Saturday, June 20, 2020

First They killed my Father – கம்போடிய பட விமர்சனம்


First They killed my Father – கம்போடிய பட விமர்சனம்

     போல் பாட் என்னும் கம்யுனிச சர்வாதிகாரி கம்போடிய மக்களை படாத பாடு படுத்தி நாட்டின் மக்கள் தொகையில் கால்வாசி பேரை காவு வாங்கியவன். அந்த தருணத்தில் கம்போடிய தலைநகரான Phnom Penh ஒரு ராணுவ உயரதிகாரியின் குடும்பத்தில் பிறந்த Loung Ung (உச்சரிப்புச் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது அல்லவா அதனால் தான் ஆங்கிலத்தில்) என்கிற ஐந்து வயது சிறுமியின் பார்வையில் தான் கதை நகர்கிறது. இது ஒரு டாக்குடிராமா வகையிலான படம் போல தெரிகிறது. ஆனால் மெதுவாகச் சென்றாலும் சுவாரசியமாகவே செல்கிறது.
     இன்னொரு முக்கிய விஷயம் இந்த படத்தின் இயக்குநர் யாரென்று தெரியுமா? பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்செலினா ஜூலி.
     இந்த படத்தின் கதையை புரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் கொஞ்சூண்டு கம்போடிய வரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும்.
     ஆல் லாங்குவேஜ்ல அமெரிக்காவுக்கு பிடிக்காத வார்த்தை “கம்யுனிசம்”. அது எங்க எந்த ரூபத்தில் இருந்தாலும் தேடிப்பிடிச்சி வேரறுத்து “நாயம்டா, தர்மம்டா” என்று கதறிவிட்டு சொம்பில் எச்சில் துப்பி துண்டில் வாயை துடைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும். (என்ன ஒண்ணு கியுபா கிட்டயும் வடகொரியா கிட்டயும் பாச்சா அண்ணாமலை சிவாஜி எதுவும் பலிக்கல)
     1970 ல் கம்போடிய இளவரசர் வெளியூர் போன நேரம் பார்த்து ராணுவ ஜெனரல் ஆட்சிய பிடித்துக் கொண்டார். அவருக்கு கம்யுனிச சீனாவின் தயவில் இருந்த கெமர் ரூஜ் சப்போர்ட். அப்போது வியட்னாம் போர் சமயம். அதனால் இளவரசருக்கு அமெரிக்கா மற்றும் தெற்கு வியட்னாம் சப்போர்ட். வடக்கு வியட்னாம் கம்யுனிச நாடு எனவே அது கெமர் ரூஜ் ஐ ஆதரித்தது. கம்போடியாவில் 500000 டன் அளவுக்கு அமெரிக்கா பாம் போட்டுக் கொண்டு இருந்தது.
     1975 ல் அமெரிக்கா வியட்னாம் போரில் இருந்து முற்றிலும் வெளியேறிய உடனே கெமர் ரூஜ் போராளிகள் கம்போடிய தலைநகர் உள்ளே புகுந்து விட்டனர். தலைநகரைக் கைப்பற்றிய அவர்கள் அங்கே உள்ள மக்கள் அனைவரையும் வேலை முகாமுக்கு துரத்தினார்கள். தங்கள் வீடு உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு போகும் படி அறிவுறுத்தப் பட்டார்கள்.
     அதன்பிறகு ஒரு நான்கு ஆண்டுகள் அதாவது வியட்நாம் உள்ளே புகுந்து நாட்டை கெமர் ரூஜ் இடம் இருந்து மீட்கும் வரை கம்போடிய மக்கள் தொகையில் கால்வாசி காலியாகிவிட்டது.
     படத்தின் துவக்கத்தில் ஐந்து வயது சிறுமி உங் தங்கள் மாடிவீட்டின் வராண்டாவில் நின்று ஹெலிக்காப்டர் செல்வதை வேடிக்கை பார்த்தவண்ணம் இருக்கிறாள். அவளது தந்தை அரசாங்க ராணுவ அதிகாரி. வீட்டில் மொத்தம் ஐந்து குழந்தைகள். தொலைக்காட்சியில் அமெரிக்க படைகள் மொத்தமாக கம்போடியாவில் இருந்து வெளியேறியது என்று செய்தி சொல்கிறார்கள். உங்கின் தந்தையின் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்கின்றன.
