Tuesday, January 30, 2018

லால்குடி டேஸ்:23 தேவதைகள் நகர்வலம் வரும் நேரம்



எங்கள் விடுதியில் எப்போதும் காலை 8.40 என்பது மிக முக்கியமான நேரம். ஆம் அப்போது தான் எங்கள் விடுதி இருக்கும் தெரு வழியாக தேவதைகள் ஊர்வலம் செல்லும்.
அவர்கள் எல்லாம் வெள்ளை ஆடை உடுத்திய பாரதிராஜாவின் தேவதைகள் இல்லை, மாறாக வெளிர் சிவப்பு வண்ண தாவணியும் ஊதா கலர் பாவாடையும் என பள்ளிச் சீருடையில் பவனி வருபவர்கள்.
பதினோறாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் தேவதை தரிசனம் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வுதான்.
மாணவர்களின் வீரத்திற்கு உறைகல்லாக இந்த நிகழ்வினை வைத்துக் கொள்ளலாம். வீரம் மிகுந்தவர்கள் வீதிக்கு வந்து விடுவார்கள். சற்று மிதவீரவாதிகள் வாயில் வரை வந்து நிற்பார்கள். மிதவாத தம்பிகள் சுற்றுச் சுவரில் தலை நீட்டுவார்கள். பொறுப்பான ’அம்பி’கள் யாவரும் புத்தகத்தோடு மொட்டைமாடியில் உலா போவது போல நின்று வீதியை நோக்குவார்கள். மொத்தத்தில் அனைத்து கண்களும் வீதியை நோக்கியபடி இருக்கும்.
எங்கள் விடுதியில் பகுதிநேர மாணவன் ஒருவன் உண்டு. அவன் பாஸ் என்கிற பாஸ்கரன் (பெயர்கள் மாற்றப் பட்டிருக்கின்றன சம்பவங்கள் உள்ளபடியே,,.) அவனது மாமா வீட்டில் தங்கி இருந்தான். விடுதியிலும் இடம் கிடைத்திருந்தது. ஆகையால் சாப்பாட்டு நேரத்திற்கு மட்டும் விடுதிக்கு வருவான். ரொம்பவும் கூச்ச சுபாவம். ஆமாம், அவன் பெயரே எங்களுக்கெல்லாம் தெரிவதற்குள் பதினோறாம் வகுப்பில் பாதி நாட்கள் ஓடிவிட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தேவதைகள் கூட்டத்தில் ஒரு மான்குட்டி போல மையிட்ட மருண்ட விழிகளோடு துள்ளித் துள்ளி போகும் பெண் குட்டி அவள். பெயர் பார்வதி (மறுபடியும் சொல்றேன், பெயர்கள் மாற்றப் பட்டிருக்கின்றன சம்பவங்கள் உள்ளபடியே,,) எப்போதுமே எங்கள் விடுதியைக் கடக்கும் போது பேருந்தை பிடித்துவிட செல்லும் தாமத பயணி போல ஒரு வேகத்தோடும் பயத்தோடும் கடப்பாள்.
ஒரு நாள் காலை உணவுக்காக பாஸ்கரன் விடுதிக்கு வந்து கொண்டிருந்த போது சாலையில் கிடந்த கல் இடறி விழப்போனான், விழ இருந்த இடத்தில் பார்வதி. இவன் சுதாரித்துக் கொண்டு உள்ளே வந்து விட்டான். அவளோ, இவன் அவளை இடிப்பதற்காக பிரயத்தனம் செய்திருக்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டு பயந்து ஓட ஆரம்பித்து விட்டாள்.
நான் சரியாக சாப்பிடும் நேரத்திற்கு மொட்டை மாடியில் இருந்து (ஆமாங்க நான் அங்கே படித்துக் கொண்டு இருந்தேன்) இறங்கி வந்தேன்.
“டேய் ஜெயராஜ் பாஸ்கரன் கிட்ட ’பாஸூ இங்க பாரு’ என்று சொல்லி கூப்பிடேன்” என்றான் நண்பன் செல்வம்.
எனக்கு எதிர் வரிசையில் எனக்க நேராக பாஸ்கரன் அமர்ந்திருந்தான். நானும் என்ன நடந்தது என்று தெரியாமல், “’பாஸூ இங்க பாரு” என்று சற்று சத்தமாக கூவினேன். உடனே தட்டோடு எழுந்த பாஸ்கரன் சாப்பாட்டை கொட்டிவிட்டு அழுது கொண்டே வந்தான்.
