Thursday, May 30, 2024

அந்த அரபிக் கடலோரம் - 4

அந்த அரபிக் கடலோரம் -4 ஆலப்புழாவில் ஒரு குட்டி டைட்டானிக்
”ஏங்க நேத்து வந்த கார் ரொம்ப சின்னது, எட்டு பேருக்கு பத்தவே இல்லை” “நாளைக்கு கப்பல் மாதிரி பெரிய வண்டி எடுத்துடலாம் விடு” கேப் அனுப்பிய டிராவல்ஸ் காரரிடம் சொன்னபோது, “ஓ, அதுதான் நேற்று வந்த டிரைவர் வரமாட்டேன் என்கிறாரா?, சரிங்க சார் இன்றைக்கு இன்னோவா வரச் சொல்றேன் ஜாலியா போய்ட்டு வாங்க“ என்று மலையாள வாடை கமழும் தமிழில் கூறினார். “அவன் ஒரு பட்டு வேட்டி பற்றிய கனாவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது” என்று ஒரு கவிதை உண்டு. அந்த கோவணம் களவாடப் பட்ட கதையை கடைசியில் சொல்கிறேன். எர்ணாகுளத்தில் இருந்து ஆலப்புழா அறுபது கிமீ க்கு அப்பால் இருந்தது. ரயில் பயணம் பற்றி எல்லாம் அரியலூரில் திட்டமிடும் போதே யோசித்த மாத்திரத்தில் நிராகரித்து விட்டேன். அந்த மார்க்கத்தில் நிறைய ரயில் வண்டிகள் ஓடினாலும் காலை எட்டு மணிக்கு பிறகு பதினோறு மணிக்குத்தான் இருந்தது. அகிலாவின் பஞ்ச்சுவாலிட்டி பற்றி அகிலமே அறியும் என்பதால் ரயில் பயணத்திட்டம் யோசித்த மாத்திரத்தில் ஈவிரக்கம் இன்றி கைவிடப் பட்டது. நாங்கள் அனைவரும் கிளம்பிய பிறகும் அவர்கள் மூவரில் ஒருவர் “மோட்டார் மோகன்“ கணக்காக உறங்கிக் கொண்டு இருந்தார். எனவே இவர்களுக்கு கேப் தான் சரி. எர்ணாகுளம் சுற்றுவட்டாரத்தில் எவரிடமாவது வெளியாட்கள் ஆலப்புழா என்றால் உடனடியாக முழ நீளத்திற்கு ஒரு கேட்டலாகை எடுத்து போட், ஹவுஸ் போட் என்று கதைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அனைவருமே கமிஷன் நிமித்தம் பல போட் காரர்களுடன் டை அப் வைத்துள்ளார்கள். ஒரு வழியாக இழுத்துப் பறித்து அனைவரும் ஒன்பதுக்கெல்லாம் எங்கள் ஆஸ்தான உணவு விடுதிக்கு சென்றுவிட்டோம். எல்லோரும் பூரி தோசை என்று பொளந்து கட்ட நாங்கள் புட்டு கடலைக் கறி என்று “நாம இப்படிக்கா போவோம்“ என்று உண்டோம். சாப்பிட்டு முடிக்கவும் இன்னோவா வருவதற்கும் சரியாக இருந்தது. “கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் ரயிலிலேயே சென்று இருக்கலாம்“ என்று வேதனைப் படும் அளவுக்கு ஆலப்புழா சாலை மோசமாக இருந்தது. எர்ணாகுளத்தில் இருந்து தெற்கே திருவனந்தபுரம் வரையில் செல்லும் மேற்கு கடற்கரை ஹைவே தான் அது. முழு சாலையும் ஃப்ளை ஓவராகவே போடப் போகிறார்கள் போல. சென்னையில் மெட்ரோ தூண்கள் போல வரிசையாக தூண்கள் நிர்மானிக்கப் பட்டு வந்தன. நடுவே வேலைகள் நடந்த காரணத்தால் எஞ்சியுள்ள இடத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. 9.30 க்கு கிளம்பி 11.40க்கு ஏற்கனவே கேப் காரர் மூலமாக புக் செய்திருந்த போட் அருகே சென்றோம். இன்றைக்கு வந்திருந்த டிரைவர் தம்பிக்கும் பாதைகள் பரிச்சயம் இல்லை. இவர் மலப்புரம் ஏரியாவாம். போட் ஓட்டும் அந்த வயதான மாலுமி எங்களுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தார். போட்டில் இருந்த நாற்காலிகள் டர்க்கி டவலை போர்த்தி இருந்தன. நடுவே ஒரு 3க்கு 5 பெட் இரண்ட திண்டுகள் என ஒரு அராபிய ஷேக்கின் ஷோக்கான படுக்கை அறை போல காட்சி அளித்தது. போட்டின் முகப்பில் இருந்த முக்கோண முனை எவர்சில்வர் கம்பி