Tuesday, September 24, 2024
மதிப்பீட்டு முறைகள் மட்டும் மாறவே மாறாதா?
கல்வித் துறையில் ஏதேனும் சின்ன சின்ன பரபரப்புகள் எழுந்து அடங்கும்போதெல்லாம் எஜுகேஷன் சிஸ்டம் சரியில்லை என்கிற அங்கலாய்ப்புகள் வருவது வாடிக்கை.
ஆனால் EDUCATION SYSTEM என்பது என்ன என்கிற புரிதல் பெரும்பான்மையானவருக்கு இருப்பதில்லை.
எஜூகேசன் சிஸ்டம் என்பது பின்வரும் அடுக்குகளை உள்ளடக்கியது.
EDUCATION POLICY
அதாவது அரசு கல்விக் கொள்கையை உருவாக்கும்.
கனடா போன்ற பரப்பளவில் பெரிய நாடுகள் அந்தந்த மாகாணங்களே தங்களுக்கு ஏற்றவாறு கல்விக் கொள்கையில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்கிறார்கள்.
ஆனால் இந்தியா பெரிய துணைக் கண்டம், கலாச்சார பன்முகத்தன்மை உள்ள நாடு. ஆனால் இங்கே கல்விக் கொள்கையை Centralise செய்கிறார்கள். கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் மாநில அரசுகள் அவரவர்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளும் வகையில் நெகிழ்வு தன்மையோடு இருத்தலே அவசியம்.
சரி அது வேற மேட்டர் நாம் விஷயத்துக்கு வருவோம்.
கல்வி கொள்கைகள் என்பன அவ்வப்போது அமையும் அரசுகளை பொறுத்து மாறும்.
பொதுவாக கல்விக் கொள்கை என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மாணவர்களுக்கு என்னென்ன விதமான அறிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு தற்போது இருக்கும் நவீன உலகில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மதிப்பு கல்வி இவற்றின் அடிப்படையில் கல்விக் கொள்கைகள் உருவாக்கப்படும்.
CURRICULUM FRAMEWORK
கலைத்திட்ட வடிவமைப்பு
கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை வழிகாட்டியாக கொண்டு கலைத்திட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தற்போது கூட NCF2023 புதிய கல்விக்கொள்கைக்கு (NEP 2020) சிவப்புக் கம்பளம் விரிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
இவற்றை கல்வித் துறையின் வல்லுனர் குழு நிர்ணயம் செய்வார்கள்.
SYLLABUS
பிறகு வகுப்பு வாரியாக கலைத்திட்டத்தில் உள்ள விஷயங்கள் பிரித்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். ஆனால் தற்போது நாம் NEET/IIT-JEE என்று இவற்றை அடிப்படையாக கொண்டு பாடத்திட்டத்தை அமைத்து வைத்திருக்கிறோம். Inclusive ஆக இருக்க வேண்டிய விஷயம் நிறைய மாணவர்கள் தெறித்து ஓடுவதற்கு ஏற்றாற்போல் உள்ளது. கல்லூரிகளில் கணித புலம் காலியாக கிடப்பது கவலைக்குறியது.
TEXT BOOKS
பாடத்திட்டங்களில் உள்ள கருத்துக்கள் மாணவர்களுக்கு எளிமையாக சென்று சேர ஏதுவாக பாட புத்தகங்கள் எழுதப்படுகின்றன பாட புத்தகங்களை வல்லுநர் குழுவும் பாடத்தில் தேர்ந்த அறிவும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களும் இணைந்து உருவாக்குகிறார்கள்.
PEDAGOGY
பாட புத்தகம் கைக்கு வந்த பிறகு பாடப்புத்தகங்களில் இருக்கும் கருத்துக்களை மாணவர்களுக்கு எளிமையாக புரியச் செய்வதற்கு கற்றல் கற்பித்தல் முறைகள் ஆசிரியர்களால் வகுக்கப்படுகின்றன. இதற்கு கல்வித் துறையும் வழிகாட்டுதலும் உண்டு.
ASSESSMENT
மாணவர்களிடம் சென்று சேர்ந்த பாடக் கருத்துக்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளதுஎன்பனவற்றை மதிப்பீடு செய்வதற்கு மதிப்பீட்டு முறைகள் உருவாக்கப்படுகின்றன.
