Monday, April 13, 2026

Black(2005) இந்திப் படம்

Black - Hindi movie 2005 release Ott - Netflix
நான் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய காலகட்டத்தில் கணித பாடம் மற்றும் ஆங்கில பாடம் இரண்டையும் எடுக்க வேண்டி இருக்கும். 2004 சமயத்தில் ஆங்கில துணைப்பாடத்தில் Women empowerment என்கிற தலைப்பில் 7 பெண்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றிருக்கும். அதில் ஒன்று ஹெலன் கெல்லர் பற்றியது. ஹெலன் கெல்லர் ஒரு செவித்திறன் சவால் மற்றும் பார்வை சவால் உடைய மாற்றுத்திறனாளி. அவருக்கு ஆனி சல்லிவன் என்கிற ஆசிரியர் வீட்டில் இருந்தபடி பயிற்றுவிப்பார். செவித்திறன் சவால் உடைய குழந்தைகளுக்கான பள்ளி தமிழகத்தில் கூட ஹெலன் கெல்லர் பள்ளி என்று தான் அழைக்கப்படுகிறது ஜெயங்கொண்டம் அருகே குறுக்கு ரோட்டிலும் ஒரு பள்ளி உள்ளது. இந்த படத்தை பார்க்க துவங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் ஹெலன் கெல்லர் கட்டுரையில் இருந்த பல விஷயங்கள் வந்தன. ஹெலன் கெல்லர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து பல சம்பவங்களை திரைக்கதைக்குள் கொண்டு வந்திருந்தாலும் இது ஹெலன் கெல்லர் பற்றிய படம் அல்ல. கதைக்களம் சிம்லாவில் உள்ள ஒரு பெரும் பணக்கார மாளிகையில் விரிகிறது. மெக்நாலன் குடும்பத்தின் மூத்த பெண் குழந்தை மிஷல் செவித்திறன் மற்றும் பார்வை சவால் உடைய குழந்தையாக இருக்கிறது. மிஷலின் தாயார் கேத்தரின் அவருக்கு பயிற்றுவிக்க சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியரான தேவராஜ் சகாய் (அமிதாப்) ஐ பணியமர்த்துகிறார். முதலில் மிஷலுடன் போராடினாலும் மெல்ல மெல்ல இருவருக்கும் இடையில் நல்ல பிணைப்பு உருவாகிறது. தனது மனம் முழுதும் இருட்டு என்கிற ஒன்றையே வைத்திருக்கும் அந்த குழந்தையின் மனதுக்குள் அறிவு ஒளி பிரகாசிக்க துவங்குகிறது. அமிதாப்பின் நெடிய வற்புறுத்தலுக்கு பிறகு கல்லூரி நிர்வாகம் மிஷலை கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறது. அனைத்து பாடங்களுமே அவளுக்கு நன்கு தெரிந்திருந்தாலும் அதை தேர்வில் பிரெய்லி முறையில் தட்டச்சு செய்து வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் தேர்வினை சரியான நேரத்துக்குள் முடிக்க முடியாமல் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறார். இங்கே ஒரு விஷயத்தை கவனித்தாக வேண்டும். உலகம் முழுவதுமே மதிப்பீட்டு முறைகளில் மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமான அவர்கள் எந்த உணர்வை வெளிப்படுத்துகிறார்களோ அதன் வழியே மதிப்பீடு செய்ய இயலும் நெகிழ்வான ஒரு மதிப்பீட்டு முறையின் அவசியத்தை இந்த காட்சியின் வழி நாம் உணரலாம். இதற்கிடையில் ஆசிரியர் தேவராஜ்க்கு அல்சைமர் என்னும் மறதி நோய் மெல்ல மெல்ல வேகம் எடுக்கிறது. மிஷலின் தங்கை சாராவுக்கு திருமணம் நடைபெறுகிறது. கிருத்துவ முறைப்படியான திருமணத்தில் இணையர் இருவரும் உதட்டில் முத்தமிட்டு கொள்கிறார்கள். இதனை ஆசிரியர் மூலம் அறிந்து கொள்ளும் மிஷல் மிகுந்த வாட்டம் அடைகிறாள். தன்னை உதட்டில் முத்தமிட சொல்லி ஆசிரியரை வற்புறுத்துகிறாள். இந்த காட்சியை காணும் போது கல்லும் கரையும் வண்ணுக்ஷம் இருவரும் நடித்திருப்பார்கள். இந்த காட்சிக்குப் பிறகு தேவராஜ் லெட்டர் எழுதி வைத்துவிட்டு வெளியேறி விடுகிறார். பல ஆண்டுகள் போராடி மிஷல் படத்தின் இறுதியில் தனது பட்டத்தை பெற்றுக்கொண்டு