அமைப்பால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்த மாத்திரத்தில் அதன் முகப்பில் கேட் வின்ஸ்லெட் டி காப்ரியோ இணை மாதிரி போஸ் கொடுக்கலாமா என்று யோசித்தேன். பிறகு தான் எனது எடை மண்டையில் உறைத்தது. அந்த பெரிய டைட்டானிக்குக்கு ஏற்பட்ட அவல நிலை இந்த குட்டி டைட்டானிக்குக்கு ஏற்பட வேண்டாமே என்று பெரிய மனது பண்ணி அந்த முயற்சியை முலையிலேயே கிள்ளி கடாசிவிட்டேன். ஆலப்புழா மெயின் ரோட்டில் இருந்து கிழக்கு நோக்கி வாய்க்காலாக சென்று உள்ளே கடல் போல பரந்து விரிந்து கிடக்கிறது அந்த பேக் வாட்டர்ஸ். அந்த வாய்க்கால் கரை எங்கும் ஏராளமான போட் கள் அணிவகுத்து சுற்றுலாப் பயணிகளுக்காக காத்து கிடக்கின்றன. அங்கே சாலையில் நடக்கும் போது Affirmative ஆக ஒரு பார்வை பார்த்தாலே போதும் ஆளை இழுத்து போட்டில் தள்ளிவிடுவார்கள் போல அவ்வளவு வெறித்தனமாக கேட்கிறார்கள். போட் லேசாக குளுங்கியபடி கிளம்பியது. அந்த குறுகலான வாய்க்காலைக் கடந்து விரிந்த பேக் வாட்டர்ஸ் பகுதியை அடையும் வரை போட் ஆமை வேகத்தில் தப்பு தப்பு நத்தை வேகத்தில் தான் செல்கிறது. நாங்கள் இரண்டு மணி நேரங்கள் பேசி இருந்தோம். இரவு தங்கும் வகையிலான ஹவுஸ் போட்டுகளும் உண்டு. ஏற்கனவே சென்று தங்கிய நம்பகமான இரண்டு நண்பர்கள் அது வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தனர். மேலும் அவ்வளவு நேரத்தை ஒரே இடத்தில் விரயம் செய்ய எங்களுக்கும் விருப்பம் இல்லை. வந்திருப்பதே மூன்று நாட்கள் அதில் ஏன் இவ்வளவு நேரத்தை இங்கேயே செலவழிப்பானேன். ஒரு போட் ரைட் போதும். வேண்டுமானால் அந்தமான் சென்றால் கப்பலில் பிரயாணம் செய்ய முயற்சிக்கலாம் என்று மனதிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டேன். குறுக்கே நெடுக்கே ஏராளமான சிறிய ரக மற்றும் பெரிய ரக படகு வீடுகள் ஊர்ந்தபடி சென்றன. அந்த தண்ணீருக்குள் உள்ள நிலப்பரப்பில் தென்னை மரம் சூழ அழகிய வீடுகள் இருக்கின்றன. நாம் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டுமானால் வண்டி அவசியம் என்பது போல அங்கே வசிப்போர் வீட்டிற்கு வீடு சிறிய ரக போட்களை வீட்டின் முன்னே கட்டிப் போட்டிருக்கிறார்கள். வீட்டின் முன்னே துணி துவைக்கிறார்கள். அமர்ந்து அரட்டை அடிக்கிறார்கள். சிறுவர்கள் கூடிக்கலைந்து விளையாடுகிறார்கள். சிலர் தூண்டில் போட்டு அந்த தண்ணீரிலேயே மீன் பிடிக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு பின்னால் இருக்கும் சிறு நிலப் பரப்பில் விவசாயமும் செய்கிறார்கள். அங்கங்கே துண்டு துண்டாக நிலப்பரப்புகள் தென் படுகின்றன. அவை அனைத்திலும் வீடுகள் நெருக்கமாக உள்ளன. அந்த துண்டுகுளை இணைக்க டவுன் பஸ் சேவை போல படகு சர்வீஸ் இயக்கப் படுகிறது. இந்த துண்டுகளுக்கு இடையே ஒரு துவக்கப்பள்ளி கூட இருக்கிறதா அந்த பகுதி மாணவர்கள் அங்கே படிக்கிறார்களாம். அந்தப் பள்ளி ஆசிரியர் எந்த பகுதி ஆளாக இருப்பார், அவர் தினமும் போட்டில் ஏறி பள்ளிக்கு வந்து செல்வாரா? அவருடைய பணி அனுபவம் எவ்வாறு இருக்கும்?! என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தேன். வாடகைக்கு படகு எடுத்த தற்கு பதிலாக அந்த டவுன் போட் சேவையை பயன்படுத்தியிருந்தால் குறைவான கட்டணத்தில் முழு பேக்வாட்டர்ஸ் பகுதியையும் வலம் வந்திருக்கலாம்.
