Friday, January 12, 2018

சுவாச் பாரத் மிஷன் - ஹோம் வெர்ஷன்


இந்த எந்திரன் படத்தில சிட்டி ரோபாட்ட ரஜினி டிஸ்மான்டில் பண்ணுவது மாதிரி “வெடுக் வெடுக்“ என்று கணினி இணைப்புகளை எனது துணைவியார் துண்டித்தார்.
“அகிலா ஏன்? என்னாச்சு?“
“ம்ம்.. சனி ஞாயிறு வருதுல்ல, இப்போ உட்டா ஒங்கள பிடிக்க முடியாது, பொங்கலுக்காக வீட்ட க்ளீன் பண்றோம்”
“அதுக்கு ஏன் சனி ஞாயிறு?”
“நீங்க ஒரு வேலையும் செய்ய வேண்டாம் மேல ஒயறத்துல இருக்கிற பொருள கீழ எறக்க ஹெல்ப் பண்ணா போதும்”
“இவ்வளவு தானா! ஓகே ஓகே செஞ்சிடலாம், எவ்வளவோ பண்றோம் இதப் பண்ண மாட்டோமா?!” என்று வீர வசனம் பேசிக் கொண்டு வெள்ளந்தியாக விரித்து வைக்கப் பட்ட வலையில் சிக்கிக் கொண்டேன்.
எங்க வீட்டு சின்சேங்கும் (என்ன முழிக்கிறீங்க இதுக்குத் தான் ஹங்காமா டிவி லாம் பாக்கணுங்கறது. உங்க வீட்டு குட்டீஸ்ட்ட கேளுங்க) தூய்மை இந்தியா திட்டத்தில் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப் பட்டான்.
“எல்லா வேலையையும் போட்டு கொழப்பிக்க கூடாதுங்க இன்னைக்கு இந்த பீரோ இருக்குற ரூமும் ஹாலும் தான், மீதி நாளைக்குத்தான்”
”சரி சரி“ என்று அறைக்குள் சென்று “ப்ப்பா..குபலீ…“ என்று கூறிக்கொண்டே பீரோ வைத் தூக்க முயன்றேன்.
“அடச்சே, உங்க பாகுபலி சாகஸத்தல்லாம் வீடு காலி பண்றப்ப வச்சிக்கோங்க, லாப்ட் மேல இருக்கிற பொருள எறக்கி வச்சிட்டு ஒட்டட அடிச்சி சுத்தம் பண்ணனும்” என்றார் எங்க வீட்டு ராஜமாதா சிவகாமி.
இனி ஒரு தடவ ”பல்பு” வாங்க கூடாது என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டு, போய் சேரை எடுத்துக் கொண்டு வந்து போட்டு மேலே ஏற முயற்சித்தேன்.
“ஏங்க கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா? (”அறிவு கெட்ட முண்டம்” என்பதன் இடக்கரடக்கல் என்று அறிக) அதெல்லாம் சேர்ல ஏறி எடுக்க முடியாது உயரம் பத்தாது போய் ஏணி வாங்கிட்டு வாங்க கீழ் வீட்டுல சொல்லியிருக்கேன்” என்று அசால்ட்டாக அடுத்த “பல்பை“ கொடுத்தார்.
“அப்பா என்னப்பா இன்னைக்கு பல்பு மேல பல்பா வாங்கிட்டு இருக்கீங்க?” என்று வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினான் அருண்.
ஒரு வழியாக ஏணி போட்டு ஏறி அட்டை பெட்டிகளை எடுத்தேன். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் என்றெல்லாம் படித்திருக்கிறோமே, அது போல எடுக்க எடுக்க வந்து கொண்டே இருந்தது. யாவற்றையும் இறக்கி வைத்தாயிற்று.
“ஏங்க இதெல்லாம் இங்க வச்சி  தொடைக்க முடியாது எல்லாத்தையும் மொட்டை மாடிக்கு கொண்டு போய் வச்சிடுங்க” என்று அடுத்த அஸ்திரத்தை வீசினார்.
