Sunday, August 3, 2025

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை - மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த நூலை வெளியிட்ட அன்று முதலே வாசிக்க ஆவலாக இருந்தேன். பகுத்தறிவாளர் கழக நண்பர் சிவமூர்த்தி அவர்கள் இந்த நூலை எனக்கு பரிசளித்ததோடு மட்டும் இல்லாமல் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நூல் ஆய்வரங்கத்தில் இந்த நூல் குறித்து பேசவும் கேட்டுக்கொண்டார். புதிய கல்விக் கொள்கை குறித்து அது வந்த காலகட்டத்திலேயே "புதிய கல்விக் கொள்கை எனும் பிற்போக்கு சாசனம்" என்கிற தலைப்பில் எனது வலைப் பூவில் கட்டுரை எழுதி இருந்தேன். இந்த நூலை வாசித்த போது அந்த கட்டுரையோடு ஒப்பு நோக்கி செல்ல முடிந்தது. நேற்று நடைபெற்ற ஆய்வரங்க கூட்டத்தில் இந்த நூல் குறித்து நான் பேசியது சிறப்பாக இருந்ததாக அனைவரும் பாராட்டியது மகிழ்ச்சியாகவும் மழை நிறைவாகவும் இருந்தது. அந்த ஆய்வரங்கில் நான் பேசிய சாராம்சத்தை ஓரளவு எழுத்து வடிவத்திற்கு கொண்டு வந்து இந்த பதிவை எழுதி உள்ளேன்.
சென்ற வாரத்தில் டெல்லியில் மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட அரங்கில் புதிய கல்விக் கொள்கை 2020 இன் ஐந்தாம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம் ஒரு மாநாடு போல விமரிசையாக நடைபெற்றது. மாநிலங்களின் கல்வி கட்டமைப்பை சிதைப்பது, மாநில உரிமைகளில் தலையிடுவது, இந்தியா மாபெரும் சந்தையாகவே வணிகர்களால் பார்க்கப்படுவது போல கல்விச்சந்தையையும் தனியார் வசம் ஒப்படைத்து விட்டு அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிப்பது, பாடத்திட்டங்களில் தங்களது மதவாத கருத்துக்களை உள்ளே நுழைப்பது என்கிற மோசமான நோக்கங்களுடன் கூடிய இந்த கொள்கை ஐந்தாண்டுகள் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கிற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. அதே வேளையில் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கையை எந்தவித எதிர்ப்பும் இன்றி அப்படியே ஏற்று அமல்படுத்திய காரணத்தினால் 10000 குழந்தைகள் இடை நின்று போனார்கள் என்கிற புள்ளி விவரத்தை (இது மத்திய அரசே கொடுத்தது தான், அவர்கள் தான் ஏன் பத்தாயிரம் குழந்தைகள் வெளியே சென்றார்கள் என்று பாண்டிச்சேரி அரசாங்கத்திடம் கேள்வி கேட்டுள்ளார்கள்) காண நேர்ந்த போது இந்த கல்விக் கொள்கை என்னும் மதயானை இன்னும் என்னென்ன அழிவுகளை தரப்போகிறதோ என்கிற அச்சமே மேலிடுகிறது. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை பொருத்தவரை எந்த ஒரு சூழலிலும் கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்வதை தவிர்ப்பார். ஆனால் அவரே புதிய கல்விக் கொள்கை என்னும் மதயானை என்கிற ஒரு கடுமையான தலைப்பை வைத்துள்ளாரே என்று எனக்கு வியப்பாக இருந்தது பிறகு தான் நூலை புரட்டிய போது அது எங்கிருந்து எடுத்தாளப்பட்டது என்பதை குறிப்பிட்டு இருந்தார். இந்த கல்விக் கொள்கைகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்ற போது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் புதிய கல்விக் கொள்கை எனும் *மதயானை* நமது கல்வி கட்டமைப்புகளை சிதைத்து விடும் என்கிற ரீதியில் முன்னெச்சரிக்கை செய்து ஒரு ட்வீட்டினை 2017 ஜூலை மாதத்தில் போட்டிருக்கிறார். நூலில் உள்ளே புகும் முன்னரே இந்த கல்விக் கொள்கை எந்த மாதிரியான பாதிப்புகளை