Wednesday, April 8, 2026

ஏஐ ன் வரவு ஆசிரியர் வேலைக்கு ஆபத்தா?

மு.ஜெயராஜ் தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, நாகமங்கலம், அரியலூர் மாவட்டம்.
ஏஐ ன் வரவு ஆசிரியர் வேலைக்கு ஆபத்தா? வரலாறு 1951 ல் ஐசக் அசிமோ என்கிற ரஷ்ய அறிவியல் புனைக்கதை எழுத்தாளர் "the fun they had" என்கிற பெயரில் ஒரு கதை எழுதி இருப்பார். நான் ஆங்கிலம் போதித்த காலத்தில் இந்தப் பாடத்தை நடத்தி உள்ளேன். டாமும் மார்கீ யும் அண்ணன் தங்கை ஆவர். கதை நடக்கும் காலகட்டம் 2150 என்பதாக குறிப்பிட்டு இருந்தார் என நினைக்கிறேன். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பள்ளி என்கிற தனியான ஒரு அமைப்பு கிடையாது மாறாக வீட்டில் ஒரு கணினி இருக்கும் அவர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட பாடங்களை நடத்துவதற்கு ஏற்றார் போல் கால அட்டவணை போடப்பட்டு பாடங்கள் படிப்பார்கள். தற்போது இருக்கும் குழந்தைகள் போலவே அந்த குழந்தைகளும் பள்ளியை வெறுக்கிறார்கள். அதுவும் மார்கி புவியியல் பாடத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்திக்கிறாள் கணினியும் அவளுக்கு அடுத்தடுத்து தேர்வுகள் வைத்து கொடுமை படுத்துகிறது. இறுதியில் ஒரு மெக்கானிக் வந்து பள்ளி கணினியை சரி செய்து புவியியல் அமைப்பில் இருந்த ஒரு குறையை நிவர்த்தி செய்து விடுவார் என்பதாக நீளும். இந்த நிலையில் வீட்டில் பரணில் இருந்து தான் ஒரு பேப்பர் புத்தகத்தை கண்டுபிடிக்கிறான் அதில் நமது காலகட்டத்தில் பள்ளியை பற்றி இருக்கிறது அதை எண்ணி ஏங்குகிறார்கள் என்பதாக முடியும். அதாவது 1951லேயே கணினியின் உதவி கொண்டு ஆசிரியர்களை இடப்பெயர்ச்சி செய்து விடலாம் என்கிற கற்பனை ஐசக் அசிமோவுக்கு வந்திருக்கிறது. ஆபத்து நம்மை நோக்கி வருகிறதா? செயற்கை நுண்ணறிவு என்பது என்ன? அதை நாம் எங்கேயாவது பார்த்திருக்கிறோமா? சாட் ஜிபிடி, ஜெமினி, டீப் சீக், பர்ப்ளெக்சிட்டி, க்ரோக், மெட்டா ஏஐ இதோடு மட்டுமின்றி பல பிரபல செயலிகள் தங்கள் பெயரில் ஒரு ஏஐ டூலை அறிமுகப் படுத்திய வண்ணம் உள்ளன. நாம் கூட டிசைன் டிசைனராக முகத்தை மாற்ற பயன்படுத்தி இருப்போம். (ஏஐ எவ்வளவு பெரிய ஆயுதம் ஆனால் அதில் நமக்கு முதுகும் பொறியல் தான் சம்மதம்) கட்டற்ற தரவு தளத்தில் இருந்து பொருத்தமான தகவல்களை கேட்பவரின் நோக்கம் அறிந்து செம்மை படுத்தி பணிவுடன் வழங்குவதோடு மேலதிக ஆலோசனைகளையும் வழங்குகிறது. சரி விஷயத்திற்கு வருவோம். செயற்கை நுண்ணறிவின் வரவு ஆசிரியப் பணிக்கு ஆபத்தா? அது நம்மை வேலையை விட்டு விரட்டி விடுமா? என்றெல்லாம் சிந்தனை வந்து போகிறது. ஆசிரியர்களிடம் “ஏஐ ஒரு சிறந்த ஆசிரியராக இருக்க முடியுமா? எந்த இடங்களில் அது நம்மை விஞ்ச முடியாது?” என்பது போல கேட்டிருந்தேன். இன்னும் நிறைய பேருக்கு செயற்கை நுண்ணறிவின் வலிமை சரிவர தெரியாத நிலை தான் உள்ளது. ஆனாலும் அதனால் ஒன்றும் நம்மை இடப்பெயர்ச்சி