Friday, December 25, 2020

வேட்டுவம் நூறு (கவிதைத் தொகுப்பு)

 

   புத்தகம்வேட்டுவம் நூறு (கவிதைத் தொகுப்பு)

 கவிஞர்மௌனன் யாத்ரிகா



 உலகப் பிரசித்திப் பெற்ற அற்புதமான சூழலியல் நாவல்ஓநாய்குலச் சின்னம்அதற்கு நிகரான மேய்ச்சல் நிலம் மற்றும் கானகம் சார் வேட்டை வாழ்க்கையை பேசும் கவிதை வடிவம் என இந்தத் தொகுப்பை கூறினால் அது மிகையன்று.

     கவிஞர் மௌனன் யாத்ரிகா அவர்களுடையஅந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டதுகவிதைத் தொகுப்பை ஒரே மூச்சில் வாசித்தேன். அவ்வளவு அருமையான கவிதைத் தொகுப்பு. இந்த கவிதைத் தொகுப்பு குறித்து ஏற்கனவே முகநூலில் எழுதியுள்ளேன். இங்கே வாசியுங்கள்(https://www.facebook.com/groups/1444591182255718/permalink/3261244523923699)

 மேலும் பேய்த்திணை, புத்தர் வைத்திருந்த தானியம் போன்ற கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். கவிஞர்கள் என்றாலே கவித்துவமான செவ்வியல் தன்மையோடு சிறுகதை புனைவதில் வல்லவர்களாகவே இருக்கிறார்கள். ஆமாம், குமுதம் கொன்றை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளது இவரது சிறுகதைதூங்கா இரவுகள்”. அருமையான சிறுகதை. வாசித்துப் பாருங்கள் (https://www.facebook.com/jayarajsir/posts/10216930020196610)

 

     இந்த கவிதைத் தொகுப்பு சூழலியல் சார்ந்து பேசும் வேட்டை வாழ்க்கையைப் பற்றிய அருமையான கவிதைத் தொகுப்பு. சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் சு.தியோடர் பாஸ்கரன் அவர்கள் தொகுப்புக்கு அணிந்துரை எழுதியுள்ளார். உள்ளடக்கத்தோடு கனக்கச்சிதமாக பொருந்து  அட்டைப் படம் மற்றும் கண்ணுக்கு விருந்தாகும் அற்புதமான ஓவியங்கள் என புத்தகம் அட்டகாசமாக உள்ளது.


     கவிஞர் வேட்டுவம் நூறு என்கிற தலைப்பில் நூறு கவிதைகளை முகநூலில் தொடராகவே எழுதி வந்து பிறகு புத்தகமாக்கி உள்ளார்.இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கத் துவங்கிய அடுத்த கணமே நாம் கையில் வில், அம்பு, ஈட்டி என்று வேட்டைக் களத்தில் இருப்பது போல உணர்வோம்.

     கலைப்பைப் பார்க்காதே மேலும் நடப்போம்

     காட்டுக்கு நம் வயிற்றின் சுருக்கம் தெரியும் இந்த வரிகளில் வேட்டுவம் எவ்வாறு கானகத்தோடு உணர்வுப் பூர்வமாக ஒன்றியுள்ளது என்பதை உணரலாம்.

     பொழுது போக்காக வேட்டையாடித் திரிந்த நவீனகால நாகரிக வேட்டையாடிகளுக்கு அது சாகசம். ஆனால் வயிற்றுப் பாட்டிற்கு வேட்டையாடுவோர்களுக்கு அது கானகத்திடம் பெறும் யாசகம்.

     பொருந்தாச் சூழலை பொறுத்தருள விலங்குகள் அறியாது

     அவற்றுக்கு வயிறே முதன்மை

     குடல்கள் சொல்வதை குளம்படிகள் கேட்கும்

     நம்முடைய குடலின் மொழி காலில் வெளிப்படுவதைக் கேள்

     எங்கோ இருக்கும் இரையின் பெயரை

     அது சொல்லிக் கொண்டு போகிறது

காடை முட்டைகள் நான் சாப்பிட்டது கிடையாது, ஆனால் கவிஞரின் வரிகள் எனக்கு நாவில் நயகராவையே சுரக்க வைத்து விட்டது போங்கள்.

