Friday, December 25, 2020

விடியலை நோக்கி முடிவற்றப் பயணம்… (நாவல்)

 

நூல் - விடியலை நோக்கி முடிவற்றப் பயணம்… (நாவல்)

ஆசிரியர் – த.ஜெ.பிரபு



   ஆசிரியர் த.ஜெ.பிரபு அவர்கள் ஒரு பேராசிரியர். 1965 காலகட்டத்திலேயே பொறியியல் படித்துள்ளார். அவர் படித்த காலகட்டத்தில் இருந்த பொறியியல் கல்லூரி இளைஞர்களின் எண்ணவோட்டம், அரசியல் விழைவு மற்றும் வேலையின்மை, காதல், திருமணம் என்று பல விஷயங்களை தெளிந்த நீரோடை போல எழுதியுள்ளார்.

நாவல் ஆறு பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. 428 பக்கங்கள் உள்ளது. ஒரு துப்பறியும் நாவலைப் போல விறுவிறு வேகத்தோடு எல்லாம் படிக்க இயலாது. மிகவும் பொறுமையாக ரசித்து ரசித்து வாசிக்க வேண்டிய நாவல். நான் இந்த நாவலை சுமார் 10 நாட்களுக்கு மேலாக வாசித்து வந்தேன்.

     சத்யகுமார் என்ற ஒரு பையன் 60 களில் சென்னையில் பொறியியல் கல்லூரியில் (அண்ணா பல்கலைக் கழகமாக இருக்கலாம் என்பது எனது யூகம்.) இடம் பிடித்து சைக்கிளில் ஏறிச் செல்வதில் நாவல் துவங்குகிறது. இப்போதெல்லாம் கல்லூரிகளில் படிப்போருக்கு (ஏன் 90 களில் கல்லூரி படித்த எங்களுக்கும் தான்) ரேகிங் என்றால் என்னவென்றே தெரியாது. ரேகிங் என்ற பெயரில் சில சீனியர்களின் சீண்டல்கள் எல்லை மீறாது. அம்மாதிரியானவர்களோடு ஒரு நட்பு மலரும். ஆனால் சிலர் ரேகிங் என்ற பெயரில் அருவெருக்கத்தக்க செயல்களை எல்லாம் செய்யச் சொல்லி வற்புறுத்துவார்கள். கதை நாயகன் சத்யா அந்த மாதிரியான ஒரு தருணத்தில் எதிர்த்து பேசிவிடுகிறான். அப்போது இஞ்சினியரிங் மாணவர்கள் கல்லூரியில் ஆங்கிலத்தில் உரையாடுவதை ஃபேஷனாக வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை நாவல் வழி உணர முடிகிறது.

     இப்போது பைக் வைத்திருப்பவர்கள் ஹெல்மெட் போடவில்லை என்றால் போலீஸ் க்கு பயந்து பயந்து செல்வோம். (இப்போது அந்த லிஸ்ட்டில் மாஸ்க்கும் இணைந்திருப்பது தான் பரிதாபம்) அந்த காலத்தில் சைக்கிள் வைத்திருப்போர் மாலை வேளைகளில் லைட் இல்லாமல் சென்றால் போலீஸ் பிடித்துவிடும். சத்யாவும் போலீஸ் இடம் சிக்கி கோர்ட்டில் சென்று ஃபைன் கட்டுகிறான்.

நாவலின் இரண்டாம் பாகம் சத்யாவின் இறுதி ஆண்டில் துவங்குகிறது. முதலாம் ஆண்டு நட்பு குழாம் இன்றி முற்றிலும் வேறு ஒரு குழுவில் இப்போது உள்ளான். இங்கே அரசியல் சித்தாந்தங்கள் பற்றிய தர்க்கங்கள் மாணவர்களிடையே நடக்கிறது. சத்யாவுக்கு சீனாவின் அரசியல் சித்தாந்தங்களின் மீது ஈர்ப்பு. பிரகாசம் என்றொரு நண்பன் தீவிர சோஷலிசவாதி. சோவியத் ரஷியா குறித்து சிலாகித்து பேசுகிறான். அவனுடைய தோழி கீதாவுடன் தர்க்கம் செய்து செய்து தனது கம்யுனிச அறிவை கூர்தீட்டிக் கொள்கிறான். சத்யா வின் உற்ற தோழனாக பாண்டியன் ஆகிறான்.