செய்ய முடியாது என்ற பதில் அச்சத்தின் காரணமாக அவசர கதியில் வந்து விழுகிறது என்பதை உணர முடிகிறது. மனித ஆசிரியர்கள் மாணவர்களை உணர்வு பூர்வமாக புரிந்து கொண்டு பாடம் நடத்துவார்கள் என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் முதன்மையான பதிலாக இருந்தது. மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள் என்பது அடுத்த நிலை பதில். செயற்கை நுண்ணறிவு தனது மாபெரும் தகவல் தளத்தில் கேமிக்கப் பட்டிருக்கும் முகங்களில் இருந்து சோகமான முகம், சோர்வான முகம், பசித்த முகம், ஆர்வமுள்ள முகம், சந்தேகமாக விழிக்கும் முகம், புரிந்த முகம், புரிந்தது போல நடிக்கும் முகம் அனைத்தையும் அறியும். மனித ஆசிரியருக்கு ஒரு நேரத்தில் ஒரு முகம் தான் தெரியும். ஆனால் ஏஐ ஒரே நேரத்தில் வகுப்பில் உள்ள அத்தனை பேரின் முகத்தையும் ஸ்கேன் பண்ணி தனது தரவு தளத்தில் உள்ள தகவல்களோடு ஒப்பு நோக்கி புரிந்து கொள்ளும். ஆசிரியரால் மாணவர்களின் தனிநபர் வேறுபாடு அறிந்து அனைவருக்கும் தனித்தனியே மதிப்பீட்டு வினாக்கள் தயாரிப்பது சிரமம். ஆனால் ஏஐ க்கு அது எளிது. ஆன் ஸ்க்ரீன் தேர்வுகளில் தேர்வின் போதே வினா புரியவில்லை என்றால் வேறு வடிவில் லைவ் ஆக மாற்றி வழங்க இயலும். முக்கியமாக கற்றலில் பின்தங்கி இருப்போர் மற்றும் அறிவுச் சவால் குழந்தைகளுக்கு சிறப்பான துணையாக ஏஐ ஆல் இருக்க இயலும். கல்வி புலத்தில் ஏஐ என்பது ஏதேனும் ஒரு ஹியுமனாய்டு ரோபோ அல்ல கற்பித்தலுக்கான தரவுகளோடும், குழந்தைகளை கையாள தேவையான நுணுக்கங்களோம் பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு விஷயம் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றால் அதனை நெருங்கிப் பார்த்து முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தால் அதனோடு நட்பாகி விடவேண்டும். பிறகு அதனைப் பயன்படுத்தி நமது வேலைகளை மேலும் செம்மை படுத்திக் கொள்ள வேண்டும். நான் என்ன பயன்படுத்தினேன்? பத்தாம் வகுப்பில் உள்ள 80 மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவச் சீட்டுகள் அடங்கிய ஒரு பிடிஎஃப் ஃபைலைக் கொடுத்து அனைத்து மாணவர்களின் தேர்வு எண், பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி இவற்றை அட்டவணையாக்கி தரச் சொல்லி கேட்ட மாத்திரத்தில் கிடைத்தது. இந்த விஷயங்களை பொறுக்கி எடுத்து தனி கோப்பு தயார் செய்ய எனக்கு நிச்சயமாக நிறைய நேரம் எடுத்திருக்கும். என்ன இவன் தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்திருக்கிறானே என்று விஷயமறிந்தவர்கள் நினைக்க கூடும். தேர்வறை வாரியாக தேர்வு எண்களை அட்டவணைப் படுத்துதல், ஆசிரியர்களின் பணி சார்ந்த விவரங்களை சீனியாரிட்டி படி தொகுத்தல் போன்ற வேலைகளுக்கு இனி எக்ஸெல் ஷீட் போட வேண்டாம். ஏஐ இடம் தரவுகளையும் ஆணையையும் கொடுங்கள் போதும். இவையெல்லாம் நிர்வாக ரீதியாக நான் முயன்று பார்த்த சில சின்னஞ்சிறு