Wednesday, May 8, 2024
வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்
சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு எழுதியது.
தினகரனில் வந்த எனது கட்டுரையின் மூலம் இதுதான்.
அவர்கள் சிறப்பாக பாலிஷ் செய்திருந்தார்கள்.
வளரிளம்பருவம் மிகவும் சிக்கலானது, பிரச்சனையை இழுத்துவரக் கூடியது, கவனமாக அணுகப் பட வேண்டியது. அதுவே இணையப் பருவமாக இருந்தால் சிக்கல்கள் அனைத்தும் இரட்டிப்பாகிவிடுகிறது.
ஆசிரியரை மையத்தில் வைத்து சுற்றி வந்து கும்மியடிக்கும் மேல்நிலை வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்கள். ஆசிரியரை தகாத வார்த்தைகள் கொண்டு கோபத்தோடு திட்டும் மாணவன். ஆசிரியர் வகுப்பில் பாடம் எடுக்கும் வேளையில் கடைசி பெஞ்சில் நடனமாடும் மாணவன். வகுப்பறைக்குள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் மாணவர்கள். பள்ளி தளவாடங்களை உடைக்கும் மாணவர்கள். ஏறினால் ஜெயில் இறங்கினால் பெயில் என்று கூறும் உயர்நிலை வகுப்பு மாணவன்.
இன்னும் ஏராளமான காணொலிகள் இணைய வெளி எங்கும் கொட்டிக் கிடக்கின்றன, பார்க்கப் படுகின்றன பதற்றத்தோடு பகிரப்படுகின்றன.
இந்த சம்பங்கள் எவ்வாறு காணொலிகளாக மாறின என்று சிந்தியுங்கள்.
கொரானா கற்றல் இடைவெளியை சரிசெய்ய கல்வித் தொலைக்காட்சியை வலுப்படுத்தியதோடு நில்லாமல் வாட்சாப் வகுப்புகளை கல்வித்துறையே ஊக்குவித்தது. பொருளாதார சமநிலை என்கிற ஒன்றே இல்லாத சமூகத்தில் தொடுதிரை போன், டேட்டா மற்றும் வாட்சாப் என்கிற செலவுபிடிக்கும் சமாச்சாரங்களை ஏழை மாணவன் உள்ளிட்ட அனைவரிடமும் திணித்திருக்கிறோம்.
கல்விக்கென்றே பிரத்தியேகமாக ஒற்றைச் செயலி தொடுதிரைக் கருவியை வடிவமைத்திருக்க வேண்டும். மாறாக, நல்லதும் கெட்டதும் கொட்டிக் கிடக்கும் இணையவெளிக்கு நல்லது எது கெட்டது எது என பிரித்தறிய இயலா வளரிளம் பருவத்தினரை கை பிடித்து அழைத்துச் சென்று விட்டிருக்கிறோம்.
வளரிளம் பருவ மாணவர்களுக்கு தினந்தோறும் இருபது ரூபாய் பாக்கெட் மணி கொடுத்துவாருங்கள். அவர்கள் தீனி வாங்கித் தின்னுவது என்பது அதிகபட்சம் ஒரு மாதம் வரை நடக்கலாம். அதன் பிறகு வேற என்ன வேற என்ன என்கிற பரவச தேடுதல் அவர்களை வேறு வேறு விஷயங்களை நோக்கி அழைத்துச் செல்லும். விளைவு, புகைபிடித்தல் புகையிலை பொருட்களை பயன்படுத்துதல் என்று படிப்படியாக “முன்னேறுவார்கள்“.
அதுபோலத் தான் இணையவெளியை பயன்படுத்தும் வளரிளம் பருவத்தினரும். மொபைலுடனான தங்களது தருணங்களை எப்படியெல்லாம் சுவாரசியமானதாகவும் பரவசமானதாகவும் மாற்றலாம் என்று தொடர் தேடுதலில் ஈடுபடுகிறார்கள்.
கெடுவாய்ப்பாக அவர்களைவிட வயதில் மூத்த கல்லூரி மாணவர்கள் தங்களை சாகசக்காரர்களாக காண்பிக்க எண்ணி புதிய புதிய விஷயங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள். இந்த கட்டுரையில் ஏன் இதெல்லாம்? “ஒரு வைரல் வீடியோவில் தானே கதாநாயகனாக இருந்தால் என்ன?” என்கிற அடுத்த லெவல்தான் இந்த சேட்டைகள்.
