Tuesday, September 24, 2024
மதிப்பீட்டு முறைகள் மட்டும் மாறவே மாறாதா?
கல்வித் துறையில் ஏதேனும் சின்ன சின்ன பரபரப்புகள் எழுந்து அடங்கும்போதெல்லாம் எஜுகேஷன் சிஸ்டம் சரியில்லை என்கிற அங்கலாய்ப்புகள் வருவது வாடிக்கை.
ஆனால் EDUCATION SYSTEM என்பது என்ன என்கிற புரிதல் பெரும்பான்மையானவருக்கு இருப்பதில்லை.
எஜூகேசன் சிஸ்டம் என்பது பின்வரும் அடுக்குகளை உள்ளடக்கியது.
EDUCATION POLICY
அதாவது அரசு கல்விக் கொள்கையை உருவாக்கும்.
கனடா போன்ற பரப்பளவில் பெரிய நாடுகள் அந்தந்த மாகாணங்களே தங்களுக்கு ஏற்றவாறு கல்விக் கொள்கையில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்கிறார்கள்.
ஆனால் இந்தியா பெரிய துணைக் கண்டம், கலாச்சார பன்முகத்தன்மை உள்ள நாடு. ஆனால் இங்கே கல்விக் கொள்கையை Centralise செய்கிறார்கள். கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் மாநில அரசுகள் அவரவர்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளும் வகையில் நெகிழ்வு தன்மையோடு இருத்தலே அவசியம்.
சரி அது வேற மேட்டர் நாம் விஷயத்துக்கு வருவோம்.
கல்வி கொள்கைகள் என்பன அவ்வப்போது அமையும் அரசுகளை பொறுத்து மாறும்.
பொதுவாக கல்விக் கொள்கை என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மாணவர்களுக்கு என்னென்ன விதமான அறிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு தற்போது இருக்கும் நவீன உலகில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மதிப்பு கல்வி இவற்றின் அடிப்படையில் கல்விக் கொள்கைகள் உருவாக்கப்படும்.
CURRICULUM FRAMEWORK
கலைத்திட்ட வடிவமைப்பு
கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை வழிகாட்டியாக கொண்டு கலைத்திட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தற்போது கூட NCF2023 புதிய கல்விக்கொள்கைக்கு (NEP 2020) சிவப்புக் கம்பளம் விரிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
இவற்றை கல்வித் துறையின் வல்லுனர் குழு நிர்ணயம் செய்வார்கள்.
SYLLABUS
பிறகு வகுப்பு வாரியாக கலைத்திட்டத்தில் உள்ள விஷயங்கள் பிரித்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். ஆனால் தற்போது நாம் NEET/IIT-JEE என்று இவற்றை அடிப்படையாக கொண்டு பாடத்திட்டத்தை அமைத்து வைத்திருக்கிறோம். Inclusive ஆக இருக்க வேண்டிய விஷயம் நிறைய மாணவர்கள் தெறித்து ஓடுவதற்கு ஏற்றாற்போல் உள்ளது. கல்லூரிகளில் கணித புலம் காலியாக கிடப்பது கவலைக்குறியது.
TEXT BOOKS
பாடத்திட்டங்களில் உள்ள கருத்துக்கள் மாணவர்களுக்கு எளிமையாக சென்று சேர ஏதுவாக பாட புத்தகங்கள் எழுதப்படுகின்றன பாட புத்தகங்களை வல்லுநர் குழுவும் பாடத்தில் தேர்ந்த அறிவும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களும் இணைந்து உருவாக்குகிறார்கள்.
PEDAGOGY
பாட புத்தகம் கைக்கு வந்த பிறகு பாடப்புத்தகங்களில் இருக்கும் கருத்துக்களை மாணவர்களுக்கு எளிமையாக புரியச் செய்வதற்கு கற்றல் கற்பித்தல் முறைகள் ஆசிரியர்களால் வகுக்கப்படுகின்றன. இதற்கு கல்வித் துறையும் வழிகாட்டுதலும் உண்டு.
ASSESSMENT
மாணவர்களிடம் சென்று சேர்ந்த பாடக் கருத்துக்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளதுஎன்பனவற்றை மதிப்பீடு செய்வதற்கு மதிப்பீட்டு முறைகள் உருவாக்கப்படுகின்றன.
கல்விக் கொள்கைகள் மாறிவரும் சமூக சூழலுக்கு ஏற்ற அவ்வப்போது மாற்றம் கண்டு வருகின்றன. ஆனால் புதிய கல்விக் கொள்கையில் பல இடங்களில் “அந்த காலம் அது வசந்த் அன்கோ காலம்”, “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை” போன்ற அறிய பொக்கிஷங்கள் இடம் பெற்றுள்ளன.
கல்விக் கொள்கை கள் மாற்றம் அடையும்போது அதற்கு ஏற்றார் போல் கலைத்திட்டமும் நவீனமாகி வருகிறது. கலைத்திட்டத்தில் வந்து சேரும் புதிய புதிய கல்வி அறிவியல் கருத்துக்கள் எல்லாவற்றையும் மாணவர்களின் பருவத்திற்கு ஏற்றவாறு வழங்குவதற்கு பாடத்திட்டங்களும் காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றன.
