Saturday, August 24, 2019

புதியக் கல்விக் கொள்கை என்னும் பிற்போக்கு சாசனம்




”சாரி கொஞ்சம் பெரிய கட்டுரைதான்”

சூத்திரனான சம்பூகன் வேதம் பயின்ற “தவறை“ செய்த காரணத்தினால் ஏற்பட்ட தீட்டை கழிக்க அவனது தலையை கொய்தான் கடவுள் இராமன் என்று சொல்லி வைத்திருக்கும் புராண புரட்டை தூக்கி வைத்துக் கொண்டாடும் கும்பல் உருவாக்கும் கல்விக் கொள்கை எப்படி இருக்கும். அதனால் தான் சொல்கிறேன் மக்களே “மண்ட பத்தரம்“
ஷத்திரியன் அல்லாத ஏகலைவன் வில்வித்தை பயில்வதற்கு தனது பிறப்பினால் “தகுதி“யற்றவன் ஆகிறான். ஆனாலும் கூட பயிற்சியாளர் துரோணாச்சாரியாரின் ஆதரவு இன்றி தானாகவே வில்வித்தை பயின்று விடுகிறான். நமது ஆதரவும் பயிற்சியும் இல்லாமலே பயின்று விட்டானே என்று பெருமிதப் பட்டு பாராட்டுவது தானே நல்லதொரு குருவுக்கு அழகு. ஆனால் இந்த துரோணாச்சாரியார் அவனது வில்வித்தையை முற்றிலும் முடக்கும் விதமாக அவனது கட்டை விரலை குருதட்சணையாக கேட்டு பெறுகிறார். (விளையாட்டுத் துறையில் சிறந்த பயிற்சியாளர்களுக்கு இந்த ஆள் பெயரில் விருது வழங்குவது எவ்வளவு பெரிய வெட்க கேடு) இந்த மாதிரி புராண புரட்டை தலையில் வைத்துக் கொண்டாடும் ஆட்கள் இப்போது புதிய கல்விக் கொள்கை சமைத்து இருக்கிறார்கள் மக்களே உங்கள் கட்டை விரல்கள் பத்திரம்.
”ஏன் அய்யா இப்படி எடுத்த எடுப்பிலேயே வேண்டாத மாமியா கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தம் னு போட்டு தாக்குறீரு?“ என்று நீங்கள் மருகுவது கேட்கிறது.
முதலில் இந்தக் கல்விக் கொள்கையை வகுத்தளித்த குழுவின் தலைவர் யார் தெரியுமா?
அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி மற்றும் முன்னால் மாநிலங்களவை உறுப்பினர் பத்ம விருதுகள் மூன்றினை பாக்கெட்டில் கெத்தாக வைத்திருப்பவர். ஆனால் அவரின் புரொஃபைலை பாருங்கள் கல்வித்துறையில்(Department of Education) அவரது பங்களிப்பு என்ன?
சரி அது போகட்டும் அவர்கள் அப்படி என்னதான் புதுமையான கருத்துக்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள் என்று பார்த்து விட்டு நீங்களே சொல்லுங்கள்.
it has been estimated that the development of a strong ECCE programme is among the very best investments that India could make, with an expected return of `10 or more for every `1 invested
முதலாவது பரிந்துரையில் அவர்கள் சொல்லி வைத்திருக்கும் அபத்தம் தான் மேலே உள்ளது. ஒரு ரூபாய் போட்டு பத்து ரூபாய் எடுக்கப் போகிறார்களாம்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் 85 விழுக்காடு 6ம் அகவைக்குள் ஏற்பட்டு விடுவதால் அந்த வயதில் அவர்களை “கபால்“னு பிடித்து அமர வைத்து எல்லாத்தையும் கத்து குடுத்து விட வேண்டும் என்கிறார்கள். அதன் பொருட்டு அங்கன் வாடிகளை மேம்படுத்தி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடன் ஆரம்பக் கல்வியை தொடங்கி விட வேண்டும் என்கிறார்கள். ஆனால் உலகிலேயே கல்வித்தரத்தில் முதலில் உள்ள ஃபின்லாந்தில் குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி 6 ம் வயதுக்கு மேல் தான் துவங்குகிறது. அடுத்ததாக இங்கே தான் அவர்களின் விஷமூளை வேலை செய்கிறது. சிறுவயதில் குழந்தைகளுக்கு மொழிகளை கற்பது எளிது ஆகையால் மூன்று மொழிகளை கற்றுக் கொடுத்து விடலாம் என்கிற ஆலோசனையை முன் வைக்கிறார்கள். (முதலில் இந்தி, ஆங்கிலம் மற்றும் தாய் மொழி என்றார்கள் அப்புறம் நமது எதிர்ப்பை கண்டு இந்திக்கு பதிலாக அட்டவணையில் உள்ள 22 ல் உள்ள ஏதேனும் ஒன்று என்று சொல்லி விட்டார்கள்)
கற்றலில் (கற்பித்தலிலும் தான்) உள்ள இன்பத்தை சாகடித்த பெருமை தேர்வுகளுக்கு உண்டு என்று திடமாக நம்புபவன் நான். ஆனால் புதிய கல்விக் கொள்கையில் கழிவறை செல்வதை தவிர்த்து அனைத்துக்கும் தேர்வு உண்டு. ப்ரீகேஜி முதல் இரண்டாம் வகுப்பு வரையில் ஆதாரக் கல்வி முடிந்து ஒரு தேர்வு. பின்பு மூன்று முதல் ஐந்து வரை தொடக்க கல்வி அதற்கு ஒரு தேர்வு. அப்புறம் ஆறு முதல் எட்டு வரை நடுநிலைக் கல்வி அப்புறம் ஒரு தேர்வு. அடுத்த நிலையில் பாய்ந்து வருவது தான் பிரம்மாஸ்திரம். ஆம் ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை நான்காண்டுகள் உயர்கல்வி. எட்டு செமஸ்டர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டும். ஒன்பதாம் வகுப்பிலேயே அறிவியலா கலையா தொழிலா என்று தனக்கான பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ( அந்த வயசுல கொழந்தைகளுக்கு ஜட்டிய கூட ஒழுங்கா போடத் தெரியாதே, அவர்களை தங்கள் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கச் சொல்வது கொஞ்சமாவது அடுக்குமா?)
