இரவு நேரம் விடுதி
மொட்டை மாடி.
“அண்ணே எங்க ஊர்ல
ஒருத்தருக்கு செய்வினை வச்சிட்டாங்கண்ண, அதற்கு அடுத்த வாரம் அவரு இரத்தம் கக்கி செத்துப்
போயிட்டாருண்ணே”
”நீ பாத்தியா?”
”எல்லோரும் பேசிக்கிட்டாங்கண்ணே”
“செய்வினை எப்படிப்பா
வப்பாய்ங்க?”
“டேய் அத நான்
சொல்றேன்” மே ஐ கம் இன் என்றபடி உள்ளே நுழைந்தான் செந்தில்வேலன்.
”சொல்லு”
”பிடிக்காதவங்க
வீட்டு பக்கத்திலயோ அல்லது அவங்க நிலத்திலயோ மாந்திரீகம் பண்ணிய தகடு பதிச்சிடுவாங்க,
இல்லண்ணா அவங்க பேர்ல மாந்திரீகம் பண்ணி சாமி கால்ல சீட்டு எழுதி கட்டி விடுவாங்க”
“யார் மாந்திரீகம்
பண்ணுவாங்க?”
“சாமியார் தான்“
“இப்படில்லாம்
பண்ணினா என்ன ஆகும்?”
“தொடர்ந்து வீட்டில
கெட்டது நடக்கும், குடும்பம் ஈடேறி வரவே முடியாது”
“ஆக ஒரு குடும்பத்த
உறுப்படாம செய்யக் கூட சாமி மந்திரவாதி மூலமா உதவி செய்யுது, அப்படிதானே?!”
“ம் அதெப்படி சாமியா
பண்ணுது மந்திரவாதி தானே மந்திரிக்கிறான்”
’பயபுள்ள எப்படி
சாமிய காப்பாத்துது பாத்தீங்களா?’
“அப்படின்னா மந்திரவாதி
கெடுதல் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா சாமியால கூட ஒண்ணும் பண்ண முடியாது அப்படிதானே?!”
“டேய் நீ கிண்டல்
பண்ணாதே”
“சரி அத எப்படி
சரி பண்றது?”
“தொடர்ந்து வீட்ல
கெட்டது நடந்தா வீட்டுக் காரவங்க மாந்திரீகம் பண்றவன் கிட்ட போயி குறி கேப்பாங்க. அவன்
தான் தகடு வச்சிருக்காங்களா அல்லது சீட்டு எழுதி கட்டி இருக்காங்களான்னுட்டு சொல்லுவான்”
“ஓ அப்படியா”
”அப்புறம் அவனுக்கு
தட்சணை கொடுத்து கூட்டி வந்தோம்னா கரெக்டா போயி தோண்டி எடுத்துடுவான்”
“ஏண்டா அவனே மொதநாள்
வச்சிட்டு அடுத்த நாள் எடுக்கலாம் இல்லையா?”
“அதெப்படி முடியம்?”
“இவங்க போயி சொன்னதுமே
ஆகா ஒரு வேட்டை சிக்கிடுச்சினு சொல்லி கதையை அவுத்து விடுவான், அப்புறம் அவனோ அல்லது
அவனோட அசிஸ்டண்டோ போயி தகட பதிச்சி வப்பான். அப்புறம் ஒரு நாள் குறிச்சி அவனே போயி
எடுப்பான்”
“ம் என்னடா சொல்ற?”
“எப்போவாவது இவங்க
குறி கேக்க போயி நின்னதுமே வாங்க போயி தகட எடுக்கலாம்னு கையோட கிளம்பி வந்துருக்கானா?”
”ஏய் போடா இவரு
பெரிய பெரியாரு சொல்ல வந்துட்டாரு. எங்க வீட்டிலேயே நான் பாத்துருக்கேன்“
“சரி சரி டென்சனாவாத
தூங்கு“
இந்த விவாதம் நடந்து
முடிந்த சில நாட்களில் பின் வரும் சம்பவம் நடந்தது.
வழக்கம் போல கூழையாற்றுக்கு
குளிக்கப் போய் ரோட்டின் வலது புறம் கீழே இறங்குவோம். அன்றைக்கு எதுவோ ரோட்டின் இடப்புறம்
மின்னியது. அருகில் சென்று பார்த்தால் ’ஆகா இதுவா?’