அந்த காலத்தில் பாட புத்தகம் என்பது கருப்பு வெள்ளையில் மட்டுமே இருக்கும். படங்கள் அரிதாகவே இருக்கும் அதுவும் கையால் வரையப் பட்டதாக இருக்கும். தற்போது பாட புத்தகங்களில் வண்ண படங்கள் இடம்பெறுகின்றன பாடப் புத்தகங்கள் சார்ந்த கருத்துக்களை காணொளி வடிவில் காண்பதற்கு QR CODE வழங்கப்பட்டுள்ளன. ஆக மாணவர்களுக்கு தேடல் இருந்தால் அவர்களுக்கு கை அருகிலேயே அனைத்து பாடக் கருத்துகளையும் பல்வேறு வடிவங்களில் கொண்டு வந்து சேர்க்கும் பெரும் பணியை செய்ய வல்ல நவீனப்படுத்தப்பட்ட பாட புத்தகங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. அநேகமாக வேறு மாநிலங்களில் இவ்வளவு நவீனமாக இல்லை.
மணற்கேணி ஆப் மாணவர்கள் ஆசிரியர்கள் பிரத்தியேகமாக பாடம் சார்ந்த காணொளிகளை பார்க்கும் வண்ணம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆக பாடப்புத்தக வடிவமைப்பிலும் அதற்கான innovative supporting tools வடிவமைப்பிலும் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது என்றால் மிகையில்லை.
எந்த பாடமாக இருந்தாலும் லக்சர் மெத்தட் ஒரு நாளும் கைவிட மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்த கற்பித்தல் முறை தற்போது மலையேறிப் போனது.
தற்போதுள்ள கற்பித்தல் முறைகள் நவீனமாகவும் பன்முகத் தன்மையோடும் உள்ளன என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
ஆசிரியர்கள் ஆடல் பாடல் பொருத்தமான காணொளிகள் படங்கள் பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் என்று நவீன மயமாக கற்றல் கற்பித்தலை உயிரோட்டமாக கொண்டு செல்கின்றனர்.
ஆக கல்வி அமைப்பில் உள்ள மேலே உள்ள ஐந்து அடுக்குகளும் காலத்துக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே வருகின்றன. ஆனால் இன்றளவும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் பழைய முறையே மதிப்பீட்டுக்கு பயன்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. பரீட்சை பேனா பேப்பர் மதிப்பெண் இந்த முறை மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே வருவது வருத்தத்திற்கு உரியது.
ஆனா பாருங்க இந்த அதரப் பழசான தேர்வு முறையை எவ்வளவு நவீனமயமாக நாம் நடத்தி வருகிறோம். ஆமாம் முன்பெல்லாம் மாணவர் பெயர்ப் பட்டியல் தயார் செய்வது பெரிய வேலை. ஆமாம், மாணவர்களின் பத்தாம் வகுப்பு சான்றிதழில் இடம் பெறப் போகும் பெயர் அல்லவா. அதற்கு பிறகு அந்த பெயரில் உள்ள பிழைகளை சரி செய்வது மாபெரும் சிக்கல் நிறைந்த வேலை.
அதற்குப் பிறகு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் போட்டோ ஒட்டி தயாரித்து வழங்க வேண்டும் ஆள் மாறாட்டம் செய்ய இடம் இல்லாமல் தேர்வை நடத்த வேண்டும்.
மாணவர்களை அறை வாரியாக பிரித்து அமரச் செய்து தேர்வு எழுத வைத்து பேப்பர் வாங்கி அழகாக அடுக்கி மதிப்பீட்டு மையத்துக்கு அனுப்புவது என்பது மாபெரும் சிக்கலான பொறுப்பான தலைவலி பிடித்த வேலை.
ஆனால் மிக மிக எளிய முறையில் தற்போது ஒவ்வொரு மாணவனின் புகைப்படமும் அவனது தேர்வு பேப்பரிலேயே வந்துவிடுகிறது. பேப்பர் மாறிப் போவதற்கோ ஆள்மாறாட்டம் செய்வதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை.
அக, தேர்வு நடத்தும் முறை என்பது எந்த ஒரு சிறு தவறுக்கும் இடம் கொடுக்காமல் முழுக்க முழுக்க கணினி மையப்படுத்தப்பட்டு ஆக நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வளவு நவீனமயப் படுத்தப் பட்ட மதிப்பீட்டு முறையில் என்ன சிக்கலை கண்டீர்கள் என்று நீங்கள் எண்ணலாம்.
மாணவர்கள் தங்கள் அறிவினை பெறுவதற்கு பன்முகப்படுத்தப்பட்ட கற்றல் கற்பித்தல் முறைகள் உள்ளன. அதே வேளையில் அவர்களின் புரிதலை வெளிப்படுத்துவதற்கு வழங்கப்படும் ஒரே வாய்ப்பு இறுதி பரீட்சை அன்று தரப்படும் பேப்பர் பேனாவோடு முடிந்து போகிறது.
