Friday, July 8, 2016

பேருந்து பயணங்கள்

பேருந்தின் ஜன்னலோரம்.
பேருந்து பயணங்கள் எப்போதுமே எனக்கு அலுப்பை ஏற்படுத்தியதில்லை. நான் தினசரி பள்ளி செல்ல 45 நிமிட பயணம் மேற்கொண்டாலும் கூட ஒவ்வொரு நாள் பயணத்தையுமே ஒரு சுவாரசியமான சிறுகதை போல ரசித்தபடி செல்வேன்.
பேருந்து பயணம் நமது வாழ்க்கை பயணம் போன்றது தானே! நினைவுகளோ சாலையோர காட்சிகள் போல பின்னோக்கி செல்ல , பேருந்தோ நிகழ்காலத்திலிருந்து நம்மை பெயர்த்து எதிர்காலத்தினுள் செலுத்தும் கால எந்திரமாய் தன் சக்கரத்தை சுழற்றியபடி செல்கிறதல்லவா?!
தொடரியில் இருக்கை முன்பதிவு இறுதிவரை காத்திருப்பில் இருந்ததால் சென்னை நோக்கி மற்றுமொரு பேருந்து பயணம். சற்றே அயர்ச்சியாகவும் சிறிது மிரட்சியாகவும் இருந்தது. அயர்ச்சிக்கு காரணம் வேடிக்கை பாரக்கவியலா ஒரு நெடிய இரவுப் பயணம். மிரட்சிக்கு காரணம் பழைய அனுபவம் தான். என்னவென்று கேட்கிறீர்களா ?! வாருங்கள் சற்று பின்னோக்கி பயணிப்போம்.
அன்று வழக்கத்திற்கு மாறாக 10 நிமிடங்கள் முன்னதாக பேருந்து நிறுத்தம் வந்து விட்டேன். 8.20 மணிக்கு வரவேண்டிய நெய்வேலி நகரம் செல்லும் பேருந்து பெரும்பாலும் வராதாகையால் 8.35 ராமானுகூலம் பேருந்தை எதிர் நோக்கி காத்திருந்தேன். மற்றுமொரு 'வழக்கத்திற்கு மாறாக' நெய்வேலி நகரம் வந்தது. சொற்பமான பயணிகளே இருந்தனர். நான் ஓட்டுநர் இருக்கை க்கு அருகில் அமர்ந்தேன்.
"ஏங்க ஸ்கூல் டைம், கொஞ்சம் ரெகுலரா வந்திங்கன்னா பஸ் பாஸ் பசங்க ஏறுவாங்க நெறய ஸ்டாஃபும் வருவாங்களே?!"
"இந்த பஸ்ஸுக்குன்னு ரெகுலர் டிரைவர் கண்டக்டர் இல்லீங்க சார், யாரையாவது கெடைக்கிறவங்கள போட்டு அனுப்புவாங்க சார். நீங்க வாத்தியாருங்களா?!"
"அட எப்படிங்க கண்டுபிடிஞ்சிங்க?!"
"பாக்கெட்ல சிவப்பு பேனா, பஸ் பாஸ் பசங்களுக்காக பேசுறீங்க!" என்றார் ஷெர்லாக் ஹோம்ஸ் க்கு நிகராக தன்னை வியந்து கொண்டு.
பேருந்து சாவடி காட்டை தாண்டி விரைந்து கொண்டிருந்தது. பேசுவதில் ஆர்வமாக இருந்த ஓட்டுநரை தவிர்க்க செய்தித்தாளை விரித்தேன். ஆனால் அவர் விடுவதாய் இல்லை.
"சார இந்த '----' படம் பாத்தீங்களா?!"
"ஓ! பெரும்பாலும் எல்லாருமே பாத்திருப்பாங்களே!"
"அந்த படத்தின் டைரக்டர் '---' யார் தெரியுமா?!"
'அதான் சொல்லனும்னு முடிவு பண்ணிட்டீங்க விடவா போறீங்க கொஞ்சம் ரோட்டையும் பாருங்க பாஸூ பயந்து வருது!!' என்ற மைண்ட் வாய்ஸை மறைத்து "ம் சொல்லுங்க உங்க ரிலேட்டிவா?!"
"வாத்தியார்னா சும்மாவா கரெக்ட்டா சொன்னீங்க அவருடைய என் சொந்த மச்சான்!!"
"ஏங்க பெரியநாகலூர் பாதை நிறுத்துங்க!!" என்றேன்
"ஆங் மறந்துட்டேன், நம்பாளு விசில் அடிக்கவே இல்ல"
"அவரு ரெண்டு தடவ அடிச்சுட்டாருங்க"
"அப்படியா" என்று அசடு வழிந்தார்.
இனி இவர பேச விடக் கூடாதுன்னு கையில் இருந்த பேப்பரை விரித்தேன்.
"சார் இந்த ஒண்ண மட்டும் கேளுங்க!" என்று பரிதாபமாய் கெஞ்சினார். சரி போகட்டும் என நிமிர்ந்தேன்,"கொஞ்சம் ரோட்டையும் பாருங்க"
"அதெல்லாம் 'கன்' மாறி ஓட்டுவேன். ஸ்டாப் வந்ததும் கால் தன்னால பிரேக் போடும்!"
'எங்க போன ஸ்டாப்ல போட்ட மாதிரியா?'(மறுபடியும் மைண்ட் வாய்ஸ்)
"என்னவோ சொல்லிகிட்டு இருந்தேனே , என்ன சார்?!"
"டைரக்டர் உங்க மச்சான்" (தவளை தன் வாயால் கெடத் தயாரானது!!)
" ஆங் அவருடைய அடுத்த படம் ஆரம்பிச்சுட்டாரு சார்!"
"அப்படியா"
விளாங்குடியில் ஏறிய மாணவர்கள் எனக்கும் ஓட்டுனருக்கும் இடையில் தடுப்பரண் அமைத்து காத்தனர். அப்பாடா, என்று நடுப்பக்க கட்டுரையாவது வாசித்து விடலாம் என்று பேப்பரை விரித்தேன்.