இதெல்லாம் ஒழுக்க கேடு அல்லவா? இளம் தலைமுறையினர் கெட்டுக் குட்டிச் சுவராகிப் போவதைக் கண்டும் வாளாவிருப்பதா என்று நமக்கு ரத்தம் கொதிப்பது இயல்புதான். ஆனால் சிந்தித்து பார்த்தால் இதுபோன்ற ஒழுக்க கேடு அங்கொன்றும் இங்கொன்றும் என காலந்தோறும் நடந்தே வந்துள்ளது.
பிட் அடித்தவனை பிடித்துகொடுத்த ஆசிரியரை பஸ்டாப்பில் அடித்தது. பிரம்படி கொடுத்த ஆசிரியரின் கையை பிடித்தது. திட்டிய ஆசிரியரை நெட்டி தள்ளியது. தொலைவில் இருந்து கல்லெறிந்தது இங்க் அடித்தது, ஊரில் ஆள் திரட்டி அடிக்க வந்தது என எவ்வளவோ சம்பவங்கள் நடந்துள்ளது. அதாகப் பட்டது ஆசிரியர்கள் கைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்த காலகட்டத்தில் நடந்துள்ளது.
இணையத்தில் வைரல் ஆவதால் அனைவருடைய பாக்கெட்டுக்கும் இந்த காணொலிகள் வழிகேட்டு வந்தடைந்துள்ளன. எனவே 90 விழுக்காடு அரசுப் பள்ளிகளில் இந்த மாதிரி சம்பவங்கள் அரங்கேறுவது போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. இணையப் பரவலை தவிர்த்து விட்டு பார்த்தால் எப்போதும் போல அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தேறும் தகாத செயல்கள் தான் இவை.
இந்த காணொலி பரவலில் ஒரு பேராபத்து ஒளிந்துள்ளது. பரவும் காணொலிகள் யாவுமே அரசுப் பள்ளிகளில் படம் பிடிக்கப் பட்டவை மட்டுமே. அரசுப் பள்ளி மாணவர்கள் யாவரும் ரவுடித்தனம் செய்பவர்கள், முரட்டு சுபாவம் உள்ளவர்கள் மற்றும் கெட்டவர்கள் என்பது போன்ற தோற்றம் பொது சமூகத்தின் எண்ணத்தில் பதிய வைக்கப் படப் போகிறது. கௌதம் மேனன் தனது அடுத்த படத்தில் ஊதா நிற கட்டம் போட்ட சட்டை போட்டவனை வில்லனாக காட்டக்கூடும்.
விலையில்லா புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள், உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், ரோபோட்டிக் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை பயில வாய்ப்பளிக்கும் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், சிறப்பான காற்றோட்டம் மிக்க வகுப்பறைகள், கழிவறைகள் இவற்றுக்கெல்லாம் மேலாக கடுமையான தேர்வுகளை எதிர்கொண்டு வென்ற திறன் மிக்க ஆசிரியர்கள் என சிறப்பான கட்டமைப்போடு சமீப காலமாக ஏராளமான மாணவர்களை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி திருப்பியுள்ளது.
இவ்வளவு வலுவான கட்டமைப்பில் ஒரு ஓட்டையை போட்டு அனைத்தையும் பாழ்படுத்த இந்த வைரல் வீடியோக்கள் போதுமானதாக உள்ளது. அதற்குள்ளாகவே “நான் ஏன் எனது மகனை தனியார் பள்ளியில் சேர்க்கப் போகிறேன்“ என்றெல்லாம் முகநூலில் எழுதத் துவங்கிவிட்டார்கள்.
இந்த தோற்ற மயக்கத்தினால் ஏழை எளிய மக்களும் பிள்ளைகளின் எதிர்காலத்தோடு சமரசம் செய்தலாகாது என்றெண்ணி சக்திக்கு மீறி செலவை இழுத்துக் கொண்டு தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அழைத்துக் கொண்டு செல்லத் துவங்குவார்கள்.