இங்கே பாடப் பொருள் சார்ந்த நுண்ணறிவை சோதிப்பது என்பது குறைவாகத்தான் இருக்கிறது மாறாக மனப்பாட முறையை சோதிப்பது என்பது தான் 90 விழுக்காடு உள்ளது.
மாணவர்கள் செயல்திட்டம் சமர்ப்பிப்பது, செமினார் எடுப்பது, POWER POINT PRESENTATION உருவாக்குவது, பாடம் சார் கண்காட்சி பொருட்களை உருவாக்கி காட்சிப் படுத்தி விளக்கி கூறுவது, பாட கருத்துக்களை கலையாக்கம் செய்வது இப்படி பன்முக தன்மைகள் வகுப்பறைகளில் வெளிப்படுகின்றன.
ஆனால் அவை எல்லாவற்றையும் கொன்று புதைத்து கம்பீரமாக நிற்பது பேப்பரும் பேனாவும் தான்.
ஒரு வெளிச்ச கீற்று தென்படுவது போல CCE என்கிற ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அது ஓரளவுக்காவது தனிப்பட்ட வகுப்பு செயல்பாடுகள் மற்றும் தொடர் மதிப்பீட்டு செயல்பாடுகள் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டு முறையை கொண்டிருந்தது.
அங்கே மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேட் முறை அறிமுகம் செய்யப்பட்டது. படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை வந்து சேரும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சியது.
ஏனென்றால் எவ்வளவு முயற்சித்தும் எட்டாம் வகுப்புக்கு மேல் அந்த முறையை கொண்டு வரவே இயலவில்லை.
இன்னும் சொல்லப் போனால் அது எட்டாம் வகுப்பில் இருந்து சுருங்கி திரும்பி போய் ஏழாம் வகுப்பில் படுத்துக் கொண்டது.
ஆக எல்லாவற்றையும் எண்களாகவே பார்த்து பழகிய பெற்றோருக்கு மதிப்பீடு என்பது எண் சார்ந்த விஷயமாகவே இருக்க வேண்டும் என்கிற ஒரு பிடிவாதம் உள்ளது.
அதோடு மட்டுமின்றி மதிப்பீட்டுக்கு எண்கள் வழங்கி விட்டால் அது ஒப்பீடு செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்கள் பையன் நன்றாக படிக்கிறான் என்கிற ஒற்றை பதிலில் அவர்களுக்கு திருப்தி இல்லை, எனது பையன் யாரை விட எல்லாம் நன்றாக படிக்கிறான் என்கிற ஒப்பிட்டு மதிப்பீட்டு முறைக்கு பழகிப்போன வர்ணாசிரம அடுக்குகளை கொண்ட சமூகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான எழுத்துக்களை வழங்கும் கிரேடு முறையை ஏற்பது சற்று கடினம் தான்.
இந்த மதிப்பீட்டு முறை எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடும் பின்லாந்தில் எப்படி இருக்கிறது?!
பின்லாந்தை பொருத்தவரையில் தேசிய அளவிலான கட்டாய தேர்வு என்ற ஒன்று அடிப்படை வகுப்புகளுக்கு கிடையாது. சில இடைநிலை வகுப்புகளுக்கு கணிதம் ஆங்கிலம் ஸ்வேதிஷ் ஆகிய பாடங்களுக்கு தேசிய தேர்வுகள் இருந்தாலும் அந்த தேர்வுகளை எழுத செய்வதும் வேண்டாம் என்று மறுதலிப்பதும் ஆசிரியர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறார்கள்.
அங்கே தனது மாணவர்களின் புரிதலை அளப்பதற்கான மதிப்பீட்டு முறைகளை ஆசிரியர்களே உருவாக்கும் சுதந்திரம் உள்ளது.
அவர்கள் முதன் முதலில் எழுதும் தேசிய அளவிலான தேர்வு என்பது மேல்நிலை வகுப்புகளில் இறுதி கட்டத்தில் மட்டுமே இருக்கிறது.
கீழ்நிலை வகுப்புகளுக்கு WILMA என்றொரு இணைய வழி மூலமாக தொடர் மதிப்பீட்டு தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இங்கே EMIS PORTAL மூலமாக அவ்வப்போது இந்த வகைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதற்கடுத்ததாக எல்லோரும் சிலாகித்த படம் தென்கொரிய கல்வி முறைகளிலும் மதிப்பீடு அனைத்து விதமான வளர்ச்சிகளை HOLISTIC DEVELOPMENT கருத்தில் கொள்ளும் வண்ணமாக மதிப்பீடு முறைகள் உள்ளன .
வகுப்பு தேர்வுகள், செயல்திட்டம், பாட இணை செயல்பாடுகளில் பங்கேற்பு போன்றவற்றுக்கு எல்லாம் மதிப்பெண்கள் அங்கே வழங்கப்படுகின்றன.
