Wednesday, December 20, 2017

லால்குடி டேஸ்-20 சார் ப்ளீஸ் சார் ஆர்க்கெஸ்ட்ரா பாக்கப் போறோம் சார்!!


“அல்லோ…அல்லோ…அல்லோ….“
“மைக் செக்…  மைக் செக்..  மைக்…செக்….”
“ஒன்….ஒன்……ஒன்…”
“டு…டு……டு….”
“த்ரீ….த்ரீ….த்ரீ….” ஆர்க்கெஸ்ட்ரா காரங்க வேலையை தொடங்கி எக்கோவை அதிர விட்டார்கள். விடுதியில் எங்களுக்கெல்லாம் இதயம் அதிர ஆரம்பித்தது.
“என்னாடாது இன்னைக்குப் பார்த்து இன்னும் இந்த அட்டெண்டர் கிளம்பாம உக்காந்து இருக்கார்” என்று புலம்ப ஆரம்பித்தனர்.
சிலர் கிணற்றடித்தாண்டி வாய்க்கால் கரைவழியாக சுப்பைய்யா அண்ணன்(சமையலர்) வீட்டு சந்து வழியாக சாலையை அடைந்து ஆர்க்கெஸ்ட்ரா விரைந்தார்கள்.
“டேய் டேய் நில்லுங்கடா” என்றோம் மொட்டை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு.
“போங்கடா நீங்க அவர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு வரதுக்குள்ள ஆர்க்கெஸ்ட்ரா முடிஞ்சி போயிடும்” என்று கூறி எங்களை சட்டை பண்ணாமல் போய் விட்டனர்.
“டேய் ஜெயராஜ் நீ போய் கேட்டா போகச் சொல்லிடுவார் போய் கேளுடா” என்று என்னை நெருக்கினார்கள்.
அவரிடம் எனக்கு இருக்கும் நல்ல பெயரை இதற்குப் பயன்படுத்த விருப்பம் இல்லை என்றாலும் ஆர்க்கெஸ்ட்ரா பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் அந்த மாரல் கோடை எல்லாம் அழித்து விட்டது.
“சார்?!”
“என்ன ஜெயராஜ் இன்னும் தூங்கப் போகலையா?”
“இல்ல சார் ஆர்க்கெஸ்ட்ரா பார்க்கப் போகணும்”
“ஏம்பா ஜனவரியில் இருந்து பப்ளிக் எக்ஸாம் வரைக்கும் இவனுங்க இதே வேலையாத்தான் இருப்பானுங்க, ஒவ்வொண்ணுக்கும் போவீங்களா? படிப்பு என்ன ஆகிறது?” என்றார். எனக்கு ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது.
“இல்ல சார் இன்னைக்கு மட்டும் தான் சார்“
“சரி சரி போய்ட்டு பத்திரமா வாங்க”
எல்லோரும் ஆஸ்டலில் இருந்தே ஓட்டம் பிடித்தோம்.
அப்போது சில ஆர்க்கெஸ்ட்ராவின் பெயர்கள் வெகு பிரபலம். நல்ல பாடகர்கள் நல்ல வாத்தியக் கலைஞர்கள் என்று இருப்பார்கள். கீ போர்டை யெல்லாம் பார்த்து வியந்து வாய் பிளப்போம்.
அப்போது பிரபலமாக இருந்த தளபதிப் படப் பாடல்களான “காட்டுக் குயிலு மனசுக்குள்ள“, “அடி ராக்கம்மா கையத்தட்டு“ ஆகியப் பாடல்கள் துல்லிசை ரகம் என்பதால் ஆங்காங்கே ஆர்க்கெஸ்ட்ரா பார்க்க வந்த “குடி“மகன்களும் இளைஞர்களும் எங்க விடுதி மாணவர்களும் ஆட ஆரம்பித்து விடுவார்கள். பார்க்க வந்தவர்களோ இரட்டை சந்தோஷத்தோடு ரசிப்பார்கள்.
“நேயர் விருப்பமும்“ அரங்கேறும். ஆர்க்கெஸ்ட்ரா வை ஏற்பாடு செய்த முக்கியஸ்தர்கள் சீட்டு அனுப்புவார்கள். அதை மைக்கில் அறிவித்து விட்டு அந்தப் பாடலும் அரங்கேறும்.
விஜய் டி.வி .புகழ் “ஜெயிக்கப் போவது யாரு“ என்ற நிகழ்ச்சிக் கெல்லாம் முன்னோடி இந்த ஆர்க்கெஸ்ட்ரா மேடை.
மிமிக்ரி, ஸ்டேண்ட் அப் காமெடி போன்றவை இடையிடையே வந்து கூட்டத்தினரின் வயிற்றை பதம் பார்க்கும்.
“சித்தாடை கட்டிக் கிட்டு சிங்காரம் பண்ணிக் கிட்டு….“ என்று பாடல் ஒலித்தது என்றால் எல்லோரும் ஏமாற்றம் ஆகிவிடுவோம். ஏனென்றால் டூரிங் டாக்கீஸ்களில் “மருத மலை மாமணியே முருகைய்யா“ என்பது படம் துவங்கப் போவதற்காண அறிகுறி என்பது போல ஆர்க்கெஸ்ட்ராக் களில் இறுதிப் பாடல் இந்த “சித்தாடை கட்டிக்கிட்டு”