“டேய் இந்தா என்
துண்டையும் சோப்பு டப்பாவயும் எடுத்துட்டு போ வரேன்” என்று சாலையின் இடப்புற சரிவில்
இறங்கினேன்.
நான் ஏதோ இயற்கை
உபாதைக்காக ஒதுங்குகிறேன் என்று எண்ணி எல்லோரும் அந்தப் பக்கம் இறங்கி விட்டனர்.
“ஏய் இந்தா பிடி
பத்து ரூபா கால்சட்டை பையில் போட்டுக்கோ“
“ஏதுண்ணே எல்லாம்
ஒரு ரூபா துட்டா இருக்கு?”
“பெட்டியில இருந்தது
எடுத்தேன். லுங்கியில வச்சி கட்டினா எங்கேயாவது அவுக்கும் போது விழுந்துடும் பத்திரமா
வச்சிரு ஆஸ்ட்டல்ல வந்து வாங்கிக்கிறேன்”
“சரிண்ணே” என்று
கால் சட்டைப் பையில் திணித்தான் எங்கள் குழுவோடு வந்த ஒன்பதாம் வகுப்பு விக்னேஷ்
ஆஸ்டலுக்கு போனதும்
காசை வாங்கி ஒரு இரண்டு ரூபா கொடுத்து “குழாப் புட்டு” வாங்கி எங்க கோஷடிக்கு எல்லாருக்கும்
வழங்கினேன்.
செவ்வாய்க் கிழமையும்
இரண்டு ரூபாவுக்கு புட்டு.
புதன் கிழமையும்..
என்று வெள்ளிக் கிழமை வரை போனது.
”ஏதுண்ணே காசு
நீங்க மொத்தமே எப்பவும் பத்து ரூபா தான் வச்சிருப்பீங்க, இப்போ பத்து ரூபாவுக்கும்
புட்டு வாங்கி தீத்துட்டிங்க?”
“நாளைக்கு சொல்றேன்”
அடுத்த நாள் வழக்கம்
போல கூழையாற்றுக் குளியல் நிமித்தம் சென்றோம்.
அப்படியே எனது
கோஷ்டியினரை இடப்புறம் இறங்கச் சொன்னேன்.
“டேய் திங்க கிழமை
இங்க இறங்கினேன்ல?“
”ஆமாண்ணே ஒன்னுக்கு
இருக்க இறங்குறேன்னு நெனச்சோம் இங்கயா பத்து ரூபா கெடந்தது?”
“இருடா அவசரப்
படாதே”
“சரி சொல்லுண்ணே”
“இங்க ஒரு மாவிளக்கு
கட்டியா மின்னுச்சு, அந்த மாவிளக்கு சுத்தியும் ஒரு ரூபா துட்டு ஒட்டி இருந்துச்சு, சுத்தியும் வெத்தில சூடம் சாம்பிராணி
பத்தின்னு நிறைய கெடந்துச்சு, நான் அதில இருந்த காச மட்டும் பெயர்த்து எடுத்து வந்து
உன்கிட்டதானே கொடுத்தேன் மறந்து போச்சா?”
“அண்ணே என்னண்ணே
சொல்ற?” என்று பயத்தில் ஒன்றுக்கு இருக்க ஒதுங்கினான் அந்த குட்டிப் பயல் விக்னேஷ்.
“அப்போவே சொல்லி
இருந்தா நீ வாங்கி இருக்கவும் மாட்டே புட்டு வாங்கி கொடுத்தாலும் யாரும் திண்ணுருக்க
மாட்டீங்க”
“ஏண்ணே இப்படி
பண்றீங்க?”
“புட்டு சாப்பிட்டு
செரிமானமே ஆகிடுச்சி கவலப் படாத விடு”
“எடுத்தது நீ தாண்ணே,
எங்களுக்கு ஒண்ணும் ஆவாது” என்று சமாதானத்தோடு அமைதியானான்.
இப்படித்தான் செய்வினை
பற்றி தமிழ் பாடத்திற்கு வெளியே அனுபவப் பாடம் வாயிலாக அறிந்து கொண்டேன்.
No comments:
Post a Comment