Sunday, January 21, 2018

ஒரு ஆனந்த யாழ் நாராசமாகிப் போனதே!!



ஒரு ஆனந்த யாழ் நாராசமாகிப் போனதே!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், மகள்கள் பிறக்கும் போது ஆனந்த யாழோடுதான் பிறக்கிறார்கள் என்று.
அப்பாக்களின் மூச்சில் வாழும் புல்லாங்குழல் அவர்கள், பேசும் வார்த்தைகள் யாவும் தேன் சுவை சொட்டும் செந்தேன் குழல்கள்.
ஆணாதிக்கம் கொண்டு மனைவியை அதிகாரம் செய்யும் அப்பாக்கள் கூட மகளதிகாரத்தின் முன்னால் மண்டியிடுகிறார்கள்.
ஆனாலும் கூட சில பழைமைவாத அப்பாக்களுக்கு மகளின் அழகைப் பார்க்கும் போதெல்லாம் வயிற்றுக்குள் நெருப்பு கங்கு ஒன்று விட்டு விட்டு சிலிர்க்கிறது. அது மகளின் கற்பென்னும் கற்பிதத்தில் இருப்பதாக கருதும் புனிதம். அதற்கு பங்கம் நேரும் போது ஆனந்த யாழை உடைத்துப் போடுகிறார்கள். புல்லாங்குழலின் இசை நாராசமாகிப் போகிறது.
அருவிச் சாரலில் குளித்த அன்றலர்ந்த புது மலராக இருக்கும் பெண்ணிற்கு அருவி என்று பெயர் சூட்டி அழகு பார்க்கிறார் ஒரு தந்தை.
மகளின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கிறார். மகளின் நல்லதொரு எதிர்காலத்திற்காக கிராமத்தில் இருந்து நகரம் நோக்கி குடிபெயர்கிறார்.
மகளதிகாரம் அவரது நெடுநாள் பழக்கமான சிகெரெட்டை தூக்கி எறிய வைக்கிறது.

