Saturday, October 5, 2024
First Look முக்கியம் பாஸ்!!
First Look ரொம்ப முக்கியம்!!
காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!!
ஒரு பேராசிரியர் ஒருவர் ஒரு கணக்கை குறிப்பிட்டு இந்த கணக்கை சால்வ் செய்வதற்கு எனக்கு நான்கு நாட்கள் ஆனது, ஏகப்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் ரெஃபர் செய்து தான் சால்வ் செய்ததாக பெரிய பில்டப்போடு கணக்கை ஆரம்பிப்பார். அந்த சமயத்தில் தூங்கி வழிந்த தனுஷை டஸ்டரால் அடித்து விட்டு நீ போடுறியா என்பார் தனுஷோ ஜஸ்ட் லைக் தட் லெப்ட் ஹாண்டில் டீல் செய்து முடித்து விடுவார்!!
பெரும்பாலானவர் தான் கற்றுள்ள வித்தையை அரிதான ஒன்றாகவும் வேற யாராலும் அந்த அளவுக்கு செய்து விட முடியாது என்பதை குறிப்பிட்டு காண்பிப்பதற்காகவும் அது எவ்வளவு கஷ்டமானது என்று பில்டப்பை ஏற்றி கூறுவார்கள். பொதுவாகவே அது சாதாரண ஒன்றாக இருக்கும் இருந்தாலும் தான் கற்றுள்ள வித்தை அவ்வளவு ஈசி கிடையாது எல்லாராலும் முடியாது என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயல்வார்கள்.
கெடுவாய்ப்பாக முந்தைய தலைமுறை கணித ஆசிரியர்களில் பலர் இது மாதிரி ஜிம்மிக்ஸ் வேலைகளை வகுப்பு தொடங்கும் போது சொல்லி தொலைத்தது உண்டு. மேலும் சிடுமூஞ்சியாக இருப்பதை சிரத்தையாக இருப்பதாக தவறாக எண்ணிக் கொண்டு இருந்ததும் உண்டு.
நான் கொல்லிமலை பள்ளிக்கு நேர்காணலுக்கு சென்று இருந்த போது sample class எடுக்கும் போது நான் இயல்பாக சிரித்ததை "கணக்கு சார் சிரிக்கிறாருங்க சார்" என்று ஆச்சரியமாக பள்ளி முதல்வரும் தாளாளரும் பேசிக் கொண்டதாக அங்கே இருந்த எனது நண்பர் பின்பு ஒரு நாளில் கூறினார். "கணக்கு சார் னா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு சிரிக்க கூட மாட்டாங்க" என்கிற பொதுபிம்பம் இருந்திருக்கும் போல.
தற்போதுள்ள புதிய தலைமுறை ஆசிரியர்கள் ஒன்றும் சிடுமூஞ்சி கிடையாது இவர்களது மெத்தட் ஜனரஞ்சகமானது. அவர்களது வகுப்பில் சிரிப்புக்கு கேலி கிண்டலுக்கு பஞ்சம் இருக்காது.
"அறிவியல் பாடங்களின் ராணி கணிதம்" என்று சொல்வார்கள் அதற்கு ஏற்றார் போல் அறிவியல் புலம் நடப்பதற்கான பாதையை கணிதம் போட்டுக் கொண்டே செல்லும்.
ஆக கணித பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அறிவியலிலும் தேர்ந்த அறிவினை வலிந்து பெற்றுக் கொள்வது நலம். ஏனென்றால் கணித பாடத்தை எந்தெந்த துறைகளில் எவ்வாறெல்லாம் பயன்படுத்த போகிறோம், அறிவியலை தெளிவுற புரிந்துகொள்ள கணிதம் எந்தெந்த வகையில் எல்லாம் துணை நிற்கும் என்கிற விஷயத்தை பாடத்தின் ஊடாகவே சொல்லிக்கொண்டு சென்றோம் என்றால் வகுப்பறை சுவாரசியமாக செல்வதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு அறிவியல் கணிதம் இரண்டிலும் ஒரு தேடல் ஏற்படுவதற்கு உத்வேகத்தை கொடுக்கும்.
வகுப்பறைக்கு உள்ளே நுழைந்த மாத்திரத்தில் ஏதோ கிணற்றுக்குள் தலைகீழ் நீச்சல் அடிப்பதற்கு குதிப்பது போல் "தொபுக்கட்டீர்" என்று பாடத்துக்குள் குதித்து விடல் ஆகாது. மாறாக மாணவர்களின் மனதை அந்த பாடவேளைக்கு ஏற்றவாறு பதப்படுத்திவிட்டு துவங்க வேண்டும்.