இடைநிலை வகுப்புகளில் தென் கொரியாவில் ஒவ்வொரு வகுப்பிலும் இடைப்பருவ தேர்வு ஆண்டு தேர்வு உள்ளன.
அங்கே கிரேட் சிஸ்டம் தான் மதிப்பீட்டிற்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது ரேங்க் கிடையாது.
கனடா போன்ற பெரிய நாடுகளில் கல்வி கொள்கைகள் கூட அந்தந்த மாகாணங்களுக்கு ஏற்றவாறு நெகிழ்வு தன்மையோடு உள்ளது. மதிப்பீடு முறைகளையும் மாகாணங்களே இறுதி செய்து கொள்கின்றன.
இங்கே நமது மக்கள் எண்களை கண்டு மயங்கி கிடக்கும் அந்த அறியாமையில் இருந்து வெளிக்கொண்டு வரவேண்டும். எல்லாவற்றையும் எண்களாகவே பார்க்கும் போக்கினை மாற்ற வேண்டும். அதுபோல இங்கே ஒழிக்கப்பட வேண்டிய மற்றும் ஒரு விஷயம் ரேங்க் என்கிற தரப்படுத்துதல்.
அனைவருக்கும் தேர்ச்சி வழங்கிவிடுதல், கிரேடு முறை, தரப்படுத்தும் முறையை எல்லா வகையிலும் ஒழித்துக் கட்டுதல் ( ரேங்க்கை ஒழித்தாலும் 600/600 ஐ கொண்டாடுதல் மாவட்ட அளவில் உயர் மதிப்பெண்களை கொண்டாடுதல் எல்லாவற்றிலும் ரேங்க் ஒட்டிக் கொண்டு தான் உள்ளது) எண்களில் ஒன்றும் இல்லை என்பதை முழுமையாக அனைவருக்கும் தெளிவு படுத்தும் விதமான ஒரு பன்முகத்தன்மை கொண்ட புதிய மதிப்பீட்டு முறை அவசியமாக வரவேண்டும்.
உணவின் சுவை உணறாது அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கும் ஒரு பசி கொண்டவனைப் போல மாணவர்கள் பாடக்கருத்துகளை புரிந்து கொள்ளாமல் அள்ளிவிழுங்கி தேர்வுகளில் எழுதித் தள்ளுகிறார்கள். இந்த அவல நிலை மாற வேண்டும்.
இதையே மாநில பாடத்திட்ட கருத்துக் கேட்புக் குழுவிடம் நான் கூறியிருந்தேன். இங்கே சற்று விசாலமாக கூறியுள்ளேன்.
Sunday, September 22, 2024
ஆன்லைன் வகுப்புகளின் காலத்தில் கூட ரோபோ ஆசிரியர்களுக்கு இடமில்லை!!
நான் வேலைக்கு சேர்ந்த காலகட்டத்தில் பள்ளிகளில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பெரும்பாலும் இருக்காது. பள்ளியில் பணிபுரியும் அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் தான் ஆங்கிலப் பாடம் எடுப்போம்.
2004 துவங்கி 2011 ல் உட்கோட்டை பள்ளியில் இருந்து முதுகலை கணித ஆசிரியராக செல்லும் வரையில் நான் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகவே அறியப் பட்டேன். கணித பாடவேளைகள் ரொம்ப சீரியஸாக செல்லும். ஆனால் ஆங்கிலப் பாடவேளைகள் ரொம்ப ஜாலியாக செல்லும். நான் வாசித்தவை நடப்பு கால நிகழ்வுகள் போன்ற பல விஷயங்களை பாடத்தோடு ஒட்டி கதைக்க நல்ல வாய்ப்பாக அமையும். ஆங்கில துணைப்பாடக் கதைகளை இரண்டு மூன்று நாட்கள் வைத்து வைத்து ருசித்து நடத்திய காலம் அது.
அந்த காலகட்டத்தில் தான் மேலே நான் சொன்ன தலைப்பில் ஐசக் அசிமோவ் எழுதிய அறிவியல் புனைகதையை நடத்தினேன். நாங்கள் நடத்திய காலத்தில் இந்த பாடம் ஒன்பதாம் வகுப்பு ஆங்கில Prose ல் Tommy found a Book என்கிற தலைப்பில் வந்து இருந்தது. தற்போது புதிய பாடபுத்தகத்தில் அதே ஒன்பதாம் வகுப்பு ஆங்கில Non-detail story பகுதியில் The Fun They Had என்கிற தலைப்பில் வந்துள்ளது.
இயல்பிலேயே அறிவியல் சார்ந்த விஷயம் மேல் எனக்கு ஆர்வமுண்டு. அதனால் அந்த காலகட்டத்தில் இந்த பாடத்தை அனுபவித்து நடத்தினேன்.
ஐசக் அசிமோவ் அமெரிக்காவைச் சேர்ந்தவர். பயோகெமிஸ்ட்ரி துறை பேராசிரியர். அறிவியல் புனைகதைகள் ஏராளமாக எழுதியவர்.
