Monday, January 22, 2018

லால்குடி டேஸ்-22 சண்டைன்னா சட்டை கிழியத்தானே செய்யும்?!

லால்குடி டேஸ்-22  சண்டைன்னா சட்டை கிழியத்தானே செய்யும்?!
பதினோறாம் வகுப்பின் இறுதிக் கட்டத்தில் இருந்த நேரம். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களில் இறுதிப் பரிட்சை உள்ளவர்கள் மாத்திரம் விடுதியில் இருந்தனர்.
கலைப் பிரிவைச் சார்ந்தவர்களுக்கும் அறிவியல் பிரிவைச் சார்ந்தவர்களுக்கும் உரசல் முட்டல் மோதல் என அவ்வப்போது வந்து போகும். பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வன்று அனைத்து கணக்கையும் நேர்செய்ய நாள் குறித்து காத்திருந்தார்கள் எங்கள் சீனியர் மாணவர்கள்.
பரிட்சை முடிந்து வந்த அண்ணன்களில் சிலர் ஓடோடி வந்தார்கள். சிலர் கூடிக் கூடி பேசினார்கள். அப்புறம் சாயங்காலம் பார்த்தால் அறிவியல் புலத்தில் ஒரு அண்ணனுக்கு கை கால்களில் சிராய்ப்பு மற்றும் சட்டையில் கிழிசலோடு வந்தார். கலைப் பிரிவைச் சார்ந்த அண்ணன் ஒருவர் வெளியிலிருந்து ஆள் அழைத்து வந்து மேற்படி அண்ணன்களை விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்கள். இவர்களும் தப்பிப் பிழைத்து வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
ஆள் வைத்து அடித்த அண்ணனோ மாலையில் தனியே வந்து கொண்டிருந்த போது காத்திருந்த அடி வாங்கியவர்கள் அப்படியே தூக்கி மரத்தில் சேர்த்தணைத்து அடித்து துவைத்த தோடு அல்லாமல் “சேது” படத்தில் வருகிற மாதிரி தூக்கி தலையை மரத்தில் மோதியதில் மண்டை பிளந்து கொண்டு ரத்தம் கொட்டியது. அன்று பள்ளி வளாகமும் வெளிப்புறமும் சற்று பரபரப்பாக காணப்பட்டது. இப்போது உள்ளது மாதிரி ஊடகங்கள் இருந்திருந்தால் சட்டக் கல்லூரி கலவரத்திற்கெல்லாம் முன்னோடியான கலவரமாக இந்த சம்பவம் மாறிப் போயிருக்கும்.
எனக்கும் மற்றுமொரு நண்பனுக்கும் (ஆம்! பதினோறாம் வகுப்பு எதிரி பனிரெண்டாம் வகுப்பில் நல்ல நண்பன்) பதினோறாம் வகுப்பில் பெரிய சண்டை வந்த அனுபவமும் கூட உண்டு. ஆனால் நான் இதுவரை வன்முறையை பிரயோகம் பண்ணியதில்லை.
எங்கள் விடுதியாம் சிங்கப்பூரார் வீட்டில் ஜன்னல் விளிம்புகளில் ஒரு சிறுவன் படுத்து உறங்கும் அளவுக்கு விஸ்தாரமாக இடமுண்டு. சுவர் அவ்வளவு தடிமன். எனவே பெட்டியை அந்த விளிம்புகளில் வைக்க போட்டா போட்டி ஏற்படும். நான் ஆஸ்டல் செலக்ஷன் நடக்கும் முன்பாகவே விடுதிக்குள் தங்க ஆரம்பித்து விட்டதால் (ஜகநாதன் சித்தப்பா இருந்த சலுகையில் தான்!!) நான் ஒரு அருமையான ஜன்னல் விளிம்பில் பெட்டியை வைத்து விட்டேன். பெட்டிக்கும் ஜன்னல் பக்க சுவருக்கும் இடைப்பட்ட கேப்பில் நான் அமர்ந்து படிப்பது அல்லது புத்தகங்களை அடுக்குவது என பயன்படுத்திக் கொள்வேன்.
இப்படி நான் பட்டா போட்டு வைத்திருந்த இடத்தின் மீது நண்பன் செந்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டான். அதாவது எனது பெட்டியை கீழே எடுத்து வைத்து விட்டு அவனுடையதை வைத்துக் கொண்டான். நான் அமைதியாக அவனுடையதை கீழே வைத்து விட்டு என்னுடையதை மீண்டும் வைத்து விட்டேன்.