’தட்டை தண்ணீரில் கழுவினானா, அல்லது அவன் கண்ணீரில் கழுவினானா?!!’ என்று வியக்கும் வண்ணம் மடை திறந்த வெள்ளமாக கண்ணீர் கரை புரண்டோடியது.
ஏற்கனவே போதுமான அளவில் அவனை பார்வதியோடு (சுருக்கி “பாரு பாரு” என்று) இணைத்து கிண்டலடித்து இருக்கிறார்கள். அவனும் கண்ணீரை அடக்கி கொண்டு இருந்திருக்கிறான். நான் கிண்டலடித்த உடனே மதகு உடைந்து விட்டது.
இந்த சம்பவம் நடந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. நாங்களும் சீனியர் மாணவர்களாகி விட்டோம்.
மீசையும் ஆசையும் அரும்பும் இந்த பதின் பருவ மாற்றங்கள் ரொம்பவே வியப்புக்குறியது. பனிரெண்டாம் வகுப்பு வந்ததில் இருந்தே பாஸ்கரன் மிகுந்த தில்லான ஆளாக மாறி இருந்தான். சென்ற ஆண்டு வரையில் அம்பித்தனமாக பேசித் திரிந்த பாஸ்கரன் வாயில் இருந்து அவ்வப்போது வந்து விழும் சொற்கள் யாவும் “ஏ“ ரகம்.
“ஏய் தம்பி இங்க பாரு, உன்னத்தான் பாரு இங்க பாரு” இது வீதியில் நின்று பார்வதி கடந்து போகையில் பாஸ்கரன் பேசிய வார்த்தைகள்.
சென்ற ஆண்டு “பாஸூ இங்கே பாரு” என்றதற்காக அழுத அதே பாஸ்கரன் பேசிய வார்த்தைகள் தான் இவை. இந்த ஹார்மோன்கள் பதின் பருவ பிள்ளைகளை என்ன பாடு படுத்துகிறது பார்த்தீர்களா?!
மற்றுமொரு முறை பார்வதியிடம் ஏதோ பேச முனைவது போல நேராக போய் குனிந்து ஏற்கனவே விட்டெறிந்து இருந்த நாணயத்தை எடுத்து வந்ததும் அதே பாஸ்கரன் தான். இந்த சம்பவத்திற்கு பிறகு அவள் வீட்டிலே முறையிட்டிருக்க வேண்டும். அடுத்த நாள் ஜெகநாதன் சித்தப்பா மாணவர்களிடம் பொதுவாக “டேய் இந்த பார்வதிகிட்ட வம்பு வச்சிக்காதிங்கடா, அவ அப்பன் ஏற்கனவே ஒருத்தன வெட்டிபுட்டு ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவன்” என்றார்.
அன்று காலை தேவதைகளின் ஊர்வலம். கூட்டத்தை பிளந்து கொண்டு ஒரு மிதிவண்டி வந்து கொண்டு இருந்தது.
“என்னாது, கூட்டத்த பிளந்து கிட்டு வர்ரான்?!”
”சரிதான் சைத்தான் சைக்கிள்ள வருது” இந்த காமெடி நினைவிருக்கிறதா?!
இது தான் அன்று நடந்தது. பார்வதியின் அப்பா சைக்கிளில் பார்வதியை வைத்து ஓட்டிக் கொண்டு வந்தார். சைக்கிள் ஹேண்ட் பாரில் ஒயர் கூடை தொங்கியது அதனுள் ஒரு அரிவாள் அமைதியாக வீற்றிருந்தது. அன்று சைக்கிளில் வீற்றிருந்த பார்வதி மாணவர்களிடம் ஒரு அலட்சிய பார்வையை வீசிச் சென்றாள். “இப்போ வாங்கடா பார்க்கலாம்” இது தான் அந்த பார்வைக் குறிப்பின் மொழி வடிவம்.
வேடிக்கை பார்க்க போன அனைவரும் ஆங்காங்கே இருந்த பதுங்கு குழிகளில் பதுங்கி கொண்டார்கள். அப்போது தான் சாலையை கடக்க முனைந்த பாஸ்கரன் அங்கே கண்ட காட்சியில் சில மைக்ரோ வினாடிகள் மூர்ச்சையுற்று பின் சுதாரித்து எதிர் சந்தில் சிட்டாக மறைந்தான்.
இந்த நிகழ்விற்குப் பின் அரையாண்டு செய்முறை மற்றும் பொதுத் தேர்வு என நாங்கள் பிசியாகி விட்டதால் காலை 8.40 எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. (மாணவர்கள் பயந்து போனார்கள் என்று நீங்கள் எண்ணி விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த தன்னிலை விளக்கம்)
