Thursday, November 28, 2024
தேனீருக்குள் புதைந்து கிடக்கும் துயர வரலாறு!!
எரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல்
மொழி பெயர்ப்பு – இரா.முருகவேள்
இந்த நூல் நீண்ட காலமாக வாசிக்க வேண்டிய நூல் பட்டியலிலேயே இருந்தது. ஆனால் ஒரு போதும் வாங்க முயலவே இல்லை. கண்காட்சிக்கு போகும்போதெல்லாம் மறந்து போவேன்.
சீர் வாசகர் வட்டத்தினர் பல அருமையான நூல்களை மக்கள் பதிப்பாக மலிவு விலையில் தந்து வருகின்றனர். புதுமைப் பித்தன் சிறுகதைகள், தாய் நாவல், போரும் வாழ்வும் போன்ற செவ்வியல் நூல்களை மலிவாக பதிப்பித்து அனைவர் கைகளிலும் சேர்க்கின்ற மகத்தான பணியை செய்து வருகிறார்கள். விலை மட்டுமே மலிவு மற்றபடி தரத்தில் பலபடி உயர்வு.
எரியும் பனிக்காடு நாவல் சீர் வாசகர் வட்டத்தின் சார்பாக வருகிறது என்றவுடன் எனக்கு ஐந்து காப்பி சொல்லி வாங்கி விட்டேன். எனக்கு ஒன்று பரிசளிக்க மீதி.
ரெட் டீ என்கிற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு தான் இந்த எரியும் பனிக்காடு. இந்த நாவலைப் பற்றி இயக்குனர் பாலா வின் பரதேசி படம் வந்த போது கேள்விப் பட்டேன். அதன் பின்பு முகநூலிலும் விமர்சனங்கள் வாசிக்க நேர்ந்தது. அப்போதிலிருந்தே இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகரித்த வண்ணம் இருந்தது.
எனவே பார்சல் கிடைத்தவுடனே கையில் எடுத்து விட்டேன். மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி.
மூலநூலின் ஆசிரியர் பி.எச் . டேனியல் நாகர்கோவில் அகத்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர். 1940 வால்பாறை காரமலை எஸ்டேட்டில் மருத்துவ அதிகாரியாக பணிபுரியச் சென்றவர் அங்கே நிலவிய மோசமான உழைப்புச் சுரண்டல், மனித உரிமை மறுப்பு, அடக்குமுறைகள் என பலவற்றையும் கண்டு அந்த தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி வென்றுள்ளார். அவர் நேரில் கண்ட கேட்ட விஷயங்கள் இந்த அற்புதமான வரலாற்றுப் பதிவு புதினமாக விரிகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மயிலோடை என்ற கிராமத்தில் வசிக்கும் இளம் தம்பதிகள் கருப்பன் – வள்ளி. வறட்சி பாதித்த பகுதி. மழை பொய்த்து போனதால் அன்றாட பாட்டுக்கே திண்டாட்டம். கயத்தாறுக்கு போய் ஏதாவது வேலை கிட்டினால் கால்வயிற்றுக்காவது பசியாறலாம் என்று நம்பிக்கையோடு செல்கிறான்.
அங்கே சங்கரபாண்டி மேஸ்திரி மிடுக்காக இருக்கிறார். அவரது பணக்காரத்தனத்தில் மயங்கிப் போய் குமரிமலை எஸ்டேட்டுக்கு பணிக்கு செல்ல ஒப்புக் கொண்டு மலையேறுகிறார்கள். நாற்பது ரூபாய் அட்வான்ஸ் தொகைக்கு அவர்களது வாழ்க்கை எத்தனை ஆண்டுகளுக்கு அடகு பிடிக்கப் பட்டிருக்கிறது என்பது தெரியாமலேயே மலையேறுகிறார்கள் கருப்பனும் வள்ளியும்.
அவன் ஒரு பட்டு வேட்டி
பற்றிய கனாவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப் பட்டது.
