Thursday, January 4, 2018

கணக்கோடு ஏன் பிணக்கு?

கணக்கோடு ஏன் பிணக்கு?

அறிவியல் பாடங்களின் இராணி கணிதம்என்று கூறுவார்கள். எனவே கணிதப் பாடத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்ளாத ஒரு மாணவனால் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை முழுமையாக புரிந்து கொள்ள இயலாது. ஏனெனில் கணிதப் பாடத்திட்டமானது வாழ்வியல் சார்ந்தவை மற்றும் மேல் நிலை அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுக்கான அடிப்படைகள் என்று இரு பிரிவகளைக் கொண்டது.
நல்ல துவக்கம் பாதி வெற்றியை தரும் என்பார்கள். நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நல்ல துவக்கம் முழு வெற்றியையே தரவல்லது. புதியப் பாடத்திட்டத்தில் ஒன்பது முதல் பனிரெண்டு வகுப்பு வரையிலான வரைவு பாடத்திட்டத்தினை பற்றிய ஒரு ஆய்வு மேற்கொண்டதில் தான் நான் அறிந்து கொண்டேன், இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு துவக்கம் என்று.
பழைய பாடத்திட்டத்தில் இருந்த இடர்பாடுகள், புதியப் பாடத்திட்டத்தின் வரவேற்கத்தக்க அம்சங்கள் மற்றும் புத்தக வடிவமைப்பில் எனது சிறு எதிர்பார்ப்பு என்று மூன்று விஷயங்கள் பற்றியது தான் இந்தக் கட்டுரை.
” ’அல்ஜீப்ராபேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல?” ஆமாம் இந்தப் பாடம் பெரும்பாலான மெல்லக் கற்போருக்கு ஒரு பெரும்கொடுங்கனவு”(NIGHT MARE) தான். பாரதிதாசன் பல்கலைக்கழக சுதந்திர தின கொடியேற்று விழாவில்பல்கலைக்கழகத்தில் அரசியல் ஒரு துறையாக இல்லையே தவிர அனைத்து துறைகளிலும் அரசியல் உள்ளதுஎன்று ஒரு துணைவேந்தர் வருத்தத்தோடு குறிப்பிட்டார். அது போல அல்ஜீப்ரா என்னும் இயற்கணிதம் பனிரெண்டாம் வகுப்பில் ஒரு பாடமாக இல்லையே தவிர அனைத்து பாடங்களிலும் அல்ஜீப்ரா வருகிறது.
ஆம் இப்போதைய பாடத்திட்டத்தில் மாணவர்கள் பத்தாம் வகுப்போடு அல்ஜீப்ராவுக்கு விடை கொடுத்துவிடுவார்கள். பதினோறாம் வகுப்பில் சும்மா ஊறுகாய் மாதிரி ஒரே பயிற்சி உண்டு. மீதிக் கருத்துக்கள் யாவும்புலித் தோல் போர்த்திய பசு”. அல்ஜீப்ரா என்கிற பெயரின் கீழ் இருந்தாலும் அவையெல்லாம் வித்தியாசமான இலகுவான கருத்துக்கள்.
புதிய பாடத்திட்டத்தில்அல்ஜீப்ராவிரிவாக கொடுக்கப் பட்டுள்ளதோடு அல்லாமல் ஏனைய கருத்துக்கள் எல்லாம் அவற்றின் தனித்த பெயரில் தனிப் பாடங்களாக வழங்கப் பட்டுள்ளன.
அடுத்து கோணங்கள், அதன் பல்வேறு கோட்பாடுகள் மற்றும் அங்கு உண்டாகும் நூற்றுக் கணக்கான சூத்திரங்கள் என்ற உள்ளடக்கத்தோடு  திரிகோணமிதி அல்லது முக்கோணவியல் என்றொரு பாடம் உண்டு. இந்தப் பாடம் படிக்காத ஒருவரால் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட சமன்பாடுகளை புரிந்து கொள்ளவே இயலாது.
பிறவிப் பெருங்கடலைக் கூட நீந்திக் கடக்கலாம், ஏன் நெருப்பாற்றில் கூட நீந்திக் கரையேறி விடலாம், தேர்வுக்கான குறுகிய இடைவெளியில் முக்கோணவியலை நடத்தி மாணவர்களுக்கு புரியவைப்பதற்குள் ஆசிரியர்களுக்கு பெண்டு கழண்டு விடும். ஏனென்றால் அவ்வளவு விஷயங்கள் பதினோறாம் வகுப்பில் ஒரே பாடத்தின் கீழ் திணிக்கப் பட்டிருக்கும்.
