செம்மொழி மாநாடு 23.06.2010 அன்று மேதகு இந்திய குடியரசு தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. விழாவில் சிந்து சமவெளி நாகரிகம் நம் திராவிட நாகரிகம் என ஆராய்ந்து அறிவித்த பின்லாந்து நாட்டு அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது வழங்கப்பட்டது. அன்று மாலை இனியவை நாற்பது எனும் எழிலார் பவனி நடைபெற்றது. சங்கத் தமிழ் பாடல்களில் நாம் பயின்ற நிகழ்வுகள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. ஊர்திகள் மிக அருமையாக வடிவமைக்கப் பட்டிருந்தன. ஊர்திகளை வீடியோ எடுத்து மாணவர்களுக்கு அந்தந்த பாடங்களின் போது கற்பித்தலை எளிமையாக்க பயன்படுத்தலாம்.
அடுத்ததாக “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்“ என்ற கருத்தரங்கு என்னை வெகுவாக கவர்ந்த்து. இங்கு நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நான் பணியாற்றும் உட்கோட்டையில் உள்ள தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் அரிதாசு என்பவர் எப்போதும் தமிழ் மட்டுமே பேசுவார். மறந்தும் அவர் வாயில் பிறமொழி வார்த்தைகள் வராது. அவரிடம் பேசினால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிறமொழி சொற்களுக்காண நல்ல தமிழ் சொற்களை காணலாம்.
“பழமையை பாதுகாத்து புதுமையை ஏற்று நடைபோடும் எந்த ஒரு மொழியும் அழியாமல் நிலைக்கும்” என்பது எனது கருத்தாகும். இதற்கு கட்டியம் கூறும் வகையில் மாண்புமிகு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவர்கள் கூறிய கருத்து இருந்தது. “தமிழ் மட்டுமே அறிந்தவர்கள் கூட கணினி பயன் படுத்தும் வகையில் கணினி மென்பொருள்கள் காணப்பட வேண்டும்” என்று அவர்கள் கூறினார்கள். தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு கணினி அந்நியமாக இருக்க கூடாது என அவர் கூறியது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.
கவிபாட நல்ல தலைப்புகள் கவிரங்கங்களில் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் கவிஞர்கள் எவரும் தலைப்பை ஒற்றி கவிபாடவில்லை மாறாக கலைஞர் அவர்களை துதிபாடி அவரின் கவனத்தை ஈர்க்கவே முற்பட்டனர்.
மற்றுமொரு கருத்தரங்கில் கி.வீரமணி அவர்களின் உரையில் “திராவிடர்கள் பண்பாடு இந்தியாவெங்கிலும் பரவி இருந்த நிலை மாற ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பே காரணம்“ என கூறியது மிகவும் அருமை.
சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றுவது வண்ணத் திரையா? சின்னத்திரையா? அச்சுத்துறையா? என்ற பட்டிமன்றம் நன்றாக இருந்தது. எஸ்.வி.சேகர் நீங்கலாக அனைவரும் நன்றாகவே பேசினார்கள். வாகை சந்திரசேகர் அவர்களின் பேச்சு “தமிழ் சினிமா ஒரு சுருக்கமான வரலாறு“ என கூறும் வகையில் நல்ல தயாரிப்பு. வண்ணத்திரை மற்றும் சின்னத்திரையா என தலைப்பை ஒன்றாக வைத்திருக்கலாம். இரண்டுக்கும் பெரிய வேறுபாடில்லை தமிழ் வளர்ச்சியை பொறுத்தவரை. தமிழ் வளர்ச்சிக்கு சினிமா ஊடகமும், சின்னத்திரை ஊடகமும் நல்ல பங்காற்ற முடியும். ஆனால் அவை வியாபார நோக்கில் மட்டுமே நிகழ்ச்சிகள் வழங்க தயாராக இருக்கின்றன (மக்கள் தொலைக்காட்சி நீங்கலாக!). சினிமா ஊடகத்தின் வலிமை பற்றி கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கவிதைகள் என் நினைவுக்கு வருகின்றன.
இந்த சினிமா மயில்கள்
கலாபம் விரித்து
நிழல் கொடுக்கும் என்று நினைத்தோம்!
ஆனால் – அவையோ
நம் ஓய்வு நேரங்களின் மேல்
எச்சமிட்டு விட்டன.
சினிமா
எவ்வளவு அற்புதமான ஆயுதம்!
நமக்கு அதில்
முதுகு சொறியத்தான் சம்மதம்.
மேலும் ஒன்று
பொழுது போக்கு என்னும் போர்வையில்
நாம்
கலாச்சாரத்தைக்
கற்பழித்து விட்டோமா?
ஒரு தங்க மீனுக்கான தூண்டிலில்
தவளை பிடித்துக்கொண்டிருந்தோமா?
இறுதியில் அச்சு ஊடகம் மட்டுமே தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றுகிறது என்ற பொறுத்தமான தீர்ப்பு கூறப்பட்டது.
நிறைவு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் “நாம் அனைவரும் நல்ல தமிழ் பேச வேண்டும். சொற்களை கொச்சை படுத்தவோ சிதைக்கவோ கூடாது. இனிய தமிழ் பேச வேண்டும்“ என்று கூறினார்.
v தமிழ் ஒரு மதசார்பற்ற மொழி
v சிந்து சமவெளி மக்கள் நம் திராவிடர்கள்
v ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு தமிழின் மேன்மையை சில நூற்றாண்டு காலம் இருட்டடிப்பு செய்துவிட்டது.
என்பன போன்ற புதிய செய்திகளை இம்மாநாடு எனக்கு கொடுத்தது.
இம்மாநாடு தமிழின் மேன்மையையும் தமிழினத்தின் சிறப்பையும் உலகத்தின் செவிகளில் ஓங்கி ஒலிக்கச்செய்தது என கூறலாம்.
No comments:
Post a Comment