"நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் " யாருக்கு?! யாருக்கோ!!
ஆமாம் எங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள இந்த மரத்தின் நுனிக்கொம்பில் உள்ள தழையை உண்ண ஆசைப்பட்டு முன்னங்காலை தூக்கி வைத்து ஊன்றி இழுத்து வளைத்து இந்த மரத்தை குற்றியிலும் கொலையுயிருமாக போட்டுவிட்டு ஓடிவிட்டன வழக்கமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாகமங்கலம் ஆடுகள்!!
வளாகத்தில் மேய்வதற்கு வாகாக எவ்வளவு தான் புதர்களும் புல்லும் மண்டி கிடந்தாலும் இந்த ஆடுகளுக்கு நுனிக்கொம்பில் உள்ள ருசியான இலைகள் தான் இலக்கு.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த மரம் வளர்ந்த போது விறுவிறு என வளர்ந்து பூமியோடு 90 டிகிரி கோணத்தில் கணகம்பீரமாக காட்சியளித்து கொண்டிருந்தது. இந்த ஆடுகள் அதனை வளைத்த காரணத்தால் கூன் விழுந்து முப்பது டிகிரிக்கு சாய்ந்து விட்டது.
அந்த மரத்தின் இடுக்கண் கலைவதற்காக ஒரு கோலினை ஊன்றி அதை ஒரு 80 டிகிரி அளவிற்கு நிமிர்த்தினோம் ஆனாலும் அந்த ஊன்றுகோலை அடுத்த சில வாரங்களிலேயே தட்டி விட்டன அந்த அடங்காத ஆடுகள்.
இந்த சம்பவத்துக்கு பிறகு ஓரளவு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைந்துவிட்டது. ஆடுகளின் தொல்லை வெகுவாக குறைந்து போய்விட்டது. ஆனால் கூன் விழுந்து போன அந்த மரத்தை மட்டும் ஒன்றும் செய்யவே இயலவில்லை ஏனென்றால் 30 லிருந்து 80க்கு மீண்டும் நிமிர்த்தி கட்டினால் அந்த மரம் முறிந்து போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.
அதனால் அதை எதுவுமே செய்ய வேண்டாம் அப்படியே விட்டுவிடுங்கள், முடிந்தால் பிழைக்கட்டும் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டேன்.
இங்கேதான் அந்த மரத்தின் தற்காப்பு உத்தி (struggle for survival) வேலை செய்யத் தொடங்கியது.
ஆமாம், பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் நடத்திய பௌதிகம் மாணவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ அந்த மரத்துக்கு புரிந்து போனது என்று நினைக்கிறேன்.
ஆமாம் கிழக்கு பக்கமாக முப்பது டிகிரி சாய்ந்து இருக்கும் மரத்தை நிமிர்த்துவதற்காக மேற்கு பக்கம் நிமிர்த்தும் வகையில் மரத்தண்டில் இடையில் இருந்து அங்கங்கே கிளைகள் தோன்றி செங்குத்தாக வளர துவங்கியது சிறிது நாட்களில் மரமும் மெல்ல மெல்ல எழும்பி தற்போது இந்த அளவில் உள்ளது.
தற்காப்பு உத்தி சூழலுக்கு தக்கவாறு தன்னை பாதுகாத்துக் கொள்ள மரங்கள் எந்த அளவுக்கு பௌதிகத்தை துணைக்கு அழைத்துக் கொள்கின்றன என்பதை நினைத்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
அப்பப்பா இயற்கையில் தான் எவ்வளவு விந்தைகள்?!
இதற்கு பின்புலத்தில் உள்ள அறிவியல் ஏதேனும் இருந்தால் விஷயம் அறிந்தவர்கள் விளக்கிக் கூறுங்கள்.
No comments:
Post a Comment