Monday, July 15, 2019

புளியம்பழத்தின் கதை


ச்சீ ச்சீ இந்தக் கதை ரொம்பப் புளிக்கும்!!
புளிய மரத்தில் புளி உளுக்க ஏறியவர் தவறி விழுந்து மரணம்செய்தியை பார்த்ததும்பகீர்என்றது.
உடனே அம்மாவுக்கு போன் செய்துபுளி உளுக்க ஆள் கூப்பிடாதே வேணும்னா கீழ உழுவறத மட்டும் பொறுக்கிக்கஎன்று சொல்லிவிட்டேன்.
எங்க வீட்டு புளியமரத்துக்கு வயது 75 தாண்டி இருக்கும். தரையோடு செங்குத்தாய் வேர் பிடித்துநாட்டாமை விஜயகுமார்மாதிரி சும்மா கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும்.
அந்த வழியாக செல்வோருக்கு இளைப்பாற நிழலை வள்ளலாக வாரி இறைக்கும்ஏசிவசதியுடன். அவர்கள் வீட்டு கூரையில் கூட கதிரவன் ஒலி ஊடுருவும் ஆனால் எங்கள் மரம் கதிரவனின் ஒலியை தரை தொட அனுமதித்தது இல்லை.
மூன்று பேர் சேர்ந்தால் கூட கட்டியணைப்பது சிரமம். அவ்வளவு பருத்த மரம். நானும் சில புளிய மரங்களை பார்த்திருக்கிறேன்மண்டியிட்ட யானைகணக்காக கீழே வளைந்து தரையை தொட்டுக் கொண்டிருக்கும். பால் மறவா பாலகர்கள் கூட கிளை பிடித்து ஏறி ஊஞ்சல் ஆட அனுமதிக்கும்.
 இந்த விஷயத்தில் எங்கள் மரம் கண்டிப்பான பேர்வழி. பெரியவர்கள் கூட ஏணியின் உதவி இல்லாமல் அதன் கிளை பற்ற இயலா வண்ணம் ஓங்கி உயர்ந்தது. அருகில் உள்ள மாமரத்தில் நாங்கள் நுனிக் கொம்பு வரை ஏறி உள்ளதிலேயே கடைசி மாங்காய் வரை பறித்து தின்றிருக்கிறோம் ஆனால் இந்த புளியமரத்திடம் எங்களால் கடைசி வரை ஜெயிக்க இயலவில்லை.
புளியமரம் காய்க்கத் தொடங்கியவுடன் நாங்கள் மரத்தை அன்னாந்து ஏக்கமாய் பார்த்த வண்ணம் சுற்றி சுற்றி வருவோம். வடை சுட்டுக் கொண்டிருக்கும் அம்மா பிள்ளைகளுக்காக சுடும் போதே ஓரிரு வடையை ஏமாந்து போகக் கூடாதென்று எடுத்துக் கொடுப்பார். அதுபோல புளியமரம் எங்கள் மீது இரக்கம் கொண்டு ஒன்றிரண்டு செங்காயை வீசும். தரையில் வீழ்ந்தவுடன் பாய்ந்து சென்று எடுத்துக் கொள்வோம்.
செங்காய்புளியானது காயாக இருக்கும் போது ஓட்டுடன் ஒட்டி உறவாடும். செங்காயாகும் போது அந்த உறவு விரிசல் விடும்.
உங்கள் காதலியின் முகத்தை முற்றிலும் புதிய பரிமாணத்தில் காண வேண்டுமானால் அவளிடம் ஒரு புளியங்காயை கொடுத்து கடிக்கச் சொல்லுங்கள். அந்த புளிப்புத் தாங்காமல் அதே நேரம் அதில் கிரங்கி கண்மூடிஸ்ஸ்அப்பாமுகத்தை அஷ்ட கோணலாக்குவாள். புளியங்காயை பற்றி நினைக்கும் போதே நாவில் புளிப்பு உணரப்பட்டு நீர் சுரந்து விடும். புளியங்காய் பற்றிஉள்ளத்தால் உள்ளளும் தீதே“ , “ச்ச்..ட்அடச்சே கீ போர்டில் ரெண்டு சொட்டு எச்சில் விழுந்து விட்டதே.
செங்காய்பருவம் மனிதர்களின் குமரப்பருவம்(adolescent) மாதிரி. இந்தப் பருவத்தில் பையன்களும் பெண்களும் பாதுகாப்பாய் கரம் பற்றி இருந்த பெற்றோரிடம் இருந்து தங்கள் கரங்களை மெல்ல விடுவித்துக் கொள்வர். அது போல இது காரும் தங்களை பாதுகாத்த ஓட்டிலிருந்து மெல்ல புளி தங்களை விடுவித்துக் கொள்ளும். ஆனால் சுவையோ இனிப்பும் அல்லாது புளிப்பும் அல்லாத ஒரு கலவையான சுவை. கடிக்கும் போது மாவுமாதிரி வழுக்கிக் கொண்டு கொட்டை தனித்து பிரியும். எவ்வளவு கடும் புளிப்பு கொண்ட புளியை உடைய மரமாயினும் செங்காய் மட்டும் வெல்லக் கட்டி தான்.
