Saturday, August 24, 2019

சமீபத்தில் பார்த்த படங்கள்



1.HOTSTAR ல் வந்த வெப் சீரிஸ் HOSTAGES.
முதலைமைச்சருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் மருத்துவர் மீரா ஆனந்தின் வீட்டுக்குள் புகுந்து பிணை கைதிகளாக குடும்பத்தினரை பிடித்து வைத்துக் கொண்டு முதல்வரை சிகிச்சையின் போதே சத்தமின்றி முடிக்கச் சொல்லி வற்புறுத்தும் கும்பல். முதலமைச்சர் பிழைத்தாரா, மருத்துவர் குடும்பம் சிக்கலில் இருந்து வெளியேறியதா என்பதை பத்து எபிசோடுகளில் பரபரப்பு குறையாமல் பக்குவமாக சொல்லி இருக்கிறார்கள்.


2.ராதாமோகனின் ”காற்றின் மொழி”. அவரது வழக்கமான பாணியிலான படம். ஜோதிகா நன்றாக நடித்திருப்பார். இன்னும் எத்தனை படத்தில் தான் எம்.எஸ்.பாஸ்கரை மனநிலை பிறழ்ந்தவராக காண்பித்து பின்னர் ஒரு நெகிழ்ச்சியான ஃபிளாஷ்பேக் வைக்க உத்தேசம்??
சித்ஸ்ரீராம் பாடியுள்ள “போ உறவே” அருமையான பாடல். பாடல் வரிகளை கவனித்துக் கேளுங்கள் அருமையாக எழுதப்பட்டுள்ளது.

3.ANDHADHUN என்கிற ஒரு இந்தி படம். இதுவும் HOTSTAR ல் தான். ஒரு பியானோ இசைக் கலைஞன் பார்வையற்ற உலகிற்கு சென்று தனது இசை மீது கவனக்குவிப்பு செய்து சாதித்து வெளிநாடு செல்ல எண்ணுகிறான். ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது. (கபாலி பட  ஹீரோயின் தாங்க அது) அவளை பார்க்க எண்ணி கரு விழி மறைக்கும் லென்சை எடுத்து விட்டு “பார்வை“ தெரியாத மாதிரி நடமாடுகிறான். அந்த மாதிரி ஒரு தருணத்தில் ஒரு கொலை செய்யப்பட்டு சூட்கேசில் பாடியை மறைத்து எடுத்து செல்வதை பார்த்து விடுகிறான். போலீசில் சொல்ல சென்றால் அங்கே போலீசாக கொலைகாரன். இவனுக்கு கண் தெரியுமோ என்று சந்தேகம் கொள்கிறான். அந்த சம்பவத்தால் அலைக்கழிக்கப் படுகிறான். உயிர் பிழைத்தானா? இசையில் சாதித்து வெளிநாடு சென்றானா? என்பதை சுவாரசியம் குறையாமல் க்ளைமாக்ஸின் இறுதி வினாடியில் ஒரு த்ரில் வைத்து சொல்லி இருக்கிறார்கள். கண் தெரியாமல் நடித்த ஹீரோ தான் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர்.

4.“கேம் ஓவர்“ தமிழ் படம் தான். வெள்ளாவியில் வெளுத்த “டாப்சி“ தான் ஹீரோயின். பாலியல் அத்து மீறலுக்கு உள்ளாகி அதனால் இருட்டைக் கண்டால் அலறும் மனநோய்க்கு ஆட்படுகிறார். அவரும் அவருடைய சர்வன்ட் மெய்டும் ஒரு தனி வில்லா வில் வசிக்கிறார்கள். அவருக்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை நல்ல திகிலோடு சொல்லி இருக்கிறார்கள். பாலியல் அத்து மீறலால்  பாதிக்கப் பட்ட பெண் எந்த மாதிரியான உளவியல் சிக்கல்களை அனுபவிக்கிறார் என்பதை நன்றாக காட்சி படுத்தி இருக்கிறார்கள். டாட்டூ குத்தும் ஃபேஷன், மெமோரியல் டாட்டூ இறுதியில் லைட்டா அமானுஷ்யம் என்று பயணிக்கிறது கதை. பின்னணி இசை நிச்சயம் பாராட்டப் பட வேண்டும்.