சரின்னு ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டு சென்றோம். எதெல்லாம் வெயிட் கம்மி எதுல என்ன இருக்கு என்கிற கேட்டலாக் எனது துணைவியாரிடம் இருந்த காரணத்தினால் லேசான பெட்டிகளை இனம் கண்டறிந்து அதை எடுத்துக் கொள்ள, நான் வழக்கம் போல கிடைத்த பெட்டிகளை எடுத்து கொண்டு போய் மேலே வைத்தேன்.
ஒவ்வொரு பெட்டியாக பிரித்து பொருட்கள் வெளியே எடுத்து வைக்கப் பட்டன.
“அகிலா போன வாரம் திருச்சி போனப்ப சின்னதும் பெருசுமா ரெண்டு சம்படம் தேவைன்னு சொல்லி வாங்குனில்ல, இங்க பாரு அதே மாதிரி ரெண்டு இங்க இருக்கு. 500 ரூபாய் வேஸ்ட் பண்ணிட்ட”
“சரி விடுங்க எதுக்காவது யூஸ் ஆகும்”
”ஆனா காசு வேஸ்ட் தானே?!”
“நீங்க நெட் ரீச்சார்ஜ், ஆனந்த விகடன், டெய்லி டீ சினாக்ஸ் செலவு பண்றதுலாம் ரொம்ப முக்கியமான செலவோ” என்று ஒரு அஸ்திரத்தை வீசினார். போர் மேகம் சூழ்வதை யூகித்து வாயை மூடிக் கொண்டேன்.
“இது என்னங்க இந்த பெட்டிக்குள்ள சுருள் சுருளா ஏதோ இருக்கு?!”
“தெரியலையே, காய்ஞ்சி போய் சுருள் சுருளா ப்ரவுன் கலர்ல இருக்கே. ஃபாரன்சிக் டிபார்ட் மண்டுக்கு அனுப்பிதான் ஆராயனும்”
ஆனா பாருங்க மனைவியரின் ஐம்புலன்களும் ஐம்பது ஃபாரன்சிக் ஆபீசர்களுக்கு சமம்.
”டேய் அருண், சாப்புட கட் பண்ணி குடுத்த ஆப்பிள தூக்கி மேல எறிஞ்சிருக்க தானே”
அந்த மர்ம பொருள் வெளியே எடுக்கப் பட்ட அந்த நொடியே ஆள் நழுவி கீழே போய்விட்டான். அவன் புத்தி சாதுர்யத்தை நினைத்து பொறாமை கொண்டேன்.
“நீன்னா பாரேன் அவன் பெரிய பேஸ்கட் பால் பிளேயரா வரப் போறான்.  
எவ்வளவு துள்ளியமா தூக்கி அட்டை பெட்டிக்குள்ள எறிஞ்சிருக்கான்”
”ஏணிய இன்னைக்கே கொடுக்கணும், அவங்களும் சுத்தம் பண்ணனும்ல,        
அதனால பெட்ரூம்ல லாப்ட் மேல இருக்கிற பொருளயும் கீழ எடுத்து வச்சிடலாம்“ என்ற திட்டத்தை மாற்றினார்.
அடுத்ததாக ஒரு இறக்குமதி மறுபடியும் மொட்டை மாடிக்கு ஏற்றுமதி நடை    
பெற்றது.
இது வரை நடை பெற்ற மொத்த மிஷன்லயும் “நெற்றியில சுருண்டு விழும் நீள முடி அழகு” என்று பெருமையாக எண்ணிக் கொண்டு முடியை ஸ்டைலாக ஒதுக்கிக் கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தேன்.
“தலையை தொடைங்க ஒட்டடை தலையில ஒட்டியிருக்கு”
“ச்சே அது முடியில்லையா?”
“நெனப்புதான் அதான் பாதி முடி மேல ஏறிப் போயிடுச்சே”
“சரி வாட் நெக்ஸ்ட், சாப்பாடு தானே?”