கல்விக் கொள்கைகள் மாறிவரும் சமூக சூழலுக்கு ஏற்ற அவ்வப்போது மாற்றம் கண்டு வருகின்றன. ஆனால் புதிய கல்விக் கொள்கையில் பல இடங்களில் “அந்த காலம் அது வசந்த் அன்கோ காலம்”, “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை” போன்ற அறிய பொக்கிஷங்கள் இடம் பெற்றுள்ளன.
கல்விக் கொள்கை கள் மாற்றம் அடையும்போது அதற்கு ஏற்றார் போல் கலைத்திட்டமும் நவீனமாகி வருகிறது. கலைத்திட்டத்தில் வந்து சேரும் புதிய புதிய கல்வி அறிவியல் கருத்துக்கள் எல்லாவற்றையும் மாணவர்களின் பருவத்திற்கு ஏற்றவாறு வழங்குவதற்கு பாடத்திட்டங்களும் காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றன.
அந்த காலத்தில் பாட புத்தகம் என்பது கருப்பு வெள்ளையில் மட்டுமே இருக்கும். படங்கள் அரிதாகவே இருக்கும் அதுவும் கையால் வரையப் பட்டதாக இருக்கும். தற்போது பாட புத்தகங்களில் வண்ண படங்கள் இடம்பெறுகின்றன பாடப் புத்தகங்கள் சார்ந்த கருத்துக்களை காணொளி வடிவில் காண்பதற்கு QR CODE வழங்கப்பட்டுள்ளன. ஆக மாணவர்களுக்கு தேடல் இருந்தால் அவர்களுக்கு கை அருகிலேயே அனைத்து பாடக் கருத்துகளையும் பல்வேறு வடிவங்களில் கொண்டு வந்து சேர்க்கும் பெரும் பணியை செய்ய வல்ல நவீனப்படுத்தப்பட்ட பாட புத்தகங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. அநேகமாக வேறு மாநிலங்களில் இவ்வளவு நவீனமாக இல்லை.
மணற்கேணி ஆப் மாணவர்கள் ஆசிரியர்கள் பிரத்தியேகமாக பாடம் சார்ந்த காணொளிகளை பார்க்கும் வண்ணம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆக பாடப்புத்தக வடிவமைப்பிலும் அதற்கான innovative supporting tools வடிவமைப்பிலும் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது என்றால் மிகையில்லை.
எந்த பாடமாக இருந்தாலும் லக்சர் மெத்தட் ஒரு நாளும் கைவிட மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்த கற்பித்தல் முறை தற்போது மலையேறிப் போனது.
தற்போதுள்ள கற்பித்தல் முறைகள் நவீனமாகவும் பன்முகத் தன்மையோடும் உள்ளன என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
ஆசிரியர்கள் ஆடல் பாடல் பொருத்தமான காணொளிகள் படங்கள் பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் என்று நவீன மயமாக கற்றல் கற்பித்தலை உயிரோட்டமாக கொண்டு செல்கின்றனர்.
ஆக கல்வி அமைப்பில் உள்ள மேலே உள்ள ஐந்து அடுக்குகளும் காலத்துக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே வருகின்றன. ஆனால் இன்றளவும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் பழைய முறையே மதிப்பீட்டுக்கு பயன்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. பரீட்சை பேனா பேப்பர் மதிப்பெண் இந்த முறை மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே வருவது வருத்தத்திற்கு உரியது.
ஆனா பாருங்க இந்த அதரப் பழசான தேர்வு முறையை எவ்வளவு நவீனமயமாக நாம் நடத்தி வருகிறோம். ஆமாம் முன்பெல்லாம் மாணவர் பெயர்ப் பட்டியல் தயார் செய்வது பெரிய வேலை. ஆமாம், மாணவர்களின் பத்தாம் வகுப்பு சான்றிதழில் இடம் பெறப் போகும் பெயர் அல்லவா. அதற்கு பிறகு அந்த பெயரில் உள்ள பிழைகளை சரி செய்வது மாபெரும் சிக்கல் நிறைந்த வேலை.
அதற்குப் பிறகு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் போட்டோ ஒட்டி தயாரித்து வழங்க வேண்டும் ஆள் மாறாட்டம் செய்ய இடம் இல்லாமல் தேர்வை நடத்த வேண்டும்.
மாணவர்களை அறை வாரியாக பிரித்து அமரச் செய்து தேர்வு எழுத வைத்து பேப்பர் வாங்கி அழகாக அடுக்கி மதிப்பீட்டு மையத்துக்கு அனுப்புவது என்பது மாபெரும் சிக்கலான பொறுப்பான தலைவலி பிடித்த வேலை.
