Monday, May 13, 2024

மலையாளக் கரையோரம் -3

மலையாளக் கரையோரம் - 3 (ஏனைய இரண்டு பாகங்களை ஜனவரி மாதமே சுடச்சுட எழுதிவிட்டேன். இது சற்று தாமதமாகிவிட்டது)
பள்ளிக் கல்வியில் கோலேச்சுகிறதா கேரள தேசம்? கேரளாவில் நாங்கள் பயிற்சிக்காக சென்றதே கேரளப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாடு மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு குறித்து கண்டு வரத்தான். எனவே பயிற்சியின் இரண்டாம் நாள் புரோக்ராமே அதுதான். முதலில் நாங்கள் சென்றது ஒரு மேல்நிலைப் பள்ளி. ஆனால் கெடுவாய்ப்பாக அரசுப் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. நாங்கள் சென்றது ஒரு Aided School. தலைமையாசிரியரை பேட்டி காண வசதியாக முதல்வரிசை நாற்காலிகளில் நட்ட நடு நாற்காலியை பிடித்துக் கொண்டேன். ( தேனீர் கொண்டு வந்தவர் இரண்டு ஓரங்களில் இருந்து கொடுத்த போதும் என்னை விட்டுவிட்டார். எனது தவிப்பை கண்டு கொண்ட தலைமையாசிரியர் அவரிடம் கூறி எனது வயிற்றில் தேனீர் வார்த்தார்) நானே கேள்விகளை யோசித்து டைரியில் குறித்து எடுத்து வந்திருந்தேன். அருகில் இருந்த ஆசிரியரோ ஒரு கற்றை பேப்பர்களை வைத்திருந்தார். உடன் வந்திருந்த மற்றொரு துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் அந்த பள்ளியின் துவக்க நிலை வகுப்பறைகளை பார்வையிட ஆர்வமாக சென்றுவிட்டார். கேரள மேல்நிலைப் பள்ளிகளில் இரட்டைத் தலைமை உள்ளது. ஆமாம், 6-10 வகுப்புகளை பார்த்துக் கொள்பவர் தலைமையாசிரியர். நாங்கள் முதலில் அவரைத்தான் பார்த்தோம். ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி கேட்டாலும் தெளிவாக பொறுமையாக எளிமையாக ஆங்கிலத்தில் விளக்கங்கள் கூறினார். 11-12 வகுப்புகளை பார்த்துக் கொள்பவர் பள்ளி முதல்வர். பள்ளி மேலாண்மையில் இருவருக்கும் வேலைகள் பிரித்து வழங்கப் பட்டுள்ளன. முதல்வரை சந்திக்க சற்று காத்திருக்க வேண்டி இருந்தது. அவர் தனது வரலாற்றுப் பாடத்தை மாணவர்களுக்கு நடத்திவிட்டு கைமுழுக்க சாக்பீஸ் கறையோடு வந்திருந்தார். மலையாள வாடை துளியும் இன்றி தமிழில் பேசினார். நமது மாநிலத்தில் டிகிரி மற்றும் பி.எட் படித்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரையில் நமது பள்ளிகளைப் போல் தான் இயங்குகிறது. கல்வித் தரம் மாணவர் தேர்ச்சி விழுக்காடு போன்ற எந்த விஷயத்திலும் நமக்கும் அவர்களுக்கும் பெரிய அளவில் வேறுபாடு கிடையாது. நூறு விழுக்காடு தேர்ச்சிக்காக அவர்களும் புஜபல பராக்கிரமங்களையும் பயன்படுத்தித்தான் வருகிறார்கள் என்பதை முதல்வரிடம் அன்அஃபிஷயலாக பேசிய போது அறிய முடிந்தது. கேரள தேசம் கம்யூனிசம் வேர்விட்டு வளர்ந்து இன்னமும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று வரும் அளவுக்கு உள்ள மாநிலம். எனவே பெற்றோருக்கு தங்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இயல்பாகவே உள்ளது. எனவே பள்ளி நடவடிக்கைகளில் பெற்றோரின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது. பள்ளிக்கு வர அவர்கள் தயங்குவதே கிடையாது. Adolescent kids issues இங்கே இருப்பது போல அங்கேயும் இருக்கத்தான் செய்கிறது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? எங்களோடு வந்திருந்த ஆசிரியர் ஒருவர் ஆர்வமிகுதியில் ”பதின்பருவ ஆண் பெண் பாலின ஈர்ப்பு சார்ந்த பிரச்சனைகளை எப்படி கையாளுவீர்கள்?” பள்ளி மேலாண்மைக்குழுவின் உதவியை நாடுவீர்களா? என்றார். அவர்மேல் தவறு இல்லை கேரளப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒத்துழைப்பு அபரிமிதமாக உள்ளது, அவர்கள் அனுமதி இன்றி அணுவும் அசையாது என்று பயிற்றுவிக்கப் பட்டிருந்தோம். அதற்கு தலைமையாசிரியர் கூறிய பதில் சிறப்பாக இருந்தது. “இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் எதற்கு அவர்கள்( இந்த இடத்தில் எரிச்சலுற்றார்) குட்டிகளோட பேரண்ட்ஸ் மட்டும் போதுமே. ரகசியமாக விசாரிக்க வேண்டிய விஷயத்தை மூன்றாவது நபருக்கு தெரிவதை பெற்றோர் விரும்பமாட்டார்கள் அல்லவா?