Wednesday, May 27, 2026

Team work pays

அந்த மாணவி எட்டாம் வகுப்பு வரை எங்கள் பள்ளியில்தான் படித்தார். படிப்பில் சற்று பின்தங்கியிருந்ததால், அவரது பெற்றோர் திடீரென அவரை ஒரு தனியார் நிதி உதவி பெறும் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.
ஆனால், பத்தாம் வகுப்பு வந்தவுடனேயே அந்த மாணவிக்குப் புதிய பள்ளியில் சிக்கல் தொடங்கியது. அங்கு அதிகாலை முதல் மாலை வரை நடத்தப்பட்ட கடுமையான பயிற்சி வகுப்புகளையும், பள்ளியின் கெடுபிடிகளையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. விடுதியில் தங்கிப் படித்தவர், பின்னர் வீட்டிலிருந்தே பள்ளிக்குச் சென்று வரத் தொடங்கினார். "சரிவரப் படிப்பதில்லை, பயிற்சி வகுப்புகளுக்கு ஒழுங்காக வருவதில்லை" என்ற புகார்கள் அவர் மீது அடுக்கப்பட்டன. 'தங்கள் பள்ளியின் 100% தேர்ச்சி விகிதம் (Pass Percentage) இவளால் பாதிக்கப்பட்டுவிடுமோ' என்ற அச்சத்தில், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அவருக்கு மாற்றுச்சான்றிதழ் (TC) கொடுத்துப் பள்ளியை விட்டு அனுப்பிவிட்டார்கள். பொதுவாக, பத்தாம் வகுப்பின் பாதியில் வரும் மாணவர்களுக்கு எந்தப் பள்ளியிலும் சேர்க்கை தருவதில்லை. அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்துமே நூறு சதவீத தேர்ச்சியை நோக்கியே ஓடிக்கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம். அம்மாணவி எங்களிடம் வந்தபோது முதலாம் இடைப்பருவத் தேர்வு முடிந்து, காலாண்டுத் தேர்வும் நெருங்கியிருந்தது. அதனால், "மறுபடியும் பழைய பள்ளியிலேயே பேசிப் பாருங்கள்" என்று கூறி நான் முதலில் அவர்களைத் திருப்பி அனுப்பினேன். ஆனால், அவர்கள் மீண்டும் எங்களிடமே வந்ததால், மறுப்பு ஏதும் சொல்லாமல் அந்தப் பிள்ளையைச் சேர்த்துக்கொண்டோம். எதிர்பார்த்தபடியே, காலாண்டுத் தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், எங்கள் ஆசிரியர்களின் கூட்டுமுயற்சியால் அரையாண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார். தேர்வுகளுக்கு இடைப்பட்ட நீண்ட விடுமுறை நாட்களின் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல், எங்கள் ஆசிரியர்கள் தொடர்ந்து சிறப்புப் பயிற்சிகளை வழங்கினர். 'சாகப் போகும் நேரத்தில் சங்கரா சங்கரா' என்பது போல, அதுவரை புத்தகத்தைத் தொடாத மாணவர்கள் கூட, அந்தத் தேர்வு நேரப் பதற்றத்தில் விழுந்து விழுந்து படிப்பார்கள். அதை எங்கள் ஆசிரியர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆசிரியர்களின் அன்பான வழிகாட்டலாலும், தொடர் பயிற்சியாலும் அந்த மாணவி பொதுத்தேர்வில் 290 மதிப்பெண்கள் பெற்று மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்! வெற்றி பெற்ற மகிழ்ச்சியில், அந்த மாணவியின் தந்தை தன்னை வெளியேற்றிய பழைய பள்ளிக்குச் சென்று, மதிப்பெண் பட்டியலை அங்கிருந்த மேஜை மீது வைத்துள்ளார். "என் மகளைச் சுமை என்று வெளியில் அனுப்பினீர்களே... இதோ அவளது மதிப்பெண்! இந்த விபரத்தைப் போட்டு உங்கள் பள்ளி வாசலிலேயே நான் பேனர் வைக்கட்டுமா?" என்று பெருமிதத்தோடு, ஒரு சிறு மிரட்டலோடு கேட்டுவிட்டுத்தான் எங்களிடம் டிசி (TC) வாங்க வந்திருந்தார். எங்களிடம் மாற்றுச்சான்றிதழ் வாங்கிய போது, அந்தத் தந்தை மிகவும் உருக்கமாக நன்றி தெரிவித்தார். "சார், அடுத்த ஆண்டு நம்ம பள்ளிக்கு என்ன உதவி தேவை என்றாலும் நிச்சயமாகச் சொல்லுங்கள், நான் செய்கிறேன்" என்று நெகிழ்ச்சியோடு கூறிவிட்டுச் சென்றார். சனி, ஞாயிறு என்று பாராமல், தங்களின் சொந்த ஓய்வு நேரத்தைத் தியாகம் செய்து, மாணவர்கள் மீது அக்கறையும் அன்பும் காட்டிய எங்கள் ஆசிரியர்களின் உழைப்பை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். சில நேரங்களில், பயிற்சிக்கு ஏற்ற முன்னேற்றத்தைக் காட்டாத மாணவர்கள் மீது ஆசிரியர்கள் கோபப்படலாம், ஆதங்கப்படலாம். ஆனால், அவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் தங்களின் அன்பு வட்டத்திற்குள்ளேயே வைத்துப் பயிற்சியளித்த ஆசிரியர்களின் விடாமுயற்சியால், இந்த ஆண்டு எங்கள் பள்ளியின் சராசரி மதிப்பெண் 348 ஆக உயர்ந்துள்ளது! இன்று பள்ளிக்கு வந்து டிசி பெற்றுச் சென்ற இரண்டு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துச் சென்றபோது, என் கண்களிலும் அறியாமல் கண்களில் நீர் களுக் என்று முட்டிக்கொண்டது.

1 comment:

  1. களுக் வார்த்தை புதிது எனக்கு. மற்றபடி ரயல் ஆர்ட்டிகல்

    ReplyDelete

Team work pays

அந்த மாணவி எட்டாம் வகுப்பு வரை எங்கள் பள்ளியில்தான் படித்தார். படிப்பில் சற்று பின்தங்கியிருந்ததால், அவரது பெற்றோர் திடீரென அவரை ஒரு தனியார்...