Monday, May 27, 2024

அந்த அர‌பிக் கடலோரம் 2

அந்த அரபிக் கடலோரம் -2 அனைத்து சாலைகளும் திருச்சி நோக்கி
நாங்கள் சுற்றுலாவுக்கு எர்ணாகுளம் செல்ல புக் செய்தது காரைக்கால் டு எர்ணாகுளம் விரைவு வண்டி. அரியலூருக்கும் அந்த ரயிலுக்கும் ஒட்டும் கிடையாது ஒறவும் கிடையாது. ஆகவே திருச்சியிலிருந்து புக் பண்ணி இருந்தோம். இப்போ சிக்கல் என்னவென்றால் அனைத்து நபர்களையும் திருச்சியில் சரியாக எட்டு மணிக்குள் அசெம்பிள் செய்தால் தான் எர்ணாகுளம் ரயிலை பிடிக்க இயலும். அருண், அகிலா மற்றும் நான் மூவரும் அரியலூர் காரர்கள் சித்தார்த் சென்னையில் இருந்து வேலை நிமித்தமாக அரியலூர் ஏற்கனவே வந்திருந்தான். ஆக நாங்கள் நான்குபேரும் மாலை ஐந்தரை மணி வைகை எக்ஸ்பிரஸ் பிடித்து திருச்சி செல்வதாக திட்டமிட்டுக் கொண்டோம். அகிலாவின் அக்கா கயல்விழி அதாவது சித்துவின் அம்மா சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ்ஸை சரியான நேரத்தில் பிடிக்க வேண்டும். அந்த விஷயம் தான் வயிற்றில் கிலோ கணக்கில் புளியை கரைத்தது. காரணம்? ( ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் போய்ட்டு வந்துடலாம்) ஏதோ ஒரு தொடர்விடுமுறை சமயம் அருணையும் அகிலாவையும் சென்னையில் விட்டுவிட்டு பணிநிமித்தம் நான் அடுத்தநாளே மாலை பல்லவன் விரைவு வண்டியை பிடித்து அரியலூர் வரவேண்டும். “ஏங்க, கயலக்கா வெஜிடபிள் பிரியாணி செய்யுறதில் எக்ஸ்பர்ட், அதனால மதியம் சாப்பிட்டுவிட்டு ட்ரெயினுக்கு கிளம்புங்க சரியா இருக்கும்“ என்றார் எனது இணையர் அகிலா. சுவையான வெஜிடபிள் பிரியாணியை கடைசியாக பாரதிதாசன் பல்கலைக் கழக விடுதியில் சாப்பிட்டது. எனவே அகிலா வெஜிடபிள் பிரியாணி என்று சொன்ன மாத்திரத்தில் நாவில் எச்சில் பெருகி தரையில் வீழ்ந்து உருண்டது. ஏற்கனவே சிரத்தையுடன் செய்பவர் தான் கயல் அண்ணி, அகிலா வேறு எக்ஸ்பர்ட் என்று உசுப்பிவிட்டதால் டபுள் சிரத்தையோடு கிச்சனுக்குள் புகுந்தார். கற்றுக் கொண்ட அத்தனை வித்தைகளையும் பிரியாணியில் காண்பிக்க தயாரானார அப்போது இந்திராநகர் CPWD QUARTERS ல் இருந்தார்கள். எதிர் வரிசை கடைகளில் காய்கறி மளிகை சாமான்களை சித்து மூட்டை கட்டி வாங்கி வந்தான். காலையில் பத்து மணிக்கு துவங்கிய வேலை ஒரு மணிக்கு கேரட் நறுக்கும் அளவுக்கே வளர்ந்து இருந்தது. ஒன்று முப்பதுக்கு தலையை நீட்டினால் அங்கே புதினா இலையை அலசிக் கொண்டு இருந்தார். இனிமேல் இது நமக்கில்லை என்று உமிழ்நீரை உள்ளே தள்ளி பூட்டிவிட்டு எக்மோருக்கு ஊபர் கேப் புக் பண்ணிவிட்டேன். விழுப்புரம் தாண்டும் வேளையில் தான் அங்கே வெஜிடபிள் பிரியாணி டேபிளுக்கு வந்திருந்ததாக அகிலா தொலைபேசினார். ஃப்ளாஷ்பேக் முடிந்தது. எங்கள் அனைவருக்கும் இரவு உணவை வீட்டிலேயே செய்து எடுத்து வருகிறேன் என்று கிச்சனுக்குள் வன்முறையைத் துவங்கிவிடுவாறோ என்கிற பயத்தில் தான் நாங்கள் கலவரமடைந்தோம். இறுதியாக கயல் அண்ணி தாம்பரத்தில் சரியான நேரத்தில் ரயிலைப் பிடித்து எங்கள் வயிற்றில் ஆவின் பாலை ஆறவைத்து வார்த்தார். நான் பயணத்தின் போது சாப்பாட்டிற்காக பெரிதாக ஒன்றும் மெனக்கெட மாட்டேன். ரயில் நிலையங்களிலோ அல்லது ரயில் பேண்ட்ரியிலோ வாங்கி வயிற்றை நிறைத்துக் கொள்வேன். எனது வயிறும் சமர்த்துப் பிள்ளையாக எதைப் போட்டாலும் செரித்து விடும். கயல் அண்ணிக்கு அடுத்ததாக லதா அக்காவும் கடைகளில் சாப்பிட விரும்ப மாட்டார். எனவே எட்டு பேருக்கும் பெரம்பலூரில் வீட்டிலேயே தோசை சட்னி பொடி என்று ஏகத்துக்கு தயார் செய்ய துவங்கிவிட்டார். நாங்கள் அரியலூரில் வைகையை பிடித்த போது லதா அக்கா, அன்பழகன் மாமா மற்றும் சாரதி பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் நெரிசலாக இருக்கிறது என்று ஒவ்வொரு திருச்சி பேருந்தையும் விட்டுக் கொண்டே நின்றிருக்கிறார்கள். சரியாக ஏழறை மணிக்கெல்லாம் திருச்சியை அடைந்து விட்டோம். அவர்கள் மூவரும் அப்போதுதான் மெயின்காட்கேட்டை நெருங்கினார்கள். சரியாக முப்பது நிமிடத்திற்குள் திருச்சி ஜங்ஷனை அடைய வேண்டும். எர்ணாகுளம் ரயிலின் ரன்னிங் ஸ்டேட்டஸ் பார்த்தால் இன்றைக்கு பார்த்து எள்முனையளவும் தாமதமின்றி ஜப்பான் காரன் மாதிரி சரியான நேரத்திற்கு வந்து கொண்டு இருந்தது. ஏழு முப்பத்தி ஐந்துக்கு அவர்களுக்கு போன் பண்ணினால், “மாப்ள, தோ இப்பதான் இறங்க போறோம், பஸ்பிடித்து வந்துடுறோம்“ என்றார் மாமா. “மாமா இன்னும் அரை மணி நேரத்தில் ரயில் வந்துவிடும், அப்படியே ஆட்டோ பிடித்து வேகமாக வந்து விடுங்கள்“ என்றேன். நேரம் ஏழு நாற்பத்தி ஐந்து. அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. நடைமேடையில் வேறு அறிவிப்பு செய்ய துவங்கிவிட்டார்கள். “ஏங்க, ஒன் பாத்ரூம் போகணும்” இது அகிலா. மனதிற்குள் எவ்வளவு கொலைவெறி ஆகியிருப்பேன் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். ரயில் நிலையத்துக்கு வெளியேதான் கழிவறை இருந்தது. கழிவறை சென்று திரும்பிய போது ஏழு ஐம்பத்தி ஐந்து. “மாமா, ஏ2பி பக்கத்தில் நிக்கிறோம் எங்க வரணும்?“ என்று சாரதி அழைத்த போதுதான் மனது ஆசுவாசம் அடைந்தது. இரண்டு முறை தனித்தனியே தட்கலில் டிக்கெட் போட்டதால் நான்கு பேருக்கு எஸ்1, மூன்று பேருக்கு எஸ்3, ஒருவருக்கு எஸ்4 என்று தனித்தனியே பிரித்து தான் கிடைத்தது. “ஏங்க, இங்க எஸ்1 க்கு வாங்க, டிடிஆர் சாரதிக்கு ப்ரூஃப் கேக்குறாங்க” என்று அகிலா அழைத்தார். எனது பெட்டியில் வந்த டிடிஆர் பெயரைக் கேட்டதோடு சரி. அவங்க டிடிஆர் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் போல. சாரதி ஆதார் எடுத்து வர மறந்துவிட்டான். ராமு மாமாவுக்கு போன் பண்ணி வாட்சாப்பில் அனுப்பக் கூறினோம். மொபைலில் காண்பித்ததை ஏற்க மறுத்து கோபித்துக் கொண்டு போய்விட்டார். இறங்குவதற்குள் இ ஆதார் டவுன்லோட் செய்து காண்பிக்கிறேன் மேடம் என்று கூறிவிட்டு அமைதியாக திரும்பிவிட்டேன். இந்த அருணும் சாரதியும் காற்று வரவில்லை என்று கழிவறை அருகில் இருந்து வாசல் புறம் இருந்தார்கள். நான் பையை தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கிவிட்டேன். காலையில் கண்விழித்த போது கொச்சி ஏர்போர்ட்டின் பரந்து விரிந்த பகுதி கடந்து போய்க்கொண்டு இருந்தது. இறங்கியவுடன் ஆட்டோவுக்கு விசாரித்தேன். ”நீங்க சொல்ற ஓட்டல் அடுத்த இரண்டாவது ரைட்டில் தான் இருக்கு நடந்தே போயிடுங்க“ என்று கூறிவிட்டார் அந்த ஆட்டோ டிரைவர். தூக்க கலக்கத்தில் ஒரு வாக்கிங் போல லக்கேஜ் எல்லாவற்றையும் இழுத்து பறித்துக் கொண்டு நடக்க வைத்து தங்கும் விடுதிக்கு அழைத்து வந்து விட்டேன். முதல்நாளே புக்கிங் டாட் காம் தளத்தில் செக் இன் டைம் காலை ஏழு மணி என்று வலியுறுத்தி கூறி இருந்ததால் மூன்று அறைகள் தயாராக இருந்தன. தூய்மையான விசாலமான அறைகள். மிகவும் தூய்மையான கழிவறைகள். மினரல் வாட்டரைவிட வாஷ் பேசின் வாட்டர் மிகுந்த சுவையாக இருந்தது. காலையிலேயே ரிசப்ஷனில் காருக்கு கேட்டிருந்தேன். ஒன்பதரைக்கு எல்லாம் கார் வந்து விட்டது. இனி எர்ணாகுளம் பயண அனுபவங்கள் தான்.

2 comments:

  1. Entry-kke இவ்வளவு விசயங்களா?

    ReplyDelete
  2. Topic பார்த்ததுமே அந்த அரபிக் கடலோரம் உன் அழகைக் கண்டேனே song ஞாபகம் Sir.

    ReplyDelete

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...