புளி நன்கு பழுத்து விட்டால் ஓட்டினை முற்றிலும் விவகாரத்து செய்து உள்ளே ஒடுங்கிக் கொள்ளும். எங்கள் மரத்து புளியானது ஓடு என்னும் பெட்டியில் பத்திரமாக நரம்பினால் முடிந்து வைத்தபஞ்சாமிர்தம்என்று சொன்னால் அது மிகை அல்ல. அப்படி ஒரு இனிப்பு சுவை கொண்ட புளி . “யப்பா என்னா இனிப்புஎன்று சிறுவர்களின் கல்லடி படும் எங்கள் புளிகாய்த்த மரம்பழமொழி எவ்வளவு உண்மைகாய்த்த மரம் கல்லடி படும்
ஓடு உடைக்க வசதியாக இருக்க வேண்டும் என வாசலில் காய வைத்தால் பாதையோடு போவோர் வருவோர் எல்லாம் ஒன்றை எடுத்து விண்டு வாயில் போட்டு நாக்கு மற்றும் கன்னக் கதுப்புகள் மூன்றையும் உள்நோக்கி இழுத்து மொத்த இனிப்பையும் ஒரே உறிஞ்சில் சுவைத்து விட பேராசை கொள்வார்கள்.
புளிசாதம் செய்யும் சமையல் விற்பன்னர்கள் எல்லோரும் புளிரசம் வைத்தபின் சிறு துண்டு வெல்லக்கட்டியை போடுவார்கள் சுவை கூட்டுவதற்காக. ஆனால் எங்க மரத்துப் புளியை கரைத்து ஊற்றினால் போதும் புளி ரசத்திற்கு ஒரு தனி சுவை வந்துவிடும். பிரச்சினை என்னவென்றால் இந்த சுவை ரகசியம்எங்கள் ஊர் அறிந்தஒன்று. சற்று தாமதித்தாலும் காற்றில் இற்று விழும் புளியம் பழங்கள் எங்களுக்கு சொந்தமில்லை. இதன் பொருட்டு எங்கள் அம்மா ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுவார்.
புளியம் பழத்தில் இருந்து ஓடு நீக்குவது சற்று கடினமான விஷயம். காம்பினை சுற்றிலும் லேசாக தட்டி அப்படியே கூடாக பிரித்துவிடலாம் என்று எண்ணாதீர்கள். முதல் மரியாதை படத்தில் சிவாஜி மீன் சாப்பிடுவது மாதிரியெல்லாம் இதில் பண்ண இயலாது. நான் பல முறை முயன்று இருக்கிறேன். அரை ஓடு கூடாக வந்தாலே பெரும் வெற்றிதான். தரையில் ஒரே தட்டு தட்டிசினிமாவில் வில்லன் அடி வாங்கி விழும் போது நொறுங்கும் இற்றுப் போன மரச் சாமான்கள்போல நொறுக்க வேண்டும் பின்பு புளியோடு ஒட்டியிருக்கும் சில ஓட்டுத் துகல்களை தட்டிவிட்டு தனியே போட்டு விட வேண்டும்.
அதன் பின்னர் கொட்டை எடுத்தல்ரொம்ப கஷ்டம்கையில் எண்ணை தடவிக் கொண்டு ஒரு கோணி ஊசி அல்லது ஊக்கு கொண்டு கீறி பிதுக்கி எடுக்க வேண்டும், ’வயிற்றில் ஒரு கீறு கீறி பிள்ளையை வெளியே எடுக்கும் மருத்துவரின் லாவகத்துடன்’ . புளி கொட்டை எடுக்கும் போது வீடெங்கும் புளியங்கொட்டை கறுப்பு முத்துக்களாய் சிதறி கிடக்கும்.
பிறகு மரத்துக்கும் புளிக்கும் தொப்புள் கொடி பந்தமாய் இணைக்கும்  நரம்பினை நீக்குதல். காம்பினை பிடித்துக் கொண்டு புளியினை இழுத்தால் பிரிந்து விடும். அந்தக் காம்பினைத் தூக்கி எறிந்து விடுவதில்லை. அந்த நரம்பு மண்டலம் எங்கள் வீட்டுக் குழம்புக்கு ஒரு மண்டலம் புளி வழங்கும்.
அடுத்து புளியங்கொட்டை அதை என்ன செய்வது? அது அடுத்த பதிவில். இதுவே சற்று நீண்டு விட்டது. இப்போதெல்லாம் பதிவு பதினைந்து வார்த்தைகள் தாண்டி விட்டாலே இளைய தலைமுறையினர் தாண்டி போய் விடுகிறார்கள்.