கணிதப் பாடத்திற்கு “பாரத் டியுசன் சென்டர்“ சென்ற “ஏ“குருப் மாணவர்களுக்கு அங்கே மாணவிகளோடு சேர்ந்து பயிலும் வாய்ப்புகள் அமைந்தது. விடுதியில் வீதியில் செல்லும் பெண்களை வீர ஆவேசமாக கிண்டலும் கேளியும் செய்யும் எல்லோரும் டியுசனில் “கப் சிப்“ என அடங்கித்தான் இருப்பார்கள்.
பேசுவதெல்லாம் பெண்கள்தான் கூப்பிட்டு கூப்பிட்டு பேசுவார்கள். நாங்களோ குனிந்த தலை நிமிராமல் பதில் சொல்வோம். எல்லாம் ”எஸ் ஆர் நோ” டைப் விடைகள் தான்.
இந்த விஷயங்கள் விடுதியில் இருக்கும் “சி“ குருப் மாணவர்களுக்கு தெரிய வந்து விடவே எங்கள் மானம் கப்பலேறியது. இந்த அவமானம் எங்களை வெகுவாக உசுப்பேற்றி விட்டது. எனவே அடுத்தநாள் பெண்களோடு பேசி விடுவது என்று சங்கல்பம் செய்து கொண்டோம்.
டியுசனில் பேசாவிட்டாலும் அந்த பெண்களை குறித்து பேசும் போது “அவ இவ, வாடி போடி“ என்று பேசவல்ல வீரத்தின் விளைநிலமான ரவிச்சந்திரன் பேசவேண்டியது என்று தீர்மானம் நிறைவேற்றினோம். (ஏனையோரை பேசக் கூறி முன் மொழியப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் தோல்வி)
மோகன் சார் கண்ணுங் கருத்துமாக பாய்சான் பரவல் சார்பு பற்றி நடத்திக் கொண்டு இருந்தார். நாங்கள் கவனித்துக் கொண்டு இருந்தோம். சற்று திரும்பி ரவிச்சந்திரனைப் பார்த்தால் இரண்டு மின் விசிறிக் காற்றையும் மீறி அவனுக்கு வேர்த்துக் கொட்டிக் கொண்டு இருந்தது.
“என்னடா பயமா?”
”ச்சே ச்சே..அதெல்லாம் ஒண்ணுமில்ல இங்க காத்து வரல“ என்ற புளுகினான்.
டியுசன் மாலை 7.00 மணிக்கு முடிந்தது. மாலதி சற்று சகஜமாக பேசுபவள் என்பதால் அவளிடமே பேசி விடலாம் என்று முன்பே சொல்லி வைத்திருந்தோம்.
மொத்த பேரும் ரவிச்சந்திரனை பின்னால் இருந்து நெட்டித் தள்ளினோம்.
“என்னடா பேசறது?!” (ஆஹா, இத முன்கூட்டியே விவாதிக்கலையே)
”ஏதாவது பேசுடா”
“..“
“…“
“…“ ரவிச்சந்திரனின் முதல் மூன்று முயற்சிகளிலும் வெறும் காற்று மட்டுமே வந்தது. நாங்கள் சற்று பலமாக அவன் முதுகில் குத்தினோம்.
“ஏங்க, ஹலோ”
“என்னாது ஹலோவா என் பேரு மாலதி” என்றாள் ’சொர்ணாக்கா’ ரியாக்ஷனோடு
“…“ பயத்தில் நா மேலண்ணத்தோடு போய் ஒட்டிக் கொண்டது.
“ஹா ஹா என்னப்பா வேணும்” என்றாள் இப்போது தனது டிரேட் மார்க் புன்னகையோடு.
“இங்கிலீஷ்ல எந்த எந்த எஸ்ஸே படிச்சிருக்கீங்க”
“ம்…இதென்ன கேள்வி எல்லாமும் தான்” என்றாள் மாலதி வியப்போடு. எல்லோரும் மூர்ச்சையானோம்.
ஒன்று மூன்று ஐந்தா அல்லது இரண்டு நான்கு ஆறா என்று வகை பிரித்து ஏதேனும் மூன்று எஸ்ஸேக்களை மட்டுமே படிக்கும் வழக்கமுள்ள எங்களுக்கு அவளது பதில் நாங்கள் பாதாளத்தில் இருப்பது போல ஒரு தாழ்வு மனப்பான்மையை தந்து விட்டது.
அட உரையாடல் குறித்தா சிரிக்கிறீங்க!! நாங்கல்லாம் படிக்கிற பசங்க பாஸூ அப்படித்தான் பேசுவோம்.


No comments:

Post a Comment

எருமை மறம் - மௌனன் யாத்ரிகா

நூல் - எருமை மறம் ஆசிரியர் - மௌனன் யாத்ரிகா பதிப்பகம் - நீலம் விலை - ரூ.200 நூலாசிரியர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரியலூர் கலைக...