Tuesday, December 12, 2017

லால்குடி டேஸ்-19 எடுடா மேளம், அடிடா தாளம், இனிதான் கச்சேரி ஆரம்பம்.

எடுடா மேளம், அடிடா தாளம், இனிதான் கச்சேரி ஆரம்பம்.

இந்த வாரம் லால்குடி டேஸ்ல எத எழுதலாம்ணு யோசனையோடு குளித்துக் கொண்டு இருந்த போது பல் வேறு விஷயங்கள் ’என்னை எழுது என்னை எழுது’ என்று வரிசையாக வந்து விண்ணப்பித்தபடி இருந்தன. அப்போது ஆடியோ பிளேயரில் “காட்டுக் குயிலு மனசுக்குள்ள“ என்ற தளபதி படப் பாடல் ஓடியது. ஆகா இத சொல்லலாமே என்று விண்ணப்பித்த அனைவரையும் அடுத்த வாரம் வருக என்று “பத்தி விட்டுட்டு” விடுதியில் நடந்த பாட்டுக் கச்சேரி சம்மந்தப் பட்ட சம்பவங்களை நினைவுச் சரத்தில் இருந்து சேகரித்தேன்.
பாட்டுக் கச்சேரி நடத்த தோதான நேரம் விடுதியில் வார்டன் மற்றும் அட்டெண்டர் இல்லாத இரவு நேரம். அதைவிட முக்கியம் கச்சேரி நடத்த தேவையான முக்கியஸ்தர்கள்.
நண்பர்களின் முகங்கள் அளவுக்கு பெயர்கள் நினைவுக்கு வரவில்லை. அமிர்தராஜ் ஆண்குரல் மற்றும் பெண்குரல் இரண்டிலும் பாடும் நல்லதொரு திறமைசாலி. சமயத்தில் டுயட் பாடல்கள் கூட சட் சட்டென்று ஆண் மற்றும் பெண் குரல் என்று மாற்றி மாற்றி பாடுவான்.
அடுத்தது பழனிமுத்து, இவர் விடுதியின் சீனியர் மாணவர். ஆம், ஆறாம் வகுப்பில் இருந்து இப்போது பனிரெண்டாம் வகுப்பு வரை வந்தவர். ஏற்கனவே இருந்த மாணவர்களிடம் இருந்து சகல வித்தைகளையும் பெற்றவர். ஒரு இரும்பு பெட்டியோ மரப் பெட்டியோ இருந்தால் போதும் தாளம் அருமையாக போடுவார்.
“ஏய் முதல்ல தலைவர் பாட்டு பாடு”
“எதுடா, எந்தப் பாட்டு”
“தளபதிப் படப் பாடல்”
“எது ’காட்டுக் குயிலு மனசுக்குள்ள’ வா?”
“ஆமாம்”
அப்போது அது புதுப் படம் ஆகையால் அந்தப் பாடல் எல்லோரையும் வசீகரித்த ஒரு துள்ளிசைப் பாடல்.
பாட்டுப் புத்தகத்தை நான் நீ என்று அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நீட்டினர். ( படிக்கிற புத்தகம் வாங்குடா ன்னா ஒரு பயல் வாங்கறது இல்லை முழுசா 50 பைசா கொடுத்து பாட்டுப் புத்தகம் மட்டும் வாங்கிடுறாங்க இப்போ தெரியுதா மக்களே இந்தியா ஏன் வல்லரசாகலன்னு?)
காட்டுக்குயிலு பாட்டுல ஹைலைட்டே அறிமுக இசையும் நிரவல் இசையும் தானே. பழனி முத்து அருமையாக ஆரம்பித்தான். பத்து விரல்களும் பெட்டியில் பரதம் ஆடியது. மரப் பெட்டி ஆதலால் புதுவிதமான ஒரு அருமையான துள்ளிசை ஒன்று பிறந்தது.
அமிர்தராஜ் கம்பீரமான குரலில் “காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கொன்றும் பஞ்சமில்ல ஆடத்தான்…“ என்று பாட ஆரம்பித்தான்.
“சின்னத் தம்பி பாட ஆரம்பிச்சுட்டான், இனிமே விடுதியில் ஒரு பய தூங்க முடியாது” என்று சொல்லாத குறைதான். கச்சேரி நடந்த இடம் கலைகட்ட ஆரம்பித்தது. பதினோறாம் வகுப்பு அறையை சுற்றிலும் மாணவர்கள் குழுமினர்.
பாடலின் இடையில் வரும் அந்த நிரவல் இசையையும் கூட அவ்வளவு அருமையாக பெட்டியின் மேல் கொட்டினான்.
அமிர்தராஜ் பாட்டுப் புத்தகம் இல்லாமலே முழுப் பாடலையும் பாடி முடித்தான். அந்தப் பாடல் ஜேசுதாசும் பாலசுப்பிரமணியனும் பாடியது என்பது எனக்கெல்லாம் கல்லூரி சென்ற பின்பு தான் தெரியும். அப்போது அந்தப் பாடல் ஒருவர் பாடிய பாடல் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
அடுத்ததாக விஜயகாந்த் ரசிகர்கள், ”ஏய் கேப்டன் பிரபாகரன் படத்தில இருந்து பாடு” என்று வற்புறுத்த ஆரம்பித்தனர்.
“பாசமுள்ள பாண்டியரே“ பாட்டுக்கு தாளத்தை முன்னெடுத்தான் பழனிமுத்து.