Sunday, June 2, 2019

கல்விப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி



அப்போது நான் பட்டதாரி கணித ஆசிரியராக இருந்த காலம். எனது வகுப்பில் ஒரு வழக்கு வந்தது.
 “சார் இவன் என்னை பட்டப் பெயர் இட்டு அழைக்கிறான் சார்”
“அப்படியாப்பா, என்ன பெயர் இட்டு அழைக்கிறான்?”
“தக்காளின்னு சொல்றான் சார்”
“டேய் இனிமே நம்ம தக்காளியை யாரும் தக்காளின்னு சொல்லக்கூடாது” என்று கூறியதும் வகுப்பே சிரிப்பலையில் மூழ்கியது.
“என்னடா தக்காளி, உன்னை யாரும் தக்காளின்னு கூப்பிட மாட்டாங்க” மறுபடியும் சிரிப்பலை.
“சார் என்ன சார் நீங்களே…”
“ஏன்டா நான் உன்னை தக்காளின்னு கூப்பிடக் கூடாதா?“
“நீங்க கூப்பிடலாம் சார்” என்றான் வெட்கத்தில் நெளிந்தபடி.
மற்றொருமுறை வகுப்பே அமைதியில் உரைந்திருக்க வருகைப் பதிவு எடுத்துக் கொண்டு இருந்தேன்.
“ராகுல்“
“எஸ் சார்“
”ரஞ்சித்“
“எஸ் சார்”
“கும்கி” என்று விளித்தவுடன் வெடித்த சிரிப்பலை அடங்க ஐந்து நிமிடம் ஆனது. அப்புறமும் சர வெடி வெடித்து முடிந்த பின்பும் வரும் ஓரிரு வெடிச் சத்தம் போல சிரிப்பு தொடர்ந்த வண்ணம் இருந்தது. ஒரு வழியாக அந்த வகுப்பின் இறுக்கம் தளர்ந்தது.
“சார், என்னங்க சார்” என்று நெளிந்தான் கும்கி என்கிற சற்றே பருத்த மாணவன்.(இன்றளவும் எனது பழைய மாணவர்கள் பல பேரின் பட்டப் பெயர்கள் மட்டுமே நினைவில் உள்ளது)
மாணவர்களுக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி இப்படியாக நெருக்கம் ஆகிவிடும். அப்புறம் சிறு விடுமுறை முடிந்து போனால் கூட ”என்ன சார் லீவு போட்டுட்டீங்க” என்று அன்பாக கேட்பார்கள்.
நானும் கூட ’எப்போது வகுப்புக்கு செல்வோம்’ என்கிற ஏக்கத்தோடு இருப்பதுண்டு.
மாலை வேளைகளில் மாணவர்கள் சோர்ந்திருக்கும் வேளைகளில் நாங்கள் பாடத்தை தவிர்த்து பல விஷயங்களை பேசுவோம். அந்த வேளைகளில் இது வரை வகுப்பில் பேசாத மாணவர்கள் எல்லோரும் பேசுவார்கள். அது முற்றிலும் ஒரு தயக்கமற்ற கேள்வி பதில் நேரமாக சுவாரசியமாக செல்லும்.
என்ன பேசுவோம் அப்படி?!!
மாணவர்களின் கரம் பிடித்துக் கொண்டு நிலவு, சூரியன், செவ்வாய் கிரகம் ஏன் சூரியமண்டலம் தாண்டிக் கூட சென்றது உண்டு.
இளையராஜாவின் இசையமுதை எப்படி பருகவேண்டும் என்று கூட பேசி இருக்கிறோம்.
ஆங்கிலத் துணைப்பாடம்(women empowerment) நடத்தும் போதெல்லாம் உலக அளவிலான பெண் ஆளுமைகளின் சாதனைகளை கதைத்தது உண்டு.
யார் மனசுல யாரு (21 yes or no type questions கொண்டு மாணவர்கள் மனதில் நினைக்கும் ஆளுமைகளை 21 வது கேள்விகளுக்குள் இறுதி செய்து கண்டு பிடிக்கும் விளையாட்டு) கூட விளையாடி இருக்கிறேன்.
துப்பறியும் சாம்பு கதைகள் உள்ளிட்ட நான் படித்த மாணவர்களிடம் பகிரத்தக்க கதைகளை பேசியிருக்கிறேன்.
அவர்களுக்கு சொல்வதெற்கென்றே நான் நூலகத்தில் நிறைய நூல்கள் எடுத்து படித்தேன்.
இதனால் என்ன பயன்?