இந்த கதைக்கு வருவோம். கதை நடக்கும் காலகட்டம் 2157. டாமி மற்றும் மார்கீ அண்ணன் தங்கை. டாமி வீட்டின் பரண் மீது இருந்து ஒரு புத்தகம் ஒன்றை கண்டு பிடிக்கிறான். அன்றைய காலகட்டம் வன்புத்தகங்கள் சுத்தமாக மறைந்து மென்புத்தகங்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் காலம். கசங்கி மடங்கிய காகித புத்தகம் அவனுக்கு வியப்பைத் தருகிறது. அந்த புத்தகம் பழங்கால பள்ளிகள் பற்றிய புத்தகம். அன்றைய காலகட்டத்தில் திரையில் எழுத்துகள் ஓடும் ஆனால் காகித புத்தகத்தில் நிலையாக நிற்கும் எழுத்துகளை வாசிப்பது அவனுக்கு வியப்பை தருகிறது.
மார்கீ அவனிடம் அந்த புத்தகம் பற்றி கேட்கிறாள். இது பள்ளிகள் பற்றிய புத்தகம் என்கிறான். அவளுக்கோ பள்ளி என்றாலே வெறுப்பு. பள்ளியை பற்றி எழுத என்ன இருக்கிறது என்று வெறுப்பாக கேட்கிறாள்.
அவர்களது வீட்டில் பள்ளி என்பது வீட்டில் இருக்கும் கணினி. அது அவர்களுக்கான பாடத்தை நடத்துகிறது. வீட்டுப் பாடம் கொடுக்கிறது. அவர்கள் வீட்டுப் பாடத்தை அதற்கான துவாரத்தில் கொடுக்க அது திருத்தி மதிப்பெண் வழங்கி வெளியே தள்ளுகிறது. பாடவாரியாக நேரம் பிரித்து வைத்து பிள்ளைகளை கணினி முன்பு அமர்ந்து பெற்றோர் படிக்கச் செய்கின்றனர்.
மார்கியின் பள்ளிக் கணினி அவளுக்கு புவியியல் பாடத்தில் டெஸ்ட் மேல் டெஸ்ட்டாக வைத்து சோதிக்கிறது. அவளும் தொடர்ந்து புவியியலில் பெயிலாகியபடி இருக்கிறாள். அதனாலேயே பள்ளி என்றால் வெறுப்புக்கு உள்ளாகிறாள். இறுதியில் அவளது அம்மா மெக்கானிக் ரோபோவை வரச்செய்து பள்ளியை சரி செய்கிறாள். புவியியல் பாடம் சற்று வேகமாக சென்றுள்ளது. மார்கியின் மீது எந்த தவறும் இல்லை என்று மெக்கானிக் கூறுகிறார். மெக்கானிக் பள்ளி ரோபோவை கழட்டியபோது மார்கி “இதை அவர் மீளவும் பொறுத்த தெரியாமல் போய்விட வேண்டும் அல்லது கொஞ்ச நாட்கள் இந்த ரோபோவை மெக்கானிக் வீட்டுக்கு எடுத்து சென்றுவிட வேண்டும்“ என்றெல்லாம் எண்ணுகிறாள்.
அந்த புத்தகத்தில் உள்ள பழங்கால பள்ளியானது பிரத்தியேகமான இடத்தில் செயல்பட்டுள்ளது. ஊரில் உள்ள சமவயது சிறார்கள் ஒரே வகுப்பில் கும்பலாக அமர்ந்து படிக்கின்றனர். மனித ஆசிரியர் பாடம் நடத்துகிறார். சேர்ந்து விளையாடி மகிழ்கின்றனர். இந்த தகவல்கள் அவர்களுக்கு ஏக்கத்தையும் ஆச்சரியத்தையும் தருவதாக கூறி கதையை முடித்திருப்பார்.
இந்த கதையில் கல்வி சார்ந்து ஒரு மூன்று விஷயங்களை அசிமோவ் வழி நின்று புரிந்து கொண்டேன்.
குழந்தைகளின் புரிதல் நிலை அறிந்து பக்குவமாக பாடம் நடத்திட மனித ஆசிரியர்கள் தான் சரி. எத்தனை கேட்ஜெட்டுகள் வந்தாலும் ஒரு ஆசிரியரின் இடத்தை அவற்றால் நிரப்ப இயலாது.
வயதொத்த குழந்தைகள் கூடி ஆடி களித்து மகிழ பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள தோதான இடம் பள்ளி மட்டுமே. எவ்வளவு கேட்ஜெட்களை வீட்டில் நிரப்பினாலும் வயதொத்த குழந்தைகளுடன் ஆடிப்பாடி விளையாடிடும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது.
எத்தனை யுகங்கள் கடந்தாலும் பள்ளிக் குழந்தைகளின் விடுமுறை ஏக்கம் என்பது மாறாத ஒன்று என்பதையும் கதைப் போக்கிலேயே அசிமோவ் உணர்த்திச் செல்கிறார்.
