Tuesday, October 13, 2020

“நந்தினி ஐ.ஏ.எஸ்” - சிறுகதை

 



     “நந்தினி ஐ.ஏ.எஸ்” என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தை எடுத்து வந்து மேசையில் வைத்தார் தமிழாசிரியர் மணிகண்டன்.

     “நம்ம ஸ்கூல்ல புதுசா சேந்த ஆறாம் வகுப்பு நந்நதினி எழுதிய புத்தகம் சார்”

     சென்ற ஆண்டின் பழைய ரூல்டு நோட்டின் எழுதப்படாத பக்கங்களை கிழித்து எடுத்து நான்காக கத்தரித்து அவற்றை பிசிறு இன்றி நூலால் தைத்து குண்டு குண்டான கையெழுத்தில் எழுதப்பட்ட புத்தகம் அது.

     பிறப்பு, தாய் தந்தையர் குறித்த குறிப்பு, சொந்த ஊர் குறித்த குறிப்பு பிறகு தனது லட்சியமான ஐ.ஏ.எஸ். அதற்கான காரணம் என அழகாக வரிசைக்கிரமமாக விஷயங்களை அடுக்கி இருந்தாள் குட்டிப் பெண் நந்தினி.

     தலைமையாசிரியர் வாயடைத்துப் போய் அவளைப் பார்த்து சிரித்தார். அவளோ வெட்கத்தில் “சார்“ என்றபடி சிரித்து நெளிந்தாள்.

     “அப்பா என்னம்மா பண்றாரு?“

     “கேரளாவுக்கு வேலைக்குப் போய் இருக்காரு சார்”

     “அம்மா”

     “அம்மா கள வெட்டப் போவாங்க சார்“

     “படிச்சி இருக்காங்களாம்மா”

     “ரெண்டு பேரும் அஞ்சாப்பு முடிய படிச்சி இருக்காங்க சார்“

     “உனக்கு ஐ.ஏ.எஸ் பத்தி யாரும்மா சொன்னாங்க?”

     “டி.வி நியுஸ்ல பாப்பேன் சார், அப்புறம் நம்ம மாவட்ட கலெக்டர் போன வருசம் நம்ம ஊருக்கு வந்து பேசினாங்கல்ல சார். அவங்கள போல நானும் கலெக்டர் ஆகணும்னு தோணுச்சி சார்“

     சென்ற ஆண்டு பணியாற்றிய லேடி கலெக்டர் முத்துமீனாட்சி தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வின் பரிந்துரையை புறந்தள்ளி விட்டு உள்ளபடியே தகுதியுள்ள ஆதரவற்ற பெண்களுக்கு சமையல் உதவியாளர் போஸ்டிங் போட்டு இரவோடு இரவாக ஆணைகளை விநியோகம் செய்து பணியில் சேர வைத்து விட்டார். மேற்படி காரணத்தினால் மாற்றலாகிப் போய் விட்டார். ஆனாலும் கூட அவர் பணியாற்றிய ஓராண்டில் பல மாணவியருக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். அதன் ஒரு சாம்பிள் தான் இந்த நந்நதினியின் புத்தகம் என தலைமையாசிரியர் புரிந்து கொண்டார்.

     ”இந்தப் புத்தகத்தை நான் படிச்சிட்டு வச்சிக்கட்டுமா நந்தினி?“

     “வச்சிக்கோங்க சார், நான் இன்னைக்கு நைட் வேற எழுதிக்கிறேன் சார்” என்றாள் பெருமை பொங்க.

அமுதவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு குடியரசு தினவிழாக் கொண்டாட்டங்கள் வழக்கத்தை விட சிறப்பாக இருந்தது. வண்ண வண்ணமாய் கொடித் தோரணங்கள் கொடிமரத்தில் இருந்து நான்கு பக்கங்களும் இழுத்துக் கட்டப் பட்டிருந்தன. கொடி மரத்தின் கீழே வண்ணக் கோலப்பொடிகளால் அழகிய ரங்கோலி இடப்பட்டிருந்தது. பெண்ணாசிரியர்கள் அனைவரும் ஒரே வண்ண சேலைகளில் வந்திருந்தனர். மாணவர்களும் சீருடையில் தேசியக் கொடியைக் குத்தியிருந்தனர்.

     “அடுத்ததாக ஆறாம் வகுப்பு மாணவி நந்தினி பரதநாட்டியம் ஆடுவார்” என்று அறிவியல் ஆசிரியை விஜி அறிவித்தார்.

