அது ஒரு அரையடி
உயரமும் முக்கால் அடி நீளமும் உள்ள ஒரு ஜந்து. எங்கள் வீட்டில் எப்போதும் நடுவில் வீற்றிருக்கும்.
எல்லோருக்கும் பிடித்தமானவன். ஏனென்றால் வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும். எனக்கு
நாடகங்கள், ஒலிச்சித்திரம் மற்றும் சிறார் அறிவியல் நிகழ்ச்சிகள். ஏனையோர்க்கு பாடல்கள்
மற்றும் தொடர் நாடகங்கள்.
நீங்கள் நினைப்பது
சரிதான். எங்கள் வீட்டில் இருந்த பிளிப்ஸ் ரேடியோதான் அது. எனது கையில் ஸ்குரு டிரைவர்
கிடைக்கும் போதெல்லாம் நான் அதற்கு ஆபரேஷன் செய்வது உண்டு. மர அலமாரியின் மேல் அடுக்கில்
இருந்து தவறி விழுந்து “அதல சிதலையா” ஆகியதுண்டு. வீட்டில் யாருக்கும் தெரியாமல் நானே
ஆபரேஷன் செய்து காப்பாற்றி விட்டேன்.
ஒரு முறை அனைவரும்
வாசலில் படுத்து உறங்கிய போது திடீரென மழை “சட சட“ என்று அடித்து பெய்ய ஆரம்பித்து
விட்டது. எல்லோரும் வாரி சுருட்டிக் கொண்டு உள்ளே ஓடி வந்து விட்டோம். பதட்டத்தில்
ரேடியோவை வாசலிலேயே விட்டு விட்டோம். காலையில் பார்த்த போது தண்ணீரில் மூழ்கி விழுந்து
மண்ணும் தண்ணீருமாக ஆகி விட்டது. அப்போது தான் மெக்கானிக்கிடம் சென்றதாக நினைவு.
ஊரில் எல்லோரும்
டேப் ரிக்கார்டர் வாங்கும் போதெல்லாம் நான் ஏக்கத்தோடு பார்ப்பது உண்டு. எங்கள் தந்தை
எங்கள் படிப்பை கருத்தில் கொண்டு வாங்கவில்லை.
பெரியவனானதும் சம்பாதித்து ஒரு டேப் ரிக்கார்டர்
வாங்கி அதில “விதி“ மற்றும் “ஒரு தாயின் சபதம்“ பட கதைவசன கேசட்டை போட்டு ஆசை தீர கேட்க
வேண்டும் என்று பலமுறை எண்ணியது உண்டு. அப்போது நான் மிகச் சிறியவன் ஆதலால் நாடகங்களும்
ஒலிச் சித்திரங்களும்( அதாவது படங்களின் கதை வசனம்) தான் என்னை கவர்ந்தவைகளாக இருந்தன.
மற்றவர்களுக்கோ பாடல்கள் தான் பிடிக்கும். இதனால் ஏற்பட்ட தகராறில் எங்கள் வீட்டு
“ப்ளிப்ஸ்“ ரேடியோ பல முறை மண்டை பிளக்கப் பட்டு வீழ்ந்தது உண்டு. அப்புறம் என்ன மறுபடியும்
“இரகசிய ஆப்பரேஷன்“ தான்.
ஆண்டுகள் கடந்தன.
நானும் படித்து பெரியவனானேன். தனியார் பள்ளியில் ரூபாய் 2250 க்கு வேலையில் சேர்ந்தேன்.
முதல் மாத சம்பளத்தில் ரூபாய் 1950க்கு 2001 ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு டேப் ரிக்கார்டர்
வாங்கி விட்டேன். என்ன டேப் ரிக்கார்டர் என்கிறீர்களா? வேறு என்ன “ப்ளிப்ஸ்“ தான்.
இதற்கு நான் ஒரு போதும் ஆப்பரேஷன் செய்ததில்லை.
டேப் ரிக்கார்டர்
வாங்கினால் போதுமா அது பாடுவதற்கு கேஸட் போட வேண்டுமே. நான் வேலை பார்த்தது கொல்லிமலையில்
உள்ள “ஹில் டேல்“ மெட்ரிக் பள்ளி. அங்கே ஆசிரியர்களுக்கு பிரத்தியேகமாக தங்கும் அறைகள்
உண்டு. அங்கே ஒரு டபுள் டெக் டேப் ரிக்கார்டர் இருந்தது. இளவரசு சார் அருமையான ஜேசுதாஸ்
பாடல் தொகுப்பு வைத்திருப்பார். அவர் ஜேசுதாஸ் அவர்களின் “டை ஹார்ட்“ விசிறி. அது மட்டுமல்லாமல்
அவர் ஒரு “வழுக்கை இல்லாத“ அப்துல் ஹமீது. நடமாடும் திரையிசைப் பாடல் அகராதி. அவருடன்
ஆலோசித்து பாடல்களின் பட்டியலை தயார் செய்வேன். மலையில் இருந்து இறங்கும் போது ஜெயங்கொண்டத்தில்
உள்ள ரெக்கார்டிங் சென்டரில் கொடுப்பேன். ரெக்கார்டிங் சென்டர் காரரோ பாடல் தொகுப்பை
பார்த்து மண்டையை பிய்த்துக் கொள்வார். இருந்தாலும் நேரம் எடுத்துக் கொண்டு அனைத்துப்
பாடல்களையும் போட்டுக் கொடுத்து விடுவார்.