அசிமோவ் அவர்களின் கற்பனையில் பிறந்த ரோபோ ஆசிரியர் என்பவர் இன்று வரையில் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் கணினியின் வளர்ச்சி குறித்த அவரது கற்பனையைத் தாண்டி பலமடங்கு வேகத்தில் கணினி யுகம் வளர்ந்து விட்டது. (அவரது ரோபோ ஆசிரியர் பஞ்ச்டு கார்ட் தான் ரீட் செய்கிறார். பிள்ளைகளும் வீட்டு பாடத்தை பஞ்ச்டு கார்டில் எழுதியே இன்புட் செய்கிறார்கள்)
இறுதியாக ரோபோ எனப்படும் ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் குறித்த எனது பார்வையை கூறிவிடுகிறேன்.
நானறிந்த வரையில் சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை முன்னெடுத்துச் செல்ல இத்தனை ஆசிரியர்கள் தேவையில்லை என்று வெளியேற்றியுள்ளார்கள். மீதம் இருப்போருக்கும் பாதி சம்பளம் வழங்கியிருக்கிறார்கள்.
இது போலவே பல துறைகளில் ரோபோக்கள் நுழையும் போதெல்லாம் பல நூறு ஊழியர்கள் வேலை இழக்கிறார்கள். எனவே ஆட்டோமேஷன் என்பது ஆபத்தானது.
எனவே ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை வரவேற்கவேண்டாம்.
வேண்டுமானால் மனிதர்கள் செய்ய இயலாத ஆபத்தான பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
Thursday, September 12, 2024
அணுக்கரு உலை - அமைப்பு
அணு உலைகளில் அப்படி என்னதான் இருக்கிறது?!
" டேய் அருண், ஏற்கனவே நாம அணு உலைகள் பற்றி பேசினோம் இல்லையா?!"
"ஆமாம்பா, அணு உலைகள்ல எப்படி மின்சாரம் உற்பத்தி பண்றாங்க அப்படின்னு சொன்னீங்க?!"
"இன்னைக்கு அந்த அணு உலை எப்படி இருக்கும் அதுல என்னென்ன உதிரி பாகங்கள் எல்லாம் இருக்கு அப்படின்னு பார்ப்போமா?!"
"அது நானே சொல்றேன் பா, எங்களுக்கு இப்ப பாடத்திலேயே அது இருக்கு!!"
" அது இருக்கட்டும் முதன்முதல்ல அணு உலை எப்ப கட்டினாங்க தெரியுமா?! முக்கியமா அணுகுண்டு போட்டதுக்கு பிறகா, அல்லது அணுகுண்டு போடுறதுக்கு முன்னாடியா?! அதை மட்டும் சொல்லு பாப்போம்!!"
" எப்படி இருந்தாலும் அணுகுண்டு வெடிச்சதுக்கு பிறகு தானே அதை கட்டுப்படுத்தி ஒரு அறைக்குள் வெடிக்கிறது மூலமா மின்சாரம் தயார் பண்ணலாம் அப்படிங்கிறத கண்டுபிடிச்சி இருப்பாங்க"
"அப்படி இல்ல, அணு உலைகள் அமெரிக்காவில் சிக்காகோல 1942-ல என்ரிக்கோ ஃபெர்மி அவர்களால் நிறுவப்பட்டது"
" சரி அதுல என்னென்ன இருக்கு நீ சொல்லு பாக்கலாம்!!"
" முதலில் அணு உலைக்கான எரிபொருள்"
"அணு உலை எரிபொருள் யுரேனியம் தானே?!"
"அப்படி பொசுக்குன்னுல்லாம் சொல்லக்கூடாது, யுரேனியத்திற்கு நிறைய ஐசோடோப் இருக்கு எல்லா வகை யுரேனியத்தையும் அணு உலைகள்ள பயன்படுத்த முடியாது,. அணு எடை 235 இருக்கிற யுரேனியம் மட்டும் தான் பயன்படும்"
"ஆமா, U235"
"ஆனால், இயற்கையா கிடைக்கிற யுரேனியத்துல 0.7% தான் U235 இருக்கும். ஆனா U238 நிறைய இருக்கும் அதை செறிவூட்டுவதன் மூலமா 4% அளவுக்கு U235வ பெற முடியும்"
"அருண், ஒரு சந்தேகம்"
"கேளுப்பா "
"அணு உலைகளில் யுரேனியம் நிலைமாறு நிறை அளவுக்கு (critical mass ) அளவுக்கு இருக்குமா என்ன?!"
"இல்லையே"
" அப்படி இருந்தா தானே அணுக்கரு பிளவு தானா நடக்கும்?!"
" அப்படி இல்லப்பா, அணுக்கரு பிளவு தானா நடந்தால் அது அணுகுண்டு, கட்டுப்படுத்தி நடக்க வச்சாதான் அது அணு உலை!!
