Monday, September 4, 2017

லால் குடி டேஸ்- 5 ஆசிரியர் தின சிறப்புப் பதிவு

திடீரென்று ஒரு சிங்கம் பிடறி மயிர் சிலிர்த்தபடி கம்பீரமாக பள்ளி வளாகத்தில் நுழைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?! உயிரை கையில் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடி ஒளிந்து கொள்ள மாட்டோமா?!
அவரை நாங்கள் ”திருவோடு சார்” என்றுஅன்போடு அழைப்போம். நல்ல சிவப்பு சற்றே குள்ளம், கையில் ஒழுக்கத்தை நிலைநாட்டி ஆட்சி செலுத்தும் செங்கோல் அப்புறம் இந்த மீசை, சுப.வீரபாண்டியன் அவர்களுடையதைப் போன்று. குச்சியால் ஓங்கி அடிச்சார்னா ஒன்றரை டன் வெயிட்டைத் தாண்டும்.
 “உங்களுக்கு ஆங்கிலப்பாடம் யார் எடுக்குறாங்க?“
 “திருவோடு சார், சார்!”
தலைமையாசிரியரிடம் ஒரு மாணவன் கூறினான்.
பள்ளி ஆரம்ப நாட்களில், திருவோடு என்றொரு பெயரா? என்று எனக்கு ஆச்சரியமாய் போய் விட்டது.
அன்று வியாழக்கிழமை, இரண்டாம் பாடவேளை, வேதியியல் ஆசிரியர் செல்வம் அவர்கள் வகுப்பெடுத்துக்கொண்டு இருந்தபோது ’எக்ஸ்க்யுஸ்மீ’ என்றவாறு உள்ளே வந்தார் ’திருவோடு’ சார். கையில் ஒரு ஜவுளிக்கடை மஞ்சள்பை. மாணவர்களில் பலர் இதற்காகவே காத்திருந்த்து போல எழுந்துநின்று தாங்கள் வைத்திருந்த சில்லறைகளை அவர் ஏந்தியபடி வந்த மஞ்சள்பையில் போட்டனர். அவரும் ஒவ்வொரு பெஞ்சாக பையை மெல்ல மெல்ல ஏந்தி வந்தார். ஒரு பெஞ்சில் ஒருவர்கூட காசு போடவில்லையென்றால் கூட ’இல்லன்னா பரவால்ல’ என்றபடி சாந்தமாக சொல்லிச்சென்றார். ஆச்சரியம், காற்றில் சுழற்றியபடி ஸ்டைலாக எடுத்துவரும் பிரம்பு இப்போது அவர்கையில் இல்லை.
 அவரது பெயர்க்காரணம் இப்போது எனக்கு நன்றாக விளங்கிவிட்டது. எனது நண்பனிடம் மேற்கொண்டு விவரங்கள் கேட்டபோது ’ஒவ்வொரு வியாழக்கிழமையும் இது வழக்கமாகநடக்கும் நிகழ்வு. பள்ளி வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பை பெறச்செய்யத்தான் அவர் மஞ்சப்பையையும் ’திருவோடு’ என்ற நாமகரணத்தையும் ஏந்தி வருகிறார். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல அவர் சிறுக சிறுக சேமித்த தொகை ஒரு கணிசமான தொகையாக வளர்ந்து உள்ளது’ என்று கூறினான். இதன் பிறகு ’திருவோடு’என்ற பெயர் இளக்காரமாய் இல்லாமல் கம்பீரமானதாகவும் மரியாதைக்குறியதாகவும் எனக்கு ஒலிக்க ஆரம்பித்தது.
 அடுத்தநாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் திருவோடு சார் தனது சிம்மக்குரலில் கணீரென பேசினார். “நான் வகுப்புக்கு வரும்போது காசு போட்டே ஆகவேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லை. உன்னிடம் இருந்தால் முழுமனதுடன் வழங்கலாம் இல்லையென்றாலும் பிரச்சனையொன்றும் இல்லை. நேற்று எண்ணிய போது இரண்டு செல்லாக்காசுகளும் சில சோடா மூடிகளும் கிடைத்தன. பாவம் அவனிடம் அதுதான் இருந்திருக்கும் போல“ என்றார்.

 நான் எனது நண்பனிடம் கிசுகிசுத்தேன், “அவரின் உண்மையான பெயர் என்னடா?”
 “-----“
 “ ஆகா அற்புதம்!”
ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை நம்மை விட்டால் மாணவர்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது.
தான் சார்ந்திருக்கும் பள்ளி மீது அதிக பற்று ஈடுபாடு மற்றும் வளர்ச்சியில் பங்கு பெறச்செய்தல்.
மாணவர்கள் மத்தியில் உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்தல்
ஆகிய நல்ல பண்புகளை ஆசிரியரான பின்பு எனக்குள் வரித்துக்கொண்டேன்.

“ஆமாம் அவர் பெயர் என்ன?“

அற்புதசாமி என்பதுதான் அவர்பெயர்.

1 comment:

  1. அற்புதசாமி... அருமைசாமி

    ReplyDelete

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...