இந்த கவிதை நிறைய இடங்களில் பொருத்தமாக அமர்ந்து கொள்கிறது என்றால் கருப்பனின் விதியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து நம்பியார் சிரிப்பு சிரிக்கிறது.
அரசு படத்தில் வடிவேல் சொல்லும் ”புறாக்கூண்டுல பார்ட்னர்ஷிப் வேற” நிஜமாகவே எஸ்டேட் லைன் குடியிருப்புகளில் நிஜமாகிறது.
எஸ்டேட்டுக்கு புதிதாக வந்திறங்கிய கொத்தடிமைகளுக்க பழைய கொத்தடிமைகளான முத்தையா ராமாயி இணை ஆதரவாக இருக்கிறார்கள். வீட்டையும் கஷ்டங்களையும் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் கூட திருப்பூருக்கு வேலைக்கு செல்லும் இளம் பெண்களில் பலர் பெற்றோர் வாங்கிய அட்வான்ஸ் தொகைக்காக அடகு வைக்கப் பட்டவர்களே. செங்கல் சூளைகளும்கூட இந்த வகையில் தான் வருகிறது. தொழிலாளர் உரிமைகள், கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டங்கள் என்று பல விஷயங்கள் இருக்கும் இந்த காலகட்டத்திலேயே இவையாவும் நடக்கின்றன என்றால் இவை எதுவும் இல்லாத செய்தி ஊடகங்கள் செல்ல இயலாத எஸ்டேட்டுகளில் என்ன என்ன அடக்குமுறைகளும் சுரண்டல்களும் நடைபெற்றிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.
ஒரு ஆண்டு முடிவில் கணக்கு தீர்க்கப் படும் போது வெறும் பதிமூன்று ரூபாயே மிஞ்சுகிறது. ஆமாம், அவர்களுக்கு வழங்கப் பட்ட கம்பளி, ரேஷன், ரயில் பயண டிக்கெட் உணவு என்று எல்லாவற்றிற்குமாக பிடித்துக் கொள்கிறார்கள். அந்த எஸ்டேட்டில் கடை வைத்திருக்கும் காளியப்பச் செட்டியார் தன் பங்கிற்கு ஒன்றுக்கு இரண்டாக விலை வைத்து விற்பதோடு நிற்காமல் கடன் பாக்கியை நோட்டில் இஷ்டத்திற்கு நிரப்பி மீதிப் பணத்தை பிடுங்கிக் கொள்கிறார். முதலாம் ஆண்டு வெறும் கை தான் மிஞ்சுகிறது.
அங்கே நிலவும் சுகாதாரமற்ற இருப்பிடம் மற்றும் சூழல் காரணமாக வருடம் தவறாமல் காலரா வந்து ஏகப்பட்ட பேரை கொன்று போடுகிறது. அங்கே இருக்கும் அவ்வளவு பேருக்கும் ஒரு மருத்துவமனை என்கிற பேரில் ஒரு மாட்டுக் கொட்டாய் இருக்கிறது. டாக்டர் என்கிற பேரில் கம்பவுண்டர் தகுதி கூட இல்லாத குரூப் என்கிற மலையாளி இருக்கிறான். சுகாதாரமான இருப்பிடமும் சரியான மருத்துவ வசதியும் வழங்கப் பட்டிருந்தாலே அத்தனை பேரையும் காப்பாற்றி இருக்க முடியும். அதற்காக செலவிட்டால் லாபம் குறையும் என்பதால் ஆங்கிலேய அதிகாரி ஒயிட் “இந்த நாயிங்க செத்து ஒழியட்டு யாருக்கு என்ன நட்டம்“ என்று இருந்து விடுகிறான்.
காலரா போனவுடன் குளிர்காலம் அட்டை ரத்தம் உறிஞ்சுவதும், நிமோனியா காய்ச்சலும் அட்டென்டன்ஸ் போடுகிறது. அடுத்து அந்த வியாதியும் தங்கள் பங்குக்கு மக்களை கொன்று போடுகிறது.