ஆனால் மிக மிக எளிய முறையில் தற்போது ஒவ்வொரு மாணவனின் புகைப்படமும் அவனது தேர்வு பேப்பரிலேயே வந்துவிடுகிறது. பேப்பர் மாறிப் போவதற்கோ ஆள்மாறாட்டம் செய்வதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை.
அக, தேர்வு நடத்தும் முறை என்பது எந்த ஒரு சிறு தவறுக்கும் இடம் கொடுக்காமல் முழுக்க முழுக்க கணினி மையப்படுத்தப்பட்டு ஆக நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வளவு நவீனமயப் படுத்தப் பட்ட மதிப்பீட்டு முறையில் என்ன சிக்கலை கண்டீர்கள் என்று நீங்கள் எண்ணலாம்.
மாணவர்கள் தங்கள் அறிவினை பெறுவதற்கு பன்முகப்படுத்தப்பட்ட கற்றல் கற்பித்தல் முறைகள் உள்ளன. அதே வேளையில் அவர்களின் புரிதலை வெளிப்படுத்துவதற்கு வழங்கப்படும் ஒரே வாய்ப்பு இறுதி பரீட்சை அன்று தரப்படும் பேப்பர் பேனாவோடு முடிந்து போகிறது.
இங்கே பாடப் பொருள் சார்ந்த நுண்ணறிவை சோதிப்பது என்பது குறைவாகத்தான் இருக்கிறது மாறாக மனப்பாட முறையை சோதிப்பது என்பது தான் 90 விழுக்காடு உள்ளது.
மாணவர்கள் செயல்திட்டம் சமர்ப்பிப்பது, செமினார் எடுப்பது, POWER POINT PRESENTATION உருவாக்குவது, பாடம் சார் கண்காட்சி பொருட்களை உருவாக்கி காட்சிப் படுத்தி விளக்கி கூறுவது, பாட கருத்துக்களை கலையாக்கம் செய்வது இப்படி பன்முக தன்மைகள் வகுப்பறைகளில் வெளிப்படுகின்றன.
ஆனால் அவை எல்லாவற்றையும் கொன்று புதைத்து கம்பீரமாக நிற்பது பேப்பரும் பேனாவும் தான்.
ஒரு வெளிச்ச கீற்று தென்படுவது போல CCE என்கிற ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அது ஓரளவுக்காவது தனிப்பட்ட வகுப்பு செயல்பாடுகள் மற்றும் தொடர் மதிப்பீட்டு செயல்பாடுகள் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டு முறையை கொண்டிருந்தது.
அங்கே மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேட் முறை அறிமுகம் செய்யப்பட்டது. படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை வந்து சேரும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சியது.
ஏனென்றால் எவ்வளவு முயற்சித்தும் எட்டாம் வகுப்புக்கு மேல் அந்த முறையை கொண்டு வரவே இயலவில்லை.
இன்னும் சொல்லப் போனால் அது எட்டாம் வகுப்பில் இருந்து சுருங்கி திரும்பி போய் ஏழாம் வகுப்பில் படுத்துக் கொண்டது.
ஆக எல்லாவற்றையும் எண்களாகவே பார்த்து பழகிய பெற்றோருக்கு மதிப்பீடு என்பது எண் சார்ந்த விஷயமாகவே இருக்க வேண்டும் என்கிற ஒரு பிடிவாதம் உள்ளது.
அதோடு மட்டுமின்றி மதிப்பீட்டுக்கு எண்கள் வழங்கி விட்டால் அது ஒப்பீடு செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்கள் பையன் நன்றாக படிக்கிறான் என்கிற ஒற்றை பதிலில் அவர்களுக்கு திருப்தி இல்லை, எனது பையன் யாரை விட எல்லாம் நன்றாக படிக்கிறான் என்கிற ஒப்பிட்டு மதிப்பீட்டு முறைக்கு பழகிப்போன வர்ணாசிரம அடுக்குகளை கொண்ட சமூகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான எழுத்துக்களை வழங்கும் கிரேடு முறையை ஏற்பது சற்று கடினம் தான்.
இந்த மதிப்பீட்டு முறை எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடும் பின்லாந்தில் எப்படி இருக்கிறது?!
