புத்தகம்
– கானகத்தின் குரல்
ஆசிரியர்
– ஜாக் லண்டன்
மொழிபெயர்ப்பு
– பெரியசாமி தூரன்
ஜாக் லண்டன் 1903 ல் எழுதிய அவரது பிரபலமான நாவல்
தான் கானகத்தின் குரல். சென்ற மாதத்தில் அன்றைய கிண்டில் இலவச புத்தகங்களை தேடியபோது
சிக்கியது. சேமித்து வைத்துக் கொண்டேன். இன்று தான் படித்து முடித்தேன். 200 பக்க அளவுள்ள
நாவல்.
நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்த போது சுத்தமல்லி
பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்த எஸ்.எம் சார் புவியியல் பாடம் நடத்தியபோது
அலாஸ்கா பற்றி நடத்தினார். “உறைந்திருக்கும் ஆற்றுப் பகுதிகளில் குளிர் காலங்களில்
மரங்களை வெட்டி அடுக்கி வைத்து விடுவார்கள். பின்பு கோடை காலங்களில் பனி உருகும் போது
ஆற்று நீரில் மரக்கட்டைகள் மிதந்து வரும். அவற்றை கரையோர தொழிற்சாலைகளில் எடுத்து பயன்படுத்திக்
கொள்வார்கள்” என்று கூறியது இன்றளவும் அலாஸ்காவின் ஜில்லிப்போடு ஞாபக அடுக்குகளில்
உறைந்து கிடக்கிறது.
ஆம், அலாஸ்கா புவியின் வட முனையான ஆர்டிக் பிரதேசத்தை
தழுவிக் கிடக்கும் குளிர் பிரதேச நாடாகும். இது கனடாவுக்கு மேற்கே துண்டாக பிரிந்து
கிடக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு பகுதியாகும். 19 ம் நூற்றாண்டில் ஒரு ஒப்பந்தத்தின்
மூலமாக இந்தப் பகுதி ரஷியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு கை மாறியுள்ளது. என்னது ரஷ்யா
வா என்று வியக்காதீர்கள் புவி உருண்டையை கற்பனை செய்தீர்கள் என்றால் ரஷ்யாவின் எக்ஸ்ட்ரீம்
கிழக்கில் இது வருகிறது.
சரி, சரி நாவலுக்கு வருகிறேன். கானகத்தின் குரல்
என்பது வீட்டு நாயாக வளர்ந்து படிப்படியான தனது கடுமையான அனுபவங்கள் மூலமாக கானகத்தின்
ஓநாய் குலத்தோடு ஒன்றி மனநிறைவு அடையும் “பக்“ என்கிற நாயின் கதை தான்.
கலிஃபோர்னியாவில் ஒரு ஜட்ஜ் வீட்டில் சுகபோகமாக
வளர்ந்து வரும் நாய் “பக்“ ஆகும். ஜட்ஜ் ன் பிரியமான நாய். ஒரு நாள் அந்த வீட்டு பையன்
ஒருவனால் அது சிவப்பு அங்கி போட்டவன் ஒருவனுக்கு விற்கப் படுகிறது. அவன் ஒரு கொடுமைக்கார
பாஸ். அடிக்கடி பக் அவனிடம் உதைபட்டு வளர்கிறது. பிரிதொரு நன்னாளில் சிவப்பு அங்கிக்
காரனால் விற்கப்படுகிறது. அவனிடம் இருந்து விடுதலையானது குறித்து அதற்கு மகிழ்ச்சியே.
அது அலாஸ்கா பகுதியில் தங்கம் தேடி அலையும் மக்களின் கடிதங்களை பெற்று வந்து சேர்க்கும்
பனிச்சருக்கு பயணத்திற்கு பயன்படும் ஸ்லெட்ஜ் எனப்படும் பல நாய்களைப் பூட்டி இழுக்கப்
படும் பனிச்சருக்கு வண்டியை இழுக்கும் வேலைக்குப் பழக்கப் படுத்தப் படுகிறது. ஆயிரக்கணக்கான
கிலோமீட்டர்கள் உறைபனியில் தபால் உறைகள் நிறைந்த கனமுள்ள வண்டியை இழுத்துக் கொண்டு
ஓட வேண்டும்.
பக் அந்த முகாமுக்கு வந்த அன்று பனிபடர்ந்த அந்த
பிரதேசத்தில் எங்கே படுப்பது என்று தெரியாமல் விழித்தபடி உறைபனி குளிரில் சுற்றி சுற்றி
வருகிறது. வண்டி இழுக்கும் 16 நாய்களில் ஒன்றைக் கூட காணவில்லை. அப்படி எங்கே தான்
அவை தூங்குகின்றன என்று ஆராய்ந்த படி வருகிறது. பிறகுதான் தெரிகிறது அவையெல்லாம் பனியில்
குழிபறித்து அந்த குழிக்குள் வெது வெதுப்பாக உறங்குகின்றன என்பது. (இக்லூ ஹவுஸ்). உடனடியாக
தானும் ஒரு குழிபறித்து உறங்க கற்றுக் கொள்கிறது. அதன் புதிய முதலாளிகள் அதன் சர்வைவல்
திறமை குறித்து வியந்து பேசுகிறார்கள்.