முக்கியமாக புதிய பாடம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அந்தப் பாடத்தின் பயன்பாடுகள் இருக்கும் துறை சார்ந்த ஏதேனும் ஒரு சுவாரசியமான முடிச்சை எடுத்து போட்டு அவர்கள் முன்னால் அவிழ்க்க வேண்டும். அதற்கு பிறகு அந்த பாடம் மேற்கூறிய விஷயத்தின் பின்புலத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை கூறினோம் என்றால் பாடத்தின் முக்கியத்துவம் அறிந்து நிமிர்ந்து உட்கார வழி வகுக்கும் .
அதை விட்டுவிட்டு "டேய் இந்த பாடம் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ரொம்ப ஈசி கிடையாது, இதெல்லாம் ரொம்ப கஷ்டம், கவனமா படிக்கணும். நான் நடத்தும் போது ஒரு நிமிஷம் விடாம கவனமா பார்த்துகிட்டே வரணும் அப்பதான் உங்களுக்கு புரியும்!!" என்று துவங்கும் போதே ஒரு வெடிகுண்டை வீசினோம் என்றால் மாணவர்கள் பாடத்திலிருந்து சற்று விலகி நிற்க ஆரம்பித்து விடுவார்கள்.
என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு பாடத்தை துவங்குவது என்றாலும் சென்ற ஆண்டு பயன்படுத்திய அதே உத்தியை பயன்படுத்தியதே கிடையாது, ஒவ்வொரு ஆண்டும் அதை வெவ்வேறு விதமாக மேம்படுத்தி சுவாரசியத்தை கூட்ட முயலுவேன். மேலும் பாடத்தை துவங்குவதை இயக்குனர் திரைப்படத்திற்கான ஸ்கிரீன் பிளே எழுதும் நேர்த்தியோடு மனதுக்குள் வடிவமைத்து அதனை நூறு விழுக்காடு வகுப்பறையில் ஒர்க் அவுட் செய்வதற்கு முயல்வேன்.
Though I was a strict teacher, நான் கணிதம் எடுக்கும் வகுப்புகளில் கணிதத்தில் அதிக ஆவரேஜ் மார்க் கிட்டும், அதுபோல ஆங்கிலம் எடுக்கும் வகுப்புகளிலும் ஆங்கிலத்தில் அதிக மார்க் எடுப்பார்கள், எனது மாணவர்களில் பலர் கணிதத்தை படமாக எடுத்து படிக்கின்றார்கள் கணித ஆசிரியர்களாகவும் உள்ளார்கள்!!
ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பது என்பது சிடுமூஞ்சியாக இருப்பதல்ல, வேலையில் சரியாக இருப்பதுதான்!!
பாடங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில் உள்ளது அது சுலபமான படமாக ஆவது என்பது!!
பாடம் நடத்தும்போது சிரிப்பும் கும்மாளமுமாக இருக்குமானால் வகுப்பறை உயிரோட்டமாக இருக்கும் அங்கே நிச்சயமாக கற்றல் இனிதே நடக்கும்.
"இந்த பாடம் ரொம்ப கஷ்டம்ப்பா அதனால ஜாக்கிரதையா இருங்க, எல்லாரும் கவனமா கவனிங்க" என்று பீடிகை போட்டு ஒரு பாடத்தை துவங்கும் ஆசிரியருக்கு நிச்சயமாக அந்த பாடம் அவர் மாணவராக இருந்த காலத்தில் கடினமாக இருந்திருக்கும், அதே கஷ்டத்தை அவர் அறிந்தோ அறியாமலோ மாணவர் மனதிற்கும் கடத்தி விடுகிறார்!!
ஒரு விஷயத்தை நம்மால் தெளிவாக, சரியாக, முழுமையாக புரிந்து கொள்ள இயலவில்லை என்றால் நிச்சயமாக அந்த விஷயத்தை மற்றவருக்கு எளிமையாக சொல்லி புரிய வைக்க இயலாது என்பது மிகப்பெரிய உளவியல் உண்மை!!
இந்த உண்மையை அனைத்து பாட ஆசிரியர்களும் மனதில் நேர்மையோடு ஏந்திக்கொண்டு வகுப்பறைக்குள் சென்றோம் என்றால் பாடத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிரமாதமாக வந்துவிடும். அதற்குப் பிறகு பாடங்கள் மாணவர்கள் மனதில் ஹவுஸ் ஃபுல்லாக ஹிட் அடிக்கும்.
மு ஜெயராஜ்,
தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, நாகமங்கலம்.
Subscribe to:
Post Comments (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...
No comments:
Post a Comment