Friday, December 29, 2017

லால்குடி டேஸ்-21 ”இஸ்திரி பெட்டி”

லால்குடி டேஸ்-21 ”இஸ்திரி பெட்டி”


மீசையும் ஆசையும் அரும்பும் பருவத்தில் ஆண்கள் தங்களை கம்பீரமாக காண்பித்துக் கொள்ள மிகுந்த அக்கரைக் கொள்வார்கள். ஆள் பாதி ஆடை பாதி என்பதால் அவர்களின் அந்த நேர்த்தி உடையில் ஆரம்பிக்கும். ஆகையால் சட்டை முதல் ஜட்டி வரை அயர்ன் பண்ணி போட்டுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.
இந்த பிரச்சனையை விடுதியில் எப்படி சமாளிப்பது?!
பழனிமுத்து போன்ற முன்னாள் மாணவர்கள் 12ம் வகுப்பு நண்பர்களிடம் அயர்ன் பாக்ஸ் வாங்கி தேய்த்து உடுத்திக் கொள்வார்கள். எங்களைப் போன்ற புதிய மாணவர்கள் என்ன செய்வது?
உடனடியாக பதினோறாம் வகுப்பு மாணவர்களின் பொதுக்குழு கூடி இது பற்றி விவாதித்தது. இறுதியாக ஒரு அயர்ன் பாக்ஸை சொந்தமாக வாங்கி போடுவது என்று தீர்மானமாயிற்று.
“முதல்ல காச கலெக்ட் பண்ணுங்க நாங்க வாங்கிட்டு வந்துடுறோம்” என்றார்கள் திருச்சி பக்கமிருந்து வரும் பாலுவும் செந்திலும்.
“ஆளுக்கு பத்து ரூபா போடுவோம். மீடியம் சைஸ் அயர்ன் பாக்ஸ் விலை 150 லிருந்து 200க்குள் இருக்கும். நாம லெவன்த் இருவத்தஞ்சி பேரு இருக்கோம். போக வர எல்லாம் சேர்த்து கரெக்ட்டா இருக்கும்” என்றான் பழனிமுத்து.
“ரெண்டு வருஷம் கழிச்சி போகும் போது அயர்ன் பாக்ஸ என்ன செய்வது?” இது தொலைநோக்கு பார்வை உடைய ராஜவேலு.
“ஏலம் விட்டு பிரிச்சிக்கலாம் இல்ல ஆஸ்டலுக்கு ஞாபகமா எதாவது கிஃப்ட் வாங்கி வச்சிடலாம்” இது அசோக்.
“ப்ளஸ் டூ முடிந்து போகும் போது நானே ஒரு ரேட் போட்டு கொடுத்துட்டு எடுத்துக்கறேன” என்றான் பாலு.
’முதல் வாரம் செலவுக்கு வைத்திருந்த காசு 15ல் 10 ரூபாய்க்கு வேட்டு வச்சிட்டாய்ங்கலா’ என்று எண்ணியபடி பொதுக்குழு கூட்டம் முடிந்து சாப்பிட போனேன்.
ஒரு வாரம் கழித்து அழகான சிறிய இரும்பு அயர்ன் பாக்ஸ் வந்திறங்கியது. அப்போதே எங்கள் விடுதியில் பிரபலமாக பேசப்பட்டது “இஸ்திரிப் பெட்டி ஊழல்” தான். நூற்றைம்பது ரூபாய் அயர்ன் பாக்ஸ் க்கு வசூலிக்கப் பட்ட இருநூற்றைம்பதும் செலவழிக்கப் பட்டதாக கணக்கு காண்பிக்கப் பட்டது. மேலும் பொது நல நோக்கத்தோடு மேற்கொண்டு இருபது ரூபாய் செலவழித்ததாக கூறியதை இப்போது நினைத்தாலும் எனது கண்கள் கோபத்தில் பழைய விஜயகாந்த் கண்கள் போல் ஆகிவிடுகிறது.
ஆமாம் ஆஸ்டல்ல அயர்ன் பாக்ஸ் போட அனுமதி உண்டா? கரெண்ட் பில் எக்கச்சக்கமா வந்துடாதா? வார்டன் எதுவும் சொல்லமாட்டாரா?