விஷயங்கள். எனது இணையரின் உடல்நலம் குறித்த ஸ்கேன் ரிப்போர்ட்டை கொடுத்து விளக்கம் கேட்டேன். பிரச்சனை மற்றும் மருத்துவ முறைகளை புட்டு புட்டு வைத்து விட்டது. ஆனாலும் உரிய மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள் அதுதான் சரியாக இருக்கும் என்கிற டிஸ்கிளைமரையும் தர தவறவில்லை. ஆர்வமுள்ள ஆசிரியர் ஒருவர் தனது கற்பித்தலை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள எதையாவது கற்க வேண்டும் என்கிற வேட்கையோடு ஏஐ யை அனுகினால் கற்பித்தலின் பல்வேறு படிநிலைகளை மிகச் சிறப்பாக திட்டமிட்டு தனது வகுப்பறை நிகழ்வுகளை சுவாரசியமானதாக மாற்றிக் கொள்ள முடியும். மாணவர்கள் எப்படி உபயோகிக்கிறார்கள்? என்ன பிரச்சனை? தற்போது மாணவ சமுதாயம் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு எந்த வேலைகளுக்கெல்லாம் பயன்படுத்தி வருகிறது. அதனால் ஏற்படும் நல்ல மற்றும் கெட்ட விளைவுகள் என்ன? பெரும்பான்மை மாணவர்கள் சிந்தனைச் சோம்பேறிகள் ஆகி வருகின்றனர். எந்த ஒரு எளிய சிக்கலாக இருந்தாலும் நேரடியாக ஏஐ இடம் சரண்டர் ஆகிவிடுகிறார்கள். அதை எடுத்து பார்த்து புரிந்து கொண்டு அவரவர் பாணியில் மீண்டும் சொந்தமாக முயன்று செய்து பார்த்தல் என்பதெல்லாம் கிடையாது. எழுத்துக்களை சரியாக உபயோகிப்பது மற்றும் எழுதும் கலைகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விடும் போல் தெரிகிறது. நேரடியாக பேச்சை எழுத்தாக்கி உள்ளே அனுப்புகிறார்கள். ஏஐ யும் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் சமாளித்து உதவி செய்கிறது. ஆக பல நுண்திறன்கள் தேய்ந்து மறைந்து போக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே கல்லூரி மாணவர்களிலே கூட ஏராளமானோர் இன்ட்ரோவெர்ட் ஆக முடங்கி இருக்கிறார்கள். இந்த ஏஐ மற்றும் அதீத திரைப் பயன்பாடு அவர்களது நிலையை மேலும் மோசமாக்கலாம். சோசியல் ஸ்கில்ஸ் எனும் பிறருடன் இயைந்து செயல்படும் திறன் இல்லாமல் போய்விடும். வேலை செய்யும் பருவத்தை அடையும் போதும் சமூக வாழ்க்கைக்கு தனித்து தயாராகும் போதும் பெரிய மன அழுத்தத்தை சந்திப்பார்கள். எனவே எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் நமக்கு நன்மை செய்யும் வேலைக்காரனாகவே வைத்திருக்க வேண்டும். மோசமான எஜமான் ஆகிவிட்டால் அத்தனையும் பாழ். உலக அளவில் பள்ளிகளில் ஏஐ எப்படி பயன்படுத்தப் படுகிறது?! சரி உலக அளவில் ஏஐ பள்ளிக் கல்வியில் எந்த விதமான பங்களிப்பை வழங்கி வருகிறது என்பது பற்றி தேடியபோது பெரும் எண்ணிக்கையிலான நாடுகள் இன்னமும் கல்வித்துறையில் ஏஐ பயன்படுத்துவது குறித்த தயக்கத்தோடு தான் இருக்கின்றன என்று அறிய முடிகிறது. சில நாடுகள் நன்றாகவே பயன்படுத்தி வருகின்றன. தென்கொரிய நாடு ஏஐ ஐ அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் பாடப்புத்தகங்களை அறிமுகப் படுத்தி உள்ளது. இது மாணவர்களின் பர்சனல் ஆசிரியர் போல