இரண்டாம் ஆண்டு இறுதியில் இரண்டுக்கும் தப்பி உயிர் பிழைத்தாலும் கடன்கள் போக வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே மிஞ்சுகிறது. இரண்டாம் ஆண்டில் இருவருக்கும் பலமுறை காய்ச்சல் காலரா, கருச்சிதைவு என்று பல நாட்கள் விடுப்பு என்பதால் ஊருக்கு தப்பிச் செல்ல பணம் போதவில்லை.
துயரமான மூன்றாம் ஆண்டு துவங்குகிறது. வள்ளி வயிற்றில் ஒருபக்கம் சிசுவும் இரண்டு பக்கங்களில் காய்ச்சல் கட்டியும் வளர்கிறது. உடல் நலிவை பொருட்படுத்தாமல் எப்படியாவது இந்த ஆண்டு ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு விடுப்பு எடுக்காமல் உழைக்கிறார்கள்.
ஏழைகளின் கனவு என்றைக்குமே கானல் நீர் தானே? அப்படித்தான் கதை துயரமாக முடிகிறது.
வெள்ளைக்காரன் எஸ்டேட் முதலாளி என்றால் அவனுக்கு கீழே அனைவருமே இந்தியர்கள்தான். அதுவும் தொழிலாளர்களை நேரடியாக கட்டுப்படுத்தும் கங்காணிகள் இந்தியர்கள் தான். அனைவருமே தங்கள் சுயலாபத்திற்காகவும் தங்களுடைய வேலையை காப்பாற்றிக் கொள்ளவும் மிக மோசமான சுரண்டலுக்கு துணை போய் உள்ளார்கள். அவர்களது சுரண்டல் எவ்வாறு இருந்தது என்பதற்கு சின்ன சாம்பிள்.
“காலையில் மகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட வெள்ளையனின் (கங்காணி) வற்புறுத்தலின் காரணமாக அவளது அம்மாவும் அப்பாவம் வேலைக்கு போக வேண்டி வந்தது. அந்தச் சிறுமியின் தம்பியான பத்து வயது பையன் தான் நோய்வாய்ப்பட்ட அக்காவோடு கைக்குழந்தையாய் இருந்த தன் தம்பியையும் பார்த்துக் கொண்டான். தகப்பன் மாலையில் வேலையில் இருந்து திரும்பியபோது தன் மகள் விரைத்துப் பிணமாக கிடப்பதையும், மகன் குளிர்க் காய்ச்சலில் நடுங்கிக் கொண்டு இருப்பதையும் குழந்தை இறந்து போன அக்காவின் பிணத்தோடு விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்டான்”
இந்த பத்தியை இளகிய மனம் கொண்ட யாரும் இயல்பாக கடந்துவிட இயலுமா?
வெள்ளைக் காரர்கள் மற்றும் உயர் பதவி இந்தியர்கள் அனைவருமே மோசமான பாலியல் அத்துமீறலிலும் வெகு இயல்பாக ஈடுபட்டுள்ளனர். ஒத்துழைக்க மறுக்கும் பெண்களுக்கு மிக கொடுமைகள் செய்துள்ளனர்.
குடித்துவிட்டு உளறுவதையே இரண்டு அத்தியாயங்கள் எழுதியுள்ளார். குடித்துவிட்டு அக்கபோர் பேசுவதோடு அல்லாமல் தங்களது பாலியல் அத்துமீறலை சாகசம் போல விவரித்துக் கொள்கிறார்கள். இன்று வரை பெண்கள் மீதான பாலியல் அத்து மீறலை ஒரு சாகசம் என்றுதானே பல ஆண்கள் கருதி வருகிறார்கள். தான் இத்தனை பெண்களோடு சல்லாபித்திருக்கிறேன் என்பதை ஏதோ விருது போல் அல்லவா பீத்திக் கொள்கிறார்கள்.
அறிவியல் வளர்ந்து அறிவியல் வெளிச்சம் வெள்ளமாய் பாய்ந்தோடும் இந்த காலத்திலேயும் அறிவியலைத் தாண்டி மூடநம்பிக்கைகளும் புதுப் புது பரிமாணங்களில் வளர்நது கொண்டு தானே வருகின்றன.
