Friday, June 2, 2017

ஆசிரியச் சான்றோர்களே இந்த ஆண்டிலிருந்து இதையெல்லாம் முயல்வோம்



கீழ்கண்ட கருத்துக்கள் எல்லாம் நான் கண்ட பெரும்பாலான நல்லாசிரியச் சான்றோர்களிடமிருந்து கற்றுக் கொண்டவை. நீங்களும் இவற்றையெல்லாம் நடைமுறையில் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம். ஒரு வேளை புதியதாக இருந்தால் கற்கலாம் விடுபட்டவை இருந்தால் நீங்களே மெருகேற்றலாம் அல்லவா அதனால் தான் இவை உங்கள் பார்வைக்கு.
எந்த வகுப்பில் மாணவர்கள் அனைவரும் ஆசிரியருக்கு மிகப் பிடித்தமானவர்களாக இருக்கிறார்களோ அந்த வகுப்பில் ஆசிரியரது மொத்த திறமையும் வெளிப்படும். அது போலவே எந்த ஆசிரியரை மாணவர்களுக்கு மிகவும் பிடிக்குமோ அவர் எடுக்கும் பாடமே அவர்களின் பிடித்தமான இலகுவான பாடமாக மாறிப் போகும். எனவே மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியராக (வரம்புகளுக்கு உட்பட்டு) இருக்க முயல்வோம்.
கல்லூரி காலத்தில் மாணவர்கள் கற்கும் கடினப் பகுதிகளுக்கான அடிப்படைகள் எல்லாம் பதினோறாம் வகுப்பு பாடங்களில் தான் ஒளிந்து கொண்டுள்ளன. அவற்றை எல்லாம் எடுத்து தெளிவுற நடத்தி மாணவர்களுக்கு புரிய வைப்பதை இலக்காக கொள்வோம். அது பனிரெண்டாம் வகுப்பில் நமது வேலையை வெகு இலகுவாக்கி விடும். (இது அறிவியல் சார்ந்த அனைத்து பாடங்களுக்கும் பொருந்தும்.)
பதினோறாம் வகுப்பில் வந்த உடனே நாம் மாணவர்களிடம் பாரபட்சமில்லாமல் ஒழுக்க நெறிகளை தெளிவுற வரையறுத்துக் கூறிவிட வேண்டும். அதை கிஞ்சிற்றும் மீறலாகாது என்பதை வெகு கண்டிப்புடன் வலியுறுத்திக் கூறிவிட வேண்டும். வகுப்பறை சட்டம் ஒழுங்கை பராமரிக்க வீணாகும் நேரத்தை இது வெகுவாக குறைத்து விடும். (உ.ம்: கைப் பட்டை, கழுத்துச் செயின், அகோரமான சிகை அலங்காரம், கை பேசி வைத்திருத்தல், சீருடை இல்லாமல் வருதல் முதலியன)
விரும்பத் தகாத செயலில் பள்ளி வளாகத்தில் எந்த மாணவராவது ஈடுபட்டால் அதை உடனடியாக கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து ஆசிரியரும் தயாராக இருக்க வேண்டும். நாம் செல்லாத வகுப்பு மாணவன் என்பதால் அடங்க மாட்டானோ என்று தயங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஏதேனும் மோசமான சம்பவமாக உருவெடுத்து பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் உண்டானால் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் அது பெரும் தலைகுனிவு தானே.
வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். வகுப்பறை வினாத் தொடுத்தலின் போது மெல்லக் கற்கும் மாணவர்களிடத்தில் வெகு எளிதான வினாவினைக் கேட்டு (அவனுக்கு எது தெரியும் என்பது ஒரு ஆசிரியருக்கு தெரியும் தானே?) அவன் விடையளிக்கும் போது உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கூற வேண்டும். அனைத்து மாணவர்களையும் ஏதேனும் ஒன்றுக்காக வாரம் ஒரு முறையாவது பாராட்டி விட வேண்டும். (மாணவனுக்கு ஆசிரியரது அங்கீகாரமானது வசிஷ்டர் வாயாலேயே “பிரம்ம ரிஷி பட்டம்” பெற்றது போல் இருக்கும் அல்லவா?)
ஒவ்வொரு ஆசிரியரும் தாம் வகுப்பாசிரியராக பணியாற்றும் வகுப்புக்கு நல்லொழுக்க போதனை வகுப்பினை தானே கையாண்டு நன்னெறிக் கதைகளோ வாழ்வியல் அனுபவங்களோ நாட்டு நடப்புக்களோ அல்லது மாணவர்தம் தனித்திறமையை வெளிப்படுத்த களம் அமைப்பதோ என இயன்றவற்றை செய்து அந்த வகுப்புக்காக ஏங்கும் வண்ணம் அதனை மகிழ்ச்சியான பாட வேளையாக ஆக்க வேண்டும். இது ஆசிரியர் மாணவர் இடையே நட்பினை வலுப்படுத்தும்.