அமிர்த ராஜ் தான் இந்தப் பாடலையும் பாடினான். “நெத்தியில வச்சப் பொட்டு..” என்று துவங்கும் சரணத்தை அனாயசமாக பெண்குரலில் துவங்குவான். ஆண் பெண் கோரஸ் எல்லாம் ஒன் மேன் ஆர்மியாக பாடுவது அமிர்தராஜ் தான்.
அடுத்ததாக ”ஒரு நாளும் எனை மறவாத “ என்று துவங்கும் “எஜமான்“ பாடல் மறுபடியும் ரஜினி ரசிகர்கள் குதூகலிப்பார்கள். பெண்குரலுக்கு மாற்று இல்லை என்பதால் இதுவும் அமிர்தராஜ் தான்.
இடையில் கிராமத்து நையாண்டி தாளக்கட்டில் வரும் சில பாடல்களையும் பாடுவதுண்டு. அவ்வளவு நேரம் அமைதியாக வேடிக்கைப் பார்த்த நண்பன் ஆனந்த் ( பெயர் மறந்து விட்டேன் ) பாடுவான். “அடப் பாவிப் பயலே இத்தனை நாளும் அமைதியாக இருந்த இவனுக்குள்ள இவ்வளவு திறமையா” என்று எல்லோரும் வாயடைத்துப் போகும்படி பாடுவான். அவனது குரல் கிராமியப் பாடலுக்கு என்று அளவெடுத்து தைத்தது போன்று இருக்கும்.
”ம்க்கும் நானும் பெரிய பாடகராக்கும், ஊரில் பொங்கல் விழாவில் பரிசெல்லாம் கூட வாங்கியிருக்கேன்” என்கிற தைரியத்தில் நானும் கச்சேரியில் பாடுவது என்று முடிவு பண்ணியிருந்தேன்.
பிரச்சனை என்னவெனில் குழந்தைத் தனம் நிறைந்த எனது குரல் குமரப்பருவ வளர்ச்சியால் குரல் வளை தடித்து சற்று கடினமாகிவிட்டது. ஒரு விஷயம் தெரியுமா, நமது குரல் மற்றவர்களுக்கு கேட்கிற மாதிரி நமக்கு கேட்காது. காற்றில் பயணித்து கேட்பதற்கும் நேரடியாக கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு. இதெல்லாம் அறியாத நான் ( என்ன செய்வது நான் அப்போது வரை “பச்ச மண்ணு”) காக்கைக்கும் தன்குரல் தேன்குரல் என்கிற தைரியத்தில் பாட இறங்கி விட்டேன்.
பாடி பரிசு பெற்ற அந்தப் பாடலையே பாடிவிடுவது என்று தேர்வு செய்தேன். நினைவுச் சின்னம் படத்தில் சுசிலா பாடிய “ஏலே இளங்கிளியே..“ எனத் துவங்கும் அருமையான தாலாட்டுப் பாடல் அது.
நான் கண்மூடி மெய் மறந்து பாட ஆரம்பித்தேன். பசங்களும் ரசிக்கிற மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிப்பார்கள். முதலில் பழனிமுத்து தாளமிடுவதை நிறுத்தினான்.
“சரி ஜெயராஜ் அடுத்தப் பாடல் போகலாமா“ என்று சட்டென்று தாவிப் போய் விட்டார்கள்.
எனது பாடல் கேட்டு பீதியில் கிடந்த அனைவரையும் பிரிதொருத் தாலாட்டுப் பாடல் பாடி தூங்க அனுப்பினான் அமிர்தராஜ்.
”தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே…”
சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகு ராஜவேல் என்னிடம் வந்து “டேய் பொங்கல் பாட்டுப் போட்டியில் பரிசெல்லாம் வாங்கி இருக்கேன் என்று சொன்னியே பொய் தானே?” என்றான்.
எனக்கு வந்ததே கோபம். நான் இதுநாள் வரையில் பெட்டியில் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருந்த “பரிசுப் பொருளை” எடுத்து அவன் மூஞ்சியில் வீசினேன்.
அதைப் பார்த்தபின்தான் அவன் அதிகமாக என்னை பகடி செய்ய ஆரம்பித்தான். “டேய் இனிமே நீ பாடிடக் கூடாதுன்னுதாண்டா இந்தப் பரிச கொடுத்துருக்காங்க” என்று என்னிடம் சொல்லியதோடு நிற்காமல் “தீயா வேலை செஞ்சிட்டான்” அன்றைக்கு சாயந்திரத்திற்குள் எல்லோருக்கும் செய்தி பரவியது.
அன்றைக்கு ஓட்டுவதற்கு எல்லோருக்கும் நான் கிடைத்துக் கொண்டேன்.
”சரி அப்படி என்னதாங்க அந்தப் பரிசு?” என்று அறிய ஆர்வமாக உள்ளதா?
“சரி யார்கிட்டயும் சொல்லிடாதீங்க, அந்தப் பரிசு ஒரு நைலான் கயிறு ரோல்”
அன்றிலிருந்து நான் பாத்ரூமைத் தவிர எங்கேயும் பாடுவதுமில்லை, எங்கள் ஊர் பொங்கல் விழாவில் பரிசுப் பொருளாக நைலான் கயிறு வாங்குவதுமில்லை.


No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...