"தம்பி கண்ணாடிய விட்டு நில்லுப்பா!!" என்று ஒரு நான்கைந்து பேரை பின்னுக்கு தள்ளி விட்டு பார்த்து சிரித்தார்(யார்கிட்ட தப்பிக்க பாக்குற?! என்ற வெற்றி களிப்பாய் எனக்கு தோன்றியது)
"புதுப் படத்துக்கு பாட்டு ரிலீஸுக்கு கூப்பிடுவார். உங்களுக்கும் டிக்கெட் வாங்கி தரேன் வாங்க போவோம்"
"ம், போகலாம் சார்!"
குறுகலான விளாங்குடி பாலத்தில் பேருந்து வழக்கத்தை விட அகலமாக திரும்பியது.
"சார் பாத்து ஓட்டுங்க!"
"எட்டு வருட அனுபவம் சார்!!, டெம்ப்ரவரியா பாத்தப்பவே மெட்ராஸ்லாம் ஓட்டியிருக்கேன்"
"ஓ அப்படிங்கள!?"
"சார் இந்த --- கட்சி ஒன்றியம் '---' அவர தெரியுமா?!"
"தெரியாதே!"
" அவருடைய நம்ப மாமாதான், அவரு தான் போஸ்டிங் வாங்கி கொடுத்தாரு"
"அப்படியா!"
"ரொம்ப ஆனஸ்ட்டான மனுசன் சார் கைய நீட்டி காசு வாங்கிட்டா வேலைய கச்சிதமா முடிச்சி குடுத்துடுவார்"
"ஓ! பரவால்லையே!" (நானும் எத்தனை தடவ தான் அப்படியா ன்னே சொல்றது)
சீட்டில் இருந்து சற்று உயர்ந்து பின் வசதியாய் அமர்ந்து உற்சாகமாய் ஆரம்பித்தார்.
"சார் உங்களுக்கு எதாவது டிரான்ஸர் வேணும்னா சொல்லுங்க" ( பரவால்ல ன்னு சொன்னது அவரை ஏகமாய் உசுப்பேற்றியிருந்தது)
"இல்ல இங்கயே நல்லாருக்கு மேலும் இதுவே பக்கம்தான்"
"அப்படி ன்னா விடுங்க!"
"சார் அண்ணன் பையன் ஒருத்தன் நல்லா படிப்பான் இஞ்சினியரிங் சேக்கனும்னா +1ல எந்த குரூப் நல்லா இருக்கும்?!"
"கணக்குல என்ன மார்க்?!"
"அதெல்லாம் 40 மார்க் வாங்கியிருக்கான்"
"அவனுக்கு கணக்கு பிரச்சனை இல்லன்னா ஏ குருப் சேருங்க"
"உடையார்பாளையம்"
கண்டக்டரின் குரல் காதில் தேனாய் பாய்ந்தது.
"சரி, வரேன் சார்!"
"சரிங்க சார் பாக்கலாம்"என்றார் ஏமாற்றத்தோடு.
சரியாக நான்கு மாதங்களுக்கு பின்
சென்னை செல்ல பேருந்து ஏறினேன்
" சா....ர்ர், வணக்கம்" என்று சிரித்தபடி அழைத்தார் அதே டிரைவர்(செத்தாண்டா சேகரு)
"முன்னாடி  வெளிச்சம் விட்டு விட்டு அடிக்கும் தூங்க முடியாது சார்" என விடை பகன்று பின்னங்கால் பிடறியில் பட பின் சீட்டை நோக்கி ஓடினேன்
அப்படியும் விட்டாரில்லை, மோட்டலில் தேனீர் குடிக்க அழைத்தார்.
"சார் என்ன தூங்கி கொண்டு ஓட்றீங்க எங்கள  பத்திரமாய் கொண்டுபோய் சென்னைல விடுங்க சார்" என்றேன் சற்றே அதட்டலாய்.
"கண்டுபிடிச்சுட்டீங்களா, ஆஃப் எடுக்காம டூட்டிக்கு வந்துட்டேன் சார். தூக்கம் வந்ததும் எப்படி சமாளித்து ஓட்டினேன் பாத்தீங்களா?!"
"ஆமாம் சென்டர் மீடியன ஒட்டி ஊர்ந்துகிட்டே போனீங்க, ரெண்டு பஸ் உங்க தூக்கத்த கலைக்க ஆரன் அடிச்சபடி போச்சு, நான் எந்திரிச்சு உங்ககிட்ட வந்தேன் மோட்டலில் நிறுத்திட்டீங்க".
அங்கீகாரத்துக்கு ஏங்கும் மனதிற்கு பரிவோடு கேட்கும் காதுகள் கிடைத்தால் போதும் கடைமையும் மறந்து கதை கூறுவார்கள்.
இப்ப புரியுதா ஏன் பயந்தேன்னு?!
இந்த பஸ் ஓட்டுநர் அருமையாக செலுத்துகிறார். நிம்மதி.


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...