அங்கே எஸ்டேட் வாசிகள் மத்தியில் முத்துக் கருப்பன் என்கிறத மந்திரவாதி பிரபலமாக இருந்துள்ளான். கருப்பன் வள்ளிக்கு நோய் வருவது கெட்ட சக்தியின் செயல் என்று கருதி முத்துக் கருப்பனிடம் செல்ல அவனோ கருப்பனின் வருட வருமானத்தில் பாதியை பெற்றுக் கொண்டு பரிகாரம் செய்து தருகிறான். அதன் பிறகு தான் 15 நாட்கள் படுத்த படுக்கையாகிறாள் வள்ளி. அவள் வீடு திரும்பியவுடன் முத்துக் கருப்பன் ”இன்றைக்கு உன் பொண்டாட்டி உயிரோடு இருக்கிறாள் என்றால் அது நாம செய்த மந்திரத்தின் சக்தி என்று கூறி நம்ப வைப்பதோடு அல்லாமல் மேலும் இரண்டு தாயத்துகளையும் விற்று விடுகிறான்.
அதோடு மட்டுமல்லாமல் எஸ்டேட்டில் மழை வரவேண்டி மழை துவங்கும் காலத்தில் பலி கொடுக்கிறார்கள். இடைவிடாத மழை நிற்க வேண்டியும் மழை காலம் முடியும் தருவாயில் பலி கொடுக்கிறார்கள். இறுதியில் மந்திரக்குருவி உட்கார பனங்காய் விழுகிறது. இரண்டு பலிகளுக்குமான செலவுகளை கங்காணிகள் கம்பெனிக்காரர்களிடம் கடனாக பெற்று நிறைவேற்றுகிறார்கள்.
இந்த சிஸ்டம் இதே போல சுரண்டலுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமானால் இவனுங்க சிந்திக்க கூடாது என்பதால் ஒயிட் இந்த மாதிரி மாந்திரீகத்தை ஆதரிக்கிறார்.
ஆங்கிலேயே அதிகாரி வரும்போது மற்ற துறை கீழ்நிலை அதிகாரிகள் அனைவரும் சலாம் துறைகளே என்பதோடு செறுப்பை கழட்டிக் கொள்ள வேண்டும், குடை இருந்தால் மடக்கி கொள்ள வேண்டுமாம்.
துரை கீழ்நிலை அதிகாரிகள் யாரையும் வீட்டின் முன்புறத்தில் அனுமதிக்க மாட்டார். பின்பக்கம் வழியாக சென்று சமயல் காரனிடம் சொல்லி தூது அனுப்ப வேண்டும். முக்கியமாக ஒன்று துரை எந்தக் கடையிலும் பொருள் வாங்க காசு கொடுக்க மாட்டார். இந்த எழவு பணத்தை எல்லாம் உழைக்கும் கூலிகளின் கடன் கணக்கில் ஏ(மா)ற்றி எழுதுவது தான் வாடிக்கை. அதோடு மட்டுமின்றி சற்றும் கூச்சம் இன்றி ஏராளமான பரிசு பொருட்களையும் பணத்தையும் லஞ்சமாக பெற்றுக் கொள்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஒயிட்டுக்கும் டாக்டர் பார்பருக்கும் நடக்கும் உரையாடல் இந்தியர்கள் பற்றியும் இந்திய தலைவர்கள் பற்றியும் பகட்டான வெள்ளைக் காரர்களின் மனநிலையை வெளிப் படுத்துவதாக அமைந்திருக்கும்.
இறுதியாக ஆபிரகாம் என்கிற மருத்துவர் கதாப்பாத்திரத்தில் உள்ளே வருபவர் நூலாசிரியர் பி.எச் டேனியல் அவர்கள் தான் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து ஏராளமான செல்வங்களை சுரண்டிக் கொண்டிருந்ததோடு நிற்கவில்லை. மகத்தான மனிதவளத்தை மிக கோரமான முறையில் சுரண்டிக் கொழுத்திருக்கிறார்கள் என்பதற்கான ஆவணம் தான் இந்த நூல்.