இந்த வகையான பாடம் தாண்டிய உரையாடல்கள் மாணவர்களுக்கும் எனக்குமான இடைவெளியை குறைத்தது. என்னை முழுமையாக நம்பி எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். எனது பாடம் அவர்களின் மிகப் பிடித்த பாடமாகிப் போனது. (பாத்தீங்களா பொதுநலத்தில் ஒரு சுயநலம்)
அடுத்தது ”ஹீரோ பேனா”
வகுப்பில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்போருக்கு நான் வழங்கும் பரிசுதான் அது. பொதுத்தேர்வு என்று இல்லை, காலாண்டு அரையாண்டு பரிட்சையில் கூட வழங்குவது உண்டு.
சில முறை மெல்லக் கற்போருக்கு தனிப்பட்ட இலக்கு (30, 35, 40) நிர்ணயித்து பேனா பரிசு வழங்கியது உண்டு.
“உங்க கிட்ட பேனா பரிசு வாங்கியே ஆக வேண்டும் என்று சத்தியம் செய்து படித்து இருக்கிறோம் சார்” என்று பின்னாட்களில் எனது மாணவர்கள் கூறக் கேட்ட போது அகமகிழ்ந்து போனேன்.
பரிசு கூட வேண்டாம், பாராட்டு என்பது நம் கையில் உள்ள தங்க காசு போன்றது. தயக்கமில்லாமல் அதை அள்ளி அள்ளி வீச வேண்டும். நன்கு படிப்போர் மெல்லக் கற்போர் என அனைவரையும் பாராட்டி அவர்களின் செயல்களை அங்கீகரிக்க வேண்டும். அது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
முற்றிலும் தவிருங்கள்
ஆசிரியர்கள் புகை மது என்று எந்த விதமான கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் ஆட்படாமல் இருப்பது உத்தமம்.
குறைந்தபட்சம் அந்த பழக்கங்களை தமது மாணவர்கள் அறியாவண்ணம் வைத்திருப்பது நல்லது.
MORAL VALUES ஐ அவர்கள் பெரிதாக எண்ணவும் பின் பற்றவும் நாம் அவர்களுக்கு INSPIRATION ஆக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சாரே செய்கிறார் நாம் செய்து பார்த்தால் என்ன என்று எண்ணுவார்கள். ஒழுக்கத்தின் எல்லைகளை மீற முயல்வார்கள்.
முக்கியமாக நமது மது அல்லது புகை போன்ற தீய பழக்க வழக்கங்களை மாணவர்கள் காதில் விழும் வண்ணம் சாகசம் போலக் கூறுவதை தவிர்க்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும் எனது அனுபவப் பாடங்கள். ஆசிரியப் பெருமக்களாகிய நாம் இந்தக் கல்விப் புத்தாண்டில் நம்மை இன்னும் மேம்படுத்தி மெறுகேற்றிக் கொண்டு மாணவர்களுக்காக நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்வோமாக என்று கூறி எனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்.


Saturday, June 1, 2019

இந்தி – தேவையான ஆணியா தேவையில்லாத ஆணியா???


எனது நண்பர் ஒருவர், “சார் இந்தி கற்க விடாம ஒரு தலைமுறையையே நாசம் செய்து விட்டார்கள் இந்த திராவிட ஆட்சியாளர்கள்”
“ஏன் நீங்க தனிப்பட்ட முறையில் இந்தி கத்துக்கறத வேணாம்னு யாரும் சொன்னாங்களா?”
“இல்ல சார் ஆனா ஸ்கூல்லயே படிச்சாக்க நல்லாருக்கும்ல”
“ஆமாம், ஸ்கூல்லதான் 3 ம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் படிச்சிங்கல்ல இப்போ ஆங்கிலத்துல உங்களால பேசமுடியமா?”
“சார், அது வந்து…”
“உங்களால புரிஞ்சுக்க முடியும் பேசவும் முடியும் அதற்கான சூழல்ல இருந்தா ஒரு மாதத்தில் உங்களால் சரளமாக பேசமுடியும்”
“ஆனா வந்து இந்தி பற்றிய அடிப்படை தெரிஞ்சிக்கலாம்ல”
“ஏன் இந்தியில எதாவது இலக்கியம் படைக்க போறீங்களா?, நீங்க ஆர்வ மிகுதியில் எந்த ஒரு மொழியையும் சொந்தமாக கற்றுத் தேற இயலும், அதற்காக அந்த மொழியை பள்ளிப் பாடத்தில் வைக்கணும்னு சொல்லி பீதிய கௌப்பாதீங்க”
மேலே இருக்கும் உரையாடல் இருக்கட்டும், எதற்காக இந்தியர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும்??
இந்தியாவை ஒரு துணைக்கண்டம் என்று சொல்வதற்கு காரணம் சைஸ் மட்டும் இல்லை, இங்கே பலதரப்பட்ட பழக்க வழக்கங்களும் கலாச்சாரங்களும் உள்ள மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக உள்ளார்கள் என்பதால் தான். அதையெல்லாம் மழுங்கடித்து ஒற்றை மொழி ஒற்றை கலாச்சாரம் என்கிற புள்ளியை நோக்கி நெட்டித்தள்ளி இந்தி – இந்து – இந்தியா என்று சொல்லி மார்தட்டும் முயற்சியாகவே இந்த இந்தி திணிப்பை நான் பார்க்கிறேன்.