அதனால கிரிட்டிக்கல் மாஸ் அளவுக்கு யுரேனியத்த வைக்க மாட்டாங்க, அதுக்கு மாறாக குட்டி குட்டி மாத்திரை வடிவத்தில் பெல்லட்டுகளா மாத்தி அதை உருளை வடிவ குழாய்கள்ல வச்சிருவாங்க அந்த உருளை வடிவ குழாய்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அமைப்பு மேல செருகப்பட்டு இருக்கும், இதுக்கு பேரு எரிபொருள் தொகுப்பு ( fuel assembly)"
"அப்படின்னா, அணுக்கரு பிளவை தொடங்க நியூட்ரான் வேணுமே என்ன செய்வாங்க?!"
" அணுக்கரு பிளவு என்றாலே யுரேனிய அணுவை போட்டு பொளக்குறது தான் அது பொளக்குறதுக்கான கோடரி நியூட்ரான், பிளவுக்கு அப்புறம் மூன்று நியூட்ரான் தெறிச்சி ஓடிவரும், அது மீண்டும் மூன்று அணுக்கள போட்டு பொளக்கும், இந்த மாதிரி அந்த ரணகளம் தொடங்கும்"
"சரி விஷயத்துக்கு வா நியூட்ரானுக்கு எங்க போவாங்க?!"
"சொல்றேம்பா, அவசரப்படாதீங்க!! பெரிலியம் மற்றும் புளுட்டோனியம் கலவை இல்லன்னா பொலோனியம் வைப்பாங்க, இவை நியூட்ரான்கள உமிழும்"
"சரி சரி, அணு உலை எரிபொருள் பற்றி விலாவாரியா பார்த்தாச்சு, அடுத்து என்ன ?!"
"அடுத்ததா தணிப்பான் ஆங்கிலத்தில் moderators"
" ஆமா, இது எதுக்கு, என்னத்த அப்படி தணிக்கப் போறாங்க?!"
" அணுக்கரு பிளவு நடக்கும்போது யுரேனியம் அணுவில் இருந்து புறப்பட்டு வரும் 3 நியூட்ரான்களும் அதிவேக நியூட்ரான்கள் ஆகும் அவை அடுத்ததாக மூன்று அணுக்களை பிளப்பதற்கான சாத்தியம் குறைவு எனவே அந்த அதிவேக நியூட்ரான்களின் வேகத்தை தணிப்பதற்கு தணிப்பான்கள் தேவை?"
" அது என்ன தொழில்நுட்பம் எப்படி தணிக்க முடியும்?!"
" சற்றேறக் குறைய நியூட்ரான்களின் அளவே உடைய மிக மிக குறைவான எடையுள்ள அணுக்கருக்களை கொண்ட தனிமங்களை இதற்கு பயன்படுத்த வேண்டும், ஏனெனில் நியூட்ரானின் அளவே இருக்கும் அந்த உட்கருக்கள் உடன் மோதும் போது நியூட்டனின் வேகம் தணிக்கப்படும்"
" ஓ அப்படியா அப்படின்னா தணிப்பான்களா எதை பயன்படுத்துறாங்க?!"
" கடின நீர் பயன்படுத்தப்படும்( H2O க்கு பதிலாக ஹைட்ரஜனின் இன்னொரு வகையான டியூட்ரியத்தை கொண்ட நீர் D2O) பெரும்பாலான அணு உலைகளில் இதுதான் பயன்படுத்தப்படுகிறது சில அணு உலைகளில் யுரேனியம் பெல்லட்டுகளுடன் கிராஃபைட்டை கலந்து வைத்து விடுவார்கள் அந்த கிராஃபைட் தணிப்பானாக பயன்படும்"
" அணு உலைகளில் திடீர்னு வெப்ப அளவு உயர்ந்து இருக்கும்போது அதை கட்டுப்படுத்தவும் அல்லது பராமரிப்புக்காக சுத்தமாக நிறுத்தி வைக்கவும் ஸ்விட்ச் இருக்கா?!"
" அடுத்த காம்பொனண்ட் அத பத்தி தான் சொல்ல வரேன் பா, Control Rods என்று சொல்லக்கூடிய கட்டுப்பாட்டுக் கழிகள் அணு உலைகளில் உண்டு அவைகள் நியூட்ரான்களை பிடித்து விழுங்க கூடியவை."
" அதோடு மட்டுமின்றி பெரும்பாலான அணு உலைகளில் மேல் பகுதியில் கட்டுப்பாட்டுக் கழிகள் உள்ளே விழுவதற்கு தயார் நிலையில் பிரத்தியேக அமைப்புகள் மூலமாக வைக்கப்பட்டிருக்கும். சில அணு உலைகளில் கீழே இருந்து மேலே உயர்த்தும் வகையில் கூட வைக்கப்பட்டிருக்கும்"
" ஆமா இதை எப்போது பயன்படுத்துவார்கள்?!"