ஆர்க்கெஸ்ட்ரா முடிந்து வருவதற்கு மணி இரண்டு ஆகி விடும். அதன் பின் ஆஸ்டலில் படுத்துக் கொண்டு அங்கு நடந்தவற்றை சிலாகித்து பேசி தூங்குவதற்குள் மணி நான்கு ஆகி விடும்.
ஒரு முறை அக்கிரஹாரத் தெருவில் ஆர்க்கெஸ்ட்ரா போட்டார்கள். கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது. இந்த ரகமானது குறைந்த பட்ஜெட் காரர்களுக்கான “சீன இறக்குமதிப் பொருட்கள்” மாதிரி லோ பட்ஜெட் ஆர்க்கெஸ்ட்ரா.
இந்த ரகத்தில் நன்கு பேச மற்றும் பாடத்தெரிந்த ஒருவர் வாடகைக்கு பொருட்களை எடுத்துக் கொண்டு, அப்போதைக்கு பாடுவதற்கு ஆட்களை அமர்த்திக் கொண்டு ஒரு ஆர்க்கெஸ்ட்ராவாக ஒன்றிணைவார்கள். அனேகமாக அந்த முதன்மைப் பாடகர் தவிர்த்த மற்றவர்கள் பாடுவது சற்று சுமாராகத் தான் இருக்கும்.
அதைக் கூட நாங்கள் விடுவதில்லை. இருந்து கடைசிப் பாடல் வரை பார்த்து விட்டுத் தான் வருவோம்.
“இப்போது ஊர் முக்கியஸ்த்தரும் தர்மகர்த்தாவுமான “சின்னக் குயில்“ குரலுக்கு சொந்தக் காரர் “சின்னத் தம்பி“ படத்தில் இருந்து “குயிலப் புடிச்சி“ பாடலை பாட வருகிறார். குயிலே வருக, உம் இசையை தருக” என்று ஸ்டைலாக இன்ட்ரோ கொடுத்தார்.
“இதென்னடா கூத்து, அப்போ அமிர்தராஜ் நீயும் போய் பாடறதுக்கு கேளுடா வாய்ப்புக் கொடுப்பாய்ங்க“
“டேய் அவரு முக்கியஸ்தர் என்கிறதால வாய்ப்பு கொடுக்குறாய்ங்க, நம்மலாம் போனா துரத்தி விட்ருவாய்ங்க”
“அலோ எல்லோருக்கும் வணக்கம்” என்றார் அந்த தர்மகர்த்தா
“என்னடா குயிலுன்னாய்ங்க பருந்து வந்துருக்கு?!”
ஆம், பருந்து என்பது அவரின் பருத்த உடல் குறித்த கமெண்ட். வந்தவர் மேடையில் பாதியை அடைத்துக் கொண்டார். குரல் சேதாரமில்லாமல் செய்த பாரதிராஜா குரல்.
அந்த கம்பீரக் குரலில் “குயிலப் புடிச்சி கூண்டில் அடைத்து…“ என்று ஆரம்பித்தார்.
கூட்டினுள் உறங்கிக் கொண்டு இருந்த காக்கை குருவிகளெல்லாம் பதறிப் போய் மரண பீதியில் கூச்சலிட்ட படி தமது கூட்டினைத் துறந்து வேறிடம் பெயர்ந்து ஓடியது.
அந்த “சின்ன“த்தம்பி இசையை சுத்தமாக சட்டை செய்யவில்லை. அவரின் குரலைத் துரத்திக் கொண்டு இசைக் கலைஞர்கள் ஓடிக் கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் வேகமெடுத்து ஓடி வந்து  கொண்டு இருந்த போது இவர் சட்டென்று நின்று விட்டார். மைக்கில் “கர் புர்“ என்று நாராசமாக ஒரு சத்தம். சின்னத் தம்பி வெற்றிலைப் பாக்கு எச்சில் துப்பியிருக்கிறார்.
இசைக் கலைஞர்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். ’பெரிய மனுஷன் மைக்க வாங்கிட்டான் என்ன பண்றது’ என்ற நிலையில் இருக்க அங்கே சின்னத் தம்பியும் செய்வதறியாது திகைத்துக் கொண்டு நின்றார். ’ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்கிற பரிதவிப்பு.
இரண்டாவது சரணத்தை “எல்லோருக்கும் தலை மேல எழுத்தொண்ணு உண்டு “ என்று மனுசன் சற்றும் ஈவிரக்கம் இல்லாமல் படிக்கவே ஆரம்பித்து விட்டார். அதற்கும் ஒரு தாளகதியை பிடித்து தாளமிட்டு சமாளித்த இசைக் கலைஞருக்கு “கலைமாமணி“ விருதே வழங்கலாம்.
பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் திருவிழாக்களில் கரகாட்ட செட் ஆடுவது பார்த்திருக்கிறேன். நல்ல கூட்டமாக இருக்கும். அருமையான கரகாட்டம், மற்றும் இடையிடையே குறவன் குறத்தி ஆட்டம். குறவன் குறத்தி ஆட்டத்தில் இலை மறை காய் மறையாக விரசம் தொனிக்கும். அது ரசிக்கத் தக்க வகையில் இருக்கும்.