புதியப் பாடத்திட்டத்தில் முக்கோணவியல் பாடம் சரிசமமாக பங்கிடப் பட்டு பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு வழங்கப் பட்டுள்ளன. எனவே ஆசிரியர்களின் நெருக்கடி சற்று குறைந்துள்ளது.
இரண்டாண்டுகளுக்கு ஒரு மாணவன் முன் பெயர் ராஜா என்று வைத்துக் கொள்வோம். மிகவும் தாமதமாக பதினோறாம் வகுப்பில் கணிதப் பிரிவில் சேர்ந்தான். அவனது கெட்ட நேரம் அவன் வந்த போது நான் நடத்திக் கொண்டு இருந்த பாடம்முக்கோணவியல்”. இரண்டு நாட்கள் அமர்ந்து பார்த்து விட்டு அருகில் இருந்தவனிடம்ரொம்ப நடத்துறாருடா இவருஎன்று கூறிவிட்டு ஓடினவன் தான் ஒரு மாதம் பள்ளிக்கே திரும்பவில்லை. அப்புறம் அவனது தந்தையை அழைத்து பேசி வரவழைத்தோம். மறுபடியும் அவனது கெட்ட நேரம் புதிய சற்று கடினமான பகுதியான கால்குலஸ் நடத்திக் கொண்டு இருந்தேன். பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினவன் தான் அதன் பிறகு அவனை நான் காணவே இல்லை.
ஆக அறிமுகம் நன்றாக இருந்தால் தான் பாடத்தின் மீது ஒரு ஈர்ப்பும்இது நமக்கு இலகுவானது நாம் முயன்றுப் பார்க்கலாம்என்ற எண்ணம் வரும். ஆனால் புதிய பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்து பதினோறாம் வகுப்பு வரும் மாணவர்களிடம் முதல் பாடமாக இயற்கணிதம் என்கிறஅல்ஜீப்ராவை காட்டி பயமுறுத்த வேண்டியது இல்லை. மாறாக சற்று இலகுவான கணங்களும் சார்புகளும் என்கிற பாடத்தையோ அல்லது அணிக்கோவைகள் என்கிற பாடத்தையோ வைத்தால் முதல் பாடத்தை பார்த்தவுடன் அவர்கள் முகம் மலரும்.
ஒரு கோட்பாட்டை அறிமுகப் படுத்திய பின்பு அது சார்ந்த கணக்குகள் நிறைய கொடுக்கப் பட வேண்டும். இப்போதைய புத்தகத்தில் பெரும்பாலான பயிற்சிகளில் வகைக்கு ஒன்று அல்லது இரண்டோதான் உள்ளது. இது போதாது. நிறைய கணக்குகள் வாயிலாக பயிற்சி செய்தால் தான் கருத்தினை நன்கு உள்வாங்க இயலும். மேலும் புத்தகத்தின் பின்னால் வரும் கணக்குகளைத்தான் தேர்வுகளில் கேட்கவேண்டும் என்கிற நிலை இருக்காது. மேலும் மெல்லக் கற்போரையும் புறக்கணிக்காத வகையில் கணக்குகள் அமைய வேண்டும். அதாவது மாணவர்கள் மொபைல் கேம் விளையாடும் போது லெவல் ஒன்று இரண்டு மூன்று என்று செல்வார்கள் அது போல கணக்குகளும் நிலைகளாக பிரிக்கப் பட்டு நிறைய வழங்கப் பட வேண்டும்.
அப்படி வழங்கினால் புத்தகம் பெரிதாகி பூச்சாண்டி காண்பிக்க வாய்ப்பு உள்ளது. மொழிப் பாடங்களில் துணைப்பாட நூல் உள்ளது போல கணக்குப் பாடத்திலும் கோட்பாட்டுப் புத்தகம் பயிற்சிப் புத்தகம் என இரண்டு புத்தகங்கள் போடலாம். இப்போது உள்ள தேர்வு மைய கற்றல் கற்பித்தல் மறைய வேண்டும். தேர்வு தேர்ச்சி சதவீதம் என்கிற இலக்கினை விடுத்து மாணவர்களின் தெளிவான புரிதல் என்பதை இலக்காக கொண்டு செயல்படும் போது தான் பாடத்திட்டம் முழு வெற்றியை பெறும்.




No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...