” ஏங்க ஏணிய கொடுக்கறதுக்கு முன்னாடி ஃபேன தொடச்சிடலாம் அவ்வளவு டஸ்ட் இருக்கு”
“வேணாம்னா விடவாப் போற”
சிமெண்ட் ஃபேக்டரியின் மொத்த டஸ்ட்டும் ஃபேனில் தான் பதுங்கி இருந்தது. நான் ஃபேன் துடைக்க ஆரம்பித்த நொடியில் தேனீர் தயார் செய்து விட்டார் எனது துணைவியார்.
“டீக்காக இறங்க வேண்டாம் அங்கேயே இருங்க டீ எடுத்து தரேன்”
ஃபேனை பிடித்து தொங்கிக் கொண்டே தேனீர் அருந்தியதையெல்லாம் எனது சாதனை பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமே என்று பெருமை பொங்க தொங்கிக் கொண்டே தேனீர் அருந்தினேன்.
ஒரு வழியாக மதிய உணவுக்குப் பின்னர் எல்லா லாப்ட்டையும் துடைத்து சுத்தம் செய்தாகி விட்டது.
பொருட்களும் கீழே வந்து வரிசை கட்டி அமர்ந்திருந்தது. சுத்தமாக இருந்த இடங்கள் லாப்ட்டும் கட்டிலும்தான். இந்த காட்சியை லாப்ட் மேலேயிருந்து நான் கண்டு லயித்த போது மணி இரவு பதினொன்று முப்பது.
“ஏங்க நானும் அருணும் கட்டிலில் படுத்துக்கிறோம், நீங்க அங்கே லாப்ட் மேலேயே படுத்துக்கோங்களேன், கொசுவர்த்தி வேணும்னா தரேன்” என்கிற ஒரு விபரீதமான யோசனையை முன் வைத்தார். ஆனாலும் அந்த கொசுவர்த்தியில் தெரிந்த எனது மனைவியின் அன்பை நினைத்து எனது கண்கள் நீரைச் சொரிந்தன. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
“ஏம்பா இன்னையோட முடிஞ்சிடுச்சா, இல்ல இன்னும் இருக்கா?”
”சேச்சே, நாளைக்கு இதெல்லாம் வச்சிட்டோம்னா முடிஞ்சி போச்சி, நாளைக்கு இந்த பீரோவில இருக்கிற துணிய அடுக்கணும் அத நான் பாத்துக்கிறேன்”
அடுத்த நாள் நியூஸ் பேப்பர் கிழித்து ஷெல்ஃப் லாப்ட் என எல்லா இடத்திலும் கடை விரிப்பது என் வேலையாக இருந்தது.
இப்படி கிழித்து கிழித்து இரண்டுமாத தமிழ் மற்றும் ஆங்கில “இந்து“ நாளிதழ்கள் காலியாகி விட்டன.
அடுத்ததாக பீரோவை திறந்தார். எல்லா துணியையும் பிரித்து அடுக்கி என பொழுதே கழிந்து விட்டது. மதிய உணவை பனானா லீஃப் உணவகத்தில் வாங்க சென்ற போது “செத்த இங்க சோபாவில் படுத்துக்கிறேனே” என்று கேட்கலாமா என்றென்னும் அளவுக்கு சோர்ந்து போய்விட்டேன்.
அடை மழைக்குப் பிறகும் கூட இரண்டொரு நாட்கள் லேசான தூரல் தொடர்வது போல வாரம் முழுவதும் சலிப்பில்லாமல் ஏனைய பணிகளையும் செவ்வனே நிறைவேற்றினார் எனது துணைவியார்.
நான் எந்திரனுக்கு உயிரூட்ட எண்ணிய போதெல்லாம் “அதுக்கு என்ன இப்போ அவசரம்” என்று தடுத்து விட்டார்.
“சே என்னோட லால்குடி டேஸ், நானே “நானோ“ ரசிகர்கள் ஒன்றரை கோடி பேருக்கு நான் என்ன பதில் சொல்றது” என்ற சத்தம் வராமல் அலுத்துக் கொண்டேன்.
இப்படியாக ”தூய்மை இந்தியா திட்டம்” எங்கள் வீட்டில் இனிதே(?!) நிறைவேறியது.





No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...