இத்தனை தேர்வுக்கும் அப்புறம் எவனாவது படிப்பு கிடிப்புன்னு வருவானா? அப்படி எவனாவது வந்தான்னா, “வாடா, வா வந்து நீட் எக்சாம் பாஸ் பண்ணு அப்ப தான் காலேஜில சீட்டு ஏன்னா எங்களுக்கு தகுதியும் திறமையும் தான் முக்கியம்” என்கிறார்கள். அப்ப முக்கி முக்கி எட்டு செமஸ்டர் பாஸ் பண்ணது?! அப்படின்னு யாரும் கேக்கபடாது. அது தகுதி நீட் தெறம சரியா?
மேலே கூறப்பட்ட கருத்துக்கள் யாவும் கல்விக் குழுவின் முதலாம் மற்றும் இரண்டாம் பரிந்துரை.
இதெல்லாம் படிச்சி முடிச்சி மூன்றாவது பரிந்துரையை படித்த போதுதான் ”கண்ணுல அப்படியே ஜலம் வச்சுண்டேன் கேட்டேளா”
ஆமாம், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் தேசிய அளவிலான பொதுத்தேர்வினை எழுதி தான் அடுத்த வகுப்புக்கு போகணும். ஏன்னா, மாணவர்களுக்கு இப்படில்லாம் தேர்வு வச்சாதான் திறமை வளரும். தேர்வு மையக் கற்றலின் அவலங்களை நமக்கு பல முறை  கோழிப்பண்ணை மாதிரிகள் தோலுரித்துக் காட்டியுள்ளன. ஆம், வேதியியலில் சென்டம் எடுத்த மாணவன் பிப்பெட்டுக்கும் பியுரெட்டுக்கும் வித்தியாசம் அறியாமல் இருந்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தார் தலையில் அடித்துக் கொண்டதாக கேள்விப் பட்டிருக்கிறேன். ஏன் “ஏசி மின்னியற்றி வேலை செய்யும் விதம் பற்றி விளக்குக” என்றால் மூச்சு விடாமல் எஸ்பிபி மாதிரி தம் கட்டும் மாணவர்கள் கரண்ட் எப்படிப்பா தயார் பண்றாங்க எனும் போது தலையை சொறிகிறார்களே. மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக சொல்வேன் தேர்வு மையக் கற்றல் கற்றலிலும் கற்பித்தலிலும் உள்ள இன்பத்தை சாகடித்து விட்டன. இவர்களோ பால்குடி மாறாத குழந்தைகளுக்கு கூட தேர்வு என்று கொஸ்டின் பேப்பர தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.
அடுத்து நான்காவதாக வருவது தான் முதலுக்கே மோசம். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை 12ம் வகுப்பு வரை நீட்டிப்பது. பள்ளிக் கல்வியில் உதவும் மனம் கொண்ட தனியாரை அனுமதிப்பது (Philanthropic Public Parternship)
 இன்னோரு முறை சொல்லுங்க, உதவும் மனம் கொண்ட தனியாரை அனுமதிப்பது (Philanthropic Public Parternship) 
இன்னோரு முறை சொல்லுங்க, யோவ் அதாம்பா இந்த கல்வித் தந்தை இருக்காங்களே அவுங்கதான்
இதுவரையிலான எந்த பரிந்துரையிலும் நிதி சார்ந்த சாத்தியங்கள் பற்றி எடுத்து இயம்ப வில்லை. இப்போ தான் பூனைக்குட்டி வெளியே வருகிறது. தனியார் பள்ளிகள் ஏற்கனவே இருப்பது போதாது இன்னும் வரணும். இருக்கும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடணும்.
அப்புறம் இந்த ஆங்கிலத்தின் மீது அப்படி என்ன கோவம்னே தெரியல. அத அடிச்சி தொவச்சி காயபோடறதுக்குன்னே மூணு பக்கத்த ஒதுக்கி இருக்காங்க. (ஆமாம் பக்கம் 81,82,83)
உலகத்தில் வெறும் 15 விழுக்காட்டினர் தான் ஆங்கிலம் பேசுறாங்கலாம். இந்தியாவில் இருக்கும் எகனாமிக் எலைட் குரூப் தங்களை தனித்து காண்பித்துக் கொள்வதற்கு ஆங்கிலத்தை பேசுகிறார்கள். ( ஏம்பா வயிற்றுப் பாட்டுக்கு தான்பா ஆங்கிலம் கத்துக்கறது. எப்படியாவது வெளிநாடு போயாவது பொழச்சிக்கலாம்னுதான். வேணும்னா உங்க முன்னோர்கள கேளுங்க, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் கை ஓங்கிய நேரத்தில் மைலாப்பூர் வாசிகள் எல்லாம் ஜெர்மன் கத்துக்க தயாரானாங்களாம்.) இந்தியாவில் 54 விழுக்காட்டினர் இந்தி தான் பேசுகிறார்களாம். (அதுக்கென்ன, எங்க மொழியோட பாரம்பரியம் தொன்மை வாய்ந்தது நாங்க எங்க மொழிய தான் தலையில் வைத்து கொண்டாடுவோம். அவனுங்க தாய்மொழிய ஓட விட்டுட்டு இந்திய பிடித்துக் கொண்டது போல நாங்களும் ஆகமுடியாது)