அடுத்ததாக தனக்கான இடத்தை போராடி அடையும் அதன்
துணிவு. ஆம் ஸ்லெட்ஜ் வண்டியை இழுக்கும் நாய்கள் கூட்டம் ஒரு தலைமை நாய் முன்னின்று
வண்டி இழுக்க மற்றவை தொடர்ந்து செல்லும். மேலும் அந்த தலைமை நாய் தான் மற்ற நாய்களை
நெறிபடுத்தும். அந்த இடத்தை அடைய பக் முடிவு செய்கிறது. அந்த தலைமை நாயை தன்னுடைய எதிரியாக
வரித்துக் கொண்டு அதனுடன் அடிக்கடி மோதுவதாகட்டும், பிற நாய்கள் அதன் கட்டளைக்கு கீழ்படியாமல்
இருக்கும்படி தூண்டுவதாகட்டும் தலைமைப் பதவியை பிடிக்க அத்தனை தந்திரங்களையும் கையாண்டு
இறுதியில் வாழ்வா சாவா யுத்தத்தில் அந்த தலைமை நாயைக் கொன்று விட்டு அந்த இடத்தைப்
பிடிக்கிறது.
நல்லபடியாக தபால் வண்டியை இழுத்தபடி ஆயிரக்கணக்கான
மைல்கள் பயணித்தபடி வாழ்ந்து வரும் வாழ்வு கெடுவாய்ப்பாக முடிவுக்கு வருகிறது. ஆம்
பணி முடிந்தவுடன் அந்த வண்டியில் பிணைக்கப் பட்ட நாய்கள் அனைத்தும் வண்டியோடு வேறு
ஒரு மூவர் அணிக்கு விற்கப்படுகின்றன. அந்த மூவரும் தங்க வேட்டைக்காக அலாஸ்க்காவில்
பயணிக்கும் அனுபவமில்லாதவர்கள். அவர்களின் அனுபவமின்மையும் தவறான வழிகாட்டுதலும் நாய்களின்
அன்றாட வாழ்க்கையை நரகமாக்குகின்றன. சதா அடி உதை, சரியான உணவு இன்மை, வேலை தேவையே இன்றி
அதிகபாரம் என்று அல்லல் பட்டு பசியாலும் உடல் காயங்களாலும் ஒவ்வொரு நாயாக இறக்கின்றன.
இறுதியாக நான்கு நாய்கள் மட்டுமே மிஞ்சுகின்றன. பனி உருக ஆரம்பிக்கும் காலம் வருகிறது.
அந்த நேரத்தில் பிடிவாதமாக மேற்கொள்ளும் அந்த மூவர் குழு வண்டியோடு பனியாற்றில் புதையுண்டுவிடுகின்றனர்.
அந்த மூவரிடம் இருந்து சண்டை போட்டு பக்கை தாண்டைக்
என்பவர் காப்பாற்றி விடுகிறார். அந்த பயணத்தில் மேற்கொண்டு செல்லாத காரணத்தினால் பக்
உயிர் பிழைக்கிறது. உடல்நலிவோடு இருக்கும் பக் தாண்டைக் கின் கவனிப்பில் மீண்டும் பழைய
வலுவை அடைகிறது. தாண்டைக் மீது அளவற்ற அன்பு கொண்டு இருக்கிறது. தனது உயிரைப் பணயம்
வைத்து இரண்டு முறை அவனை காப்பாற்றுகிறது. அவன் சொன்னால் போதும் கண்ணை மூடிக் கொண்டு
எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. அப்போது கானகத்தில் இருந்து அழைப்பு வருவதாக அதன்
உள் மனதில் குரல் கேட்கிறது. அதனால் இரவுகளில் கானகத்தில் சுற்றித் திரிகிறது. அப்போது
ஒரு இளம் ஓநாயுடன் நட்பு கொண்டு அதனுடன் இரண்டு நாட்கள் பயணித்த பின்பு தாண்டைக்கின்
ஞாபகம் வரவே திரும்பி வருகிறது. அதற்கு மனதில் இப்போது கானகமா தாண்டைக்கா என்கிற நிலை
வருகிறது. மற்றொரு முறை அது அவ்வாறு நீண்ட கானகப் பயணம் மேற்கொண்டு திரும்பும் போது
செவ்விந்திய பழங்குடி கூட்டத்தினால் தாண்டைக் குழுவினர் அனைவரும் கொல்லப் படுகின்றனர்.
அவர்களை தாக்கி சிலரைக் கொன்று விட்டு மீண்டும் கானகத்தில் சென்று ஓநாய்க் கூட்டத்தோடு
இணைவதாக முடிக்கிறார் ஜாக் லண்டன்.
நாவல் முழுவதும் நாயின் பார்வையில் தான் செல்கிறது.
நாயுடனான மனிதனின் நட்பை அவ்வளவு நுணுக்கமாக விவரித்துள்ளார் நாவலாசிரியர். நாயை விரும்பி
வளர்ப்பவர்கள் இந்த நாவலை இன்னும் மனதிற்கு நெருக்கமாக உணரலாம்.