Tuesday, May 28, 2024

அந்த அரபிக் கடலோரம் -3

அந்த அரபிக் கடலோரம் – 3
”இனி ஒரு மியூசியம் பக்கம் போனீங்க அவ்வளவுதான்…” எர்ணாகுளத்தில் எங்கள் முதல் விசிட் எங்க தெரியுமா? வேற எங்க ஹோட்டல் தான். சவுத் மெட்ரோ ஸ்டேஷன் அருகிலேயே சித்தூர் ரோட்டில் பேக் இன் என்கிற ஏசி ரெஸ்டாரண்ட். இரவு திருச்சியில் ரயில் புறப்பட்டபோது சாப்பிட்டது. நானாவது காலை எழுந்தவுடன் ரயிலிலேயே பல் தேய்த்து காபி குடித்துவிட்டிருந்தேன். மற்ற அனைவரும் குளித்து முடித்து தான் உணவு என்று ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டனர். எனவே தான் கேப் வரும் கேப்பில் “வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என்று கிளம்பி விட்டோம். ஏறக்குறைய காலியாக கிடந்த ஓட்டலில் திடீரென எட்டு பேர் நுழைந்தவுடன் அளவில்லா சந்தோசமாகிவிட்டார்கள். இட்லி, தோசை, பூரி, புட்டு என்று ஒவ்வொருவரும் ஆர்டரை தெறிக்க விட்டார்கள். ஏசி ஓட்டல் வேற, ரயில் நிலையம் பக்கத்தில் இருக்கு, மெனு கார்ட கூட கண்ணுல காட்ட மாட்டேங்குறாய்ங்க, பில் எவ்வளவு எகிற போகுதோ என்று எனக்கு சற்றே கலக்கமாக இருந்தது. வேண்டிய அளவுக்கு உண்டு முடித்து பில்லை பார்த்தால் 800 சொச்சம் தான். அதாவது 100 ரூபாய் ஆவரேஜ். தலைவா மூணு நாளும் காலை மாலை உங்க ஓட்டல் தான் என்று மனதிற்குள் கூவிக் கொண்டேன். முதல் தோசையை வாயில் வைத்த போதே கேப் டிரைவர் வந்து விட்டதாக போன் அடித்தார். ஏற்கனவே மேப் எல்லாம் பார்த்து லிஸ்ட் போட்டு இருந்தேன். நான் ஹில் பேலஸ் போங்க என்று சொல்ல வாய் எடுத்த கண நேரத்தில் டிரைவரும் ஹில் பேலஸ் தான சார் என்றார். பழைய தமிழ் பாடல் ஒன்று “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்“ என்று தொடங்கும். இந்த ஹில் பேலஸ் எட்டடுக்கு மேல் தான் கட்டியுள்ளார்கள். உள்ளே நுழைந்த மாத்திரத்தில் டிரைவர் நான் பார்க்கிங்ல இருக்கேன் கிளம்பும் போது போன் அடிங்க சார் என்று நழுவி விட்டார். நான்கு அடுக்கு ஏறும் போதே நாக்கு தள்ள துவங்கிவிட்டது. அப்புறம் பார்த்தால் ஆறாவது அடுக்கு வரைக்கும் கார் வருகிறது. அடிப்பாவி பயலே பேதில போவான் இப்படி ஏற விட்டுட்டானே என்று டிரைவரை சபித்துக் கொண்டே ஏறினோம். கேரளாவின் மிகப்பெரிய ஆர்க்கியாலஜிக்கல் மியுசியம் இதுதான். கொச்சி மகாராஜா தனது சொந்த செலவில் 1865 ல் கட்டியுள்ளார். கொச்சியின் நிர்வாக தலைமையிடமாக இருந்துள்ளது. 55 ஏக்கர் பரப்பில் கேரள பாரம்பரிய கட்டுமானக் கலையை பிரதிபலிக்கும் 49 கட்டிடங்களுடன் பரந்து விரிந்து கிடக்கிறது. கொச்சி ராஜ வம்சம் இந்த மாளிகையை 1980 ல் தான் கேரள மாநில அரசு வசம் இதனை ஒப்படைத்திருக்கிறது. சந்திரமுகியின் முன்னோடியான மலையாள மணிசித்திர தாழ் படம் இங்கே எடுக்கப் பட்டுள்ளதாம். பேலஸ் முழுக்க முழுக்க அந்த கால கலைப் பொருட்களை பார்வைக்கு வைத்துள்ளார்கள். அந்த கால ஆயுதங்கள், அரச குடும்பத்தினர் செல்லும் பல்லக்குகள், உடைகள் மற்றும் நகைகள் என்று ஏராளமாக இருந்தது. குற்றவாளிக்கு நடுவீதியில் கூண்டில் அடைத்துப் பூட்டி தொங்க விட்டு தண்டணை வழங்கும் கூண்டு ஒன்றை தொங்க விட்டு இருந்தனர். முதலில் ஏதோ என்று கடந்து விட்டேன். அப்புறம் குறிப்பை