செயல்பட வல்லது. அவர்களுக்கான பாடங்களை ஒவ்வொருவரின் தனித்த புரிதல் நிலைக்கு ஏற்ற வகையில் மாற்றி சொல்லித் தருதல். வெவ்வேறு கடின நிலைகளில் மதிப்பீட்டை ஒரு கணினி விளையாட்டு போல அமைத்து மாணவர்கள் விரும்பும் வகையில் சுவாரசியமாக்கி தருகிறது. பள்ளிக் கல்வி நிலையில் ஏஐ ஐ ஒரு கருவியாக பயன்படுத்துவதோடு அல்லாமல் பாடத்திட்டத்திலும் ஏஐ குறித்த பாடங்களை சேர்த்துள்ளார்கள். ஆசிரியர்கள் சமூக உணர்வுகள் பற்றிய கற்றலையும் செயல் திட்டங்களை மாணவர்களுக்கு வழங்க திட்டமிடுதலையும் பற்றி கவனத்தில் எடுத்துக் கொண்டால் போதுமானதாக கொரிய அரசு எண்ணுகிறது. சிங்கப்பூர் அரசாங்கம் மாணவர்களின் கற்றல் தளத்தில் சாக்ரட்டிக் ஏஐ துணைவன் (SACRATIC AI ASSISTANT) ஐ நிறுவியுள்ளது. இது மாணவர்களுக்கு விடைகளை அப்படியே தராமல் எளிய வினாக்களை எழுப்பி அவர்களை விடையை நோக்கி இட்டுச் செல்கிறது. அடுத்ததாக சிறுவினா விடைகளுக்கான பின்னூட்ட துணைவன் என்று ஒரு ஏஐ ஆசிரியர்களுக்கு துணையாக அமைத்துள்ளனர். இது மாணவர்களை சிறு வினாக்களுக்கு விடையளிக்கும் திறனை மதிப்பீடு செய்து கிரேடு வழங்குகிறது. ஒவ்வொரு மாணவரின் மதிப்பீட்டுக்கும் ஆசிரியர்களுக்கான பின்னூட்டம் வழங்குகிறது. சீனாவை பொறுத்தவரை நகர்புறம் மற்றும் கிராமபுறம் இடையே உள்ள கற்றல் நிலையில் உள்ள இடைவெளியை போக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது. அதற்கு ஏஐ துணைபுரியும் என்று நம்புகிறது. ”அணில் ஏஐ” (SQUIRRAL AI) என்கிற பெயரில் ஒரு மாபெரும் தரவுகளுடனான ஒரு அமைப்பை கட்டமைத்துள்ளது. தனிநபர் கற்பித்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மனித ஆசிரியர் போலவே நடந்து கொள்கிறது. மாணவர்கள் கடினமாக உணரும் பகுதிகளை கண்டறிந்து அதனை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமை படுத்தி கற்பிக்கிறது. சீனர்கள் ஆங்கிலத்தின் அவசியம் உணர்ந்து அதனை வெகு வேகமாக கற்று வருகிறார்கள். ஆங்கிலம் கற்பித்தலில் தானியங்கி மதிப்பீட்டு புலத்தை ஏஐ உதவியோடு கட்டமைத்து கற்றலை துரிதப் படுத்துகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் இங்கே மாநிலவாரியாக தனித்தனி பாடத்திட்டங்கள் உள்ளன. மாநிலங்கள் அவரவர் பொருளாதார நிலை சமூக நீதி மனப்பான்மைக்கு ஏற்றவகையில் பள்ளிக் கட்டமைப்புகள் உள்ளன. அவற்றில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்தும் முன்னோடிப் பள்ளிகளும் உள்ளன. ஆந்திராவில் மைக்ரோ சாஃப்ட் ஏஐ சிஸ்டம் மூலமாக இடைநிறுத்தம் ஆகும் மாணவர்களை முன்கூட்டியே கணிக்கிறார்களாம். தமிழகத்தைப் பொறுத்தவரை நவீன தொழில்நுட்பங்களை கடைக்கோடி கிராம அரசுப் பள்ளிக்கும் வழங்குவதில் முன்னணியில் நிற்கிறது. டிஜிட்டல் மயமான பாடத்தரவுகள், டிஜிட்டல் வடிவிலான கற்பித்தல் வளங்கள், EMIS மாதிரியான தரவு தளங்களில் உள்ள தரவுகள் மூலம் மாநிலம் முழுமைக்கும் ஆன புதிய திட்டங்களை தமிழக அரசு