     பாண்டியன் படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருக்கிறான். பிறகு சொற்ப சம்பளத்தில் வேலைக்குப் போகிறான். கதைகள் எழுதுகிறான்.

     சத்யாவும் ஆரம்பத்தில் சிறிய வேலை பிறகு ஒரு பெரிய வேலை அப்புறம் அதில் இருந்து வெளியேற்றப் படுதல் இறுதியாக ஐஐடியில் ஆராய்ச்சி என்று செல்கிறான்.

     பிரகாசம் கீதாவோடு காதலில் இருக்கிறானோ என்று குடும்பத்தினர் ஐயப்படுகிறார்கள். ஆனால் டிகிரி முடிந்தவுடன் கம்யுனிஸ்ட் கட்சி உதவியுடன் மேற்படிப்புக்கு சோவியத்யூனியன் செல்கிறான்.

     கீதாவை குடும்பத்தினர் திருமணம் செய்து கொண்டு பிஸினஸ் பார்க்க வற்புறுத்துகின்றனர். அவள் ஐஐடி யில் ஆராய்ச்சி செய்கிறாள். தொடர் ஆய்வுகளுக்காக டேராடூன் செல்கிறாள். கதை முடியும் வரையில் அவள் திருமணம் முடிந்தபாடில்லை. பெற்றோரின் கெஞ்சலுக்காக அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கச் சென்ற சத்யா ஐஐடியில் ஆராய்ச்சி மாணவனாக சேர்ந்தது தான் மிச்சம்.

     இப்போதும் கூட நாம் கண்கூடாக பார்க்கலாம், கல்லூரிகாலத்தில் படிக்காமல் விட்டேத்தியாக திரிந்தவர்கள் நல்ல நிலையில் செட்டில் ஆகி இருப்பார்கள். ஆனால் பிரமாதமாக படித்தவர்கள் சிறிய வேலையில் ஒட்டிக் கொண்டு கிடப்பார்கள். நாவலிலும் ஆசிரியர் இந்தக் காட்சிகளை பதிவு செய்கிறார்.

     மூன்றாம் பாகத்தில் புதிதாக வேலைக்குச் செல்வோர் அங்கே உள்ள வேலை தெரிந்த சீனியர்களால் இரண்டாவது முறையாக உள்ளார்ந்த “ரேகிங்“க்கு ஆளாகிறார்கள் என்பதை பதிவு செய்துள்ளார்.

     நான்காம் பாகத்தில் தொழிலாளர்கள் நலன், முதலாளிகள் மனநிலை, போராட்டம், தொழிற்சாலையை மூடி தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தினால் வழிக்கு வருவார்கள் என்று முதலாளிகள் காய் நகர்த்துவது. என்று செல்கிறது.

     நாளைக் காலையில் 10.00 மணிக்கு வெளியூரில் பொதுத்தேர்வுக்கு செல்ல வேண்டும், ஆனால் எழுந்து மணி பார்க்கையில் கடிகாரம் 9.45 என்கிறது. “ஐயய்யோ போச்சே“ அலறியடித்துக் கொண்டு எழுந்தால் கனவாக இருக்கும். கதையோட்டத்தில் ஆசிரியர் பாண்டியனின் ஒரு கதையை நைசாக கலந்து விட்டிருப்பார். இறுதியில் அது கதையோட்டத்தில் “ஓ கதையா?” என்கிற ஒரு ஆசுவாசத்தை தருமாறு விறுவிறுப்பாக அமைந்திருந்தது.

     எங்கே முடிகிறது என்று கண்டறிய இயலாமல் முடித்தது சற்றே ஏமாற்றமாக இருந்தது.

 அறுபதுகளின் காலகட்ட சென்னை, பொறியியல் கல்லூரி, கம்யுனிச அரசியல், வேலையின்மை, தொழிற்சாலைகள், தொழிலாளர் பிரச்சனை என்று நாவல் பல தளங்களை படம் பிடித்துக் காட்டுகிறது. நிச்சயமாக வாசிக்கத்தக்க ஒரு அருமையான படைப்பு.

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...