படித்த போதுதான் அதன் கொடூரம் அறிந்து அதிர்ந்தேன். பேலஸ் ல் எங்கேயும் சேதம் செய்து விடக் கூடாது என்று மிக கவனமாக பராமரிக்கிறார்கள். அங்கங்கே பெடஸ்டல் ஃபேன் தான் நிற்கிறது. அதனைச் சுற்றி நம்ம ஆட்கள் காற்று வாங்க நிற்கிறார்கள். முடித்து இறங்கும் போது ஞாபகமாக டிரைவரை அழைத்து மேலேயே வரச் சொல்லி விட்டேன். “ஏம்பா, போகும் போது மேலே விட்டிருக்கலாம்ல?” “சார் எனக்கும் தெரியாது சார் நானும் இந்த ஏரியாவுக்கு புதுசுதான் சார்” என்றார். அடுத்ததாக Folklore Museum செல்ல வேண்டும். “நோ, மதிய சாப்பாடு எங்கன்னு பாத்து கூட்டிட்டு போங்க, சாப்பிடாம ஒரு அடி நகர முடியாது“ என்று அத்தனை பேரும் ஏக காலத்தில் தர்ணா செய்தனர். “சார் அங்க பக்கத்துல போய் சாப்பிட்டுக்கலாம் சார்” என்று வண்டியை எடுத்தார். ஓட்டினார் ஓட்டினார் ஓட்டிக் கொண்டே இருக்கிறார். வந்த இடமெல்லாம் இரண்டாம் முறை வந்து போவதை நானே கவனித்து விட்டேன். நான் முந்தைய நாள் இரவு மேப்பில் பார்த்த போது பத்துக்குள் தான் கிமீ காட்டியது. ஆனால் இவர் இதுவரை 20கிமீ ஓட்டிவிட்டார். “பாஸு, உங்களுக்கு வழி தெரியலையா?” “சார் நான் திருவனந்தபுரம், இங்க அவ்வளவு பழக்கமில்ல” “ சொல்லி இருந்தா மேப் போட்டு இருப்பேனே” “அந்த Folklore Museum போய் இருக்கேன் சார். பக்கத்தில் சின்ன ஓட்டல் இருக்கு” என்றார். அப்புறம் நான் மேப்பை போட்டு வழி காட்டிக் கொண்டே சென்றேன். அங்கே ஓட்டலைப் பார்த்தால் சின்னது கிடையாது மிகவும் சின்னஞ்சிறியது. மொத்தமே 12 பேர் தான் உக்கார முடியும். எங்க எட்டு பேர பார்த்ததும் உற்சாக மிகுதியில் தனியா உக்காந்து இருந்த ஒரு பையனை வேறு பத்தி விட்டு விட்டார் அந்த முதலாளி. “சுத்தம் சோறு போடும்” என்றாலும் கூட சுத்தமான இடத்தில் தான் வயிற்றுக்கு சோறு போட வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு வாழும் கொள்கை கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அகிலா, கயல் அண்ணி மற்றும் லதா அக்கா. இடத்தை பார்த்த மாத்திரத்தில் பார்வையாலேயே நிராகரித்துவிட்டனர். “டிரைவர் சார், இப்போ எழுந்து திரும்பி போனா ஓட்டல் காரர் வெட்டுவாரோ?“ என்பதை கேட்டு தெளிவு படுத்திக் கொண்டு “தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” என்று ஓட்டம் எடுத்தோம். ஆன் தி வே யில் ஓட்டல் ஆரியாஸ் ஐ கடந்த ஞாபகம் இருந்ததால் அதற்கு ரூட் போட்டு சென்றோம். அருமையான சாப்பாடு. மிகவும் சரியான விலையில் இருந்தது. “ஜெயின் காலேஜ்ல உனக்கு பிடித்த விஷயம் என்ன?” கேட்டால் முகம் எல்லாம் பல்லாக “சித்தப்பா, அங்க மதியம் சாப்பிடும் போது எத்தனை அப்பளம் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம் ஒன்றும் சொல்ல மாட்டாங்க“ என்பான் சித்து. அவன் இரண்டாவது அப்பளம் கேட்க, அடுத்து அருண் கேட்க, அடுத்து நான் பாயாசம் இரண்டாவது கப் கேட்க என்று தெறிக்க விட்டோம். என்னையும் டிரைவரையும் தவிர அனைவரும் தமிழ்நாட்டு சின்ன அரிசி சாப்பாடு சாப்பிட்டனர். நானெல்லாம் பாம்பு திங்கும் ஊருக்குச் சென்றால் நடு கண்டத்தை எடுத்து கடிக்கும் ஆள். பில் மிகவும் நியாயமான ரேட் தான் வந்தது. 