என்ன தான் பாஸ் உங்க பிரச்சனை பள்ளியில இந்தி பாடத்தை கட்டாயம் கொண்டுவந்தால் மாணவர்களுக்கு நல்லது தானே?
ஆமாம் ஏற்கனவே இருக்கும் அயல்மொழி ஆங்கிலத்தை அப்படியே ”அறுத்து தள்ளிட்டாங்க”!!
ஏற்கனவே அயல்மொழியான ஆங்கிலம் மாணவர்களுக்கு ஒரு அச்சுறுத்தும் கொடுங்கனவாகவே உள்ளது. அதனோடு இந்தியையும் சேர்த்து மாணவர்களின் பாடச்சுமையை ஏன் அதிகப் படுத்த வேண்டும். தேவைப்படுவோர் தனியாக கற்றுக் கொள்ளட்டும். எதற்காக கட்டாயப்படுத்த வேண்டும்.
இதில் இன்னொரு நுணுக்கத்தையும் பார்க்க வேண்டும். வட இந்தியாவில் உள்ள பல மொழிகளின் எழுத்துக்கள் யாவும் இந்தி போன்ற வடிவம் உள்ளவை. அவர்களின் மொழி வழக்குகளில் கூட பல சொற்கள் இந்தி போலவே இருக்கும். மேலும் இஸ்லாமியர் பேசும் மொழியும் இந்தி போலவேத்தான் இருக்கும். இருவரும் எளிதாக புரிந்து கொள்வார்கள். எனவே வட இந்திய மாநிலத்தவருக்கு இந்தி மொழி கற்பது எளிது. நமக்கு இந்தி முழுக்க முழுக்க அந்நியம். ஒரு தொடர்பும் இல்லை. எனவே இந்தி பேசும் பல மாநிலத்தவருக்கு இந்தி மிக எளிது. நமக்க கடினம்.
மேலும் நாம் ஏன் இந்தி கற்க வேண்டும்?
இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் இந்தியாவில் தேசிய மொழி என்கிற அந்தஸ்தெல்லாம் கிடையாது. இந்தியும் ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழிதானே ஒழிய தேசிய மொழியெல்லாம் கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
திராவிடக் கட்சிகளின் நிலைப்பாடு “இந்தி எதிர்ப்பு“ என்று தவறாக தலைமுறைகள் தாண்டி பரப்ப பட்டு வருகிறது. அது “இந்தி திணிப்பு எதிர்ப்பு“ என்றுதான் கூறப்பட்டிருக்க வேண்டும். யாரும் இந்தி படிக்காதீர்கள் என்று யாரும் கத்தியைக் காட்டி மிரட்ட வில்லை, மாறாக பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் இந்தியை கட்டாயமாக்கி திணிக்காதீர்கள் என்று தான் போராடினார்கள்.
இந்தி திணிப்பு எதிர்ப்பை பற்றி புரிந்து கொள்ள இதன் ஆரம்ப கால வரலாற்றை தெரிந்து இருப்பது அவசியம்.

1938ல் ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு இந்தி கட்டாயம் என்கிற அரசாணையை வெளியிடுகிறது. மறைமலை அடிகளார், சோம சுந்தர பாரதியார் மற்றும் தந்தைப் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் பெரிய போராட்டம் வெடிக்கிறது. அதில் கைது செய்யப் பட்ட நடராசன் என்கிற மாணவரும் தாளமுத்து என்பவரும் உடல்நலம் குன்றி இறந்து போகிறார்கள். 1940ல் எதிர்ப்புகளுக்கு பணிந்து அந்த அரசாணை வாபஸ் பெறப்படுகிறது.
1948ல் ஓமாந்தூரார் தலைமையிலான அரசும் இந்தி திணிப்பை அரசாணையாக வெளியிட மறுபடியும் எதிர்ப்பு வலுக்கிறது. பிறகு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடரும் என்று அரசாணை மாற்றி வெளியிடப் படுகிறது
இதன் பிறகு நேருவின் அமைச்சரவையில் 1963ல் ஆட்சி மொழி மசோதா சட்டமாக்கப் படுகிறது. அதன்படி ”26.01.1965 முதல் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும்” என்பது சட்டம்.
1965ம் ஆண்டு நெருங்க நெருங்க போராட்டம் தீவிரமடைகிறது. கீழப்பழூர் பேருந்து நிலையத்தில் ஒரு சிலை இருக்கும் அது யார் தெரியுமா?
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திருச்சி இரயில் நிலையத்தில் தீக்குளித்து இறந்து போன கீழப்பழூரைச் சேர்ந்த சின்னசாமி என்ற மொழிப்போர் தியாகியின் சிலைதான் அது.
