Wednesday, November 21, 2018

விடைத்தாள் திருத்தும் முகாம் சில நினைவலைகள்


2002ல் வேலைகிடைத்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் அரியலூர் முகாமுக்கு முதன் முதலில் சென்றேன். பேப்பர் திருத்தும் பணி ஒன்றும் அவ்வளவு சிரமமான வேலை அல்ல. அப்போதெல்லாம் வழங்கப் படும் விடைத்தாள் கட்டுகளை திருத்தி அந்த கட்டுக்குறிய மதிப்பெண் பட்டியலை பிழையின்றி தயார் செய்து வழங்க வேண்டும். சிறு பிழை இருந்தாலும் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து போடவேண்டும். அது தான் சிம்ம சொப்பனம். இதற்காகவே வயதான ஆசிரியர்கள் என்னைப் போன்ற இளைஞர்களைவடை பஜ்ஜிஎல்லாம் போட்டு வளர்ப்பார்கள்.
அப்படியும் ஒரு முறை சீஃப் , “தம்பி நம்பர் எல்லாம் ஒரே சைஸ்ல எழுதுப்பாஎன்றார். நானும் இரண்டு சொட்டு விளக்கெண்ணையை கண்ணில் விட்டுக் கொண்டு கண்ணும் கருத்துமாக எழுதினேன். மறுபடியும் சீஃப், ”என்னப்பா ரொம்ப பொடியா எழுதியிருக்க கம்ப்யுட்டர்ல டைப் பண்றவங்களுக்கு தெரிய வேணாமா? மேலும் நேராவே இல்லையே இவ்வளவு கோணலா இருக்குஎன்று கடிந்து கொண்டார் நானோ பொங்கி வந்த எரிச்சலை பற்களை கடித்து அடக்கிக் கொண்டேன்.
ஒரு வழியாக அன்று மதிப்பெண் பட்டியலை போட்டு முடித்து விட்டேன். அடுத்தநாள் மறுபடியும் ஒரு பிரச்சனை. “தம்பி எட்டுல இருக்கிற ரெண்டு ரவுண்டும் சம அளவில் இல்லப்பா, கொஞ்சம் பாத்து சரியா போடுஎன்றார் லைசன்ஸ் வாங்க போட்டப்ப கூட எனக்கு எட்டு போடுவது அவ்வளவு சிரமமாக இல்லை. அவர் அப்படி ஒரு வார்த்தை சொன்னதுக்கு அப்புறம் எட்டு போடும் போதெல்லாம் எனக்கு ஏற்பட்ட கை நடுக்கம் இன்றளவிலும் நின்ற பாடில்லை. இந்த சம்பவம் நடந்த அன்று மதியம் இன்னும் பெரிய சோதனையாக எனக்கு வந்த பேப்பர் கட்டில் தேர்வு எண்கள் 880ல் ஆரம்பித்து 900 ல் முடியும் வகையில் இருந்தது. ஒரு ஐந்து மதிப்பெண் பட்டியல்களை வீணடித்து விட்டு ஆறாவது முறையாக போய் கேட்ட போது சீஃப் என்னை பார்த்த பார்வை இருக்கே ஒரு பச்சை வாழை மரம் இருந்தால் கூட பக்குன்னு பத்தி எரிஞ்சிருக்கும் அப்படி ஒரு நெருப்பு பார்வை. இதுக்கு மேலகஜினி முகமதுமுயற்சி எல்லாம் சரிபட்டு வராது என்று வாடகைக்கு ஆள் அமர்த்தி வேலையை கனகச்சிதமாக முடித்தேன்.
அந்த காலகட்டத்தில் விடைத்தாள் திருத்திய ஆசிரியர் எவரைக் கேட்டாலும் ஏதாவது ஒரு எண் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததையும் பல மதிப்பெண் பட்டியல்களை தவறாக எழுதி வீணடித்த கதைகளையும் கூறுவார்கள். இப்போ அப்படி இல்லை. ரஜினி ஸ்டைலில் சொல்லணும்னாசிஸ்டம் மாறிடிச்சு”.
விடைத்தாள் திருத்தும் முகாம்களில் அடுத்த குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்கேண்டீன்”. வடை, பஜ்ஜி, போண்டா, டீ, காபி என வைத்துக் கொண்டு மாலை வரை வியாபாரம் செய்வார்கள். விடைத்தாள் திருத்திய காசை எல்லாம் வடை சாப்பிட்டே ஒழித்துக் கட்டிய வெகு சிலரில் நான் முதல் இடத்தில் இருந்தேன் என்று பெருமையோடு நினைவு கூர்கிறேன்.