உலக அளவிலான அறிவியல் ஆய்வு சார்ந்த சஞ்சிகைகள் எல்லாம் ஆங்கிலத்தில் வருவதால் வேண்டுமானால் உயர்கல்வியில் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் என இரண்டு வழிகளிலும் படிக்கட்டும் என்கிறார்கள்.
இந்தியாவின் புராதான கல்வி முறைகளான குருகுலம், மதரஸா, பாடசாலை முறைஆகியவற்றை அங்கீகரிக்க போகிறார்களாம். குருகுலம் வர்ணாசிரம அடிப்படையில் கல்வி வழங்கப்பட்ட இடம் அல்லவா?
இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது ஒவ்வொரு மாநிலங்களின் தனித்தன்மையுடைய பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை பள்ளிகளில் இருந்து விரட்டும் வேலை அல்லவா? பலதரப்பட்ட கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் உள்ளடக்கிய துணைக்கண்டத்தை இந்தியக் கலாச்சாரம் என்கிற ஒரே பஞ்சாரத்தினுள் வலிந்து திணிக்கும் முயற்சி அல்லவா இது?
பள்ளிக் கல்வி முடிந்து எங்கு சேர வேண்டுமானாலும் ஒரு நுழைவுத்தேர்வு அவசியம் NATIONAL TESTING AGENCY  என்கிற ஒரு தன்னிச்சையான அமைப்புதான் அதை நடத்தும். (நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்ல சென்டர் நாகாலாந்துல போட்டாலும் போயிடணும் பாத்துக்கோங்க) அப்புறம் அந்த எட்டு செமஸ்டர்ல வாங்கின மார்க்க என்ன பண்றது? கசக்கி குப்பையில போட வேண்டியது தான். அப்போ ஒரு பயலும் பள்ளிகளில் இவர்கள் அரும்பாடு பட்டு வடிவமைத்த பாடத்திட்டத்த படிக்க மாட்டான். வசதி உள்ள அம்புட்டு பயலும் நாலு வருசமும் முக்கி முக்கி நுழைவுத்தேர்வு கோச்சிங் பாடத்த தான் படிப்பான்.
கொஞ்சம் ஆராய்ச்சி நிறைய கற்பித்தல் பல்கலைக்கழகங்கள் , நிறைய ஆராய்ச்சி கொஞ்சம் கற்பித்தல் பல்கலைக்கழகங்கள் மற்றும் பட்டங்களை மட்டும் தரும் தன்னாட்சி அதிகாரம் படைத்த கல்லூரிகள் இவைதான் அவர்கள் பரிந்துரைக்கும் உயர்கல்வி கட்டமைப்பு.
மொத்தத்தில் கல்வி சார்ந்த அனைத்து அதிகாரங்களும் மையத்தில் குவிந்து கிடக்க, மாநிலங்கள் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.
இறுதியாக ஆசிரியர்கள் விஷயத்தில் இவர்களின் கருத்தாக இருப்பது. (It is because of this noble role that the teacher in ancient India was the most respected member of society. Only the very best and most learned became teachers)“அந்த காலத்தில் சிறந்தவர்களும் நன்கும் கற்றவர்களும் குருக்களாக இருந்தனர். குருக்களுக்கு சமூகத்தில் மிகப்பெரிய மரியாதை இருந்தது. அவர்கள் சுதந்திரமாக கற்பித்தலை நிகழ்த்தினார்கள். அவர்களுக்கு வேண்டியது பெற்றோர்களால் வழங்கப்பட்டது” ( இந்த தி வெறி பெஸ்ட் ன்னா இன்னாங்கோ??)
(Today, however, the status of the teacher has undoubtedly and unfortunately dropped. )துரதிஷ்ட வசமாக இப்போது ஆசிரியர்களுக்கு அப்படியான மரியாதை சமூகத்தில் இல்லை. ஏனென்றால் அவர்களின் தரம் மிகவும் குறைந்து விட்டது தான் காரணம். ( அந்தக் காலம் இந்தக் காலம் இடையிலான மெல்லிய கோடு எது தெரியுமா ஒரு ”நூல்” தான். அவா ஆசிரியராக இருந்த வரையிலும் ஷேமமா இருந்த கல்வி எல்லா வர்ணத்தாரும் ஆசிரியராக ஆனவுடன் “அபிஷ்டு” ஆயிடுத்து)
திறமையான ஆசிரியர்களை தோற்றுவிப்பதற்கென்றே உதவித் தொகைகள் உருவாக்கப் பட இருக்கின்றன. பள்ளி அளவில் நல்ல திறமையும் நல்ல நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணும் கொண்ட பின் தங்கிய சமூக மற்றும் பொருளாதார பின்னணி கொண்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு நான்காண்டு ஆசிரியர் படிப்பு வழங்கப்பட்டு பணி வழங்கப் படும். என்கிறார்கள். கவனித்தீர்களா “சமூக பொருளாதார” என்கிற வார்த்தையை. அதாவது இடஒதுக்கீடு முறை சுத்தமாக ஒதுக்கி வைக்கப் படும்.இருக்கும் இந்த திறமையற்ற ஆசிரியர்கள வச்சிக்கிட்டு என்னா பண்றது?
அவர்களுக்கும் அவர்களின் தகுதி திறமையை கண்டறிய அவ்வப்போது தேர்வு உண்டு. 
ஏதோ எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா பதவி உயர்வு என்பதெல்லாம் குளோஸ். இனிமே அதுக்கும் மதிப்பீடு உண்டு. அது வேலையில் உங்கள் வெற்றிப் புள்ளிகளை பொறுத்து குழு வழங்கும் மதிப்பீடு
இறுதியாக நான் சொல்வது இது தான்.