27.01.1965ல் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதில் சிவகங்கையைச் சேர்ந்த இராசேந்திரன் என்கிற மாணவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகிறார்.

இந்தி எதிர்ப்பு போரில் பொள்ளாச்சியில் நடைபெற்ற போராட்டம் தான் முதன்மையானது. அங்கே தபால் அலுவலக இந்தி பெயர்ப் பலகையை தார் கொண்டு அழிக்க முயன்ற சிறுவன் ஒருவன் இராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி குண்டுக்கு பலியானான். அதன் பின்பு வெடித்த போராட்டத்தில் இராணுவம் மற்றும் காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு நூற்றுக் கணக்கானோர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. 1965 பிப்ரவரி 12 பொள்ளாச்சி படுகொலை நாள் என்றே வரலாற்றில் பதியப் பட்டுள்ளது.
முதன் முதலில் கட்டாய இந்தி மசோதாவை கொண்டு வந்த ராஜாஜியே கூட சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். 50 நாட்களுக்கு மேலாக நடந்த போராட்டம் மார்ச் 15 1965 ல் முடிவுற்றது.
அதற்கு பிறகான சட்டப் பேரவைத் தேர்தலில் தான் 1967 ல் காமராஜர் பெ.சீனிவாசன் என்கிற மாணவரிடம் தோல்வியுற்றார். இந்தி திணிப்பை கையில் எடுத்த காங்கிரஸ் அப்போது வீழ்ந்தது தான் அதன் பின்பு தமிழ் நாட்டில் எழவே இல்லை.
இறுதியாக இந்திராகாந்தி பிரதமராக இருக்கும் போது இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலமும் தொடரும் என்று அந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
நாம் இந்தியை விடுத்து ஆங்கிலத்தை தழுவியதால் தான் “திரைகடல் ஓடியும் திரவியம் தேடுகிறோம்” ஆம் நம் மாநிலத்தவர் அநேகம் பேர் அயல் நாடுகளுக்கு சென்று நல்ல சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். மாறாக இந்தி கற்றிருந்தால் பின் தங்கிய மாநிலமாகி மோடிக்கு வாக்களித்துக் கொண்டு இருந்து இருப்போம்.
இறுதியாக இன்னும் தெளிவாக சொல்கிறேன், இந்தி பிரச்சார சபா மூலமாக வெறும் பத்து ரூபா செலவில் யார் வேண்டுமானாலும் இந்தி கற்றுக் கொள்ளலாம் ( இது 1923 முதலாகவே இந்தி கற்றுத் தருவதற்காக சென்னையில் இயங்கி வருகிறது.) அதற்காக கட்டாயப் படுத்தி திணிப்பது தவறு.
எனது நிலைப்பாடும் திராவிட கட்சிகளின் நிலைப்பாடும் (அ.இ.அ.தி.மு.க இப்போது திராவிடக் கட்சியாக உள்ளதா என்பதே கேள்விக்குறியது) இது தான் ”எந்த மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள் இந்தி உட்பட, ஆனால் இந்தி தான் அலுவலக மொழி இந்தியை பள்ளியில் கட்டாயமாக்குங்கள் என்கிற இந்தி திணிப்பை இப்போதும் எதிர்க்கிறோம் இன்னும் தீவிரமாக”

Wednesday, May 15, 2019

கருந்துளை என்னும் பெருந்துளை – 3



முன்குறிப்பு: முதல் பகுதியில் கருந்துளை என்றால் என்ன என்று முடிந்த அளவில் இலகுவாக விளக்கியிருப்பதாக எண்ணுகிறேன்.
     இரண்டாம் பகுதியில் கருந்துளை என்கிற கருத்தாக்கம் முதன் முதலில் யாருடைய மனதில் சூல் கொண்டது யாரெல்லாம் அதனை வளர்த்து எடுத்தார்கள் என்று பார்த்தோம். அது இன்னும் முடியவில்லை. இந்திய விஞ்ஞானி ஒருவரின் பங்களிப்பு பற்றி கூறுவதாக சொல்லி இருந்தேன். அங்கே ஆரம்பித்து தொடர்வோம்.
சுப்பிரமணியன் சந்திர சேகர் யார்?
     இவர் இந்தியாவில் இருந்து நோபல் பரிசு வென்ற இயற்பில் அறிஞர் சர்.சி.வி.இராமன் அவர்களின் நெருங்கிய உறவினர்.
அவர் அப்படி என்ன கண்டுபிடித்தார்?
     சூரியனின் நிறையைப்போல் 1.4 மடங்கு வரைக்கும் உள்ள வெள்ளைக் குள்ள விண்மீன் நிலைத்து இருக்கும். அந்த 1.4 மடங்கு என்கிற எல்லையை கண்டி தாண்டுச்சுன்னா போச்சு அம்புட்டுதான் அப்புறம் அது தன்னுள் தானே சிதைந்து சுருங்கி நியுட்ரான் ஸ்டாராகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிப்பூடும்.