கேண்டீனில் தனியாக போய் சப்பிட கூச்சப் படுவோர் உண்டல்லவா? அந்த மாதிரி இருக்கும் நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் கம்பெனிக்காக மிகுந்த நம்பிக்கையோடு அனுகுவது என்னைத்தான். இந்த மாதிரி காரியங்களுக்கெல்லாம் நான் கிஞ்சிற்றும் மறுப்பு கூறியது கிடையாது.
நண்பர்களோடு வந்து நல்ல பார்ட்னர்ஷிப் ஃபார்ம் பண்ணி சும்மா அடித்து நொறுக்குவதால் என்னை கேண்டீன் காரர் மிகுந்த அன்போடும் மரியாதையோடும் பார்ப்பார். என்னைவிட மற்றொரு வயதான ஆசிரியரை இன்னும் மரியாதையோடும் அன்போடும் பார்த்துக் கொண்டு இருந்தார். காரணம் அவர் சிங்கிள் மேனாக வந்து எங்கள் பார்ட்னர்ஷிப்பையே முறியடிக்கும் வகையில் அடித்து நொறுக்குவார். நான்கு பேப்பருக்கு ஒரு முறை கேண்டீன் வருவார். 20 பேப்பருக்கு ஐந்து முறை வருவார். ஐந்து முறையும் இரண்டு வடை அல்லது பஜ்ஜியை எடுத்து இரண்டே அமுக்கில் உள்ளே தள்ளி தண்ணி விட்டு முடித்து விடுவார். நல்ல சத்தமான ஒரு ஏப்பத்திற்கு அப்புறமாக தேனீர் குடித்து திவ்யமாக முடித்துவிட்டு இடத்தை காலி செய்வார்.
அடுத்து விடைத்தாள் திருத்தும் போது நடக்கும் மற்றொரு சுவாரசியமான விஷயம் மாணவர்கள் மனமுருகி கடைசிப் பக்கத்தில் எழுதும் கோரிக்கை கெஞ்சல்கள் மற்றும் தற்கொலை மிரட்டல்கள்.
ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் பள்ளி நாட்களை வீணடிக்கும் போது வராத பயம் ஒன்றும் தயார் செய்யாமல் தேர்வறைக்குள் வந்து அமர்ந்த உடன் வந்து விடும். மற்ற மாணவர்கள் கஷ்டப் பட்டு உழைத்து எட்டும் தேர்ச்சியை இலகுவாக ஒரு கெஞ்சல் கடிதம் மூலமாக எட்டிவிட எண்ணுவார்கள்.
ஒரு கடிதம் இப்படித்தான் ஆரம்பித்தது, “சார் நான் எல்லா பாடங்களும் நன்றாக படிப்பேன், கணக்குப் பாடம் மட்டும்தான் வராது என்னை எப்படியாவது பாஸ் போட்டு விடுங்கள்அநேகமாக எல்லா பாடங்களிலும் அந்த பாடம் தான் வராது என்று எழுதியிருப்பான் அந்தப் பயல்.
மற்றொரு முறை ஒரு கடிதம்,“அய்யா எனக்கு அப்பா கிடையாது. அம்மா கூலி வேலை. எங்கள் பள்ளியில் ஆசிரியர் கிடையாது. எனவே என்னை எப்படியாவது பாஸ் பண்ணி விடுங்கள். ஃபெயிலானால் தற்கொலை செய்து கொள்வேன். என் உயிரே உங்கள் கையில் தான் உள்ளது” என்கிற ரீதியில் போனது. மதிப்பெண்ணோ 14 தான். எங்களுடன் இருந்த கருணை உள்ளம் கொண்ட ஆசிரியப் பெருமக்களோ மதிப்பெண் கொடுத்தே ஆகவேண்டும் என்று மிரட்டவே தொடங்கிவிட்டனர். உள்ளபடியே அந்த நிலையில் இருப்பவன் இந்த மாதிரியெல்லாம் மிரட்டல் விடமாட்டான். இயன்றவரை கடினமாக படித்து வந்திருப்பான். இவன் மதிப்பெண்ணுக்காக மோசடியாக கடிதம் புனைந்திருக்கிறான் என்று கூறி “கல்நெஞ்சக்காரன்” பட்டம் வாங்கிக் கொண்டேன்.
விடைத்தாள் திருத்துவது என்பது மிகவும் சுவாரசியமான அனுபவம் தான்.

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...