மொழிபெயர்ப்பாளர் குறித்து கூறியே ஆகவேண்டும். மிக அருமையான மொழிபெயர்ப்பு. ஒரு மொழி பெயர்ப்பு நூலை வாசிக்கிறோம் என்கிற நினைப்பு எந்த இடத்திலும் எழவில்லை.
நூல் வடிவமைப்பில் மற்றுமொரு சுவாரசியம், ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஒரு மேற்கோலை எழுதி துவங்கி உள்ளார்.
“நெருக்கம் வெறுப்பையும், குழந்தைகளையும் உற்பத்தி செய்கிறது – மார்க் ட்வைன்.
“அவன் அனைத்தின் விலையும் தெரிந்தவன், எதன் மதிப்பும் தெரியாதவன்“ – ஆஸ்கார் வைல்ட்
“வெட்கப்படும் ஒரே மிருகம் மனிதன் தான் அல்லது வெட்கப்பட வேண்டிய தேவை உள்ள ஒரே மிருகம் மனிதன் தான்“ – மார்க் ட்வைன்
தென்னிந்திய தேயிலைத் தோட்டங்கள் யாவுக்கும் அடியுரமாக போடப்பட்டிருப்பது மகத்தான மனித உடல்கள்தான் என்பதை உலகுக்கு அறிவிக்கும் ஆவணம் தான் இந்த நாவல். ஒருமுறை வாசித்து பாருங்கள். கல் மனமும் கசிந்து உருகிவிடும்.
Tuesday, November 26, 2024
கத்தியுண்டு ரத்தமில்லை!!
ரத்தமின்றி இதயத்தை துடிக்க வைப்பது எப்படி?! survival techniques not by Bear Grills but by our T.R sir.
"சலங்கை இட்டாள் ஒரு மாது..." பாடலில் அமலாவுக்கு போட்டியாக பாடல்வரிகள் பேரழகாக இருக்கும்.
"தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரைப் பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ" எவ்வளவு நுணுக்கமான கற்பனை & ஒப்பீடு!!
"அதுவும் இடையின் பின்னழகில் இரண்டு குடங்கள் கொண்ட புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்" தம்புராவைக் கொண்டு போய் எங்க வச்சி பாத்து இருக்கார் பாருங்க!!
அழகியலை இந்தப்பாடலில் நமக்கு பாடமாக நடத்தியவர் இறுதிக் காட்சியில் survival skill course ஏ நடத்தி இருப்பார். Tutoring turned fatal என்றாலும் பரவாயில்லை கண்களைத் துடைத்துக் கொண்டு மேலே(சாரி கீழே scroll பண்ணுங்க) படிங்க!!
"காதலிக்க கூடாது, அத மூடி வச்சால் ஆகாது " என்று பாடினாலும் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார். காதலைச் சொல்லாமல் மூடி வைத்து அணத்துவதில் இதயம் முரளிக்கு இவரே முன்னோடி!!
அப்படியும் எல்லாம் கூடி வந்தா இவர குத்திப் போட்ருவாய்ங்க இல்ல அந்தப் புள்ளைக்கு கல்யாணம் ஆகிடும் இல்ல செத்துப் போயிடும்.
அவர் படத்தில எந்த சஸ்பென்ஸ் ஃபேக்டர் ஒர்க் அவுட் ஆனாலும் ஆகும், ஆனா "அவர் காதல் கைகூடுமா" என்கிற suspense plot flat ஆகவே இருக்கும்.
ஏன்னா audience will be 200% clear அவர் "அதுக்கு சரிபட்டு வரமாட்டார்".
No romance , no touching!!
ஆனாலும் கூட இந்த "நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை தேடி வந்த வேலை வேடன் செய்த லீலை..." பாடலைப் பாருங்களேன்.
"வேடன் லீலை செய்யாட்டி மட்டும்... , நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டியே கோப்ப்பாஆஆல்..." என்று சிந்தித்தபடியே அமலா அழகாக ஆடுவார்!!