எங்கள் மாலுமி தாத்தா அங்கே இருந்த ஒரு வீட்டின் அருகே நிறுத்தி “இங்கே சாப்பாடு அருமையாக இருக்கும் கண்டிப்பாக சாப்பிடுங்கள்“ என்கிறார். அந்த ஓட்டல் வீட்டின் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும் சாப்பிடச் சொல்லி கையை பிடித்து இழுக்கிறார்கள். “ஏம்மா, உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா, எங்க சொந்தக் காரங்க கூட இவ்வளவு வற்புறுத்த மாட்டாங்களே” இறுதியாக தேனீர் மட்டும் அருந்திக் கொள்கிறோம் என்று ஒரு டீலிங்குக்கு வந்தோம். இந்த வற்புறுத்தலுக்கு பின்னால் அந்த மாலுமி தாத்தாவின் டீலிங் இருந்தது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? அந்த வீட்டின் முன்னால் இருந்த மரத்தில் ஒரு வளர்ப்பு கழுகு இருந்தது. கையை நீட்டினால் வந்து அழகாக அமர்ந்து கொள்கிறது, எட்டு பேரில் ஒருத்தர் பாக்கி இல்லாமல் போட்டோ எடுத்துக்கொண்டோம். ஆக, இரண்டு மணி நேரத்தில் அரை மணி நேரத்தை அந்த மாலுமி தாத்தா இப்படியே ஓட்டிவிட்டார். அங்கிருந்தே யு டர்ன் போட்டு திருப்பி விட்டார். அந்த வாய்க்கால் கரை நத்தை வேக பகுதி போக அரை மணி நேரம் வர அரைமணி நேரம். பரந்து விரிந்த பகுதி போக கால் மணி நேரம், வர கால் மணி நேரம். சாப்பிட வற்புறுத்தி ஒரு அரை மணி நேரம். “யோவ் நல்லா இருக்குய்யா உங்க டீலிங்கு” இனி செல்ல உள்ள நண்பர்கள் இந்த விஷயங்களை முன்பே தெளிவாக உடைத்து பேசிவிட வேண்டும் என்பதற்காகவே இந்த விஷயத்தை இங்கே சொல்கிறேன். ஒன்று நாற்பதுக்கு மிகச் சரியாக ஏறிய இடத்திலேயே இறக்கி விட்டார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த டிரைவரை எழுப்பினோம். நல்ல நிலையிலேயே அவருக்கு ஒரு இடமும் தெரியாது. இப்போ தூக்க கலக்கம் வேற. “தம்பி ஒரு நல்ல ஏசி ஓட்டலா பார்த்து நிறுத்துப்பா” என்றேன். “அதெல்லாம் ரோட் சைட்ல பாத்துக்கலாம் சார். ”சாப்பிட்ட பிறகு ஆலப்புழா பீச், லைட் ஹவுஸ் அப்புறம் மராரி பீச் போகணும்பா. சீக்கிரம் ஓட்டலை காட்டுப்பா” என்றேன். சாலை ஓரத்தில் கேசியாக் என்று பார்க்கிங் வசதியோடு ஒரு ஓட்டல் தென்பட்டது. “ஆத்தி பார்க்கும் போதே காஸ்ட்லி ஓட்டல் மாதிரி இருக்கே“ என்று எனக்கு பயம் கவ்வியது. “சார் டேபிள் எதுவும் ஃப்ரீயா இல்ல” என்று செக்யுரிட்டி சொன்னவுடனே, “சரி சரி வண்டிய விடுங்க வேற இடம் போகலாம்” என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிளம்பி விட்டேன். வழியில் இன்னும் இரண்டு ஓட்டல்கள் தென்பட்டன. அது நேற்றைய ஃபோல்க்லோர் மியுசிய ஓட்டல் போல இருந்ததால் மகளிரணி நிராகரித்துவிட்டார்கள். “யப்பா ஆலப்புழாவ விட்டு எர்ணாகுளம் ரோட் எடுக்காத, நாம ஆலப்புழா பீச் போகணும்“ என்றவுடன் யு