பின்லாந்தை பொருத்தவரையில் தேசிய அளவிலான கட்டாய தேர்வு என்ற ஒன்று அடிப்படை வகுப்புகளுக்கு கிடையாது. சில இடைநிலை வகுப்புகளுக்கு கணிதம் ஆங்கிலம் ஸ்வேதிஷ் ஆகிய பாடங்களுக்கு தேசிய தேர்வுகள் இருந்தாலும் அந்த தேர்வுகளை எழுத செய்வதும் வேண்டாம் என்று மறுதலிப்பதும் ஆசிரியர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறார்கள்.
அங்கே தனது மாணவர்களின் புரிதலை அளப்பதற்கான மதிப்பீட்டு முறைகளை ஆசிரியர்களே உருவாக்கும் சுதந்திரம் உள்ளது.
அவர்கள் முதன் முதலில் எழுதும் தேசிய அளவிலான தேர்வு என்பது மேல்நிலை வகுப்புகளில் இறுதி கட்டத்தில் மட்டுமே இருக்கிறது.
கீழ்நிலை வகுப்புகளுக்கு WILMA என்றொரு இணைய வழி மூலமாக தொடர் மதிப்பீட்டு தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இங்கே EMIS PORTAL மூலமாக அவ்வப்போது இந்த வகைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதற்கடுத்ததாக எல்லோரும் சிலாகித்த படம் தென்கொரிய கல்வி முறைகளிலும் மதிப்பீடு அனைத்து விதமான வளர்ச்சிகளை HOLISTIC DEVELOPMENT கருத்தில் கொள்ளும் வண்ணமாக மதிப்பீடு முறைகள் உள்ளன .
வகுப்பு தேர்வுகள், செயல்திட்டம், பாட இணை செயல்பாடுகளில் பங்கேற்பு போன்றவற்றுக்கு எல்லாம் மதிப்பெண்கள் அங்கே வழங்கப்படுகின்றன.
இடைநிலை வகுப்புகளில் தென் கொரியாவில் ஒவ்வொரு வகுப்பிலும் இடைப்பருவ தேர்வு ஆண்டு தேர்வு உள்ளன.
அங்கே கிரேட் சிஸ்டம் தான் மதிப்பீட்டிற்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது ரேங்க் கிடையாது.
கனடா போன்ற பெரிய நாடுகளில் கல்வி கொள்கைகள் கூட அந்தந்த மாகாணங்களுக்கு ஏற்றவாறு நெகிழ்வு தன்மையோடு உள்ளது. மதிப்பீடு முறைகளையும் மாகாணங்களே இறுதி செய்து கொள்கின்றன.
இங்கே நமது மக்கள் எண்களை கண்டு மயங்கி கிடக்கும் அந்த அறியாமையில் இருந்து வெளிக்கொண்டு வரவேண்டும். எல்லாவற்றையும் எண்களாகவே பார்க்கும் போக்கினை மாற்ற வேண்டும். அதுபோல இங்கே ஒழிக்கப்பட வேண்டிய மற்றும் ஒரு விஷயம் ரேங்க் என்கிற தரப்படுத்துதல்.
அனைவருக்கும் தேர்ச்சி வழங்கிவிடுதல், கிரேடு முறை, தரப்படுத்தும் முறையை எல்லா வகையிலும் ஒழித்துக் கட்டுதல் ( ரேங்க்கை ஒழித்தாலும் 600/600 ஐ கொண்டாடுதல் மாவட்ட அளவில் உயர் மதிப்பெண்களை கொண்டாடுதல் எல்லாவற்றிலும் ரேங்க் ஒட்டிக் கொண்டு தான் உள்ளது) எண்களில் ஒன்றும் இல்லை என்பதை முழுமையாக அனைவருக்கும் தெளிவு படுத்தும் விதமான ஒரு பன்முகத்தன்மை கொண்ட புதிய மதிப்பீட்டு முறை அவசியமாக வரவேண்டும்.
உணவின் சுவை உணறாது அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கும் ஒரு பசி கொண்டவனைப் போல மாணவர்கள் பாடக்கருத்துகளை புரிந்து கொள்ளாமல் அள்ளிவிழுங்கி தேர்வுகளில் எழுதித் தள்ளுகிறார்கள். இந்த அவல நிலை மாற வேண்டும்.
இதையே மாநில பாடத்திட்ட கருத்துக் கேட்புக் குழுவிடம் நான் கூறியிருந்தேன். இங்கே சற்று விசாலமாக கூறியுள்ளேன்.
Subscribe to:
Post Comments (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...
No comments:
Post a Comment