     “…காடையின் முட்டைகள் கிடைக்கும்

     இலையில் மூடித் தீயில் வைத்தால்

     நம் நாக்கில் ஓடையே சுரக்கும்

காடை ஃப்ரை பள்ளியில் இரண்டு முறை விருந்தின் போது சாப்பிட்டு இருக்கிறேன். காடை முட்டையை சொன்ன கவிஞர் காடைக் கறியை விட்டு வைப்பாரா? பாருங்கள்

ஏலே பங்காளி

சூட்டைத் தூக்கிவிட்டாலும்

உடம்பை இரும்பாக்கும் காடைக்கறியைக்

காட்டில் சுட்டுத் திண்ண வேண்டாம்

மிளகு சேர்த்து அறைத்த சாந்தில் ஊறவைத்து பொறித்தால்

வயிற்றில் பத்துக் கவளம் சோறு இறங்கும்

நவநாகரிக வாழ்க்கை சூழலியல் மண்டலத்தை கன்னா பின்னாவென்று சிதைத்துப் போட்டுவிட்டது. ஆனால் வேட்டை என்பது சூழலியல் அழிப்பு கிடையாது, மாறாக அது உணவுச் சங்கிலியின் எந்த ஒரு கண்ணியும் சிதையாமல் காக்கும் ஒரு செயல் என்பதை கவிஞரின் வரிகள் இப்படி கூறுகின்றன.

     ஏலே பங்காளி

     உணவுச் சங்கிலியை இந்தக் காடு

     இறுக்கிக் கட்டி வைத்திருக்கிறது

     அதை அவிழ்க்கும் நுட்பத்தைத் தேடு

தமது இணையோடு களித்திருக்கும் இரையை தொந்தரவு செய்யாமல் நகர்ந்து விடும் நாகரிகம் அறிந்தவர்கள் வேட்டுவர்கள்.

காட்டுயிர்களின் காமம் போற்றுதல் வேடர்க்கு அறம் என்று ஒரு கவிதையை முத்தாய்ப்பாக முடிக்கிறார்.

வேட்டையில் திட்டமிடல் வியூகம் அமைத்தல் இன்றியமையாதது. கவிஞர்களின் வரி இப்படிச் சொல்லியபடி செல்கிறது

விலங்கின் தப்பிக்கும் திசையை

நம் வேட்டை நாய்களால் அடைத்துவிடு

மற்றுமொரு கவிதையில் இப்படிக் கூறுகிறார்.

கண்ணுக்குத் தெரியாத வேலியைக்

காட்டில் கட்டத் தெரிந்தவனே வேட்டுவன்

வேட்டையாடும் மனிதர்கள்தான் ஆள்,அம்பு, வில் என்று உட்புகுகிறார்கள். ஆனால் விலங்குகள்?!!

உடலைத் தவிர வேறு ஆயுதங்களைப்

பயன்படுத்தத் தெரியாது என்றபோதும்

அது நிராயுதபாணி அல்ல உண்மை தானே?!

கவிச்சு உண்ணாத வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா?” என்று அசைவப் பிரியர்கள் சைவர்களைக் கேட்பதும்கண்றாவி அதெல்லாம் எப்படித் திங்கிறீங்க?“ என்ற சைவர்கள் அசைவ உணவுக்காரர்களைக் கேட்பது என்கிற இந்தப் பிரிவினை எல்லாம் சமீபத்தில் வந்தது தானே?!! பழங்கால வாழ்க்கையில் உணவுப்பிரிவினை எல்லாம் இல்லை.

கோரையில் கோர்த்துள்ள விராலைப்

பார்வையிலேயே குழம்பு வைக்கும் ஒருத்தி

நாகரிகம் பார்த்து நாக்கைச் சாகடிக்கும்

கொழுநனை இன்று தாளிக்கப் போகிறாள்

ஏலே பங்காளி

கடைவாயில் ஈரம் ஊறாமல் களி தின்ன முடியாது

கவிச்சையில்லாத உடம்பும் குழம்பும் காரஞ்சாரமாக இருக்காது

வேட்டுவர்களை விரட்டி கானகத்தை சிதைக்கும் சூழலியல் கேடுகளை கவலையோடு பதிவு செய்து வேட்டுவத்தை முடிக்கிறார் கவிஞர்.

மேலே நான் கொடுத்துள்ளவையெல்லாம் வெறும் டிரெய்லர் ( TIP OF AN ICE BERG) தான்.

கவிதையை நேசிப்போர், கவிச்சையும் நேசிப்போர் மற்றும் இயற்கையை நேசிப்போர் அனைத்து தரப்பின் ஆர்வத்தையும் நிறைவு செய்யும் ஒரு அற்புதமான கவிதைத் தொகுப்பு.

 

    

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...