"அணுவுலைகளின் வெப்பம் தேவைக்கு அதிகமாக உயரும் போது கட்டுப்பாட்டுக் கழிகள் உள்ளே இறக்கப்படும், அணு உலைகளின் வெப்பத்தை சரியான அளவில் பராமரிக்க ஏற்றவாறு இந்த கட்டுப்பாட்டுக் கழிகள் உள்ளே இறக்கவோ அல்லது மேலே எடுக்கவோ செய்வார்கள்"
" அவசரகால நடவடிக்கைகளின் போது உடனடியாக நிறுத்துவதற்கு அணு உலைகளுக்கு மேலே இருக்கும் கட்டுப்பாட்டு கழிகள் முழுவதுமாக உள்ளே இறக்கப்படும் அப்போது நியூட்ரான்களின் வெளிப்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்தி அடுத்தடுத்த அணுக்கரு பிளவு வினைகள் நடக்காமல் முடக்கி வைக்கப்படும்"
"ஆமாம் இந்த கட்டுப்பாட்டு கழிகள் அதாவது நியூட்ரான் விழுங்கிகள் எந்த மெட்டீரியலில் செய்கிறார்கள்?!"
" கட்டுப்பாட்டு கழிகள் என்பவை தகடு போன்றோ குழாய் போன்றோ செய்யப்பட்டிருக்கும், அவை போரான் அல்லது ஹாஃப்னியம் என்கிற தனிமத்தை பயன்படுத்தி செய்திருப்பார்கள்"
" பொதுவா எத்தனை கழிகள் அப்படி இருக்கும்?"
" ஒரு கொத்தில் 20 கழிகள் வரை இருக்கும் இதுபோன்று பொதுவாக எல்லா அணு உலைகளிலும் 50 கொத்து கழிகள் தயார் நிலையில் இருக்கும்"
"எல்லாம் சரிப்பா அணுக்கரு உலையில் வெப்பம் உண்டாக்குறாங்க ரைட், அந்த வெப்பத்தை எப்படி எடுத்துட்டு வந்து டர்பைனை சுழற்றி மின்சாரத்தை உற்பத்தி பண்ணுவாங்க அதைச் சொல்லு?!"
"அணுக்கரு உலையில் இறுதியா உள்ள ஒரு முக்கியமான பகுதி குளிர்விப்பான்!!"
"இஞ்சின்ல ரேடியேட்டர் மாதிரியா?!"
" கிட்டத்தட்ட அப்படித்தான் அணுக்கரு பிளவு நடக்கக்கூடிய பகுதியில் அபரிமிதமான வெப்பம் உண்டாகும் அந்த வெப்பத்தை குளிர்விப்பதற்கு குளிர்விப்பான்கள் பயன்படுத்தப்படும் பொதுவாக நீர் பயன்படுத்தப்படுகிறது சில அணு உலைகளில் கடின நீர் பயன்படுத்துக்கப்படுகிறது இன்னும் சில உலகில் திரவ சோடியமோ அல்லது ஹீலியமோ பயன்படுத்தப்படும் அதிக வெப்ப நிலை காரணமாக இந்த குளிர்விப்பான்கள் ஆவியாகி அந்த ஆவி அதிக அழுத்தத்தோடு குழாய்கள் வழியே வெளியே சென்று டர்பைன் சேம்பரில் உள்ள டர்பைன்களை சுழலச் செய்வது தான் இதில் உள்ள மெக்கானிசம்"
" யுரேனியம் ரொம்ப ஆபத்தான கதிர்வீச்சுகளை வெளியிடும் அப்படின்னு சொல்றாங்க இவ்வளவு வேலையும் நடக்கக்கூடிய இடத்தை எப்படி பாதுகாப்பா பராமரிக்கிறாங்க?!"
"நான் மேலே கூறிய அனைத்து பாகங்களும் செயல்பாடுகளும் நடக்கக்கூடிய இடம் தான் அணுக்கரு உலை இருக்கும் இடம், அந்த மைய மண்டபமானது containment Vessel என்று சொல்லக்கூடிய ரேடியேஷனை வெளிவிடாத உலகத்தால் மூடப்பட்ட அமைப்பில் இருக்கும். அதற்கு மேலாக ஒரு மீட்டர் தடிமனுக்கு மேலான அளவுக்கு கான்கிரீட்டால் கட்டப்பட்ட அமைப்பு இருக்கும், எனவே ரேடியேஷன் அளவானது மிகவும் பாதுகாப்பான அளவிலேயே வெளியேறுமாறு பராமரிக்கிறார்கள்"
" பரவாயில்லயே உங்க பாடத்தில் இருக்கிற இந்த பகுதியே தெளிவாத்தான் படிச்சு வச்சிருக்க!! சந்தோஷம், அடுத்தது அந்த அணுஉலைகளில் எரிபொருள் நிரப்புவது அது செயல்படும் விதம் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாக்கும் அமைப்புகள் இதுபோன்று அணுஉலையின் அனைத்து செயல்பாடுகளையும் பற்றி பார்ப்போம்"
"ஓகே ப்பா, அடுத்து உங்க டர்ன், நான் கேப்பேன் நீங்க சொல்லணும் சரியா?!"
"டபுள் ஓக்கே"
Subscribe to:
Posts (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...