இப்படி எக்கச்சக்கமான கேள்விகள் உங்கள் மண்டையை குடைவது எனக்கு தெரிகிறது.
நான் இதுகாரும் சொன்னது தொழில் முறை சலவைத் தொழிலாளர்கள் வைத்திருக்கும் கரிப் பெட்டி. இரும்பால் ஆனது.
சனி ஞாயிறுகளில் அயர்ன் பண்ண போறவைங்க எல்லாரும் கிச்சன்ல அடுப்பங்கரை அருகில் குத்த வச்சி உக்காந்து இருப்போம். விறகு எரிஞ்சி கரி விழ ஆரம்பித்த உடனே கரண்டியால் கங்கு களை அள்ளி பெட்டியில் போட்டு “லாக்“ செய்து கொண்டு வந்து விடுவோம்.
நெருப்புத் துண்டங்கள் வெப்பத்தை வெளியிட்டு சாம்பலாக ஆவதற்குள் அந்த வாரத்திற்கு தேவையான துணிகளை தேய்த்து விடுவோம். தேய்த்து முடித்தவுடன் “காத்திருப்போர் பட்டியலை” சரிபார்த்து உரிய நபரிடம் சர்ச்சைகளுக்கு இடமளிக்கா வண்ணம் கொடுக்க வேண்டும்.
நமக்க ”குற்றேவல்” செய்யும் சிறுவர் பட்டாளம் நம்மை சுற்றிச் சுற்றி வரும். அவர்களின் ஏதாவது ஒரு சட்டையை தேய்த்து தருவதாக வாக்குறுதி தந்து விட்டோமானால் போதும் “சஞ்சீவி“ மலையையே பெயர்த்து எடுத்து வந்து விடுதிக்கு அருகே வைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்.
அவர்களைக் கொண்டு சாம்பலை வெளியே தட்டி விட்டு வருவது, கங்குகள் தீர்ந்து போனால் குவித்து வைக்கப் பட்டிருக்கும் சிறு அடுப்புக்கரி துண்டங்களை பெட்டியில் போட்டு கங்குகளாக மாற்ற வேண்டிய பொறுப்பையும் அவர்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்.
அந்தப் பெட்டியை கடைசியில் திறந்து காண்பிக்கப் போவதாக நம்மை கட்டிப் போடும் ஒரு பாம்பாட்டியின் லாவகத்துடன் அவர்களது சட்டையை இறுதியில் தான் தேய்த்து தர வேண்டும். இல்லையென்றால் சஞ்சீவி மலையை எங்காவது ரோட்டில் கடாசிவிட்டு வாய்க்கால் பக்கம் விளையாட சென்று விடுவார்கள் ஜாக்கிரதை.
அப்போது லால்குடிப் பள்ளியில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே சீருடை மற்ற இரண்டு நாட்கள் வண்ண உடை. என்னிடம் சீருடை மூன்று மற்றும் வண்ண உடை இரண்டு மட்டுமே இருந்தது ஆகையால் என்னுடைய வேலை இலகுவாக முடிந்து விடும்.
அயர்ன் பண்ணுவதில் பல்வேறு தொழில் நுணுக்கங்களை கண்டறிந்தது எங்க ஆஸ்டல் பசங்கதான் என்று பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லலாம். துணியை எங்கே எப்படி மடித்து தேய்த்தால் என்ன டிசைன் வரும் என்பதெல்லாம் எங்க பசங்களுக்கு அத்து படி. முதுகில் டைமண்ட், ஸ்பைடர் வலை, மற்றும் வித்தியாசமான வட்ட வடிவ பூ டிசைன் எல்லாம் போடுவார்கள்.