மாணவர் சமுதாயத்துக்கும் ஆசிரியர் சமுதாயத்துக்கும் நமது பள்ளிக்கல்வி கட்டமைப்புக்கும் ஏற்படுத்தப் போகிறது என்கிற எச்சரிக்கையை வழங்கி உள்ளார். முதல் அத்தியாயத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான முன்னெடுப்பு சார்ந்து எழுந்த தேவைகளை UNESCO - sustainable development goals ல் நான்காவதாக வகைப்படுத்தப்பட்ட கல்வி வளர்ச்சி சார்ந்து எழுந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அமைப்பின் GEM- global education monitoring report ஆனது புதிய கல்விக் கொள்கை சார்ந்த உள்ளடக்கத்தை உருவாக்குவதில் அரசு சாராத நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன என்று எச்சரிக்கை செய்துள்ளது. ஆக முதல் அத்தியாயத்திலேயே கல்விக் கொள்கை உருவாக்கத்தில் அவர்கள் செய்த தகிடுத்தித்தங்கள் பற்றி ஆதாரங்களோடு வெளிப்படுத்தி இருக்கிறார். அடுத்ததாக கல்வி கொள்கைகளை வகுத்த குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆர் எஸ் எஸ் அமைப்போடு எந்த வகையில் எல்லாம் தொடர்பில் இருந்தனர் என்பதையும் கல்விக் கொள்கையில் உருவாக்கத்துக்கு முன்னதாக ஆர்எஸ்எஸ் இன் பல துணை அமைப்புகள் சேர்ந்து ஒரு ரகசிய கூட்டம் "இந்துக் கல்வி" என்கிற தலைப்பில் போட்டு கல்வி கொள்கை வகுப்பதில் தேவையான முக்கியமான பல உள்ளீடுகளை செய்துள்ளனர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். நமது கல்வி அமைப்பு என்பது கல்விக் கொள்கை- கலைத்திட்ட வடிவமைப்பு - பாடத்திட்டம் பாடப்புத்தகங்கள் - பாடம் நடத்தும் முறைகள் - இறுதியாக மதிப்பீட்டு முறைகள் என்கிற படிநிலைகளில் உள்ளது என்பது அனைவரும் அறிந்தது. இதில் கலைத்திட்ட வடிவமைப்பு குழுவில் ஆர் எஸ் எஸ் ஊடுருவிய விதத்தை எடுத்து கூறியுள்ளார். அடுத்ததாக பாடத்திட்டங்களில் எப்படி எல்லாம் இந்துத்துவ கருத்துக்கள் திணிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை சமீப காலங்களில் ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி தானே வருகின்றன. மொத்த அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்திருப்பது என்பது ஊழலுக்கு மட்டுமே வழி வகுக்கும். அதிகார பரவலாக்கம் மட்டுமே அனைத்து மக்களின் உரிமைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் செவிமடுப்பதோடு அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒன்றாக இருக்கும். நமது அரியலூர் மாவட்டமானது நான் கல்லூரி படித்த காலத்தில் திருச்சி மாவட்டம் வேலைக்கு வந்த துவக்கத்தில் பெரம்பலூர் மாவட்டம் தற்போது அரியலூர் மாவட்டம் என்று கடந்து வந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் சுத்தமல்லி என்கிற ஊர் யாருக்கும் தெரியவே தெரியாது ஆனால் தற்போது அரியலூர் மாவட்டத்தில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் சுத்தமல்லி என்கிற ஊர் அதன் தேவைகள் அங்குள்ள மக்களின் வாழ்வியல் நிலைகள் என்று அனைத்து விஷயங்களையும் தெளிவாக தெரியும் அல்லவா?! அதுபோலத்தான் அரசாங்கங்கள் மக்களுக்கு சரியான கல்வியையும் சரியான பாடத்திட்டங்களையும் வகுத்து வழங்க வேண்டும் என்றால் கல்வி அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். கல்வி வழங்கும் அதிகாரம் மாநிலங்களின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்களுக்கான பாடத்திட்டத்தை வகுப்பது அவர்களின் கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் முறைகள் சார்ந்து அவர்களே