அப்படிப் பட்ட மகளுக்கு எயிட்ஸ் என்னும் போது துடித்துப் போகிறார். மகளின் இருப்பு தொண்டையில் குத்திய மீன் முள்ளாக ஆகிப் போகிறது. . யாரோடோ படுத்து எயிட்ஸ் வாங்கிக் கொண்டதாக எண்ணுகிறார். அவளுக்கு தன்னை நிருபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதே என்கிற துக்கம். என்ன சொல்லியும் சமாதானம் கொள்ள மறுக்கிறார். சில நாட்கள் சகித்தாலும் கூட வெகு நாட்கள் சகிக்க முடியாமல் வெளியேற்றகிறார்
ஒரு அரவாணியின் அரவணைப்பில் தனது காலத்தை தள்ளகிறாள். அவளின் நிலை தெரியாமல் ஒரு மூன்று ஆடவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்கள். அவர்களை மன்னிப்புக் கேட்க வைக்க “சொல்வதெல்லாம் சத்தியம்“ நிகழ்ச்சிக்கு போய் பிராது பண்ணகிறாள்.
அவர்களை எதிர் வரிசையில் அமர வைத்து “எனக்கு எயிட்ஸ் இருக்கு“ என்று சொல்லி தெறிக்க விடுகிறார். படப்பிடிப்பு அரங்கமே அதிர்கிறது.
“ஆமாம் சில ரேப்புகள பண்ணிப்புட்டோம் என்ன இப்ப?” என்று கெத்து காட்டி அமர்ந்திருப்போர் இப்போது அழுது புரள்கிறார்கள்.
ஊடகமோ இந்த பரபரப்பையும் காசாக்க விழைகிறது. அருவியின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படவே அவள் தனது தந்தையிடம் இருந்து எடுத்து வந்த துப்பாக்கியை எடுக்கிறாள். அரங்கத்தில் இருக்கும் அனைவரையும் பிணைக்கைதி ஆக்குகிறாள்.
ஊரே பரபரப்பாகிறது. அப்புறம் சும்மா விடுவார்களா செய்தி சேனல்கள்?! விவாதம் நடத்துகிறார்கள் லைவ் டெலிக்காஸ்ட் பண்ணுகிறார்கள் “பிக் பிரேக்கிங் நியுஸ் போடுகிறார்கள்.
பிணைக்கைதியாக பிடித்த உடனே “நான் பாதுகாப்பாக இருந்தேன் கவலைப்படாதீர்கள்” என்று கூறி அந்த மூவர் வயிற்றிலும் பாலை வார்க்கிறாள். அரங்கின் உள்ளே கோபம், சண்டை, நெகிழ்ச்சி, மகிழ்ச்சி என்று ஒரு கலவையான மனநிலை நிலவுகிறது. நேரம் ஆக ஆக பிணைக்கைதிகள் அனைவரும் அருவி பிரச்சனை இல்லாமல் சரணடையவேண்டுமே என்று தவித்துப் போகிறார்கள். வேண்டும் படியெல்லாம் அனைவரையும் ஆட்டுவித்து பிறகு சரணடைகிறாள்.
நோய் முற்றுகிறது. தனது இறுதி காலம் அமைதியாக கழிய வேண்டும் என்று தனித்து சென்று ஒரு கிராமத்தில் குடிலமைத்து வாழ்கிறாள் அருவி. இறுதியில் “சொல்வதெல்லாம் சத்தியம்“ தொடரின் இணை இயக்குனர் தான் கூறிய சினிமா கதை போல முயற்சித்து அணைவரோடும் (அருவியின் தாய், தந்தை மற்றும் தம்பி உட்பட) சென்று அவளை சந்தித்து மகிழ்ச்சி படுத்துவதாக கதை முடிகிறது.
மகிழ்ச்சியான பதின் பருவத்தின் போது கண்களை அரை மயக்க நிலையில் வைத்து புருவத்தை மேலே தூக்கி ஆட்டும் மேனரிசத்தை அவளின் இறுதி காலத்தில் செய்யும் போது நமது கண்ணீர் அருவியாக சொரிகிறது.
அருவியின் நடிப்பு அருமை. மகிழ்ச்சியான வாழ்க்கை குறித்த அந்த நீண்ட வசனம் அப்பப்பா ஆசம்.

“இந்த ஆம்பளைங்க ரோட்டுல ஐஸ்வர்யாராய் போனா கூட விட்டுடுறாங்க ஆனா அரவாணிங்க போனா மட்டும் வெறித்து பார்க்கிறார்கள், நாங்க என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்?” என்ற அருவியின் தோழியான அரவாணி கூறும் வார்த்தைகள் நகைச்சுவையாக கூறப்பட்டாலும் அதுவே நிஜம். சமீப காலங்களில் அரவாணிகள் குறித்த உயர்வான சித்தரிப்போடு படங்கள் வருவது ஆரோக்கியமான முன்னேற்றம்.
படத்தில் தொலைக்காட்சி ஊடகங்களை நன்கு பொன் வறுவலாக வறுத்து எடுத்திருக்கிறார் இயக்கனர். அவர்களின் மனிதாபிமானமற்ற வியாபார தந்திரம் குறித்து உரக்க பேசியிருக்கிறார்.
நோய் அவர்களுக்கு எப்படி வந்திருந்தாலும் எயிட்ஸ் நோயாளிகளுக்கு தேவை நமது அன்பும் அரவணைப்பும் என்கிற விழிப்புணர்வை முன்வைக்கிறார்.
அந்த சிறுவயது அருவி யாரது? முகநூலில் அருமையாக பாடி வீடியோக்கள் பதிவேற்றும் ப்ரணிதாவா?!
இறுதிக் காட்சியில் அருவி முகநூல் வழி அனுப்பும் செல்ஃபி வீடியோ மற்றும் வசனங்கள் கல்லையும் கரைத்து விடும். அதன் பிறகுதான் அவளது அப்பா அசைகிறார்.
இந்த படமும் கூட ரொம்ப நாள் ஓட வில்லை. எந்த படத்தையும் நேரம் வாய்க்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு வைப்போர்களது ஒரே போக்கிடம் “  “ அவர்கள் தான்.


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...