Saturday, September 29, 2012

ஐயோ,வேண்டாமே, ஹீலியம் பலூன்

இப்போதெல்லாம் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் வீட்டில் ஏதாவது விழா என்றால் ஹீலியம் வாயு நிரபப்பட்ட பலூன்களை வாங்கி ஆங்காங்கு கட்டி விடுகிறார்கள். சென்னை உட்பட பெரிய நகரங்களில் இவ்வகை பலூன்களை விற்பதற்கென ஏஜன்சிகள் உள்ளன். இவை பார்ட்டி பலூன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள்
மேலை நாடுகளில் கேட்கவே வேண்டாம். விதவிதமான ஹீலியம் பலூன்கள்.விலங்குகள் உருவத்தில் பெரிய பெரிய பலூன்கள், உலோகப் பூச்சு கொண்ட பல வித வர்ணம் தீட்டப்பட்ட பலூன்களும் உண்டு.

ஹீலியம் என்பது  ஒரு வகை வாயு. அது தீப்பிடிக்காதது. அந்த வாயு நிரப்பப்பட்ட பலூனின் நூலை விட்டால் அது  உயரே போய்விடும். ஹைட்ரஜன் வாயுவைப் போலவே ஹீலியம் வாயுவும் காற்றைவிட லேசானது. ஆகவே தான் ஹீலியம் பலூனும் ஹைட்ரஜன் பலூனைப் போலவே  நூலை விட்டால் மேலே போய் விடும்.ஆகவே பார்ட்டிகளில் ஹீலியம் பலூன்களைக் கொத்து கொத்தாகக் கட்டி வைப்பார்கள்.
உலோகப் பூச்சு கொண்ட விலங்கு வடைவிலான பலூன்கள்
ஹீலியம் என்ற வாயு  உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவில் தான். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூலஸ் ஜான்சன்  என்ற வானவியல் விஞ்ஞானி பூரண சூரிய கிரகணத்தை ஆராய்வதற்காக சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்திருந்தார். ஆந்திர மானிலத்தில் குண்டூரில்  1868 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி
அவர் சூரிய ஒளியின் நிறமாலையை ஆராய்ந்த போது மஞ்சள் நிற வரியைக் கண்டார்.

 பின்னர் அதே ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி  நார்மன் லாக்கியர் இந்த விஷயத்தை மேலும் ஆராய்ந்து அதுவரை அறியப்படாத தனிமத்தை (Element)  அது காட்டுகிறது என்றார். இந்த இருவரும் ஹீலியத்தைக் கண்டுபிடித்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.
ஜூலஸ் ஜான்சன்
அந்த தனிமத்துக்கு ஹீலியம் என்று பெயர் வைக்கப்பட்டது. கிரேக்க மொழியில் ஹீலியம் என்றால் சூரியன். முதலில் சூரியனில் கண்டுபிடிக்கப்பட்டு அதன் பிறகே பூமியில்  கண்டுபிடிக்கப்பட்ட தனிமம் உண்டென்றால் அது ஹீலியம் ஆகும்.

உலகில் மிக நீண்ட காலமாக  ஹீலியம் உற்பத்தியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்திவகிற்து. அமெரிக்காவில் நிலத்துக்கு அடியில்  காணப்படும் எரிவாயுப் படிவுகளிலிருந்து ஹீலியம் எடுக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் அமெரிக்கா கடந்த பல ஆண்டுகளில் பல நூறு கோடி லீட்டர் அளவுக்கு ஹீலியம் வாயுவை சேமித்து வைத்து வந்தது.

 இந்த சேமிப்புகளில் கணிசமான பகுதியை காலி செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்தத்தைத் தொடர்ந்தே ஹீலியம் நிறைய அளவில் மார்க்கெட்டுக்கு வந்தது. அதன் முக்கிய விளைவுகளில் ஒன்றுதான் ஹீலியம் பலூன்கள். எதுவும் தாராள்மாக, எளிதில் கிடைக்கிறது என்றால் அப்பொருள் அர்த்தமில்லாமல் வீணடிக்கப்படும். ஹீலியம் வாயு விஷயத்தில் இது பொருந்தும்.

ஹீலியம் வாயு இயற்கை வளங்களில் ஒன்று. ஆனால் இது ஒன்றும் எல்லா இடங்களிலும் கிடைப்பது அல்ல. அண்மைக்காலமாக அல்ஜீரியாவிலும் ரஷியாவிலும் கிடைக்கிறது. ஹீலியம் வற்றாமல் கிடைக்கக்கூடிய பொருள் அல்ல என்பதால் உலகில் பல நிபுணர்களும் ஹீலியத்தை வீணடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஹீலியம் பற்றிய விசேஷ ஆராய்ச்சிக்காக 1996 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கார்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் ரிச்சர்ட்சன் கூறுகையில்.  ஹீலியம் பலூன்கள் மூலம் ஹீலியம் வீணடிக்கப்படுவதைக் கண்டித்துள்ளார்.

பார்ட்டி பலூன்கள் மூலம் ஹீலியம் வீணாக்கப்படுவதை பிரிட்டனில் உள்ள ரூதர்போர்ட் ஆப்பிள்டன் ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானி ஓலெக் கிரிசெக் கண்டித்துள்ளார். மற்றும் பல நிபுணர்களும் ஹீலியம் பார்ட்டி பலூன் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

 MRI ஸ்கேன் எடுக்கின்ற பெரிய கருவிகளில் காந்தங்களைக் கடுமையாகக் குளிர்விக்க ஹீலியம் பயன்படுத்தப்ப்டுகிறது.அண்மையில் ஹிக்ஸ் போசான் துகளைக் கண்டுபிடித்த CERN ஆராய்ச்சிக்கூடத்தின் சுமார் 1600 காந்தங்களைக் கடுமையாகக் குளிர்விக்க ஹீலியம் பய்ன்படுத்தப்படுகிறது.மற்றும் பல ஆராய்ச்சிக்கூடங்களுக்கு ஹீலியம் முக்கியமாகத் தேவைப்படுகிறது.
இன்று ஹீலியத்தை வீணாக்கினால் எதிர்கால்த்தில் ஹீலியம் கிடைப்பது திண்டாட்டமாகி விடலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் சுற்றிலும் ஆங்காங்கு கட்டப்பட்ட ஹீலியம் பலூன்களின் நடுவே மது மயக்கத்தில் உரத்த குரலில் கூச்சலிட்டபடி பார்ட்டியைக் கொண்டாடுவோரின் காதில் இதெல்லாம் விழுமா?

Share SubscribeThanks to Ramakrishnan Dhinamani

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...