செய்து கொள்வார்கள். இதில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்று சொல்வது விளிம்பு நிலை மாநிலங்கள் சார்ந்த கலாச்சாரம் பண்பாடு எதுவும் மைய நீரோட்டத்தில் இருக்கும் பாடங்களில் பிரதிபலிக்காது. எனவே அவர்களுக்கு தாங்கள் புறக்கணிக்கப்பட்டதான ஒரு தாழ்வு மனப்பான்மையை அளித்து விடும். தொழிற்கல்வி என்கிற போர்வையை போர்த்திக் கொண்டு குலக்கல்வி எவ்வாறு உள்ளே வருகிறது என்கிற விஷயத்தை மிகத் தெளிவாக ஒரு அத்தியாயத்தில் தெளிவு படுத்தி உள்ளார். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வேலைகளில் ஈடுபடுத்தப்படக்கூடாது என்கிறது குழந்தை தொழிலாளர் சட்டம். அவர்கள் அங்கே ஒரு சட்ட திருத்தத்தை செய்கிறார்கள். எவ்வாறு என்றால் "14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் குடும்பத்தினர் செய்யும் குலத்தொழில்களில் உதவி செய்வது என்பது சட்டத்திற்கு புறம்பான அது ஆகாது " என்று சட்ட திருத்தம் செய்கிறார்கள். புதிய கல்விக் கொள்கைகளில் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு ஆகிய நிலைகளில் பொது தேர்வு நடைபெறும் என்கிறார்கள் ஆக பொதுத்தேர்வு எழுதி தங்களது தரம் என்னது என்று தெரியவரும் நிலையில் அந்த மாணவர்கள் தொழில்கல்வி வசம் சேர எண்ணுவார்கள். ஆனால் தொழில்கல்வி என்று நாம் 11 12 ஆம் வகுப்புகளில் வழங்கும் தலைப்புகளில் எந்த கல்வியும் இல்லை இவர்கள் தொழில் கல்வி என்று அழைத்தது அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் செய்யும் பாரம்பரியமான தொழில்கள் (எதற்காக இந்த வெளிப்பூச்சு?! குலத் தொழில்கள் தான்!!) இங்கே ஒன்றை கவனித்தீர்களா? பாடத்திட்டம் என்றால் ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்கிற தங்களது வழமையான ஒரே ஒரே என்கிற பாடல்களை பாடுகிறார்கள். ஆனால் தொழிற்கல்வி என்று வந்த உடனே மக்களை குலக்கல்வி பால் தள்ளுவதற்காக அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற தொழில்கள் என்று இறங்கி விடுகிறார்கள்!! தொழில்கல்வி முடித்த பிறகு வெளியில் வருபவர்களை அப்படியே விஸ்வகர்மா என்கிற திட்டத்தின் மூலமாக குலக்கல்வி என்கிற விஷயம் நீர்த்துப் போகாமல் அந்த பழைய கட்டமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முனைகிறார்கள், என்பதை அமைச்சர் அவர்கள் மிகத்தெளிவாக எடுத்து இயம்பி உள்ளார். இவர்கள் தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்த போது மூன்று வயதில் இருந்து எட்டு வயது வரை குழந்தைகளின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் எனவே அந்த சமயத்தில் மூன்று மொழியை கற்றுக் கொடுத்து விட வேண்டும். மூன்றாவது படியாக இந்தியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று என்றார்கள் ஆனால் தெற்கிலிருந்து "என்னாது 'இந்தி'யா?!" என்று குரலை உயர்த்திய மாத்திரத்தில் அப்படியெல்லாம் இல்லை மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று குரலை சற்று தணித்துக் கொண்டார்கள். 