வெகு எளிதில் உணர்ச்சி வசப்படும் எனது மற்றொரு நண்பன் செல்வத்திடம் இது குறித்து உணர்ச்சிப் பொங்க விவரித்துக் கொண்டே குளிக்க கூழையாறு சென்று திரும்பினோம். கதையை கேட்க கேட்க வலது உள்ளங்கையை குவித்து இடது உள்ளங்கையில் “ணங் ணங்“ என்ற குத்திக் கொண்டே வந்தான். (அவன் தனது இடது கையை செந்திலாக நினைத்துக் கொண்டு குத்தியபடி வந்தான் என்பது சத்தியமா எனக்கு தெரியாதுங்க)
விடுதிக்குள் நுழைந்து பார்த்தால் எனது பெட்டியை மறுபடியும் கீழே எடுத்து விசிறியடித்து விட்டு அவனது பெட்டியை வைத்ததோடு அன்றியும் ஜன்னல் கம்பிகளின் ஊடாக சிறு கொடி கயிறு ஒன்றை கட்டி ஜட்டியை காயப் போட்டிருந்தான். (அது ஒரு மழைக்காலம் என்று அறிக)
ஏற்கனவே நான் கூறிய கதையால் மூளை சலவை செய்யப்பட்டிருந்த செல்வம் செந்தில் மேல் பாய்ந்து விட்டான். அவனை மூளையில் தள்ளி ஒரு அட்டை பெட்டியை தூக்கி அடிக்க அது அழகாக செந்திலின் தலையை மூடிவிட்டது. மீளவும் செல்வம் அவன் மீது ஒரு கொலைவெறித் தாக்குதலுக்கு திட்டமிட்டான். விபரீதத்தை உணர்ந்து நான் குறுக்கே பாய்ந்து தடுத்தாற் கொண்டேன். அதற்குள் கூட்டம் கூடிவிட விலக்கி விட்டாகிவிட்டது.
எங்கள் ஊரிலிருந்து அப்போது அங்கே படித்த பாசக்கார 9 மற்றும் 10ம் வகுப்பு தம்பிகளுக்கு “செந்திலுக்கும் ஜெயராஜுக்கும் சண்டை” என்கிற ரீதியில் தகவல் சொல்லப்பட குளித்து விட்டு உள்ளே நுழைந்தவுடன் தாக்குதலுக்கு எத்தனித்தார்கள். செந்திலோ விடுதியில் எனக்க இருந்த அரிதிற் பெரும்பான்மையை எண்ணி பீதியில் உறைந்து போனான்.
இந்த சம்பவத்திற்கு பிறகு நானும் செந்திலும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்.
பனிரெண்டாம் வகுப்பில் அடி எடுத்து வைத்தவுடனேயே விடுதியின்  சீனியர் மாணவர்கள் என்கிற கெத்து காண்பிக்க ஆரம்பித்தோம். நான் எப்போதும் போல சிறுவர்களிடம் நல்லதொரு நட்பினை பேணி வந்தேன். பதினோறாம் வகுப்பு மாணவர்கள் விடுதிக்கு புதியவர்கள் மற்றும் இளையவர்கள் என்பதால் சீனியர் என்பதற்கான தோரணையை காட்ட ஆரம்பித்தனர் சக நண்பர்கள்.
ஆனால் பதினோறாம் வகுப்பு மாணவர்களோ அடங்கிப் போகிற ரகமாக இல்லை. எனவே அடிக்கடி முட்டலும் மோதலும் என்று கழிந்தது. ஒரு கட்டத்தில் விறகு கட்டையை எடுத்து அடித்துக் கொள்ளப் போகும் அளவுக்கு கூட போய் கடைசி நேரத்தில் கலவரம் தவிர்க்கப் பட்டது.
இந்த முட்டல் மோதலுக்கு எல்லாம் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் வந்து முற்றுப் புள்ளி வைத்து விட்டது. கொடி கட்டுவது, வீடியோ வாடகைக்கு எடுப்பது, படங்கள் தேர்வு என பல தளங்களில் இணைந்து செயல்பட்டு நட்பினை வலுப்படுத்திக் கொண்டோம். அதன் பிறகு இரண்டு வகுப்பு மாணவர்களும் நல்ல ஒற்றுமையோடு அந்த ஆண்டினை இனிதே கழித்தோம்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் நண்பன் இராஜவேல் பதினோறாம் வகுப்பு மாணவர்கள் பக்கத்து நியாயத்தை மட்டுமே உரக்கப் பேசியபடி இருந்தான். அவன் ஒரு போதும் பனிரெண்டாம் வகுப்பு கோஷ்டியின் பக்கம் வந்து நிற்க தயாராக இருந்தது இல்லை. நான் கூட சண்டை முற்றிய போது பதினோறாம் வகுப்பு மாணவர்களிடத்தில் பேசுவதை தவிர்த்து இருந்தேன்.
ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும் போது அந்த கோபமும் சீற்றமுமாக இருந்த பயனற்ற நாட்களையும் இனிமையான நாட்களாக கழித்து இருக்கலாமே என்று மனது ஏங்குகிறது.



3 comments:

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...