நடனமாடுபவனோ, ஆசிரியரை அடிக்கப் பாய்பவனோ அல்லது தகாத வார்த்தைகளை ஆசிரியர்களை நோக்கி வீசுபவனோ ஒரே நாளில் இந்த செயலை அரங்கேற்றுவது கிடையாது. அவன் தனது அத்துமீறலை படிப்படியாக செய்து பார்த்து அடுத்தடுத்த நிலையை எட்டுகிறான்.
முதலில் தலையை கரண்டிக் கொண்டு வருவது, கைகளில் சாதி அடையாளக் கயிறு கட்டுவது, ஆசிரியர் கடந்து செல்லும் போது பொருட்படுத்தாமல் தங்களுக்குள் கெட்ட வார்த்தைகளை பேசிக் கொள்வது, ஆசிரியர்கள் பேசுவதை அலட்சியப் படுத்துவது, கண்டிக்கும் போது முறைப்பது அல்லது எதிர்த்து பேசுவது என்று படிப்படியாக உருவாகிறான். இத்தனைப் படிகளிலும் அவனை கேள்விகேட்காமல் நல்வழிப் படுத்த முனையாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்து விட்டு நிலமை கைமீறிப் போகும் போது கைகளை பிசைந்து கொண்டு நிற்பது ஏன்?
நான் அறிந்தவரை ஆசிரியர்களிடம் தான் கையாளும் வகுப்பினை தாண்டி ஒழுக்கம் சார்ந்து ஒரு மாணவனை கேள்வி கேட்க தயக்கம் உள்ளது.
இரண்டு மாணவர்கள் தனது கண்முன்னால் அடித்துக் கொள்ளும் போது அந்த புழுதி தனது ஆடைகளை அழுக்காக்கிவிடக் கூடாதே என வேகமாக கடந்து செல்லும் ஆசிரியர்கள் உள்ளனர்.
வளரிளம் பருவ மாணவர்கள் காதுகளில் படுமாறு தான் முந்தைய நாள் மது அருந்திய அனுபவத்தை சிலாகித்து கூறும் ஆசிரியர்களைக் கண்டுள்ளேன். இவ்வளவு ஏன் மாணவனை அனுப்பி மது வாங்கிவரக் கூறும் ஆசிரியர்கள் கூட உண்டு.
அடுத்து இந்த குழுக் கலாச்சாரம். பத்து ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் கூட ஐந்துக்கும் மேற்பட்ட குழுக்களாக ஆசிரியர்கள் செயல்படுவது சாதாரணம். ஒரே ஆசிரியரே ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப செயல்படுவதுண்டு. இந்த குழுக்களுக்கு இடையே எப்போதும் வெடிக்கத் தயாராகும் எரிமலை கனன்று கொண்டே தான் இருக்கும்.
தலைமையாசிரியர்களும் ஏதாவது ஒரு வலிமையான குழுவில் ரகசியமாக தன்னை இணைத்துக் கொண்டு நிர்வாக ரீதியாக காரியங்களை எளிதாக்க எண்ணுவதுண்டு. இந்த குழுக் கலாச்சாரத்தில் மாணவர்களை உள்ளே இணைத்துக் கொண்டு செயல்படும் போது நிலவரம் கலவரமாகி பள்ளியின் வளர்ச்சியை முற்றிலும் முடக்கிப் போட்டுவிடுகிறது.
பள்ளி மாணவனைப் பற்றிய செய்தி வந்து விட்டதா? ஆசிரியர்களிடம் விளக்கம் கேளுங்கள், மாணவனை சஸ்பென்ட் செய்யுங்கள் என சுருக்கமாக முடித்துவிட்டு கடந்து போகிற பிரச்சனையல்ல இது. இதனை இன்னும் விரிவாக ஆராய்ந்து அணுகி இனிமேல் எந்த பள்ளியிலும் இதுமாதிரி பிரச்சனை எழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும்.
சமீபத்தில் காணொலியில் வந்த பள்ளிகள், காணொலியில் வராவிட்டாலும் இதே போல சிக்கல்கள் நிறைந்த பள்ளிகள் இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு இந்த பள்ளிகளிடையே உள்ள ஒற்றுமையை (pattern) ஆராய வேண்டும்.