9 பேருக்கு 800 சொச்சம் தான். பில்லில் இரண்டாம் அப்பளம் பாயாசம் என்று எதுவும் இல்லாதது கண்டு நிம்மதி கொண்டேன். திரும்ப folklore museum சென்றோம். நுழைவுக் கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கிறார்கள். கேரளாவில் அனைத்து கிராம நகரங்களில் இருந்து அனைத்துவிதமான பாரம்பரிய கலைப் பொருட்கள், நடன நாடகங்களின் போது பயன்படுத்தப் படும் பொருட்கள் என மூன்று மாடி நிறைய குவித்து வைத்துள்ளார்கள். இது முழுக்க ஏசி செய்துள்ளார்கள். இந்த கலைப் பொருட்கள் அனைத்துமே தனி ஒரு மனிதராக ஜார்ஜ் ஜெ தய்லத் என்பவர் சேகரித்துள்ளார். மியுசியம் அமைந்துள்ள மூன்றடுக்கு மர மாளிகை முழுக்க முழுக்க கேரள பாரம்பரிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது. நுழைவுக் கட்டணம் சற்று அதிகம். அடுத்ததாக வண்டியை ஃபோர்ட் கொச்சி ஏரியாவுக்கு விட்டோம். அங்கே டட்ச் பேலஸ், காய்ர் மியுசியம், Jews town, வாஸ்கோடகாமா நினைவிடம் அப்புறம் பீச்சாங்கரை மற்றும் சீன மீன்பிடி வலைகள் என்று ஏராளம் இருந்தன. டட்ச் பேலஸ் மியுசியம் ல் “இன்று உலக மியுசியம் நாள் எனவே இன்று மட்டும் அனைவருக்கும் நுழைவுக் கட்டணம் இல்லை” என்று போர்டு தொங்கியது. அடப்பாவி “ஹில் பேலஸ், ஃபோல்க் லோர்” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டேன். “அப்பா, மியுசியம் போதும்பா, பீச் போகலாம்பா” என்று அருண் கூறவும் சித்துவும் சாரதியும் ஏக காலத்தில் ஆமோதித்தனர். பீச்சாங்கரை அருகே இருந்த வாஸ்கோடகாமா நினைவிடம் நாங்கள் போன நேரம் மூடிவிட்டனர். வெளியே நின்று சில படங்கள் எடுத்துக் கொண்டோம். பீச்சாங்கரையில் நுழையும் போதே மீன் “வாச்சம்“ அடித்து விரட்டியது. மிகவும் சிறிய பீச் தான். ஒரே ஒரு சிறு இடத்தில் தான் தண்ணீரில் கால் வைக்க முடிகிறது. அங்கேயும் கிளிஞ்சல்களாக கிடந்ததால் நான் இறங்கவே இல்லை. எல்லோரும் டீ டீ என்று கேட்டதால் அங்கே ஒரு கண்றாவி தேனீரை வாங்கி கீழே ஊற்றினோம். சீக்கிரமே கிளம்பி ஆழ்ந்த நித்திரையில் இருந்த டிரைவரை எழுப்பி ஓட்டலுக்கு திரும்பலாம் என்றோம். நன்றாக அலைந்து திரிந்த காரணத்தினால் அனைவருக்கும் சரியான பசி. டிரைவர் மீண்டும் எர்ணாகுளத்துக்கு சடங்கு சுற்றிவிடக் கூடாதே என்கிற பயத்தில் நானே மேப் ஓப்பன் செய்து கொண்டேன். எல்லோருக்கும் பயங்கர பசி என்பதால் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரும் அருகே இருப்பவரை கடித்து வைத்துவிடும் அபாயம் இருந்ததை மறுப்பதற்கு இல்லை. மறுபடியும் இரவு உணவுக்கு பேக் டு பேக் டு பேக் இன் ரெஸ்டாரண்ட். காலையில் மெனு கார்ட் கொடுக்காத காரணத்தினால் அனைவரும் சாப்பாட்டு மேசையில் அம்பியாக சமர்த்தாக சாப்பிட்டார்கள். தற்போது மெனு கார்ட் கொடுத்தவுடன் சித்து, சாரதி, அருண் மூவரும் மெனு கார்டில் அந்நியனாக பாய்ந்தனர். ஆளாளுக்கு பிடித்ததை ஆர்டர் செய்யவும் எனக்கு லேசாக வயிற்றை கலக்கியது. ஆனாலும் பில் 1200 க்குள் தான் வந்தது. சித்து, சாரதி மற்றும் அருண் மூவரும் தனி அறை. நள்ளிரவு வரை சிஎஸ்கே, ஆர்சிபி மேட்ச் பார்த்துவிட்டு கண்ணீர் மல்க உறங்கச் சென்றனர். நானெல்லாம் படுத்த மாத்திரத்தில் நித்திரை தழுவிக் கொண்டது.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...