இந்த வில்லனுங்க காதலை மதிக்கலைன்னாலும் சுற்றுச்சூழலை மதிக்குறானுங்க .
குறி வச்சா எற விழணும், ஆறுன்னு இருந்தா கடல்ல கலக்கணும் அது ரத்த ஆறா இருந்தாலும்!! அப்படின்னு குத்துமதிப்பா ஒரு அஞ்சாறு எடத்துல குத்தி ரத்த ஆற கடல்ல கலக்க ஏற்பாடு பண்ணிடுவானுங்க!!
ரத்த ஆறு சுத்தமா வடிஞ்ச பின்னாலும் பரிசுத்தமான காதல் வாழும். அத வாழ வைக்க தட்டு தடுமாறி ஒரு அஞ்சாறு கிலோமீட்டர் நடந்து அமலாவை அடைத்து வைத்திருக்கும் இடத்துக்கு வந்துடுவாப்ள!!
"யார்ரா நீ செத்தப்பயலே" (literally GP muthu dialogue justified here only) என்று வில்லன் ஆச்சரியப்பட்டா பரவாயில்ல, அமலாவே ஆச்சரியப் படுவார்!!
அவங்க ஆச்சரியத்தை அபாயகரமான அளவுக்கு அதிகப்படுத்தும் விதமாக தம் பிடித்து ஒரு ஏழெட்டு கட்டையில் பெருங் குரலெடுத்து பாடத் துவங்குவார்.
"யோவ் என்னய்யா இது?" என்று வில்லன் டென்சனாக
"பாஸ் பாஸ் க்ளைமாக்ஸ் ல ஒரு பாட்டு வந்தா பாட்டு எண்ணிக்கை ரவுண்டா பத்து ஆயிடும் ப்ளீஸ்.."
"பாடி முடிச்சுட்டு அவரே செத்துடுவாரு ஆரும் அவர குத்தக் கூடாது.." என்று தனது அடிப்பொடிகளுக்கு கட்டளை இட்டு விட்டு அரைகுறையாடை அழகிகளை மீண்டும் அயர்ன் பண்ணத் தொடங்குவான் HOD of the villain department.
"இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா"
"அத ஆல்ரெடி குத்தி ஓபன் பண்ணிட்டானுங்க, ரத்தமெல்லாம் சுத்தமா போயிடுச்சி செத்த அணத்தாம செத்துடு கோப்பாஆஆல்.." என்று சலித்தபடி இவரது பாடலுக்கு மூச்சிரைக்க மீண்டும் ஆடுவார்.
"புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகை செலுத்துகிறேன் வாராயோ"
"புயல்ல ஏம்பா கடல்ல?!, சாரி பாஸ் எனக்கு வேலை இருக்கு .." என்று சைலண்ட்டா போன அமலாவை பாடியே காதில் ரத்தம் வரவழைத்து சாகடித்து அமலா காதலை அமரக்காதலாக்கி விட்டு தானும் செத்துப் போகிறார்.
" இரத்தம் இல்லாத கடுமையான சூழல்களில் உயிர் பிழைத்திருப்பது எப்படி என்று இந்த எபிசோடில் பார்க்கப் போகிறோம்" என்பது போல அல்லவா இருக்கிறது என்று நான் சொல்லல டிஸ்கவரி தமிழோட fan ஆன என் பையன் சொல்றான்!!
டெய்ல் பீஸ்: இந்த கூகுள்காரன் சுத்த இரக்கமில்லா அரக்கனாயிட்டான் பாத்துக்கிடுங்க.
இந்த பதிவுக்காக நடிகை அமலா பரதநாட்டிய உடையில் இருப்பது போல ஒரு படத்தை தேடுவதற்கு கூகுளில் முயற்சித்தால் அது அமலாபாலை பரதநாட்டிய டிரஸ்ஸில் காண்பித்து என்னை பீதியில் ஆழ்த்தியது ஆகவே இந்த " ஏ ஐ" படத்தை இணைத்துள்ளேன் அட்ஜஸ்ட் கரோ
Subscribe to:
Posts (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...