“ என்றார். மாணவர்களின் டெக்ஸ்ட் புக் கொடுக்கச் சொல்லுங்கள் சார் கொஞ்சம் பார்க்கணும் என்று எங்களோடு வந்திருந்த ஒரு தலைமையாசிரியர் கேட்டார். “சார் இங்க முழுக்கவே NCERT books தான் ஃபாலோ பண்றோம். மேல்நிலைக் கல்வி முழுவதுமே சிபிஎஸ்இ தான். அவர்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு வசதியாக இருக்கும் அல்லவா?” என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டார். வகுப்பறையில் பார்த்தபோது மாணவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் சுருக்கப் புத்தகத்தை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள் என்று புரிந்தது. அதுபோல மலையாளத்திற்கு பதிலாக பெரும்பான்மை மாணவர்கள் இந்தியை மொழிப்பாடமாக படிக்கிறார்கள். இங்கே நமது மாநிலத்தில் சேர்க்கையை அதிகரிக்க ஆங்கில வழி சில பள்ளிகளில் துவங்கப் படுகிறது அல்லவா? அதுபோல அங்கேயும் எல்லா வகை அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழியும் உள்ளது. பெற்றோரின் ஆர்வமிகுதியால் ஆங்கில வழி வகுப்புகளில் தான் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றனர். இந்த மாற்றம் ஆரோக்கியமான மாற்றமாக எனக்கு படவில்லை. மேல்நிலைப் பள்ளிகளில் தனியார் நிறுவனங்கள் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப் படுகிறார்கள். விருப்பம் உள்ள மாணவர்கள் அந்த வகுப்புகளில் சேர்ந்து நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயார் ஆகலாம். பள்ளிகள் பார்வைக்கு பிறகான மீளாய்வுக் கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்த கேரளக் கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் பேசினார். அப்போது வாய்ப்பு வழங்கப் பட்ட போது கையை உயர்த்தி இந்த ஐயத்தை நான் எழுப்பினேன். “கேரளாவில் மேல்நிலை வகுப்புகளுக்கான பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் புத்தகங்கள் எல்லாமே சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையில் உள்ளன. அப்படியானால் அந்த வகுப்புகளில் வரும் மொழிப் பாடம் மற்றும் கலைப் பிரிவுகளில் உங்கள் மாநிலம் சார்ந்த விஷயங்களை பயிற்று விக்க வாய்ப்பு இருக்காது தானே?“ என்றேன். “ குட்டிகள் நீட் ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் எழுத இது உதவியாக இருக்கும் அல்லவா?” என்றார். ”டாக்டர் ஆகணும்னா நீ படி மேன் ஒய் மீ” என்கிற சாமானிய மாணவனின் குரல் எனது காதுகளில் மட்டும் ஒலித்தது. ஆக, நீட், ஜேஇஇ ஆல் நம்ம பாடப் புத்தகங்கள் தான் பருத்துப் போனது ஆனால் அங்கே கேரளத்தில் பாடத்திட்டமே மத்திய அரசிடம் போய்விட்டது. அங்கே திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலுமே மாணவர்கள் வந்து போவதற்கு பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப் பட்டு உள்ளன. சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதி நிதி அல்லது பெருந்தனக் காரர்களின் அன்பளிப்பு என்று நிதி வசதி பெற்றுள்ளார்கள். டீசல் டிரைவர் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு பிள்ளைகளிடம் வசூல் செய்துகொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். அனைத்து தொடக்க பள்ளிகளிலுமே மதியம் மூன்று மணிக்கு மாணவர்களுக்கு ஒரு கிளாஸ் பால் வழங்கப் படுகிறது. நாங்கள் சென்றிருந்த போது வழங்கப் பட்டது. தரமும் நன்றாகவே இருந்தது. நமது மாநிலத்தைக் காட்டிலும் கேரளாவில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அதிகமாக உள்ளன. துவக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் கிடையாது. வகுப்புக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். நமது மாநிலம் போல ஒரு கீமீ சுற்றளவுக்குள் ஒரு துவக்கப் பள்ளி என்கிற அடர்த்தியில் துவக்கப் பள்ளிகள் உள்ளனவா என்று