வெற்றிக் களிப்புடன் பட்டமளிப்பு விழாவில் சைகை உரையாற்றுகிறார். இறுதி காட்சியில் தான் பட்டம் பெற்றதை பட்டமளிப்பு விழா உடையுடன் தேவராஜ் இடம் கூற மருத்துவமனைக்கு விரைகிறாள் அல்சைமர் முற்றிய நிலையில் இருக்கும் தேவராஜ் இந்த விஷயத்தை மட்டும் கண்டு கொள்வதாக உருக்கமாக படத்தை முடித்து இருப்பார்கள். மொழி படத்தில் ஜோதிகா சைகை மொழி பேசியதை பார்த்திருப்போம். கேட்கும் திறனும் பார்வை திறனும் இல்லாத நிலையில் மிஷல் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை இந்தப் படத்தில் மிஷலாக நடித்த ராணி முகர்ஜி மிகப் பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார். படத்தின் துவக்கத்தில் குடிகாரராகவும் இடையில் பொறுப்பான ஒரு ஆசிரியராகவும் இறுதியில் மறதி நோய் பாதிக்கப்பட்ட ஒரு வயதானவராகவும் சிறப்பாக நடித்திருப்பார் அமிதாப் பச்சன். படத்தின் கதை வறட்சியாக இருப்பதால் சூழலை ஜில்லென்று வைத்திருக்க வேண்டும் என்பதற்காக சிம்லாவில் படப்பிடிப்பை வைத்திருப்பார்கள் போலிருக்கிறது ஒளிப்பதிவு கொள்ளை அழகு. மிஷலின் தாயாரா கேத்தரீனாக நடித்தவரும் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த தைரியத்துடனும் மன உறுதியுடனும் விடாமுயற்சியுடன் வளர்த்தால் தான் அந்த குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தர முடியும். படத்தில் வரும் மிஷல் தனக்கென பிரத்தியேகமாக ஒரு ஆசிரியரை அமர்த்திக் கொள்ளும் அளவுக்கு மிகவும் வசதி படைத்த குடும்பத்து குழந்தை. இதே நிலையில் இருக்கும் ஒரு ஏழை வீட்டு சிறப்பு குழந்தைகள் நிலை என்னவாக இருக்கும் என்று ஒப்பிட்டு பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. தினந்தோறும் யாராவது ஒருவர் தூக்கிக் கொண்டுதான் பள்ளிக்கு வர முடியும் என்கிற சூழலில் இருந்த எனது மாணவர் ஒருவர் நன்கு படித்து முடித்து தற்போது மிகப்பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் வேலையில் உள்ளார். தற்போது பணிபுரியும் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளி வருகை பதிவேட்டில் மட்டுமே பெயரைக் கொடுத்துவிட்டு வீட்டிலேயே இருந்த ஒரு எழுந்து நடக்க இயலாத பெண் குழந்தையை பத்தாம் வகுப்பு சமயத்தில் ஆசிரியர் மூலமாக நேரில் விசாரித்தோம். அவ்வளவு தெளிவாக பேசுகிறார் வாசிக்கிறார் ஆனாலும் பெண் குழந்தை என்பதால் எளிதாக அவரது படிப்பு கைவிடப்பட்டது. நான் மேலே சொன்ன அந்த மாணவனுக்கு கிடைத்த மன உறுதி கொண்ட தந்தை பாவம் இந்த பெண்ணுக்கு கிடைக்கவில்லை. மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கான பயிற்சி மையங்கள் இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும். பொதுப்பள்ளிகளில் இது போன்ற குழந்தைகள் படிக்கும் போது அவர்களது ஆளுமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வருகிறது என்பதை நான் கண்கூடாக பல நிகழ்வுகளில் கண்டுள்ளேன் எனவே பொதுப்பள்ளியில் அவர்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு என்று பிரத்தியேகமான நெகிழ்வுத் தன்மை கொண்ட மதிப்பீட்டு முறையினை அறிமுகப்படுத்தி அந்த குழந்தைகள் கல்வி கற்க அரசாங்கம் பேருதவி புரிய வேண்டும்.

No comments:

Post a Comment

Black(2005) இந்திப் படம்

Black - Hindi movie 2005 release Ott - Netflix நான் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய காலகட்டத்தில் கணித பாடம் மற்றும் ஆங்கில பாடம் இரண்டையும...