பள்ளிக்கல்விக்கு வழங்கி வருகிறது. தற்போது கட்டமைக்கப் படவுள்ள புதிய பாடத்திட்டத்தில் ஏஐ பற்றிய பாடங்கள் வர உள்ளன. மேலும் விரைவில் ஏஐ கற்றல் கருவிகள் அறிமுகப் படுத்தப் பட உள்ளன. ஃபின்லாந்து செயற்கை நுண்ணறிவு குறித்த தெளிவான கல்வியை மாணவர்களுக்கு வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவின் அல்காரிதம் மற்றும் அதன் இயங்குமுறை பற்றி மாணவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று ஃபின்லாந்து எண்ணுகிறது. அந்த நாடு கற்றல் குறைபாடு மற்றும் அறிவுச் சவால் கொண்ட மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துகிறது. மேலும் ஃபின்லாந்து யுனிசெஃப் உடன் கைகோர்த்து பல பின்தங்கிய நாட்டுப் பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த கற்பித்தல் திட்டத்தை வழங்க முன்வந்துள்ளது. அமெரிக்கா செயற்கை நுண்ணறிவு விஷயத்தில் என்ன செய்கிறது. ஏஐ யை பயன்படுத்துவதை விட ஏஐ யை பற்றி அறிந்து கொள்வதற்கான பாடத்திட்டங்களை அமெரிக்க அரசு பள்ளிகளில் ஏற்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவை ஆசிரியர்களுக்கு மாற்றாக பயன்படுத்துவதைக் காட்டிலும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஆசிரியர்கள் பயன்படுத்தி தங்கள் கற்பித்தலை மேம்படுத்திக் கொள்ள ஊக்கம் அளிக்கிறது அமெரிக்க அரசு. இங்கிலாந்து செயற்கை நுண்ணறிவை சற்று பாதுகாப்பு உணர்வோடு அனுகுகிறது. ஏராளமான தகவல்களாலோ அல்லது குழந்தைகளுக்கு பொறுத்தம் இல்லாத உள்ளடக்கங்களாலோ பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று சேஃப் கேம் ஆடுகிறது. அதே வேளையில் பள்ளிகளில் வழக்கமாக செய்யப் படும் அயர்ச்சி தரும் வருகைப் பதிவு, மதிப்பெண் பதிவேடு பராமரிப்பு மற்றும் பெற்றோருக்கு அனுப்ப மின்னஞ்சல் தயாரிப்பு போன்ற வேலைகளை செயற்கை நுண்ணறிவைக் கொண்டு முடிக்க தயாராக உள்ளது. ஜப்பானை பொறுத்தவரையில் செயற்கை நுண்ணறிவை பிரபலமாக்க சட்டமே இயற்றி உள்ளது. அவர்கள் செயற்கை நுண்ணறிவை வகுப்பறை துணைவனாக பார்க்கிறார்கள். AI PROMPT ENGINEERING என்கிற தலைப்பில் 50000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவோடு இயைந்த உள்கட்டமைப்பை பள்ளிகளில் உருவாக்கி வருகிறது. ஃபிரான்ஸ் அரசாங்கத்தை பொறுத்தவரையில் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தை தாங்கிப் பிடிக்க வல்ல தங்களுக்கான பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவை வடிவமைக்க விரும்புகிறார்கள். அப்படி அவர்களுக்கான பிரத்தியேக ஏஐ தளமான PIX IA ன் மூலமாக 8-12 வயதுவரை உள்ள 15 லட்சம் குழந்தைகளுக்கு கட்டாய பயிற்சி வழங்கியுள்ளது. மேலும் P2IA செயல்திட்டம் வாயிலாக துவக்கப் பள்ளி குழந்தைகளுக்கு என்று ஆறு விதமான ஏஐ பாட்களை அறிமுகம் செய்துள்ளது. கனடாவை பொறுத்துவரையில் ஏஐ நாம் சிந்திக்கும் விதத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்கிற