யப்பா கொஞ்சம் இரு கொஞ்சம் இரு, என்னா நீ பாட்டுக்கு வெள்ளைக் குள்ளன் கருப்பு குள்ளன் என்கிற, நியுட்ரான் நட்சத்திரம் என்கிற ஒண்ணுமே வௌங்களயேப்பா?!!
அதுக்கு முதல்ல இந்த நட்சத்திரம் எல்லாம் எப்படி உண்டாச்சுன்னு பூர்வீகத்தலாம் தோண்டனும். வரலாறு முக்கியம் அமைச்சரே!
A Brief History of Time (காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்) என்கிற நூலில் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் அழகா விவரிச்சி இருக்காரு.
“பால் வீதியில் உள்ள பெரும் அளவிலான வாயு மேகங்கள் (பெரும்பாலும் ஹைட்ரஜன்) தன் ஈர்ப்புக் கவர்ச்சியின் காரணமாக தங்களுக்குள்ளாகவே முட்டி மோதி தகர்வுறத் தொடங்கும் போது ஒரு விண்மீன் உருவாகிறது”
இப்படியே அவை தனக்குத் தானே மோதி சுருங்கும் போது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் கூடிக் கலந்து ஹீலியம் என்கிற வாயு உருவாகிறது. இதற்கு பெயர் தான் அணுக்கரு இணைவு. அதாவது ஹைட்ரஜன் பாம் மாதிரி.
ஆமாம், ஐன்ஸ்டீனின் நிறை ஆற்றல் சமன்பாடு காரணமாக அதிலிருந்து கட்டற்ற பேராற்றல் வெளிப்படுகிறது. இந்த வெப்ப உமிழ்வால் தான் வின்மீண்கள் ஒளிர்கின்றன. அதே வழியில் தான் சூரியனும் ஒளிர்கிறது. சூரியனிலும் இதே பொழப்புதான் நடக்கிறது. அங்கே இருக்கிற ஹைட்ரஜன் அணுக்கள் கூடிக் கலந்து ஹீலியமாக ஆவதோடு பேராற்றலையும் வெளிப்படுத்துவதால் நமக்கு வெளிச்சமும் வெப்பமும் சூரியனில் இருந்து கிடைத்துக் கொண்டு இருக்கிறது.
அப்படியா?
அப்படித்தான், ஆனா இங்கயும் ஒரு அழகான இயற்கை நுட்பம் அந்த நட்சத்திரத்தை நிலைத்திருக்க வைக்கிறது.
நான் முதலில் ஹைட்ரஜன் அணுக்கள் தங்களுக்குள் மோதி தகர்வுற்று சுருங்கியபடி செல்கிறது என்றேன் அல்லவா?
ஆமாம்.
அப்படி உள்நோக்கி சுருங்கியபடி செல்லும் நிகழ்வானது ஒரு சமரசத்திற்கு வரும் நுட்பம் ஒன்று உள்ளது.
அப்படியா அது என்னாது?
அணுக்கரு இணைவில் உருவாகும் வெப்பமானது அவை ஒன்றுடன் ஒன்று தகர்வுற்று நொறுங்கி சுருங்கும் நிகழ்வைத் தடுக்கிறது.
ஒண்ணுமே பிரியலையேப்பா!!
“பலூன் உள்ளே இருக்கும் காற்றழுத்தம் பலூனை பெரிதாக்க முயலுகிறது, பலூனின் ரப்பர் இழுவை சிறிதாக்க முயலுகிறது. இந்த இரு முயற்சிகளுக்கும் இடையே ஒரு சமரசம் ஏற்படுவதால் பலூன் நிலைத்திருக்கிறது” இது புரிகிறதா, இதே மெக்கானிசம் தான், வெப்பம் அணுக்களை விலக்கியிருக்க வைக்கிறது, அதே நேரத்தில் ஈர்ப்பு விசை இணைக்க முயலுகிறது. இந்த சமரசம் தான் வின்மீண்கள் நிலைத்திருக்க காரணம்.
விண்மீன் தோன்றியது சரி, அப்புறம் இந்த வெள்ளைக் குள்ள நட்சத்திரம்னு சொன்னிங்களே?!
குந்தித் தின்றால் குன்றும் மாலும் அல்லவா? அதே போலத்தான் விண்மீனில் இருக்கும் ஹைட்ரஜன் எல்லாம் இணைந்து இணைந்து ஹீலியமா மாறிப் போச்சுனு வைங்க அப்புறம் என்னாகும்?
சூரியன் டக்குன்னு கருப்பாயிடுமா?
