Wednesday, August 10, 2016

எச்சில் புராணம்!

ஆன்னா ஊன்னா 'த்தூ...! ' ன்னு துப்பி அசிங்க படுத்துறோம். ஒரு தூய்மையான இடம் இருந்தாலும் சரி அல்லது மோசமான மனிதர்களையானாலும் சரி! என்ன செய்ய நமக்கெல்லாம் பாரதியாரே உடந்தை!! அதான் 'மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா' என்றல்லவா எழுதி வைத்துள்ளார்.
உணவு செரிமானத்தின் முதல் படிநிலையே அந்த எச்சிலில் இருந்தல்லவா துவங்குகிறது! எச்சில் இல்லாமல் நா வறண்டிருக்கும் போது பேச இயலுமா என்ன ?! நா குழறாதா? அதனால்தானோ என்னவோ 'மைக் டெஸ்டிங் 1 2 3..' மாதிரி கேப்டன் நிருபர்களின் மைக்கில்  எச்சில் டெஸ்டிங் செய்திருக்கிறார் பாவம் அதை கூட சர்ச்சையாக்கி விட்டார்கள். சுவாசக்குழாயில் சிக்கியிருக்கும் சளியை என்னதான் காறி வாய்க்குள் இழுத்துப் போட்டாலும் எச்சிலின் துணைகொண்டு தானே எங்கானும் மாடிப்படி ஓரமோ சுவற்றின் மூலையிலோ நல்லடக்கம் செய்ய வேண்டியுள்ளது.  இந்த எச்சில் புராணம் பற்றி பேசும்போதெல்லாம் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
நான் கல்லூரி படித்துக்கொண்டு இருந்த காலம். எங்கள் ஊருக்கான ஒற்றை பேருந்தை பிடித்து தான் சுத்தமல்லியில் இருந்து ஜெயங்கொண்டம் செல்ல வேண்டும். சம்பவம் நடந்த அன்று கூட சுத்தமல்லியில் இருந்து ஜெயங்கொண்டம் பயணமானேன்.
பக்கத்தில் ஒரு தாத்தா அமர்ந்து வந்தார். வெற்றிலை பாக்கு பொட்டலத்தை பிரித்து கடைவிரித்தார். ஒரு முக்கால் வெற்றிலையை எடுத்து முன்னும் பின்னும் வேட்டியில் துடைத்துக் கொண்டு சுண்ணாம்பைத் தடவி சீவலை உள்ளே வைத்து சுருட்டி சப்பாத்தி ரோல் மாதிரி அழகாய் கடித்து மென்றார். அடுத்ததாக புகையிலை, நூடுல்ஸை பிரித்து எடுப்பது கூட சுலபம் ஆனால் புகையிலையை பிரித்தெடுப்பது என்னவோ பிரம்ம பிரயத்தனம் தான் . புகையிலையை பிரிக்க முயன்று பின் தொங்கிய படி வந்தவற்றை கத்தறித்து அப்படியே சுருட்டி பந்துபோல் ஆக்கி வாயில் போட்டு அடக்கிக் கொண்டார்.
சிலருக்கு எச்சில் மிக மெதுவாகத்தான் ஊரும். சிலருக்கோ பொங்கி பிரவாகமாய் ஊற்றும். புளியங்காய் மற்றும் ஊறுகாய்  எல்லாம் பார்த்த மாத்திரத்தில் எச்சில் ஊறி கரையை உடைக்கும். பக்கத்து சீட் தாத்தா இரண்டாம் ரகம். முன் வரிசையில் தடுப்பணை (அதாங்க முன் வரிசை பற்கள்) வேறு இல்லாததால் கரையை உடைக்கும் காட்டாற்றிற்கு துணியால் அணை கட்டியது போல உதட்டை குவித்து தடுத்த வண்ணம் வருவதும் அடுத்த நிறுத்தத்தில் வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் திறப்பதுவுமாய் இருந்தார்.
நடத்துனர் வந்த போது டிக்கெட் எடுக்க திணறித்தான் போனார். தலையை ஒரு 45டிகிரி கோணத்திற்கு அன்னாந்த படியே லாவகமாக பேசி வாங்கிவிட்டார் அதுவரை சீட்டுக்கடியில் பதுங்கியிருந்த நானும் சீட்டில் மறுபடியும் அமர்ந்து கொண்டேன்.
நிறுத்தங்களுக்கிடையே தூரம் அதிகமாகும் சமயங்களில் வாயின் வலது ஓரத்தில் கோடு விழ ஆரம்பித்தது. அவரும் தோளில் கிடந்த துண்டினால் ஒற்றி எடுத்த வண்ணம் வந்தார்.(அடச்சே!! இதத்தான் துண்டு வித்தியாசமான டிசைன்ல இருக்கேன்னு வியந்திருந்தானா?!!) வியப்பில் வாயடைத்துப்போய் பார்த்திருக்கேன் ஆனால் எச்சிலின் உள்ளிருப்பு போராட்டத்தால் வாயடைத்து போவதை இப்போதுதான் பார்க்கிறேன்.
'தடால்' என்று ஒரு சடன் பிரேக்!! "சனியன் முடிச்சவனே நீ சாவரத்துக்கு என் வண்டிதான் கெடச்சிதா!, கண்ண எங்க பொறடியிலயா வச்சிருக்க?!!" என்ற ஓட்டுனரின் கூச்சல். எல்லோரும் மோதிக்கொண்டு  மண்டையை தேய்த்துக் கொண்டோம்.  சட்டென்று விபரீதத்தை உணர்ந்து சட்டையை முன்னும் பின்னும் பார்த்தேன். தாத்தா விஷயம் விளங்கியவராய் மறுபடியும் தலைசாய்த்து "ம்ம் அதழ்ழாம் விழாடுப்பா.." என்றார் "அய்யோ இப்பதான் தாத்தா ரெண்டு சொட்டு விழுந்துடுச்சு" என்றேன் கடுப்பை அடக்கிக் கொண்டு.
