நான்
நீயா நானா பார்ப்பதை விடுத்து ரொம்ப நாளாகிவிட்டது. இரவு 9 மணியாக இருந்தால் கூட எப்போதாவது சேனல் மாற்றும் போது கிராஸ் ஆகும். ஞாயிறு மதியம் 3 மணி என்பது எனக்கு நள்ளிரவு 12 மணி போல ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் நேரம்.
இந்த
வார எபிசோட் ஃபேஸ்புக் வாட்சப் எங்கு பார்த்தாலும் மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கப் படுகிறதே என்று யு டியூப் ல் பார்க்கலாம் என்று குடைந்தேன் இயலவில்லை. அப்புறம் பார்த்தால் ஸ்டார் குருப் தங்கள் நிகழ்ச்சிகள் யாவையும் பார்க்க பிரத்தியேக மாக ஹாட் ஸ்டார் என்கிற “ஆப்“ வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. ( அதானே பார்த்தேன் ”கும்கி” படத்தையே 100 தடவைக்கு மேல் போட்டு ஒட்ட ஒட்ட பணம் கறப்பவர்கள் ஆயிற்றே. விஜய் டிவியில் படம் என்றாலே நெறய பேர் மரணபீதியில் பதறி சேனல் மாற்றுகிறார்கள்)
சரி
அதற்கான “ஆப்பை” டவுன்லோட் செய்து நிறுவிக் கொண்டேன். மறுபடி அதனுள் சென்று மொழியை தேர்வு செய்தால் வரிசைகட்டி எல்லா நிகழ்ச்சிகளையும் வைத்திருக்கிறார்கள். அதில் “நீயா நானாவை “ தேர்வு செய்து ப்ளே பண்ணி பார்த்தேன்.
கோபிநாத்
வழக்கம் போல தலைப்பை சொல்லி பெண்களிடம் இருந்து வார்த்தையை பிடுங்குகிறார். அவர்களும் போட்டி போட்டுக் கொண்டு எல்லோரையும் விட சிறப்பாக சொல்லி வாயடைக்கச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்க வித்தியாச வித்தியாச மாக கல்யாணத்திற்கு வேண்டிய சீர்களை கேட்கிறார்கள். அதிலேயும் சில பேர் தமிழை அந்நிய மொழி மாதிரி பேசும் டயானாக்கள் (பீட்டருக்கு பெண்பால் பெயர் தெரியலேப்பா அவ்வ்..!)
எல்லோரும்
அந்த சூழலில் peer pressure ஆல் ஏற்பட்ட உந்துதலில் தான் பேசினார்கள். கோபிநாத்தும் “ஆகா“ ”பலே“ என்று அவர்களை பாராட்டிக் கொண்டே வந்தார். பாவம் நமது வார்த்தையை நமக்கு எதிராக திரும்பும் என்கிற நீயா நானாவின் சூழ்ச்சி அறியாதவர்கள்.
அதிலும்
”365 நாளும் 365 சேலை” பெண்ணின் கையை கவனித்தீர்களா பேச்சுக்கு பொருத்தமாக என்ன அழகாய் கைகளில் அபிநயம் காட்டினாள். நடிப்பு பின்னிட்டம்மா!
எல்லோரும்
பேசி முடித்த உடன் “ஸ்டார்ட் த மியுசிக்” என பெற்றோர்களின் அர்ச்சனைகள்.
இந்த
சீன் பார்ப்பதற்கு “லெஷ்மி ராமகிருஷ்ணனின்” குடும்ப பஞ்சாயத்து போல இருந்தது.
விஜய்
டிவி படப்பிடிப்பு தளத்தில் வழக்கமாக கொடுக்கப் படும் “கிளிசரின்“ அன்று ஒரு அம்மாவிடம் வழங்கப் பட்டிருந்தது போலும். அவரும் அதை எங்கோ தவற விட்டிருக்கிறார். எவ்வளவு முயன்றும் அழுகை வரவே இல்லை. இன்னும் பயிற்சி வேண்டும்( இதுவே சூப்பர் சிங்கராக இருந்தால் கண்ணீரில் படப்பிடிப்பு தளமே மிதந்து இருக்கும். )
இவற்றை
எல்லாம் பார்த்து விட்டு ஒட்டு மொத்த பெண்களும் பெற்றோரிடம் இருந்து சொத்தை அபகரிப்பவர்கள் என்கிற பிம்பத்தை நமது ஃபேஸ்புக் போராளிகள் சுவீகரித்துக் கொண்டு அடுத்த போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.
மிடில்
கிளாஸ் பிள்ளைகள் எல்லோரும் ஆசைகளை கட்டுப் படுத்த பழகியவர்கள். அதில் பெண் பிள்ளைகள் முன்னிலை வகிப்பார்கள்.
திருமணத்திற்கு முன்னும்
சரி பின்னும் சரி பெண் பிள்ளைகள் பெற்றோரை விட்டுக் கொடுப்பது இல்லை.
அவர்கள்
கேட்பதை செய்ய இயலாது என்று குடும்ப நிலையை எடுத்து கூறி எளிதாக சமாதானப் படுத்திவிடலாம் அது வீட்டில் தான் நீயா நானா அரங்கில் அல்ல.
கூடப்
பிறந்தவர்களும்
பெற்றோரும் எப்படிப் போனாலும் பரவாயில்லை என்று சுயநலமாக யோசிக்கும் பெண்கள் வெகு வெகு அரிது தான்.
ஆனால்
நீயா நானா இது மாதிரி நிகழ்ச்சியால் வரதட்சணை சார்ந்த பிரச்சினைக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை திணிக்க விழைகிறது.
வரதட்சணை
ஆண்கள் கேட்பதில்லை பெண்கள் தான் காரணம் என்கிற “சொத்தை“ காரணத்தை நிறுவுவதற்கான முயற்சி.
பெண்குழந்தை
வேண்டாம் என்று பயப்படும் பெற்றோருக்கு இன்றளவும் திருட்டுத்தனமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கூறி “கருவறுக்கும்“ மையங்கள் நடைபெற்றுக் கொண்டுதான்
இருக்கின்றன.
இன்றளவும் ஏராளமான கிராமபுரங்களில் பெண்களுக்கான நியாயமான உரிமைகள் மறுக்கப் பட்டுக்
கொண்டுதான் இருக்கின்றன.
குழந்தை வளர்ப்பில் கூட ஆண் பெண் பாகுபாடு பெரும்பாலான வீடுகளில் உண்டு. எனக்கு
தெரிந்து பனிரெண்டாம் வகுப்பில் 1100க்கு மேல் வாங்கிய பெண்ணை மெடிக்கல் கிடைக்க வாய்ப்பிருந்தும்
அதற்கு விண்ணப்பிக்காமலே ஆசிரியர் பயிற்சி படிக்க வைத்த பெற்றோர் உண்டு. அதுவே பையன்
என்று வரும் போது மார்க் குறைவாக இருந்தும் பணத்தை மூட்டைக் கட்டிக் கொண்டு BDS வாங்கி
படிக்க வைத்தார்கள்.
எதார்த்தம் இவ்வாறு இருக்கையில் ஒரு இருபது பெண்களை எடுத்துக் கொண்டு “வரதட்சணையெல்லாம்
இப்போ யார் சார் கேக்குறா எல்லாம் பெண்களே கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்!“ என்று நிறுவுவது
போல நிகழ்ச்சி நடத்துவது அறமாகாது.
உண்மையில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உண்டு என்று சட்டம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலும்
வழங்குவது இல்லை. அப்படி என்றால் அந்தப் பெண்கள் கேட்டது சட்டப்படி சரிதானே.