புதுப் படங்களில்
பெரும்பாலான பாடல்கள் ஹிட்டாகி இருந்தால் இரண்டு புதுப்படங்கள் அடங்கிய ரெடிமேட் கேஸட்
வாங்கி விடுவேன். அந்த வகையில் முதலில் வாங்கியது “ரோஜாக் கூட்டம்“ மற்றும் “காசி“.
வேலைகிடைத்து ஜெயங்கொண்டத்தில்
“பேச்சிலர் மேன்ஷனில்“ தங்கிய போது எனது உற்ற துணைவன் எனது டேப் ரிக்கார்டர் தான்.
அறையில் நுழைந்தவுடன் லைட்,மின் விசிறி மற்றும் டேப் ரிக்கார்டர் ஸ்விட்ச் மூன்றையும்
ஒருங்கே தட்டி விட்டுதான் அமர்வேன். என் அறை வராண்டாவின் அருகே வரும் போதே நான் அறையில்
இருப்பதை நண்பர்கள் ஊகித்து விடுவார்கள். பாடல் சத்தம் கேட்டால் இருக்கிறேன், அமைதியாக
இருந்தால் அறையில் இல்லை அல்லது உறங்கியிருப்பேன்.
சில இயக்குனர்கள்
நல்ல இசை ரசனை உடையவர்களாக இருப்பதால் எனக்கு நல்ல பாடல் தொகுப்பது இன்னும் இலகுவாகிப்
போய்விடும். மணிரத்னம் இளையராஜா மற்றும் மணிரத்னம் ரஹ்மான் என்றொரு தொகுப்பும் என்னிடம்
இருந்தது.
அப்புறம் பெஸ்ட்
ஆஃப் சித்ரா, மனோ, ஜெயச்சந்திரன், ஜேசுதாஸ் மற்றும் இளையராஜாவின் குரலில் என்று ஒரு
தொகுப்பும் தயார் செய்திருந்தேன். என்னை பார்க்க வரும் நண்பர்கள், பக்கத்து அறை நண்பர்கள்
மற்றும் கீழே தேனீர் கடை பணியாளர்கள் எல்லோரும் என்னுடைய பாடல்களை பாராட்டும் போதெல்லாம்
எனக்கு இரத்தத்தில் “டோப்பமைன்“ ஏறும்.
கீழே இருந்த டீக்கடை
பையன் ஒரு முறை ஒரு கேசட்டை குறிப்பிட்டு கேட்டான். சரி நம்ம புகழ் டீக்கடை வரை பரவட்டுமே
என்று கொடுத்தேன். ஆனால் நாட்கள் பலவாகியும் அது திரும்பி வரவே இல்லை. என்னடா என்று
பார்த்தால் எதிர் வீட்டு இளம் பெண்ணை வசீகரிக்க அதில் ஒரு பாடலை தினந்தோரும் அதிகாலை
நேரங்களில் போட்டுக் கொண்டு இருந்திருக்கிறான். அந்தப் பெண்ணும் அவனின் தொடர் பாடல்
விடு தூதில் மயங்கி விட்டதாக கேள்விப் பட்டேன். அது என்னப் பாடல் என்றால் “காலங் காத்தாலே
ஒரு வேலை இல்லாம…” என்ற பாடல். இந்த பாடல் விடு தூது பிறகு பெரும் பிரச்சனையாகி “வெப்பன்
சப்ளையர்“ ஆகிய நானும் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு இருந்த காரணத்தினால் கேஸட்டை
உடனே வாங்கி விட்டேன்.
அடுத்த ஓராண்டில்
எனக்கு திருமணமாகி விட்டது. வீட்டில் சி.டி ப்ளேயரும் வந்து விட்டது. எனது அண்ணன் சந்திரசேகர்
நல்ல பாடல்களின் எம்.பி3 தொகுப்பு போடும் போதெல்லாம் எனக்கும் ஒரு காப்பி போட்டு விடுவார்.
பத்து பதினைந்து சி.டி மற்றும் டிவிடிக்களில் எனது சற்றேரக் குறைய 100 கேசட்டுகளும்
அடங்கிப் போய் விட்டது. எனது கேசட் ப்ளேயரில் சிலந்தி வலை பின்ன ஆரம்பித்து விட்டது.
ஜெயங்கொண்டத்தில்
இருந்து திருமானூருக்கு வீடு மாறும் போதுதான் எல்லா கேசட்டுகள் மற்றும் டேப் ரிக்கார்டரை
ஒருவருக்கு கொடுத்தேன். அவரும் கூட அதை எத்தனை நாட்கள் வைத்திருந்திருப்பார் என்று
தெரியவிவல்லை. ஏனென்றால் அப்போது செல்போன்களே சிறந்த பாடல் கேட்கும் கருவியாகவும் ஆகி
விட்டிருந்தது. அதுவும் கொரியன் மொபைலாக இருந்தால் திருவிழாவில் ரேடியோ செட் கட்டியது
போல தெருவையே தெறிக்க விடும்.
தற்சமயம் எனது
மொபைலில் கிட்டத்தட்ட ஆயிரம் அருமையான பாடல்களின் தொகுப்பு உள்ளது. நான் வாங்கிய சிடிக்கள்
மற்றும் டிவிடிக்களில் இப்போது சிலந்திகள் குடியேறி விட்டன.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே
-நன்னூல்.
No comments:
Post a Comment