எந்த வகையிலும் விரும்பத் தகாத பழக்க வழக்கங்களை சிறப்பிக்கும் வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசுதலாகாது. ஆசிரியருக்கே புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இருந்தால் அது மாணவர்கள் அறியா வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். என்னதான் அது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்றாலும் உங்கள் அறிவுரை மீதான நம்பகத் தன்மையை அது வெகுவாகப் பாதிக்கும்.
நாம் போதிக்கும் மாணவர்கள் குமரப்பருவத்தின் உச்சத்தில் இருப்பவர்கள். அவர்களிடத்தில் “போராட்ட குணம், பாலியல் உணர்வு, தமது தனித்தன்மையை நிறுவ முயல்வது“ போன்றவை மிகுதியாக காணப்படும். இது அவர்களை மிகுந்த குழப்பத்திற்கு இட்டுச் செல்லும். விளைவு சார் சிந்தனையைக் காட்டிலும் உணர்வு சார் சிந்தனை மேலோங்கி இருக்கும். அவர்களுக்கு “நல்லது கெட்டது“ பற்றி பக்குவமாக எடுத்து கூறி அவர்களை நல்வழிப் படுத்துவது நமது கடமை. இதில் பெற்றோரைவிட நமது பொறுப்பு அதிகம் என்பது எனது எண்ணம்.
“தேர்வு”. “தேர்ச்சி” “மதிப்பெண்“ போன்றவற்றைப் பற்றி மிகையாக கூறி அவற்றை பூதாகாரமாக்கி பயமுறுத்துவதை இனிமேலாவது விட்டொழித்து கற்றலை நல்லதொரு அனுபவமாக மாற்ற முயல்வோம். நல்லதொரு கற்றல் அனுபவத்தை எந்த ஒரு நெருக்கடிக்கும் ஆளாகாமல் கொடுத்து விட்டோம் என்றால் தேர்வினை இயல்பாக எதிர்கொண்டு விரும்பத்தக்க முடிவோடு வெளிவருவார்கள்.
மறந்தும் கூட பொருளாதார நிலை, சாதிய இழி நிலை, உடல் சார்ந்த குறைபாடுகள் போன்றவற்றை நகைச்சுவைப் பொருளாக்கிவிட வேண்டாம். மாணவர்களிடமிருந்து அந்த மாதிரி நகைச்சுவை வெளிப்பட்டால் அதனை உடனடியாக கண்டிக்க வேண்டும்.
உடல் தூய்மை, சுற்றுப்புற தூய்மை மற்றும் சுற்றுச் சூழலைப் பேணுதல் போன்றவை சார்ந்த விழிப்புணர்வை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஏற்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் தாங்கள் படித்த நூல்கள் பற்றி மாணவர்களிடம் கூறி அவர்களிடம் நல்ல நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். நூலகம் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்கப் படுத்த வேண்டும்.
மாணவர்களை தண்டிக்கும் போது இது அவர்களை நல்வழிப் படுத்த தானே அன்றி நம் கோபத்தை தணித்துக் கொள்ள செய்யும் செயல் அல்ல என்பதை மனதில் கொண்டு நடந்து கொள்ள வேண்டும். தண்டனைக்கு உள்ளான மாணவனை தனிப்பட்ட முறையில் அழைத்து அன்றே ஆற்றுப் படுத்திவிட வேண்டும்.(இது “பிரம்படி“ பற்றியது அல்ல)
ஆசிரியர்களாகிய நாம் நமது வகுப்புக்கு நேரம் தவறாமல் சென்றுவிட வேண்டும். இது நமக்கான நேரத்தை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள உதவும். மேலும் நேரம் தவறாமைக்கு மாணவர்களுக்கு நாமே உதாரணமாக விளங்க முடியும்.
இவை அனைத்தையும் நமது பணியின் வாழ்வியல் நெறியாக மாற்றிக் கொண்டோம் எனில் நாம் தான் விருது பெறாத நல்லாசிரியர். வணக்கம் வாழ்த்துக்கள் நல்லாசிரியர்களே.


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...