இந்த ஆர்க்கெஸ்ட்ரா வந்த பிறகு மண்டகப் படி செய்வோர்கள் தங்கள் கௌரவத்தை நிலை நிறுத்திக் கொள்ள கரகாட்ட செட்டுக்குப் பதிலாக ஆர்க்கெஸ்ட்ரா போட ஆரம்பித்து விட்டார்கள்.
ஜீவித்திருக்க வேண்டி குறவன் குறத்தி ஆட்டத்தில் இருந்த இலைமறை விஷயங்கள் சற்று வெளியில் வந்தது. அதுவே அவர்களுக்கு வினையாகி இப்போது கிட்டத்தட்ட முற்றிலும் வழக்கொழிந்து போய்விட்டது.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்கிறது நன்னூல்.
"only Change is permenant"


1 comment:

  1. இவ்வளவு ரசனை தங்களுக்கு மட்டும் எப்படி ? நடந்தவற்றை அப்படியே மறைக்காது எழுதியிருக்கிறீரகள் சார். நான் உங்கள ரொம்ப தாமதமாக பார்த்திருக்கிறேன், இப்போதா வது தங்களை பார்க்க வாய்ப்பு அளித்த கடவுளுக்கு மிக்க நன்றி, You are Really Great.

    ReplyDelete

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...