விவாதத்தை முன்னெடுக்கிறது. நமக்காக சிந்திக்கும் செயற்கை நுண்ணறிவைக் காட்டிலும் நமது சிந்தனையை மேம்படுத்தும் விதமான செயற்கை நுண்ணறிவு பயன்பாடே முக்கியம் என்று அந்த நாடு கருதுகிறது. ஐக்கிய அரபு எமிரேட் ஓப்பன் ஏஐ நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு Chat GPT Edu என்கிற வெர்சனை அறிமுகப் படுத்தி உள்ளது. இது முழுக்க அரபு மொழியில் செயல்படும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைத்து வழங்கி உள்ளது. ஆசிரியர்கள் கவலை ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் முழுவதும் ஏஐ ஆதிக்கம் நிறைந்த வகுப்பறையில் அல்காரிதம்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வழிநடத்துபவர் என்பதாக சுருங்கிவிடுமோ என்கிற அச்சம் இருப்பதை உணர முடிகிறது. அவர்களது கம்பீரமான கற்பித்தல் முழக்கம் வகுப்பறையில் எதிரொலிக்காமல் போய்விடுமே என்கிற கவலை அவர்களுக்கு உள்ளது. செயற்கை நுண்ணறிவை கவனமாகவும் அதே வேளையில் நேர்மறை எண்ணத்துடன் அனுக வேண்டும். செயற்கை நுண்ணறிவை கற்றல் கற்பித்தலில் உள்ள இனிமையை நீர்த்துப் போய்விடச் செய்யாமல் மாறாக கற்பித்தலை இன்னும் சுவாரசியமாகவும் செறிவானதாகவும் மாற்றிட உதவும் கருவியாகவும் மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியத்தை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாளடைவில் கையில் இருக்கும் கருவி ஊன்றுகோல் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமா? ஆமாம், நிச்சயமாக, எந்த ஆசிரியர் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தனது கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொள்கிறாரோ அவர் தான் செயற்கை நுண்ணறிவை பற்றி கிஞ்சிற்றும் அறியாத புதுமையை வரவேற்க விருப்பம் இல்லாத ஆசிரியர்களை இடப்பெயர்ச்சி செய்துவிடும் ஆபத்து உள்ளது. புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள விழையும் ஆசிரியர்களின் பணிக்கு எப்போதும் ஆபத்து இல்லை. இறுதியாக, “டோண்ட் ஒரி பி ஹேப்பி” நீராவி எஞ்சின், டிரான்சிஸ்டர், கணினி, செல்போன் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் வந்தபோது அவற்றை அப்படியே வரவேற்பதில் சமூகத்தில் ஒரு அச்சமும் தயக்கமும் இருந்தது உண்மைதான். அவை வந்த பிறகு பல வேலைகள் மூட்டையை கட்டிக் கொண்டு சென்றதும் உண்மைதான். ஆனாலும் உலகம் அவற்றையும் வரவேற்று தன்னை நவீனமாக தகவமைத்துக் கொண்டு தானே முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் செயற்கை நுண்ணறிவை கைகுலுக்கி பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்.

No comments:

Post a Comment

ஏஐ ன் வரவு ஆசிரியர் வேலைக்கு ஆபத்தா?

மு.ஜெயராஜ் தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, நாகமங்கலம், அரியலூர் மாவட்டம். ஏஐ ன் வரவு ஆசிரியர் வேலைக்கு ஆபத்தா? வரலாறு 1951 ல் ஐசக...