எப்போதும்
நேரம் தவறாமையை வலியுறுத்துவது எனது வழக்கம். எனவே 3.45 அதாகப்பட்டது 15.45 பல்லவன் விரைவு வண்டிக்கு எல்லோரையும் முடுக்கிவிட்டு வீட்டிலிருந்து 2.15க்கே கிளப்பிவிட்டேன். கேப் புக் பண்ணினாலும் டிராஃபிக்ல மாட்டி வண்டியை விட்டுடக் கூடாதே என்கிற நல்ல எண்ணம் தான். கார் எழும்பூரை நெருங்கும் போது அதாவது 2.45க்கு குறுந்தகவல் வருகிறது. இரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாம்.
வழக்கமாக
2.45க்கு கிளம்புவோர் என்மேல் கொலை வெறியில் இருந்தாலும் நாகரிகம் கருதி வாளாவிருந்துவிட்டனர். சரி ப்ளாட் ஃபார்ம் ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்து ஃப்ரீ வைஃபை இணைப்பை பயன்படுத்தலாம் என்று பார்த்தால் நல்ல கூட்டம். நிற்பதற்குத்தான் இடம் கிடைத்தது. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாதுங்க வைஃபை
நல்ல ஸ்பீடுங்க.
சற்றேரக்
குறைய இரண்டு மணி நேரம் கழித்து வைகை உள்ளே வந்தது. இது தான் பல்லவனாக மறு அவதாரம் எடுக்கும் என்பது தாங்கள் அறியாதது அல்ல. அப்பாடா கஷ்டம் எல்லாம் தீர்ந்தது என்று அக்கடா என்ற இருக்க விட்டார்களா?
விழுப்புரம்
வரும் முன்னரே ஒரு இடத்தில்இஞ்சின் மூர்ச்சையானது. இஞ்சின் புதிதாகையால் டிரைவருக்கு
கட்டுபடாமல் சண்டித்தனம் செய்தது. ரொம்பவும் முயன்று பார்த்த போது தனது இறுதி மூச்சை
விட்டு அடங்கியது. சாப்பாட்டு நேரம் ஆகையால் எல்லோரும் உணவு விற்கும் சிப்பந்திகளை
எதிர் நோக்கி காத்திருந்தனர். வேண்டாத போதெல்லாம் நூறு முறை குறுக்கும் நெடுக்கும்
நடப்போர் இப்போ தலை காட்டவே இல்லை. சரி ஏழு பெட்டிகள் தாண்டி பேண்ட்ரி பாக்சுக்கு போனால்
எல்லாம் தீர்ந்து விட்டிருந்தது. பிரியாணி தயார் செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே நிற்கவே
முடியவில்லை. சூடான நீராவி நிறைந்த அண்டாவில் விழுந்து விட்டது போல நல்ல சூடு. சட்டை
தொப்பலாக நனைந்து விட்டது. சாப்பிட ஒன்றும் கிடைத்த பாடில்லை.
இரண்டு மணி நேரம்
சென்றபின்பு ஒரு புதிய இஞ்சின் கொண்டு வந்து மெல்ல நகர்த்தி சென்றனர். விழுப்புரம்
வந்த உடனே எல்லோரும் பாலைவனத்தில் நீரைக் கண்ட பிரயாணிகள் போல குதித்து இறங்கி சாப்பாடு
விற்பனையாளர்களை மொய்த்து கொண்டனர். நானும் சப்பாத்தி பொட்டலம் இரண்டு வாங்கிக் கொண்டேன்.
உடன் வந்த தம்பிக்கு ஒரு பொட்டலம் கொடுத்து விட்டு நான் பிரித்தேன். வண்டி சங்கு(?!)
ஊதி புறப்பட்டது. பொட்டலத்தின் உள்ளேயிருந்த பரோட்டாக்கள் என்னை இளக்காரமாக பார்த்தன.
அடேய் எனக்கு மட்டும் எப்படிடா இப்படி விக்குறீங்க?
விருத்தாசலம் வரும்
முன்னே மறுபடியும் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. டிரைவர் ஒரு அரைமணி நேரம் தாஜா பண்ணி
கிளப்பி விட்டார். தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்று விருத்தாசலம் நிறுத்தத்தில்
இறங்க வேண்டியவர்கள் தப்பித்து ஓடினர்.