தெரியவில்லை. நமது மாநிலத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்று ஒன்று உள்ளது. பெற்றோராக இல்லாதபோதிலும் கௌரவத்திற்காக தலைவர் பதவியில் நங்கூரமிட்டு வருடக்கணக்கில் இருக்கிறார்கள். சில ஊர்களில் “பெரிய குடும்பங்களின்“ வாரிசு வழிப் பதவியாக பல ஆண்டு காலம் சிக்கி சீரழிகிறது. பள்ளி மேலாண்மைக்குழுவின் கட்டமைப்பு அந்த விஷயங்களை இங்கே உடைத்துள்ளது. பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு பொறுப்புகளும் கடமைகளும் ஏராளம் வழங்கப் பட்டு பள்ளி கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் அவர்களின் தலையீட்டிற்கு சட்டரீதியான அனுமதி இங்கே உள்ளது. அங்கே பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்கனவே இதை எல்லாம் செய்து வருவதால் பள்ளி மேலாண்மைக்குழு மற்றுமொரு பாடியாகவே உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக் கூட்டம் வருடம் ஒரு முறையும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் கட்டாயமாக பருவம் தோறும் தேவை ஏற்பட்டால் கூடுதலாகவும் நடைபெறுகிறது. வகுப்பு வாரியான பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் பருவத்தேர்வுக்கு பிறகு கூட்டப் பட்டு மாணவர்களின் நிலை குறித்து விவாதிக்கப் படுகிறது. பாக்கெட் பிடிஏ என்று மாணவர்களின் இருப்பிடங்கள் வாரியாக கூட்டங்கள் நடத்தப் படுவதாகவும் கூறினார்கள். பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய பார்வையிடலுக்கு சென்றிருந்தாலும் அங்கே பள்ளியில் பேசிய அனைவருமே பெற்றோர் ஆசிரியர் கழகம் குறித்தே பேசினார்கள். இவை அல்லாமல் விஜிலென்ஸ் கமிட்டி போன்ற ஒரு அமைப்பு ஆட்டோ ஓட்டுனர்கள், பொது ஜனங்கள், போலீஸ் போன்ற அந்த பகுதி மக்களைக் கொண்டு ஒரு அமைப்பு இயங்குவதாக தெரிவித்தனர். பொது இடங்களில் மாணவர்களின் செய்கைகள், ஒழுக்க கேடான விஷயங்களை கண்காணித்து ஆசிரியர்களுக்கோ தேவைப் பட்டால் பெற்றோர்களுக்கோ தகவல்கள் பகிரப் படுகின்றனவாம். வளையல், ஒற்றைக் காது கடுக்கண், பாதி மண்டையை கரண்டி வைத்தல், காதோரம் சுரண்டி வைத்தல் என்று ஸ்டைல் பாண்டி விஷயத்தில் இங்கே உள்ள மாணவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என்று நிலைநாட்டினார்கள். எங்கேயும் எப்போதும் போல அங்கேயும் “பிரபல பள்ளி” மோகம் மிகுதியாகத்தான் உள்ளது. திருவனந்தபுரம் நகர் மத்தியில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர் எண்ணிக்கை ஏழாயிரத்து சொச்சம். நாங்கள் அந்த வழியாக மாலை வேளையில் சென்ற போது மாணவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் ஒரு கிமீ நீளத்திற்கு அணிவகுத்து நின்றன. கேரளப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக்குழு செயல்படும் விதம் கண்டு பயில சென்ற எங்களுக்கு திருவனந்தபுரம் நகரப் பள்ளிகளுக்கு செல்ல மட்டுமே வாய்ப்பு அமைந்தது. மீளாய்வுக் கூட்டத்தில் “குறைந்த பட்சம் திருவனந்தபுரம் சுற்றுவட்டார கிராமத்துப் பள்ளிகளையாவது காட்டி இருக்கலாம். நகரப் பள்ளிகளை மட்டுமே பார்ப்பதால் மாநில பள்ளிகளின் நிலமை குறித்த முழுமையான நீள்வெட்டுத் தோற்றம் கிடைக்காதே? “ என்று எங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டோம். அடுத்த பேட்ச் சென்று வந்தவர்களுக்கும் “அதே டைலர் அதே வாடகை“ கணக்குத்தான். தயவு செய்து இது போன்ற பயிற்சிகளை துறை முன்னெடுக்கும் போது பயிற்சிக்கு செல்வோரை குழுக்களாக பிரித்து முழு கேரளாவுக்கும் அனுப்ப வேண்டும். அப்போது தான் முழுமையாக ஒரு படம் கிடைக்கும். மற்றும் ஒரு முக்கியமான விஷயம், தமிழக அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளின் மாணவர்களின் அனைத்து விதமான விவரங்களும் எமிஸ் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எந்த ஒரு தகவலையும் நினைத்த இடத்தில் இருந்து அந்த தளத்திற்குள் நுழைந்து எடுத்து விட முடியும். அதுபோல