ஆசிரியர்களிடையே ஒற்றுமை உள்ளதா? இந்த செயலை யாரேனும் தூண்டிவிட்டுள்ளனரா?
அனைத்து பள்ளிகளிலும் நடப்பில் இருக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழு இது குறித்து என்ன செய்துள்ளது?
பிரச்சனையானது பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வசம் கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப் பட்டு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப் பட்டதா?
வெளியில் இருந்து மாணவரல்லாத இளைஞர்கள் குழு மாணவர்களை தவறாக வழி நடத்துகிறதா என ஆய்வு செய்ய காவல் துறை உதவி கோரப் பட்டதா?
மாணவர்கள் பிரச்சனைக்கு சாதிய பின்புலம் ஏதேனும் இருக்க முகாந்திரம் உள்ளதா?
நெறிபிறழ் நடத்தை உடைய மாணவனிடம் ஆசிரியர்கள் எவரேனும் பேசி நல்வழிப் படுத்த முயன்றனரா?
நெறிபிறழ் நடத்தையுடைய மாணவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனரா?
கற்றறிந்த கல்வியாளர்களைக் கேட்டால் இன்னும் ஏராளமான கேள்விகளை வைத்திருப்பார்கள்.
இவற்றை எல்லாம் ஆய்வு செய்து மாணவர்களைக் கையால்வது குறித்த சரியான நெறிமுறைகளை அரசே வகுத்துக் கொடுத்து இது மாதிரியான சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
அதற்குள்ளாக தம்பி படத்தில் வரும் மாதவன் போல “இப்போ நான் என்ன செய்ய?“ என்று பிரம்பினை கையில் கொடுங்கள் என்று கதற வேண்டாம்.
ஆசிரியர் மாணவனை நல்வழிப் படுத்தும் நோக்கில் அடிப்பது கூடாது என்று சட்டம் இருந்தாலும் அன்பும் அக்கரையும் மிகுந்த ஆசிரியர்கள் பிரச்சனை ஏதும் இன்றி லேசாக அடித்து திருத்தும் சம்பவங்கள் இப்போதும் நடந்து கொண்டு தான் உள்ளது என்பதை மறுக்க இயலாது.
பள்ளி மற்றும் வகுப்புகளின் அமைப்பு முறைகளும் கல்விக் கொள்கைகளும் மாறி வந்து கொண்டே தான் உள்ளன. ஆனால் ஆசிரியர்கள் மட்டும் மாணவனை மேலே தொங்க விட்டு கீழே நெருப்பு மூட்டி பாதங்களில் பிரம்படி கொடுக்கும் அந்தக் காலமே பொற்காலம் என்று சிலாகிக்கிறார்கள்.
குடும்ப அமைப்புகள் மாறி வருகின்றன, ஆசிரியர்களைப் பற்றிய பொது சமூகத்தின் எண்ணம் மாறி வருகிறது, கல்விமுறைகள் மாறி வருகின்றன அதற்கேற்ப ஆசிரியர்கள் கண்டிக்கும் நடைமுறைகளும் மாற்றம் கண்டே தீரும்.
தனக்கு சாதகமான மாற்றங்கள் அனைத்தும் உடனே நடக்க வேண்டும் பாதகமான மாற்றங்களை ஒருகாலும் அனுமதியோம் என்பது சரியா என சிந்திக்க வேண்டும்.
ஆசிரியர் சமூகம் இந்த காணொலிகளைக் கண்டு அச்சம் கொள்ளவோ நம்பிக்கையிழக்கவோ தேவையில்லை. உங்களிடம் உள்ள குழந்தைகளை அன்போடும் அக்கரையோடும் எப்போதும் போல அனுகுங்கள்.
நெறிபிறழ் நடத்தை கொண்ட மாணவர்களை கண் இமைக்கும் நேரத்தில் மாற்றி விட வேண்டும் என்று எண்ணாமல் கூட்டு முயற்சியோடு அனைவரும் கைகோர்த்தால் நிச்சயமாக மாற்றிவிடலாம். இந்தியாவின் வருங்காலத் தூண்களை செதுக்கும் சிற்பிகள் நாம் தான். வாருங்கள் நம்பிக்கையோடு உளிகளை கையில் எடுப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...
No comments:
Post a Comment