டர்ன் போட்டு திரும்பினோம். தற்போது கேசியாக் ஓட்டலில் இடம் ஃப்ரீயாக இருப்பதாக டிரைவர் என்னை கேக்காமலேயே உள்ளே விட்டுவிட்டார். பசி வேகத்திலும் அங்கு இருந்த ஏசி மோகத்திலும் அனைவரும் குதித்து ஓடி விட்டனர். “உங்க வேகம் எனக்கு சோகம்“ என்ற நொந்தபடியே நான் இறுதியாக உள்ளே சென்றேன். நான் போட்டிங் போகும் போதே, “நாங்க வர லேட் ஆனாலும் ஆகும் நீங்க சாப்பிட்டு விடுங்கள்“ என்று டிரைவர் தம்பிக்கு 200 ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தேன். அவர் சமத்துப்பிள்ளையாக அங்கேயே சாப்பிட்டிருந்தார். உள்ளே சென்றதும் ஆளாளுக்கு ஒரு மெனு கார்டை ஏதோ ரிசல்ட் வந்த செய்தித்தாளைப் போல வாசித்து கொண்டு இருந்தார்கள். அனைவருமே புதிதாக ஏதாவது ட்ரை பண்ணுவோம் என்கிற மனநிலையில் இருந்தனர். நானும் அன்பழகன் மாமாவும் மட்டும் மீல்ஸ் சாப்பிட்டோம். மற்றவர்கள் ஏராளமாக ஆர்டர் செய்ய அனைத்திலும் லேசாக தொட்டுப்பார்த்து பிட்டு வாயிலே போட்டுக் கொண்டேன். சாப்பிட்டு முடித்த பிறகு பில்லை நீட்டினார்கள். 3800 ஆகி இருந்தது. “அடேய்களா, நேற்று மூன்று வேளை சேர்த்து கூட இவ்வளவு ஆகலையேடா“ என்று புலம்பியபடியே பில்லை செட்டில் செய்தேன். இதற்குள் நான்கு மணி முப்பது நிமிடம் ஆகி இருந்தது. இனிமேல் ஆலப்புழா பீச்சும் கிடையாது லைட்ஹவுசும் கிடையாது என்று டிக்ளேர் செய்துவிட்டேன். லைட்ஹவுஸ் 100 படிகள் கொண்டது. நிச்சயமாக இப்”போதை”ய நிலையில் இவர்களால் ஏற முடியாது. ஆகவே எர்ணாகுளம் ரூட்டில் 13 கிமீ போய் மேற்கு புறமாக உள்ளே வண்டியை விட்டால் மராரி பீச் வந்துவிடும். இடையில் ரயில்வே கிராசிங் வேறு ஒரு பதினைந்து நிமிடங்களை காலி செய்துவிட்டது. நேராக மராரி பீச் மணல் ஓரம் நிறுத்தி இறக்கி விட்டார். “ஆகா, அழகான, ரம்மியமான, தூய்மையான வெள்ளை மணல் பீச்” அலைகள் அவ்வப்போது சீறினாலும் சீராக வந்த வண்ணம் இருந்தன. ஏராளமான பேர் குளியல் போட்டு கும்மாளமடித்துக் கொண்டு இருந்தனர். அன்பழகன் மாமா கரையில் அமர்ந்து கொண்டார். அவரிடம் பொருட்கள் பை எல்லாவற்றையும் வைத்து விட்டு ஏழு பேரும் கடலில் இறங்கிவிட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை நனைத்த வண்ணம் என்னை நோக்கினான். மாமா ஒன்றும் சொல்லமாட்டார் போல் தெரிகிறதே என்று தொப்பென்று குதித்து கும்மாளமிட துவங்கிவிட்டான். அவனைத் தொடர்ந்து சித்துவும் குதித்துவிட்டான். அருண் இம்மியளவும் உணர்ச்சி வசப்படாமல் கால்களை மட்டுமே நனைத்துக் கொண்டு நின்றான். இறுதியாக சாரதி அருணை அலையில் தள்ளிவிட்டு நனைத்து விட்டான். கல்லூரியில் இளங்கலை படித்த காலத்தில் பூம்புகார் கடலில் நீந்திச் சென்ற அனுபவம் உண்டு. மாற்றுடை