அரசும் மாணவர்கள் சார்ந்த விவரங்களை தேவையான விதத்தில் அந்த தரவு தளத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அவ்வப்போது ஆன்லைன் தேர்வுகள் நடத்தி அவர்களின் திறன்களை பரிசோதிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. தலைமை ஆசிரியர்கள் வகுப்பறைகளை கண்காணிப்பு செய்வதை கூட இந்த தளத்தில் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது. தற்போது தமிழக அரசு பள்ளிகளில் ஆன்லைனில் அட்டெண்டன்ஸ் போடப்படுகிறது, பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு இந்த தளம் வாயிலாக அவர்களின் பெற்றோருக்கு தங்களது பையன் பள்ளிக்கு வரவில்லை என்கிற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் வசதியும் உள்ளது. மேலும் கொரோனா விடுப்பு முடிந்த பிறகு மாணவர்கள் பள்ளி வந்தபோது அவர்களது பாடி மாஸ் இன்டெக்ஸ் எமிஸ் தரவு தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த விவரங்களை வைத்து தான் தேர்தல் அறிக்கையிலேயே இல்லாத திட்டமான மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்டது. அதோடு மட்டுமின்றி பலவிதமான பள்ளி சார் தகவல்களை தலைமை இடத்தில் இருந்து சுலபமாக பெற இந்த தரவு தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்றதொரு டிஜிட்டல் தரவு தளம் கேரள பள்ளிகளில் இருப்பதாக தெரியவில்லை. நான் சந்தித்த தலைமையாசிரியரிடம் கேட்டபோது அதுபோல எதுவும் இல்லை என்றே பதில் அளித்தார். எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றுவது பாட செயல்பாடுகளுக்கு இடையூறாக இருந்தாலும் அந்த தரவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆன்லைன் டிசி, தமிழ் வழி படிப்புக்கான சான்று, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிப்பு மற்றும் திருத்தங்கள் தேர்வு சார்ந்த அனைத்து விதமான கடினமான நடைமுறைகள் என பல வகை பயன்களை இந்த தரவுத்தளம் மூலமாக தமிழக பள்ளிகள் பெற்று வருகின்றன. நவீன தொழில்நுட்பங்களை மாணவர் நலன் சார்ந்து பொருத்தமான முறையில் பயன்படுத்தி ஆக்கபூர்வமான நன்மைகளை பெறுவதில் தமிழகம் கேரளாவை விட பல படிகள் முன்னே உள்ளது என்றால் அது மிகை இல்லை. பள்ளி மேலாண்மையில் பெற்றோர்களின் பங்களிப்பு என்கிற ஒரு விஷயத்தில் வேண்டுமானால் அவர்கள் சற்று முந்தி இருக்கலாம் ஆனால் ஏனைய பல கூறுகளில் கேரள மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தையும் விட தமிழகம் பல படிகள் முன்னே உள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. எனவே இனிவரும் காலங்களில் மற்ற மாநில ஆசிரியர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று இங்கிருந்து பல நுட்பங்களை எடுத்துச் சென்று அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக மலையாள கரையோரம் சென்றபோது எந்த விதத்திலும் அந்தப் பள்ளிகளை பார்த்து பிரமிப்போ தாழ்வு மனப்பான்மையோ எங்களுக்கு நிச்சயமாக ஏற்படவில்லை. மாறாக நமது பள்ளிகள் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மிக சிறப்பாக இயங்கி வருகிறது என்கிற பெருமிதம் தான் ஏற்பட்டது. கல்வியில் மாநில உரிமைகள் குறித்து உரக்க முழக்கம் இடும் மாநிலம் நாமாக தான் உள்ளோம். கேரளா எந்த வகையிலும் கல்வியில் சுய சார்போடு இயங்க முயற்சிக்கவில்லையோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. ஏனெனில் மேல் நிலையில் முழுக்க முழுக்க சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொண்டது, அது போல மலையாளத்துக்கு பதிலாக இந்தியை படிக்க வாய்ப்பு வழங்குவது என்று அவர்கள் சற்றே வடமாநிலங்கள போல செயல்பட துவங்கியுள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது. இவை அங்கே நான் பார்த்து கேட்டு அறிந்து கொள்ள விஷயங்களில் இருந்து எழுதியவை தான் ஒருவேளை இதில் ஏதேனும் முரண்பாடான கருத்துக்கள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...