     சற்று நேரத்திற்கெல்லாம் கெமர் ரூஜ் படை துப்பாக்கியுடன் தலைநகருக்குள் நுழைகிறது. “காம்ரேட்ஸ், குண்டு வீச்சு ஆபத்து இருப்பதால் அனைவரும் ஒரு மூன்று நாட்கள் நகரத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று ஒலிப்பெருக்கி மூலமாக கட்டளையிடுகிறது. அனைவரும் அத்தியாவசிய பொருட்களுடன் வெளியேறுகின்றனர். பெரியவர்கள் அனைவருக்கும் தெரியும் ’நாம் மீண்டும் வீட்டுக்கு வரப்போவதில்லை’ என்பது.
     உங்கின் குடும்பம் தங்களுடைய காரில் மெல்ல ஊர்ந்தபடி செல்கின்றனர். வழியில் சாலையோரத்தில் படுத்து உறங்கி தொடர்ந்து பயணிக்கின்றனர். வழியில் ”மோட்டார் வாகனம் அரசுக்குத் தேவை” என பிடுங்கிக் கொள்கின்றனர். சிறிது தூரம் சென்ற பின்னர் வெளிநாட்டு பொருட்கள் எதுவும் உங்கள் கைகளில் இருக்கக் கூடாது என்று அங்கேயே விட்டுச் செல்லுமாறு கூறுகின்றனர். மேலும் நமது நாட்டில் பணம் செல்லாது எனவே பணத்தையும் போட்டு விட்டுச் செல்லுங்கள் என்கிறார்கள்.
     கையில் எதுவும் இன்றி நடந்து சென்று கொண்டு இருக்கும் போது உங்கின் தாய்மாமன் மாட்டு வண்டியில் எதிர்கொண்டு அவர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே ஓரிரு நாட்கள் தங்கியிருக்கிறார்கள். ஆனால் மாமாவின் மனைவி உங்கின் தந்தை முன்னால் ராணுவ அதிகாரி என்பதால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதால் தங்கள் குடும்பத்தினர் அனைவர் உயிருக்கும் ஆபத்து என்று கூறி அவர்களை அனுப்பிவிட கூறுகிறாள். வேறு வழியின்றி மீண்டும் பயணத்தை தொடர்கிறார்கள்.
     இறுதியாக ஒரு கொடுமையான வேலை முகாமுக்கு அனுப்பி வைக்கப் படுகிறார்கள். அங்கே அவர்களுக்கான குடிசையை அவர்களே வேய்ந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஐந்து வயது சிறுமியான உங் உட்பட அனைவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய வேலையை செய்ய வேண்டும் என்று கூறி துப்பாக்கி முனையில் வேலை  வாங்குகிறார்கள். அவ்வளவு வேலைக்கு பிறகு அரை வயிற்றுக்கு கூட உணவு வழங்கப் படுவதில்லை. (ஒரு வேலை முகாமில் ஆரம்பத்தில் 20000 பேர் இருந்து இறுதியில் அது 1000க்குள் சுருங்கியிருக்கிறது என்றால் பாருங்கள் எவ்வளவு கொடுமை என்று)
     கெமர் ரூஜ் காலத்தில் கம்போடியாவின் ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பும் அடித்து நொறுக்கப் பட்டது. அனைவரும் வேலை செய்ய வேண்டும் வழங்கப் படும் உணவை உண்ண வேண்டும். மருந்து கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதை பயன்படுத்த கூடாது என்று குணப்படுத்தி விடக்கூடிய நோயாளிகளைக் கூட இறந்து போகட்டும் என்று கைவிடுகிறார்கள். சிறுவர்கள் உட்பட அனைவர் கையிலும் துப்பாக்கி.
