Tuesday, May 3, 2016

ஒரு கடிதம் எழுதினேன்...

'அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம்....'
'காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்...'
'ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்...'
'காலெமெல்லாம் காதல் வாழ்க...'
'நிலா நீ வானம் காற்று...'
'பூவே இளைய பூவே...
தம்பி ராமகிருஷ்ணா கூச்சப்படாமல் மாற்றங்களையும் படித்துக் காட்டவும்'
இந்தப் பாடல்கள் எல்லாம் கடிதம் வழி காதல் வளர்த்தவை. கடிதங்கள் பரிமாறாத காதலர்கள் அனேகமாக இல்லை எனலாம். இதுபோலவே கடிதங்கள் மீது காதல் இல்லாதவர்கள் இல்லவே இல்லை என்றே கூறலாம். அப்போதெல்லாம் நமது வீட்டின் முன்னால் தபால்காரர் நிற்பதைக் காணும் போது அவ்வளவு பரவசமாக இருக்கும். கணவனிடமிருந்து மனைவிக்கு, காதலனிடமிருந்து காதலிக்கு, பிள்ளைகளிடமிருந்து பெற்றோருக்கு என்று வகை வகையாக உறவுப்பாலத்தின் முக்கிய கண்ணியாக இருப்பதால் ஊரில் எல்லோருக்கும் பிடித்தமானவர் தபால்காரர்.
இப்போதைய தகவல் யுகத்தில் எதையும் உடனுக்குடன் பரிமாற இயல்கிறது. காத்திருப்பின் சுகம் மறைந்து போய்விட்டது. அப்போதெல்லாம் மரண செய்தி கூட குறைந்த பட்சம் 12மணி நேரமாகும் உரியவரை சென்றடைய. தந்தியை பார்த்ததுமே தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விடுவர். தந்தி என்றாலே மரணச்செய்தியாகத்தான் இருக்கும். இப்போது தந்தி சேவையே மரணித்து செய்தியாகிவிட்டது.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து கடிதம்  படித்துக்காட்டுவது மற்றும் எழுதிக் கொடுக்கும் வேலை மூலமாக கடிதங்களுடன்  அறிமுகம்.
'அடுத்த வாரத்துக்குள்ள பணம் வரலன்னா எல்லாரும் மருந்து குடிச்சு செத்து போவோம்' அப்டினு எழுதுப்பா"
"ஐய்யயோ நான் மாட்டேன்"
"இல்ல சாமி, அப்பதான் அந்த ஆளு காசு அனுப்புவாரு"
"வேணும்னா புள்ளைக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பத்திரி க்கு போக பணம் வேணும்னு எழுதட்டா?"
"சரி சாமி"
இந்தமாதிரி கடிதங்கள் எழுதவும் வேண்டியிருக்கும்.
சற்றேறக்குறைய தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய பின்னரும் தங்கள் எதிர்ப்புகளையெல்லாம் கேள்விகளாக கேட்டு ஜோசியரின் ரீல் சுற்றும் வேலையை இலகுவாக்கி விடும் வாடிக்கையாளர் போல முழு கடிதத்தையும் படித்துக்காட்டிய பின்னும் 'வேறு எதாவது எழுதியிருக்கா?' என்று திரும்ப திரும்ப கேட்பார்கள்.
குறைவாகப் படித்தோரின் கையெழுத்து அழுத்தம் திருத்தமாக இருக்கும் பிழைகள் இருப்பினும் இலகுவாக திருத்தி படித்து விடலாம். மெத்தப் படித்தோர் சேர்த்து எழுதறேன் என்று கிறுக்கி தள்ளி விடுவார்கள். சூர முள் நடுவே இருந்து ஒவ்வொரு பழமாக உதிர்த்து எடுப்பது போல ஒவ்வொரு வார்த்தையாக உதிர்த்து பின் கோர்த்து வாக்கியமாக சொல்ல வேண்டும். அதனால் இந்தமாதிரி கடிதங்களை மனதினுள் rough draft எடுத்து அதை fair draft ஆக வெளியே சொல்ல வேண்டும். முக்கியமாக எதிர் வீட்டுமாமாவின் லெட்டரை நானோ என் அக்காவோ அன்றி வேறு யாராலும் படிக்க இயலாது. சில இடங்களில் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போயிருக்கும் வார்த்தைகளை யூகித்து இட்டு நிரப்ப வேண்டி இருக்கும்.
"எப்போ வரேன்னு எதாவது எழுதியிருக்குதாப்பா?" என்று எதிர்பார்ப்போடு கேட்கும் சமீபத்தில் திருமணமான அக்காக்களிடம்,
"போன மாசம் தானக்கா போனாரு!!" என்று விவரம் புரியாமல் அபத்தமாய் கேட்டதுமுண்டு.
பலதரப்பட்ட கடிதங்களை கண்டு வளர்ந்த எனது கடிதம் ஒன்றும் முரசொலியில் வரும் கலைஞரின் கடிதத்தையோ இந்திராவுக்கான நேருவின் கடிதத்தையோ போன்ற செவ்வியல் தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள்.
முதல் வரியில் அம்மா அப்பா நல விசாரிப்பு.இரண்டாம் வரியில் நன்றாக படிப்பதாக(?!) கூறல். மூன்றாம் வரி deadline உடனான பணத்தேவை காரணத்தோடு. அடுத்து நன்றி. இவ்வளவுதான். ஒவ்வொரு கடிதத்திலும் எனது விடுதி விலாசம் தெளிவாக எழுதி விடுவேன். மணியார்டர் இலகுவாக விரைந்து வரவேண்டுமல்லவா?!.
பட்டப் படிப்பு முடித்தபோது எல்லோரிடமும் ஆட்டோகிராப் வாங்கினேன். ஒருவருக்கும் கடிதம் எழுதினேனில்லை. காதல் கடிதம் எழுதும் வாய்ப்பு அமையவே இல்லை(அவ்வ்வ்..!!). மனைவிக்கு கடிதம் எழுதிக்கொள்ளலாம் என்று வாளாவிருந்துவிட்டேன். அதற்குள்ளாக தகவல் புரட்சியின் விளைவாக செல்போன் வந்து தொலைத்து விட்டது.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...