது. கல்வியின் கட்டமைப்பு அரசுத் திட்டங்கள் பாடத்திட்ட வடிவமைப்பு தேர்வு முறைகள் என்று என்னதான் பல வேறு விஷயங்கள் இருந்தாலும் ஒரு திறமை வாய்ந்த ஆசிரியர் தன்னைவிட திறமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கி விடுவார். என்பதுதான் இந்த நூலின் சாராம்சம் இதை புரிந்து கொண்டால் போதும் இது யாருடைய வகுப்பறை என்றால் இது மாணவர்களுடைய வகுப்பறை நல்லாசிரியர்களால் பல அற்புதங்களை நிகழ்த்த களம் அமைக்கும் வகுப்பறை என்பதை புரிந்து கொள்ள இயலும். ஆகவே இந்தியாவின் கல்வி குறித்த வரலாறை பல சான்றுகளோடு பல கல்வி குழுக்களின் சாரங்களோடு மற்றும் கல்வி உளவியல் குறித்த அறிந்து கொள்ள நிச்சயமாக இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி ஆகும்.

No comments:

Post a Comment

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...