அப்பாடா அடுத்து
அரியலூர்தான். வண்டி காரைக்குடி போனா என்ன போகாட்டி என்ன நாம இறங்கிக் கொள்ள வேண்டியது
தான் என்று சுயநலமாக எண்ணியது தவறுதான். அது இஞ்சினுக்கு எப்படி தெரிந்ததோ உடனே படுத்துக்
கொண்டது. ஈச்சங்காடு என்கிற குக்கிராம ஸ்டேஷனில். நேரமோ இரவு பன்னிரெண்டை கடந்து விட்டிருந்தது.
எங்கள் இரயிலைத்
தவிற எல்லா இரயில்களும் சற்றும் நேரம் தவறாமல் எங்களை கடந்து சென்று எங்களை வெறுப்பேற்றியது.
சரி பக்கத்து டிராக் ரயிலை மறித்தால் வழிக்கு வந்து விடுவார்கள். நிவாரணம் விரைவாக
கிடைக்கும் என்று எண்ணி ராமேஸ்வரத்தில் இருந்து
வரும் இரயிலை மறிப்பது என்று முடிவு செய்து ஒரு இருபது பேர் கொண்ட பெருங்கும்பல்(?)
பக்கத்து டிராக்கில் குறுக்காக நின்றனர். ஆனால் டிரைவர் பார்த்தாரோ இல்லையோ தெரியவில்லை
கொஞ்சம் கூட வேகத்தை குறைக்க வில்லை ஆதலால் முற்றுகை போராட்ட வீரர்கள் தங்கள் வேகத்தை
கட்டுப் படுத்திக் கொண்டு வேகமாக சிதறி ஓடிவிட்டனர். ஒரு வழியாக முற்றுகை போராட்டம்
கைவிடப்பட்டது.
இதற்கிடையில் பயணிகள்
“அப்படித்தாங்க நாங்க போன வருடம் திருப்பதி போனப்ப…“ என்கிற ரீதியில் கதைகளை எடுத்து
விட ஆரம்பித்து விட்டார்கள். ஒரு தம்பி ஒருவன் “இன்னும் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல்
ஆகும்” என்று கூறி தனது பையை தலைக்கு வைத்து அந்த குக்கிராம ஸ்டேஷனின் பெஞ்சில் படுத்துக்
கொண்டார். டிரைவர் சங்கை முழக்கினார். எல்லோரும் ஓடிச் சென்று ஏறிக் கொண்டோம். எனக்கு
முன்னால் அந்த “ஒரு மணி நேர கெடு“ தம்பி ஏறிக் கொண்டு இருந்தார். அப்புறம் பார்த்தால்
டிரைவர் “ஹாரனாவது“ அடிக்குதான்னு பார்த்திருக்கார் அதை நம்பி நாங்கள் ஏறி இருக்கிறோம்.
“நான் சொன்னேன்ல“ என்ற படி அந்த தம்பி இப்போ ரயிலின் ஒரு காலி இருக்கையை படுக்கையாக்கிக்
கொண்டார். அவர் முடிவு சரிதான். அவர் காரைக்குடி போக வேண்டியவராச்சே.
நள்ளிரவு இரண்டு
மணிக்கு ஒரு வழியாக வண்டி நகர ஆரம்பித்தது. “பார்ரா இப்போ இவ்வளவு வேகமா போவுது“ என்று
எல்லோரும் வியக்கும் வண்ணம் விரைந்து சென்றது. பத்து நிமிடத்தில் அரியலூர் சென்றடைந்தோம்.
இரவு ஏழு முப்பதுக்கு
வரவேண்டியது அதிகாலை இரண்டு முப்பதுக்கு வந்து சேர்ந்தது.
சைக்கிளில் போகும்
போது பஞ்சரானால் தள்ளிக் கொண்டு போய்விடலாம், அதுவே புல்லட்டில் போகும் போது பஞ்சரானால்?!
பேருந்தில் போகும்
போது பிரேக் டவுன் ஆனால் இறக்கி அடுத்த பேருந்தில் ஏற்றி விடுவார்கள், அதுவே இரயிலில்
பிரேக் டவுன் ஆனால்?!
இரயிலில் போகும்
போது இஞ்சின் ரிப்பேரானால் நின்று சரி செய்துகொண்டு செல்லும் வாய்ப்பாவது இருக்கிறது
அதுவே விமானமாக இருந்தால்?!
எவ்வளவுக்கு எவ்வளவு
சொகுசு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ரிஸ்க்கும் அதிகம் உள்ளது. வழவழப்பான
சாலைகள் பெருகப் பெருக விபத்து எண்ணிக்கையும் கூடிக்கொண்டு தானே உள்ளது.
No comments:
Post a Comment