Thursday, December 7, 2017

நானே “நானோ“-2 வரலாறு முக்கியம் அமைச்சரே!!

நானேநானோ“-2 வரலாறு முக்கியம் அமைச்சரே!!
போன எபிசோட்ல நானோ டெக்னாலஜியின் சாத்தியங்கள், நானோ மீட்டர் என்றால் எவ்வளவு சைஸ் என்று ஓவர் பில்டப் கொடுத்து ஒரு ட்ரெய்லர் ஓட்டி மெயின் பிச்சர் வந்து கிட்டு இருக்குன்னு சொல்லியிருந்தேன்.
இந்த கட்டுரையின் நோக்கமானது அறிவியல் தொழில்நுட்பம் என்றாலே அலறி அடித்து ஓட்டம் பிடிப்பவர்களையும் துரத்திப் பிடித்து அவர்களும் கேட்கும் வண்ணம் இதனை வழங்குவது தான்.
ஆகையால் அதிக அளவில் ஆழ்ந்த அறிவியல் விஷயங்களை தவிர்த்து விடலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இந்த எபிசோடுக்கான சோர்ஸ் கன்டென்ட் படித்து விட்டு பிளந்த வாயை இன்னும் என்னால் மூட இயலவில்லை. உள்ளே டெங்கு கொசு போய் ஒரு வீடு கட்டியிருக்கும்.
நானோ டெக்னாலஜியின் ஆரம்ப விதை பற்றியது இது. இந்த விதையை ஊன்றியவர் ஆஸ்கர் பரிசு பெற்ற ச்சீ ச்சீ (புத்தி எப்போ பாத்தாலும் எங்கே போவுது பாருங்க) நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரிச்சர்ட் பி.ஃபேயின்மான்.
விதையை ஊன்றியது 1959 டிசம்பர் மாதம்.
அமெரிக்காவில் இயற்பியல் விஞ்ஞானிகள் நிறைந்த அவை ஒன்றில் அவர் நிகழ்த்திய உரையில் அவர் அள்ளித் தெளித்த தகவல்கள் யாவும் பிரமிக்கத் தக்கவை. அவர் வாயில் இருந்து வந்த ஒரு வாக்கியத்தை வாங்கி வந்து ஆய்வு செய்து நாம் ஒரு பி.எச்டி பெற்று விடலாம். ஒரு பெரிய ஆய்வுக்கான சுரங்கத்தை திறந்து காண்பித்திருப்பார்.
இந்த தொடரில் அவரின் உரையை மற்றுமொரு சம்பவம் என்று கடந்து போனால் அவர் ஆவி வந்து என் சட்டை கொத்தாக பிடித்துடேய் நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டாஎன்று பஞ்ச் அடித்தபடி என்னை தாக்க வாய்ப்புள்ளது.
இதனை படிக்கும் போது வாயில் ஏதேனும் போட்டு வாயை மூடிக்கொள்ளவும். ஏனெனில் அவர் கூறியுள்ளவற்றை அந்த கால கட்ட அறிவியல் சாத்தியங்களோடு ஒப்பிட்டு உங்கள் வாய் தன்னாலே அகலத் திறந்து கொள்ளும்.
நான் படத்தில் சமந்தா பாத்தீங்களா?
ஆமாம் கொள்ளை அழகு
ஆமாம் நீங்க அழக மட்டும் தான் பாத்தீங்க, நான் அறிவியல் மனப்பான்மையோடு அவர் செய்யும் வேலையை பார்த்தேன்
என்ன வேலை செய்யுறாங்க?”
பென்சில் முனையில் சிற்ப வேலை செய்வாங்க
இத நெறய பேரு செய்வாங்களே. செய்தித்தாளில் கூட பாத்துருக்கலாமே
நமக்கு சமந்தா செய்தது மட்டும் தான் மனசுல நிக்குது
ஜோக்ஸ் அபார்ட். ஃபேயின்மான் அவர்களில் பேச்சின் தலைப்புThere is Plenty of Room at the Bottom”. (அங்கே அடியில் ஏராளமாக இடம் உள்ளது ம்ம்.. சரியா டிரான்ஸ்லேட் பண்ணிட்டேனா?)
அவர் ஏதோ லாட்ஜ் மாடியில் நின்று கொண்டு ரூம் கேட்டு வந்தவர்களுக்கு சொன்ன பதில் போல உள்ளதா? சரி போகப் போக பெயர்க் காரணம் புரியும்.