நல்ல சிவந்த நிறம், கோரை முடி மற்றும் சிரித்த முகம் என்று ஒருவன் இருப்பான். பெயர் பாபு என்று வைத்துக் கொள்வோம். (பெயர் மறந்து போச்சு) நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்ளவே பதினைந்து நிமிடங்களை செலவழிப்பான் என்றாலே நீங்கள் அவனைப் பற்றி புரிந்து கொள்ளலாம். அன்றைய காலகட்டத்தில் பிரிண்ட்டட் நியூஸ் பேப்பர் போன்ற டிசைன் ஃபேஷனாகியிருந்தது. பள்ளி முடிந்து வந்தவுடன் பாபு மறுபடியும் புத்தாடை உடுத்தி நகர்வலம் கிளம்பி விடுவான்.
அந்த செய்தித்தாள் டிசைன் சட்டை அவனது ஃபேவரைட். அதை துவைத்து மிக நேர்த்தியாக ரீகல் சொட்டு நீலம் போட்டு தனியே உலர்த்தி பிறகு அந்த சட்டைக்கென்று பிரத்தியேகமாக வார நாட்களில் அயர்ன் பண்ணவும் உட்கார்ந்து விடுவான்.
எங்கள் விடுதிக்கு எதிரே பழங்காலத்து நாட்டு ஓடு வேய்ந்த பெரிய வீடு ஒன்று உண்டு. அங்கே ஒரு தாத்தா எந்நேரமும் செய்தித் தாளும் கையுமாகவே இருப்பார்.
நம்ம பாபு ஒரு மாலைவேளையில் அந்த செய்தித்தாள் சட்டையை மாட்டிக் கொண்டு எதிர் வீட்டு வராண்டாவில் நின்று அவர்கள் வீட்டு டிவியில் கிரிக்கெட் பார்க்க ஒதுங்கினான். அந்த தாத்தா செய்தித்தாளை வீசி எறிந்து விட்டு இவனையே “குறு குறு“ என்று பார்த்தார். எங்கே இவனை அலேக்காக தூக்கி மடியில் கிடத்தி படிக்க ஆரம்பித்து விடுவாரோ என்று பயந்து போனேன். அவன் சட்டையில் இருந்து டிசைன் ஆங்கில செய்தித்தாளாக இருக்கப் போய் தப்பினான் பாபு.
எங்கள் சீனியர்கள் வெளியேறிய அடுத்த ஆண்டு நாங்க சீனியராக பதவி உயர்வு பெற்றோம். மறுபடி ஒரு லெவன்த். வந்தவர்கள் எங்களிடம் அயர்ன் பாக்ஸை ஓசி வாங்க ஆரம்பித்தார்கள். ஒரு முறை மறுக்கப் போய் அது “வகுப்புக் கலவரமாக” கனன்று கொண்டு இருந்தது. இந்த சச்சரவோடு இன்னும் பல அரங்கேறிய சண்டைக் காட்சிகள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

இவ்வாறாக எங்கள் இரண்டு வருட வாழ்க்கையில் எங்களோடு பயணித்த அந்த இஸ்திரிப்பெட்டி எங்கே ஏலம் விடப்பட்டது? யாரோடு சென்றது? எவ்வளவுக்கு விலை போனது? என்கிற எந்த கவலையும் இல்லாமல் கடைசி நாளன்று ஊருக்கு மூட்டைக் கட்டினோம்.
பிரிதொரு நாள் மாற்றுச் சான்றிதழ் வாங்கச் சென்றபோது தான் தெரிந்து கொண்டோம், “இஸ்திரிப் பெட்டி ஊழலில்” ஈடுபட்ட அதே பசங்க அதை இனாமாக எடுத்துச் சென்று விட்டார்கள் என்று.

1 comment:

  1. marakka mudiyadha natkkal andha hostel life kanmunnea kondu vandha nanbanea arumai valthukkal thodarndhu yezhuthavum

    ReplyDelete

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...