5.”THE DEAL’” KOREAN MOVIE ஒரு சைக்கோ சீரியல் கில்லர். ஒரு போலீஸ் ஆபிசரின் கர்ப்பிணி தங்கையை கொன்று விடுகிறான். ஆபீசர் உடனடியாக புலனாய்வு செய்து கண்டு பிடித்து விடுகிறார். தண்டனையும் பெற்று தருகிறார். அவரது தங்கையின் பிணத்தை எங்கே புதைத்தேன் என்பதை சொல்ல மறுக்கிறான். சிறையில் இருக்கும் ஒரு கைதியின் எதிரியை வெளியே இருக்கும் அந்த இறந்து போன பெண்ணின் கணவன் கொலை செய்கிறான். அந்த கைதி உள்ளே இருக்கும் அந்த சைக்கோ கொலைகாரனை கொலை செய்ய முயல்கிறான். ஆனால் தப்பித்து விடுகிறான். சைக்கோ கொலைகாரன் கொல்லப் பட்டானா? தங்கை புதைத்த இடம் தெரிந்ததா? மச்சான் நிலை என்ன? என்பதை தமிழுக்கு சற்றும் குறையாத மசாலா நெடியுடன் கொடுக்கும் ஒரு பழிவாங்கும் போலீஸ் ஸ்டோரி.

6. எப்போதுமே வங்கி கொள்ளை சார்ந்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அது ஒரு விடுகதைக்கு உண்டான சுவாரசியத் தன்மை நிறைந்து இருக்கும். ஹாட்லி சேஸ் ன் கதையை தழுவி எடுக்கப் பட்ட தமிழ்ப் படம் “நாணயம்“ மற்றும் மற்றொரு நல்ல படமான ”ராஜதந்திரம்” இவை இரண்டுமே மிக சுவாரசியமாக இருக்கும். ஆனால் ஓடவில்லை. நாணயமாவது சற்று உருண்டு ஓடியது. (நான் போகிறேன் மேலே மேலே என்கிற அருமையான மெலடிப் பாடல் அதில் உண்டு)
“THE ITALIAN JOB” இத்தாலியின் வெனிஸ் நகரில் ஒரு வங்கியின் தங்க பாலங்கள் இருக்கும் லாக்கரை திருடுகிறது ஒரு கும்பல். ஒரு வயதானவர்தான் அதை திறக்கிறார். அந்த கும்பலில் ஒருவன் அனைவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி குளிர்ந்த ஆற்றில் தள்ளி சுட்டுவிட்டு அனைத்து தங்க பாலத்தையும் ஆட்டைய போடுகிறான். துப்பாக்கி சூட்டில் அந்த வயதானவரைத் தவிர அனைவரும் தப்பிக்கிறார்கள். நான்காண்டுகளுக்கு பிறகு கதை அமெரிக்காவில் விரிகிறது. அந்த வயதானவரின் மகள் சட்டப் பூர்வமாக வங்கி லாக்கர்களை திறந்து தரும் ஒரு நேர்மையான ஆளாக இருக்கிறாள். துரோகத்தை வென்று தங்கத்தை மீண்டும் கைப்பற்ற அந்த கும்பலோடு இணைகிறாள் மகள். இப்போது அந்த ஒருவனிடம் இருக்கும் தங்க பாலங்களை எப்படி இவர்கள் திட்டமிட்டு லவட்டுகிறார்கள் என்பதை மிக சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள். இந்தப் படம் ஜியோ மூவிஸ் ல கிடைக்கிறது.


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...