Tuesday, September 5, 2017

ஆசிரியர் தின சிறப்புப் பதிவு - சீமான் D.M.E ஆசிரியர்

ஆசிரியர் தின சிறப்புப் பதிவு - சீமான் D.M.E ஆசிரியர்
இந்த ஆண்டு ஆசிரியர் தின சிறப்புப் பதிவாக எனது டியுஷன் ஆசிரியர் சீமான் அவர்களைப் பற்றிக் கூறப் போகிறேன்.
கிராமத்துப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றவுடன் பாலிடெக்னிக்கில் சேர்ந்து டி.எம். முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஒரு கட்டிடத்தில் வாடகைக்கு அறை பிடித்து டியுஷன் எடுத்தார்.
பாலிடெக்னிக் படித்தவர் என்பதால் பத்தாம் வகுப்புக் கணிதம் இயல்பாகவே வரும். இவரின் ஆங்கில இலக்கணம் வகுப்பு தான் எனது ஆங்கில அறிவுக்கு அடிப்படை. அவரும் ஒன்றும் ஆங்கிலத்தில் பெரிய லிட்ரேச்சர் எல்லாம் படித்தவர் இல்லை என்றாலும் தமிழ் வழியில் ஆங்கில இலக்கணம் என்கிற ஒரு புத்தகத்தை படித்து அடிப்படை ஆங்கில இலக்கணத்தை நடத்தினார்.
அவரிடம் நான் ஒன்பதாம் வகுப்பும் பத்தாம் வகுப்பும் டியுஷன் படித்தேன். அக்கால ஆங்கிலம் இரண்டாம் தாளில் சற்றேறக்குறைய எல்லா தலைப்புக் களையும் உள்ளடக்கி “transformation’ என்றொரு பகுதி இருக்கும் மற்றும் articles, infinitve, gerund என்கிற ரீதியில் தலைப்புகள் உண்டு. அனைத்திலும் சிந்தாமல் சிதறாமல் அனைத்து மதிப்பெண்களையும் வாங்க வைத்து விடுவார்.
அன்றைய கால கட்டத்தில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு essay question என்று சொன்னாலே காய்ச்சல் வந்து விடும். ஆத்தாடி இம்மாம் பெரிய essay வை எப்படி படிப்பது என்று மலைத்து விடுவார்கள். நான் முதலில் essayக்கு தேவைப்படும் வார்த்தைகளை பார்த்துக் கொண்டு விடுவேன். பிறகு என்னமானே தேனே பொன் மானேஎல்லாம் போட்டு கிராமர் என்னும் நூலைக் கொண்டு மாலையாக்கி விடுவேன். அப்போது சொந்தமாக எழுதுவதை ஆசிரியர்கள் ஊக்குவிப்பதில்லை ஆயினும் நோட்ஸில் இருப்பதற்கு 90 விழுக்காடு நெருக்கமாக எழுதிவிடுவதால் தப்பித்துக் கொள்வேன்.
மேல்நிலை வகுப்புகளில் கதையை கேட்டு சொந்தமாக essay எழுதிவிடும் அளவுக்கு எனது ஆங்கில அறிவு விருத்தியானதற்கு திரு சீமான் ஆசிரியர்தான் காரணம்.
எங்களுக்குப் பிறகு ஒரு இரண்டு ஆண்டுகள் தான் அவர் டியுஷன் எடுத்தார். பிறகு அரசுப் போக்குவரத்து கழகத்தில் வேலை கிடைத்துச் சென்று விட்டார். தற்போது அரியலூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் அதிகாரியாக பணிபுரிகிறார்.

அவ்வப்போது வழியில் அவரைப் பார்ப்பது உண்டு. அவரை நான் நன்றியோடும் என்னை அவர் பெருமிதத்தோடும் பார்த்து புன்முறுவல் பூப்பதுண்டு. அவரது மகள் அரசு நகர் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்றதாக கூறினார். மீன்குஞ்சல்லவா நீந்த சொல்லித்தர வேண்டுமா என்ன?

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...