'நீங்கள் மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் எங்களிடம் இந்திக்கு மட்டும்தான் ஆசிரியர் இருக்கிறார்' என்று கூறிய அவர்களின் மைண்ட் வாய்ஸை தமிழகம் கண்டு கொள்ளாமல் இல்லை . இவ்வளவு தூரம் அவர்கள் தாராள மனதுடன் பேசுகிறார்களே வட மாநிலங்களில் எவரேனும் தமிழ் மொழியை மூன்றாவதாக கற்றுக்கொள்ள எண்ணினால் அவர்களுக்கு இவர்கள் கற்றுக் கொடுக்க தயாராக இருக்கிறார்களா என்பதை ஒரு சின்ன உண்மையின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒருவர் கூட தமிழாசிரியர் இல்லை என்பதுதான். ஆக புதிய கல்விக் கொள்கையில் இவர்கள் சொல்லும் மொழிக் கொள்கை என்பது இந்தியை திணிப்பதையும் இறந்து போன மொழியாம் சமஸ்கிருதத்தை அலங்கரித்து உட்கார வைக்க முயற்சிப்பதையும் தான் காட்டுகிறது என்பதை அமைச்சர் அவர்கள் சிறப்பாக எடுத்து காட்டி இருக்கிறார்கள். இந்த வார நடப்பு செய்திகளில் அதற்கான அத்தாட்சியும் நமக்கு கிடைத்துவிட்டது. ஆமாம் ஆர் எஸ் எஸ் தலைவராக இருந்த மோகன் பகவத் சமீபத்தில் " இந்தியாவில் அனைவரும் சமஸ்கிருதம் கற்றுக் கொள்வதன் மூலமாக இந்திய பாரம்பரியம் மற்றும் பண்பாடுகளை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும்" என்று தனது உள்ள கிடக்கையை தெரிவித்து 'பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது' என்பதை வெளிப்படுத்தி விட்டார். ஒரு அத்தியாயம் முழுவதுமாக புதிய கல்வி கொள்கை எவ்வாறு சமூக நீதிக்கு எதிராக உள்ளது என்பதை புலப்படுத்தி உள்ளார். ஒட்டுமொத்த கல்விக் கொள்கையிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் இட ஒதுக்கீட்டு உரிமை பற்றி இல்லவே இல்லை. ஆசிரியர் நியமனத்தில் கூட எந்த வகையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்கிற ஒரு தகவலும் இல்லை பெண் கல்வி குறித்து பேசவே இல்லை என்கிறார். ஸ்கூல் காம்ப்ளக்ஸ் என்கிற ஒரு திட்டத்தின் மூலமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் மையப்படுத்தப்பட்ட ஒரு கல்வி வளாகத்தை உருவாக்கி வைத்துவிட்டு அக்கம் பக்கத்தில் உள்ள சிறு பள்ளிகள் அனைத்தையும் இழுத்து பூட்டி விடுவது என்கிற திட்டத்தையும் அவர்கள் வைத்துள்ளனர் அந்த அடிப்படையில் தானே உத்திரபிரதேச மாநிலத்தில் ஏராளமான அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்கிற செய்திகளை நாம் நாள்தோறும் கண்டு வருத்தம் அடைகிறோம். புத்தகத்தின் இறுதியில் தீதும் நன்றும் என்கிற தலைப்பின் புதிய கல்விக் கொள்கை இல் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அம்சமும் எவ்வாறு கல்வி அமைப்பை சிதைப்பதாக இருக்கிறது என்பதை Bullet points ஆக சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதை தமிழ்நாடு எவ்வாறு எதிர்க்கிறது என்பதை புத்தகத்தின் துவக்கத்திலேயே ஒரு திருக்குறளையும் அதற்கான கலைஞர் உரையையும் போட்டு பூடகமாக தெரிவித்துள்ளார். "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்" -குறள் 774 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உரை: கையில் இருந்த வேலினை யானையின் மீது வீசிவிட்டதால் களத்தில் போரினை தொடர வேறு வேல் தேடுகிற வீரன் தன் மார்பின் மீது ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனை பறித்து பகையை எதிர்த்திடுகிறான் பி எம் ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் வரவிடாமல் செய்த கைவேல் மத்திய அரசு தரும் கல்வி நிதி 2500 கோடிகளோடு போய்விட்டது என்றாலும் நாங்கள் தொடர்ந்து எங்களது சொந்த நிதி கொண்டு கல்வி அமைப்பில் எந்த தொய்வும் வரவிடாமல் பாதுகாத்துக் கொள்வோம் எங்களது போராட்டம் தொடரும் என்பதைத்தான் அவர் அந்த குறளில் சொல்லி இருக்கிறாரோ?!!

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை - மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த நூலை வெளியிட்ட அன...