இல்லாத காரணத்தினால் ஆவலை அடக்கிக் கொண்டு இடுப்பு நனையும் ஆழம் வரை மட்டுமே சென்றேன். ஆலப்புழா பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் கடலில் குளிக்க நினைத்தால் மராரி பீச் நல்ல சாய்ஸ். தூய்மையான மணல் பகுதி. அருமையான தண்ணீர். குளித்து கரையேறிய பிறகு உடலை நனைத்துக் கொள்ள குளியலறை வசதியும் உள்ளது. நாங்கள் திரும்பி வந்த கோலத்தை பார்த்து டிரைவர் கதறியே விட்டார். “குளிக்காம கொள்ளாம வண்டில கால் வைக்காதீங்க பாஸ்“ என்று ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டார். எனவே குளியலறை பகுதியில் இருந்த பைப்பில் கைகால்களை சுத்தபத்தமாக கழுவிவிட்டு மணலை சுத்தமாக உதறித்தள்ளிவிட்டுத்தான் வண்டியில் ஏறினோம். இருந்த போதிலும் நான் ஈரமான உடையுடன் சீட்டில் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்து மௌனமாக அழுதபடியே வண்டி ஓட்டினார். எட்டரை மணிக்கு லாட்ஜ் க்கு சென்று உடை மாற்றிக் கொண்டு தான் எங்க ஆஸ்தான ஓட்டலில் ஆஜர் ஆனோம். அதற்கடுத்த நாள் எனக்கும் அகிலாவுக்கும் இணையேற்பு நாள் என்பதால் புத்தாடை எடுக்க வேண்டும் என்று “மேக்ஸ்“ க்கு என்னை இழுத்துச் சென்று விட்டனர். அவர்கள் நால்வரை மட்டும் சாப்பிடக் கூறிவிட்டு நான் அவர்களோடு மேக்ஸ் க்கு சென்று அகிலாவுக்கு சுடிதார் வாங்கிக் கொண்டு ஓட்டலுக்கு திரும்பி சாப்பிட்டு விட்டு அறையில் சென்று படுத்த போது மணி 11.30. கார் காரன் கோவணம் களவாடிய கதையை விட்டுவிட்டேனே!! முந்தைய நாள் எர்டிகா வில் இடித்து பிடித்துக் கொண்டு பயணம் செய்த காரணத்தினால் டிராவல்ஸ் காரர் பெரிய மனதோடு இன்னோவா அனுப்பியதாக கூறியிருந்தேன் அல்லவா. அவர் தான் அறிந்த தொடர்புகளில் இருந்து ஒரு இன்னோவாவை அனுப்பி இருந்தார். அந்த வண்டி கருப்பா சிவப்பா என்று கூட அவருக்கு தெரிந்திருக்க வில்லை. பிரச்சனை என்ன என்றால் டிரைவர் சீட் வரிசைக்கு அடுத்த வரிசை சீட் இரண்டு தனி சீட்டுகளால் ஆனது. இரண்டு பேர் தனித்தனியே தான் அமர இயலும். ஆக எட்டு பேருக்காக என்று அனுப்பிய வண்டி ஏழு பேர் செல்வதற்கு கூட உகந்தது இல்லை. ஏற்கனவே நிறைய நேரத்தை கடத்தி விட்டதால் வண்டி மாற்ற நேரம் இல்லை என்று அதற்குள்ளேயே அமர்ந்து சுற்றி முடித்துவிட்டோம். இதற்கிடையே காலை சரியாக பதினோறு மணிக்கு ஆலப்புழா போகும் போதே, நானும் சித்துவும் தட்கலில் ரிட்டர்ன் டிக்கட் வெற்றிகரமாக போட்டு விட்டோம். இந்த முறை தொடர்ச்சியாகவே எட்டு டிக்கெட்டுகளும் கிடைத்துவிட்டன. நாளைக்கு எர்ணாகுளம் லோக்கல் தான். மெட்ரோவில் போய்விடலாம் என்று முடிவு செய்து மூன்றாம் நாள் கேப் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...