இந்த ஓட்டுனர் ராக்கெட் ராஜசேகர் இருக்காரே மகா கோபக்காரர். சாலை போட்டதென்னவோ பேருந்துக்கு மட்டுமே என்ற எண்ணம். மற்ற வண்டி ஒதுங்க இடம் தரமாட்டார். "ஏய் கீழ எறங்கிப் போடா!" என்று லாரி ஓட்டுனர்களை விரட்டுவார். அதுவே மாட்டு வண்டி என்றால் சொல்லவே வேண்டாம், இறங்கி ஒரு எட்டு போய் அடித்தே விடுவார்.
சட்டையை மேல் கோட் போல தான் உபயோகிப்பார். வளைக்கும் போதெல்லாம் ஸ்டீயரிங் வீல் மேல் கிட்டத்தட்ட படுத்தே விடுவார். வளைந்த உடன் சரேலென எழுந்து ஸ்டீயரிங் வீலை உள்ளங்கையால் தேய்த்தபடி ஸ்டைலாக லூசில் விடுவார். கியர் போடும்போதெல்லாம் கியர் ராடை பிடுங்கி வீசிவிடுவாரோ என்று பலமுறை பயந்திருக்கிறேன். அதன் மீது வைக்கப்பட்டிருந்த வெல்டு எனது பயத்தை ஊர்ஜிதம் செய்வதுபோல் இருக்கும். ராஜசேகர்தான்அவர் பெயர் முன்னால் இருக்கும் ராக்கெட் அவர் ஸ்டைல பார்த்து மக்களாகவே கொடுத்தது .
 இதற்கிடையில் பேருந்து அணைக்குடம் தாண்டியிருந்தது. தாத்தாவும் வாயை காலிசெய்து ஏப்ரல் மாத மேட்டூர் டேமாய் மாற்றியிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் ஏதோ திருவிழாக் கூட்டம் போல, தாத்தா தலையை நீட்டிப் பார்த்து ஏமாற்றத்தோடு உள்ளே இழுத்துக் கொண்டார்.
"கழுவந்தோண்டி இறங்கறது இருக்கா?!" நடத்துனரின் குரல் கேட்டு தாத்தா நம்பிக்கையோடு தயாரானார். அணைக்கட்டு அனேகமாக உச்ச உயரத்தை எட்டியிருக்க கூடும். "என்ன யாரும் எறங்கலையா ரைட் ர்ரை....ட்!" தாத்தாவின் அவஸ்தை அதிகமானது. இருந்தாலும் உள்ளே இறக்காமலும் வெளியே சிந்தாமலும் சாமர்த்தியமாக எச்சிலை அடக்கியபடி வந்தார். இருந்தாலும் எந்நேரமும் கரை உடையலாம் என்பதால் நான் முன்னெச்சரிக்கையாக தப்பிப்பதற்கு திட்டம் A மற்றும் B யோடு தயாராகவே இருந்தேன்.
அடுத்ததாக பாத்திமா ஸ்கூல் நிறுத்தம், பஸ் வந்ததுமே மாலை நேரமாகையால் சர்க்கரைத் துண்டை சுற்றி வளைத்த எறும்புகள் போல குழந்தைகள் கூட்டம் மொய்க்கவே, இங்கேயும் அணைக்கட்டை திறக்க வாய்ப்பில்லை. இனி பேருந்து நிலையம் தான்.
ஹாரன் அடிப்பதோடல்லாமல் ஒதுங்காமல் போவோரை திட்டியபடி மிஸ்டர் ராக்கெட் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். வீட்டில் என்ன பிரச்சனையோ?!!
அப்பாடா ஒருவழியாக வண்டி பேருந்து நிலையத்தில் நுழைந்தது. டிரைவர் தடால் என குதித்தார். இவருக்கும் ஏதேனும் அணை உடையும் பிரச்சனை போல.
தாத்தா மெல்ல தலையை நீட்டி ஜன்னல் வழியே மொத்த எச்சிலையும் துப்பினார் புகையிலையோடு சேர்த்து.
"மடை திறந்து பாயும் நதியலை நான்..." பேருந்து நிலையத்தில் ஒரு டீ கடையில் பாடல் ஒலித்தது. இதற்கிடையே,
"டே....ய்! யார்ரா அவன்" ஓட்டுனரின் குரல்.
"ஐயோ என்னாச்சு?!" தாத்தா குனிந்து பார்த்தார்.
'மைதிலி என்னைக் காதலி' படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் டி.ராஜேந்தர் போல் சட்டை முழுவதும் ரத்த சிகப்பாய் கோபம் தலைக்கேற ஓட்டுனர் நின்று கொண்டிருந்தார்.
நடந்தது இதுதான் , ஓட்டுனர் கடமை உணர்வோடு டயரில் காற்றழுத்தம் சோதித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அதற்கு நேர் மேலிருந்து தாத்தா அணையை திறந்து விட்டிருக்கிறார்.
வேக வேகமாக உள்ளே வந்தார் ஓட்டுனர், தாத்தாவோ குற்ற உணர்வோடு நின்றிருந்தார். ஓட்டுனர் வாயைத் திறந்து "பீப்.................." என்று திட்டித்தீர்த்து விட்டார்.
"ஐயா மன்னிச்சிக்கோங்க ஐயா" என்று கெஞ்சிக் கொண்டு இருந்தார்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...