இந்த கொள்கையின் உள்ளார்ந்த நோக்கமாக நான் அவதானித்தது இவை தான்
1.   இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு. ( பட்டியலில் ஏதாவது ஒரு மொழி என்றாலும் இந்தியா முழுவதும் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் 22 மொழி ஆசிரியர்கள் என்பது சாத்தியமல்ல எனவே இந்தி தான் வரும்)
2.   செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு உயிரூட்டுவது.
3.   கல்வியில் பெருமளவு தனியார் மயம்.
4.   ஆசிரியர் நியமனத்தின் அடிப்படையையே மாற்றி இடஒதுக்கீட்டை சிதைப்பது.
5.   கல்வியில் மாநில அதிகாரத்தை முற்றிலுமாக நிர்மூலமாக்குவது.
6.   National Shiksha Aayog கல்விக்கும் “ஒரே“ தலைமை.
7.   நுழைவுத் தேர்வு மையங்கள் புற்றீசல் போல முளைக்க வழிவகை செய்வது. காசு இருந்தா காலேஜ் போ இல்லன்னா வெளில போ



2 comments:

  1. அலசி ஆராஞ்சி பிச்சி ஒதறி பின்னி பெடலெடுத்துட்டபா.... ஆக்காங்... வேடிக்க பாக்றதவிட வேற என்ன பண்ண...

    ReplyDelete
  2. அந்த உள்ளார்ந்த நோக்கம் 7 ம் உண்மைதான்...

    ReplyDelete

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...