     உங்கின் மூத்த சகோதரனும் சகோதரியும் வேறு வேலை கேம்பிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கே அவளது சகோதரி பட்டினியாலும் நோய்வாய்ப்பட்டும் இறந்து போகிறாள். உங்கின் தந்தை முன்னால் ராணுவ வீரர் என்று தெரிய வரும் போது அழைத்துச் செல்லப் படுகிறார். உங்கின் கனவில் அவளது தந்தை கொள்ளப்பட்டு பல பிணங்களுடன் சேர்த்து புதைப்பது போல வருகிறது. பிறகு அவளது தாய் எஞ்சி உள்ள மூவரையும் திசைக்கு ஒருவராக சென்று  அவர்களின் ஒரிஜினல் அடையாளங்களை மறைத்து அனாதை என்று கூறி வேறு வேலை முகாம்களில் சேர்ந்து கொள்ளுமாறு அனுப்புகிறாள்.
     உங் ராணுவப் பயிற்சிப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப் படுகிறாள். அங்கே எல்லையோரங்களில் கண்ணி வெடி புதைக்கும் பணியில் உதவுகிறாள். ஒரு நாள் அவளது சகோதரியை சென்று பார்த்து வர அனுமதி கிடைக்கிறது. ஆனால் அவள் தனது தாயைக் காண பழைய வேலை முகாமுக்கு செல்கிறாள். அங்கே முகாமே வெறிச்சோடிக் கிடக்கிறது. பக்கத்து குடில் மூதாட்டி அவளது தாய் அழைத்துச் செல்லப் பட்டதாக கூறுகிறாள். மறுபடியும் உங்கின் கனவில் அவளது தாய் இறந்து போகும் காட்சியை காண்கிறாள்.
     திடீரென வியட்னாம் படை கம்போடியாவில் நுழைகிறது. அவர்கள் அனைவரும் பலத்த துப்பாக்கிச் சண்டை குண்டு வெடிப்புகளுக்கு இடையே சிதறி ஓடுகிறார்கள். வழியில் தனது இளைய சகோதரன் சகோதரி மற்றும் சில பையன்களைக் கண்டு அவர்களோடு முகாமில் தங்குகிறாள். அடுத்தநாள் மறுபடியும் கெமர் ரூஜ் படையின் தாக்குதலில் சிதறி ஓடுகிறார்கள். இறுதியாக செஞ்சிலுவைச் சங்க மருத்துவ முகாமில் தனது மூத்த அண்ணனைக் காண்கிறாள். நால்வரும் இணைவதாக படம் முடிகிறது.
     படம் முழுவதுமாக உங் என்கிற ஐந்து வயது சிறுமியின் பார்வையிலேயே விரிகிறது. கம்யுனிச அரசை அமைக்கிறேன் பேர்வழி என்று ரொம்ப கறார் தனம் காட்டும் கெமர் ரூஜ் ன் கேணத்தனமான செயல்பாடுகள் சைனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீனத் தயாரிப்பு டிவியை உடைத்த “கோ கொரானா” கோஷ்டியின் செயல்பாடுகளுக்கு சற்றும் சளைத்ததில்லை.
     படத்தில் காட்டியுள்ள கம்போடியாவின் கலாச்சாரம் வாழ்வியல் அனைத்தும் தமிழகத்திற்கு நெருக்கமாக உள்ளன. பெண்குழந்தைகள் உட்பட மார்பு வரை துணியை சுற்றிக் கொண்டு மறைந்து கொண்டு குளிக்கின்றனர். அப்பாவை ”ப்பா” என்றும் அம்மாவை ”ம்மா” என்றும் விளிக்கின்றனர். உணவு கூட அரிசி உணவுதான். மேலும் மாட்டு வண்டி நம்முடையது போலவே உள்ளது. அப்புறம் பனைமட்டை தொப்பி மற்றும் உணவுக் கூடை இவையெல்லாம் ஆச்சரியம்.
     கம்போடியா முழுவதுமே நல்ல பசுமை போர்த்திய வளமான செம்மண் நிலப்பகுதியாக உள்ளது.
     படத்தில் வரும் “உங்“ கின் சுயசரிதையை அவருடன் கதையாக உருவாக்கி ஏஞ்சலினா சுயசரிதையை அவருடன் கதையாக உருவாக்கி ஏஞ்சலினா ஜூலி இயக்கியுள்ளார்.
     படத்தின் ஒளிப்பதிவு அபாரம். உங்காக நடித்த சிறுமி வெகுச் சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் மௌனத்தை பின்னணி இசையாக மிக நேர்த்தியாக ஏராளமான இடங்களில் பயன்படுத்தி உள்ளார்கள்.

    

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...