உள்ளே இருக்கும் எரிபொருள் (ஹைட்ரஜன்) தீரும் நிலை வரும் போது அதன் வெளிவட்டம் விலகிப் போய் விடும் மீதம் உள்ள உள்வட்டப் பகுதி சுருங்கி வெள்ளைக் குள்ளனாக மாறிப்போகும்.
சரி அதுக்கும் சுப்பிரமணியன் சந்திர சேகர் கண்டு பிடிச்சதுக்கும் என்ன சம்மந்தம்?
இந்த வெள்ளைக்குள்ளனோட நிறை நம்ம சூரியனோட நிறையில் 1.4 மடங்கு இருக்கும் வரைக்கும் ஒரு பிரச்சனையும் பண்ணாமல் இருக்கும். ஆனா 1.4 மடங்கு என்கிற எல்லையை ( இந்த எல்லைக்குப் பேர் ”சந்திரசேகர் லிமிட்”) தாண்டிடுச்சின்னா அது தன்னுள் இருக்கும் அணுக்களை தனக்குத்தானே ஈர்க்கும் வேகம் தாறுமாறா உயர்ந்து போகும். அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதைந்து நியுட்ரான் நட்சத்திரமா மாறிப் போகும்.
எப்பா எப்பா, அது என்னாப்பா நியுட்ரான் நட்சத்திரம்?
ஒரு அணுன்னா உட்கருவுல நேர்மின் சுமையுடைய (தமிழ்ல பாசிட்டிவ்னு சொல்வாங்க)
 புரோட்டான், அப்புறம் எந்த மின்சுமையும் இல்லாத மிக்சர் சாப்பிடுற நியுட்ரான் இருக்கும். அப்புறம் இந்த எதிர் மின் சுமை ( அதே தான் நெகட்டிவ்) உடைய எலக்ட்ரான் என்கிற துகள்  அணுக்கருவைச் சுற்றி சுற்றி வலம் வந்தபடி இருக்கும். பாசிட்டிவான புரோட்டான்களும் நெகட்டிவான எலக்ட்ரான்களும் சம எண்ணிக்கையில் இருந்தா தான் அது நடுநிலையான அணு. ஏதாவது ஒண்ணுல கூட போயிடுச்சின்னா அயனி ஆயிடும்.
அதுல்லாம் நான் இஸ்கூல்ல படிச்சிருக்கே மேல சொல்லு தல!!
இப்ப இந்த பேரதிக ஈர்ப்பு ஆற்றலால் ஈர்க்கப்படும் அணுக்கள் தங்களுக்குள் மோதும் போது பாசிட்டிவான எலக்ட்ரான்களும் நெகட்டிவ் புரோட்டான்களும் ஒண்ணாக் கூடி நியுட்ரான்களா மாறிப் போய்விடும். அவை வேறு சம எண்ணிக்கையில் இருப்பதால் ஒண்ணுக் கூட மிஞ்சாது.
     இந்த அணுங்கறது ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு பெரிசாக இருக்குன்னு வைங்க அப்போ அங்கே கீழே கிடக்கும் ஒரு கூழாங்கல்லு சைஸ் தான் அந்த அணுவோட உட்கரு.
அப்படின்னா அணுவோட உள்ளே வெற்றிடம் தான் நிறைய உள்ளதா??
     ஆமாம், ஆனா அது எலக்ட்ரான் சுத்தி சுத்தி வரும் வரைக்கும் தான். அணு தகர்வுற்று உட்கருவோடு கலக்கும் போது அந்த கால்பந்து மைதானம் சுருங்கி கூழாங்கல்லா பூடும். ஆனா வெயிட் என்னவோ அதே கால் பந்து மைதானம் அளவுக்கு இருக்கும். சோ நிறை அதிகமாக இருப்பதால் ஈர்ப்பு விசையும் மிக அதிக மடங்கு கூடிவிடும்.
     இப்படியாக கழுத தேஞ்சி கட்டெறும்பாக இல்ல இல்ல சித்தெறும்பாக மாறுகிற கதை தான் இந்த நியுட்ரான் நட்சத்திரத்தோட கதை.
     இப்படியாக அந்த நியுட்ரான் நட்சத்திரம் ஒரு மில்லியன் வருடங்களுக்கு தாக்குப் பிடிக்கும். அப்புறம் மேலும் தகர்ந்து சுருங்கி கருந்துளையாக மாறிவிடும். அந்த நிலையில் ஈர்ப்பு விசை மிக மிக மிக அதிகம். ஒளி கூட எஸ்கேப் ஆக முடியாது.
நிறுத்துப்பா போதும் இது தான் மொத அத்தியாயத்திலேயே சொல்லிட்டியே!!
சரி சரி ஓகே! அடுத்தவாரம் இந்த கருந்துளைக்கு “கருந்துளை” ன்னு காதுகுத்தி கெடா வெட்டி பேரு வச்சது யாரு என்னா மேட்டருன்னு விலாவாரியா பாப்போம்.


Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...