என்சைக்ளோபீடியாவின் 24 பாகங்கள் அடங்கிய புத்தகத்தை (அப்போது அது தான் ஆகப் பெரிய புத்தகம், இப்போது சி.டி வடிவில் சுருங்கி விட்டது) ஒரு குண்டூசி முனையில் எழுதினால் என்ன?” என்று கேள்வி கேட்டு அரங்கத்தை வியப்பில் ஆழ்த்துகிறார்.
குண்டூசி முனை ஒரு இஞ்ச் ல் பதினாறில் ஒரு பாகம் அதனை 25000 மடங்கு உருப் பெருக்கினால் அதன் பரப்பு என்சைக்ளோபீடியாவின் ஒட்டு மொத்த புத்தகங்களின் பக்கங்களின் பரப்பளவுக்கு சமம் என்று கணக்கிட்டு சொல்கிறார்.
அடுத்து உலக நூலகங்களில் உள்ள புத்தகங்களை எல்லாம் கணக்கிட்டு அதனை எழுதுவதற்கு ஒரு சூத்திரம் சொல்கிறார். அணுக்களை கொண்டு எழுதலாம் என்கிறார்.
எனவேகீழே இடம் உள்ளது என்பது அல்ல ஏராளமான இடம்(plenty of Room) உள்ளது என்பதே அவர் கூறியது
ஏம்பாசொல்றது சுளுவு செய்யறது இன்னா கஸ்டம் தெரியுமானு நம்ம பாரதியார் சொல்லிருக்காருப்பா
அது திருவள்ளுவர்ங்க
அப்போது இருந்த அறிவியல் தொழில் நுட்பங்களை கொண்டு அவ்வாறு எழுதுவதும் சாத்தியம் படிப்பதும் சாத்தியம் என்று தொழில்நுட்ப ரீதியான விளக்கமும் அளித்துள்ளார்.

எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பை ரிவர்சில் மாற்றி பயன் படுத்தி எழுதலாம், அதே மைக்ராஸ்கோப் கொண்டு படிக்கலாம் என்கிறார்.
ஏற்கனவே பெரிதாக இருப்பதை கஷ்டப்பட்டு சுருக்குவானேன், அப்புறம் அதை கஷ்டப்பட்டு படிப்பானேன்? ( “நான் ஏன்டா நடு ராத்திரியில சுடுகாட்டுக்கு போவனும்னு வடிவேல் கேட்டது போல் கேட்காதீர்கள்.)
இந்த மாதிரியான விசித்திர சிந்தனைதான் ஒரு புதிய அறிவியல் சாத்தியத்திற்கான கதவை திறந்து விட்டுள்ளது.
அடுத்து அப்போது புதிய கண்டுபிடிப்பாக இருந்த கணிப்பொறி பற்றியும் கூறத் தவறவில்லை.

இப்போது கணினி இரண்டு அறைகளை அடைத்துக் கொண்டு ராட்சசன் போல படுத்துக் கிடக்கிறது. அதன் பாகங்களையும் இணைப்பு வொயர்களையும் 10 முதல் 100 அணுக்களின் அகலத்தில் செய்தால் அதன் அளவு மிகவும் சுருங்கி விடும்” என்கிறார். (இந்த விஷயம் இன்றளவும் கூட சாத்தியப் படவில்லை)
அதன் நினைவுத் திறனை ஒருபிட் 5 கன அணு அளவில் பதிவு செய்தால் குறுகிய இடத்தில் ஏராளமான தகவல்களை சேமிக்கலாம். (இதுவும் இன்றளவிலும் இந்த அளவு நுண்ணியதாக சாத்தியப் படவில்லை)

அவரின் கற்பனை நிஜத்திலிருந்து லட்சம் ஒளி ஆண்டு தொலைவில் இருந்தது. ஏனென்றால் அந்த காலத்தில் ஒரு ஃபிளாப்பி டிஸ்க்கையே (1.62 எம்.பி நினைவு திறன்) லாரியில் ஏற்றித் தான் கொண்டு வருவார்கள்.
”விக்கெட் கீப்பிங் க்ளவுஸ் போட்டுக் கொண்டு ஊசியில் நூல் கோர்க்க முடியுமா?” ஆனால் இதைவிடவும் பலநூறு மடங்கு கஷ்டமானது தான் அவர் கூறிய விஷயங்கள்.
அவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தக்க இயந்திரங்களின் போதாமை பற்றி மிகவும் கவலை கொள்கிறார். அப்போது இருந்த எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பின் துல்லியத் தன்மையை 100 மடங்கு மேம்படுத்த வேண்டியுள்ளது என்கிறார்.
அப்படி மேம்படுத்தினால் பல உயிரியல் சார்ந்த பல்வேறு ஆய்வுகளுக்கான வாசல்களை அது திறந்துவிடும் என்றும் கூறுகிறார்.
அடுத்ததாக இன்னுமொரு விபரீத ஆலோசனையையும் வழங்குகிறார். ”swallow the surgeon” என்கிறார்.
”ஆத்தாடி, ஒரு அறுவை சிகிச்சை நிபுணரை விழுங்குவதா?”
அதே தான் அறுவை சிகிச்சை செய்யும் வல்லமை படைத்த ஒரு நானோ ரோபாட்டை (சென்ற வாரம் சொன்ன நானோபாட்) விழுங்கி வைத்தோமானால் அது உள்ளே சென்று ”ஆபரேஷன்” செய்து முடித்து “மிஷன் அக்கம்ப்ளிஷ்டு” என்று மெசேஜ் தட்டிவிடும்.
மேலே தரப்பட்ட கருத்துக்கள் யாவுமே கடலில் மிதக்கும் பனிப்பாறையின் நுனி மட்டுமே (Tip of an Iceberg). அவரது உரையின் பி.டி.எஃப் வடிவத்தை இங்கே(க்ளிக்குக)இணைத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படித்துக் கொள்ளுங்கள்.


 இன்னும் சுவாரசியமான நானோ டெக்னாலஜி விஷயங்களுடன் அடுத்த எபிசோடில் சந்திக்கலாம்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...