Friday, January 26, 2018

வானம் வசப்படும்-1



”வானம் வசப்படும்” –இந்த நாவல் சாகித்ய அகாடமி விருதினை வென்ற நாவல். பிரபஞ்சன் அவர்கள் எழுதியது.
1740-50 களில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியின் கவர்னர் துய்ப்ளெக்ஸ் இடம் துபாஷ் ஆக வேலை பார்க்கிறார் ஆனந்தரங்கம் பிள்ளை. அவர் அன்றாட நிகழ்வுகள் யாவையும் நாட்குறிப்பில் எழுதி வந்திருக்கிறார். அந்த நாட்குறிப்புகள் அந்த கால கட்டத்தின் வரலாற்று ஆவணம். அந்த குறிப்புகளை ஒட்டி ஒரு வரலாற்று நாவலை அருமையாக கொடுத்திருக்கிறார் பிரபஞ்சன் அவர்கள்.
வரலாற்றுச் சம்பவங்களில் மர்மங்களை நுழைத்து சுவாரசியமாக்கி, காதல் ரசத்தையும் வழிய விட்டு தரும் கல்கி வகை நாவல் இல்லை இது.
காதல் காமம் இரண்டையும் வரலாற்றோடு இணைத்து  திகட்ட திகட்ட புகட்டும் சாண்டில்யன் வகை நாவலும் இல்லை.
இரண்டு மூன்று அத்தியாயங்கள் சென்ற பின்புதான் கதையோடு ஒன்ற முடியும். ஒரு வரலாற்று நாவல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு உதாரணம்.
நாவலின் மொழி நடையானது அந்த கால பேச்சு வழக்கு, அரசு முறை மரபுகள் ஒட்டிய மரியாதையான வார்த்தைகள் என்று புதியதொரு மொழியையும்  வண்ணத்தையும் கொண்டுள்ளது.
அரசு முறை தூதுகள், பேச்சு வார்த்தைகள், ஒப்பத்தங்கள், போர் உபாயங்கள், சூழ்ச்சிகள் என அனைத்து நிலைகளிலும் வெளிச்சம் பாய்ச்சுகிறது நாவல்.
நாவலில் இருந்து குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் (அக்கால கட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள்) பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
மாடசாமி எனும் பறையன் ஆண்டையிடம் எருமை மேய்க்கிறான். சற்று கண்ணயர்ந்து விடவே வயலில் (ஆண்டையின் வயல்தான்) சில நாற்றினை மேய்ந்து விடுகிறது.
ஆண்டை சினம் கொள்கிறார். கட்டிப் போட்டு அடிக்கிறார். சதை பிய்ந்து ரத்தம் கொட்டுகிறது. மயக்கம் போட்டவனை தெளிய வைத்து அடிக்கிறார். பயபுள்ள பசியோடு இருப்பதால் தான் மயக்கம் போடுகிறான் என்று அவனை பசியாற்றி அடிக்க எண்ணி சாணிப்பால் கரைத்து ஊற்றுகிறார். விக்கிக் கொண்டால் என்ன செய்வது? எனவே மாட்டு மூத்திரத்தை கருணையோடு அருந்தத் தருகிறார். இன்னும் கோபம் அடங்காத காரணத்தினால் கை காலுக்கு கிட்டி போடுகிறார். கை கால்களை சம மட்டத்தில் மரத்தினால் ஆன பலகையில் உள்ள துளைகளுக்குள் செலுத்தி பூட்டி விடுவது. மாட்டுக் கன்று குட்டி போல நான்கு கால் ஜீவனாக இருக்க கடவது.
அவன் மேல் கருணை கொண்ட ஒருவர் அரவமற்ற போது கிட்டியை திற்ந்து உதவுகிறார். மாடசாமி தப்பித்து போகிறான். சினமுற்ற ஆண்டை பறைச்சேரியை கொளுத்தி விடுகிறார். மாடசாமியின் மகன் மனைவி மற்றும் ஒரு 20 பேர் தீயில் கருகி சாகிறார்கள்.
சில பெரிய ஆண்டைகளிடம் நிலம் நீச்சு என்று விரிந்து பரந்த சொத்துகள் இருக்கும். வெறும் இரண்டு வேளை சோறுக்கு மட்டும் வேலை செய்ய பறைக் குடும்பத்தை வைத்து வேலை வாங்குவார்கள். ஆண்டையின் சொத்து பெருக பெருக அடிமை குடும்பமும் பெருகும் ஆண்டைக்கு கூலிக்கு ஆள் தேட அவசியம் இருக்காது. 24 நான்கு மணி நேர சேவையாற்ற அடிமைக் கூட்டம் ஒன்றுதான் வீட்டோடு இருக்கிறதே.
அந்த மாதிரி ஒரு அடிமைக் கூட்டத்தில் ஒருவன் தான் கிழக்கான். அன்றைய காலகட்டத்தில் மாட்டின் மீது எதையோ தடவி விட்டு நின்ற நிலையில் தோளை உரித்து செல்லும் ஒரு திருட்டு நடை பெறுகிறது. எனவே இரவு நேரக் காவலும் காக்க வேண்டியுள்ளது.
கிழக்கானின் முறை வரும் போது ஒரு மாட்டை தோள் உரித்து சென்று விடுகிறார்கள். ஆண்டை சினம் கொண்டு கிழக்கானை மரத்தில் கட்டி வைத்து துவைத்து எடுக்கிறார். வழக்கம் போல சாணி, மூத்திரம் என்று வழமையான தண்டனைகள். ஊர் மக்கள் இது ஒரு வழக்கமான நிகழ்வுதானே என்று அசட்டையாக வேடிக்கை பார்த்து செல்கிறார்கள்.
கிழக்கானின் சிறுபிள்ளை சின்னக் கிழக்கான் ஒரு கல்லினை எடுத்து ஆண்டையின் மீது எரிகிறான். ஆண்டைக்கு காயம் படுகிறது. விடுவார்களா வேடிக்கை பார்த்த ஆதிக்க சாதியினர். சின்னக் கிழக்கானை கட்டையால் அடித்து கொன்று விடுகிறார்கள். சின்னக் கிழக்கானையும் அவனது அம்மாவையும் சிதை மூட்டி எரிக்கிறார்கள். மகன் மனைவி எரிவதை பார்த்து விட்டு தப்பிக்கும் கிழக்கான் முசே இம்மானுவேலிடம் வந்து தஞ்சம் அடைகிறான். அவர் மேலை நாடுகளுக்கு அடிமை வியாபாரம் செய்பவர். அடுத்து அடிமைகளை “கொள்முதல்“ செய்ய வரும் கப்பலில் அவனை ஏற்றி அனுப்பி வைக்கிறார்.


இன்னும் வாசிப்போம்…. 

No comments:

Post a Comment

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...