     “பனிவிழும் பருவநிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்பக் கலையோ…” என்ற ஜேசுதாஸ் பாடிய பாடலுக்கு அழகாக ஆடினாள் நந்தினி. அழகியப் பூச்செண்டு அசைந்து ஆடியது போல இருந்தது. மழலை மாறாத முகத்தில் மெலிதான மேக்கப் மற்றும் பிரத்தியேக நடன உடைகள் என ஆசிரியைகள் கற்றிருந்த மொத்த வித்தைகளையும் இறக்கி இருந்தார்கள்

     வாய்க்குள் கல்கோனா மிட்டாயை அடக்கி வைத்துக் கொண்டு பேசுவது போல மழலையாய்ப் பேசுவாள் நந்தினி. அவளை பேசவைத்துக் கேட்பதற்காகவே சும்மாவே ஆசிரியர்கள் அவளிடம் ஏதாவது விசாரிப்பார்கள். அவளும் பட்டாம் பூச்சி சிறகசைப்பது போல கண்களை படபடவென்று அசைத்த வண்ணம் பேசுவாள். பேச்சினூடாக மூச்சுவாங்கிய படி பட பட வென்று பொறிந்து தள்ளுவாள். அவளுக்கு பேசவும் அலுக்காது ஆசிரியர்களுக்கு கேட்கவும் அலுக்காது.

     நந்தினி எட்டாம் வகுப்பிற்கும் வந்துவிட்டாள். ஆனால் ஆறாம் வகுப்பில் பார்த்தது போன்ற அதே மழலை மாறா குரலும் முகமும். அந்த ஆண்டு பள்ளிக்கு ஆண்டாய்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வருவதாக இருந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமையாசிரியர் ஆசிரியர் கூட்டத்தை கூட்டினார்.

     “நாம எவ்வளவு தான் வகுப்பறைக் கற்பித்தலில் நமது திறமையை காண்பித்தாலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சொதப்பி விட்டோமானால் அனைத்தும் பாழ். அதனால் வழிபாட்டுக் கூட்டத்திலேயே சி.இ.ஓ வை அசத்தும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடத்திவிட வேண்டும்“ என்றார் தலைமையாசிரியர்.

     “சார் இந்த முறை வழிபாட்டுக் கூட்டத்தை முழுவதும் ஆறாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு நடத்தி விடலாம் சார். அவர்கள் தவறு செய்தால் கூட அது ரசிக்கத் தக்க  வகையில்தான் இருக்கும்.“ என்றார் கணித ஆசிரியர் சரவணன்.

     “சார் திருக்குறள் மட்டும் எட்டாம் வகுப்பு நந்தினியே சொல்லட்டும் சார். அவளும் ஆறாவது மாதிரியே தான் இருப்பா, மேலும் அவளோட மழலைக் குரலில் திருக்குறள் கேட்க நன்றாக இருக்கும்” என்றார் அறிவியல் ஆசிரியை விஜி.

     ஆண்டாய்வு அன்றைக்கு காலை எட்டு முப்பதுக்கெல்லாம் அனைவரும் வந்து விட்டார்கள். ஒரு பக்கம் காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்தும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ரிகர்சல் நடந்து கொண்டு இருந்தது. ஆசிரியர்கள் அனைவரும் சுருட்டிய சார்ட் பேப்பரை கையோடு எடுத்துக் கொண்டு இங்கும் அங்கும் திரிந்தார்கள்.

     “நந்தினி என்னம்மா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருக்கே” கணித ஆசிரியர் சரவணன்.

     “சார், இங்கப் பாருங்க சார் ரிகர்சல் ரிகர்சல்னு சொல்லி அதே திருக்குறளை பத்து தடவை சொல்ல வச்சிட்டாங்க சார்” என்று அழகாக அலுத்துக் கொண்டாள்.

     அமுதவயல் பள்ளியில் மட்டும் வழிபாட்டுக் கூட்டத்தில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்தில் வரும் “வாழ்த்துதுமே“ஐந்து முறை ஒலிக்கும். ஆம், பசங்க ஒன்ன புடி என்ன புடி என்று இழுத்து முழக்கி கொத்து பரோட்டா போட்டு விடுவார்கள். ஆனால் ஆண்டாய்வின் போது எல்லோரும் நூல் பிடித்தாற் போல் சரியாக பாடி முடித்துவிட்டனர்.

     ’அப்பாடா, ஒரு கண்டத்த கிராஸ் பண்ணியாச்சு’ என்று தலைமையாசிரியரும் உடற்கல்வி ஆசிரியரும் பெருமூச்சு விட்டனர்.

     நந்நதினி திருக்குறளுக்கு அழைக்கப் பட்டாள். வந்தவள் ஒரே தாவாக மைக்கை இழுத்து தனது உயரத்திற்கு அட்ஜஸ்ட் செய்தாள். பிறகு மைக்கின் தலையில் ரெண்டு தட்டு தட்டி ஒர்க் பண்ணுதா என்று சோதனை செய்தாள். அவளின் இந்த செயலை சிஇஓ புன் சிரிப்போடு ரசித்துக் கொண்டு இருந்தார்.

     “நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

     மேற்சென்று இடித்தல் பொருட்டு“

என்று தலையை ஆட்டி ஆட்டி குறளையும் பொருளையும் அழகான மழலைக் குரலில் பேசி முடித்தாள். சி.இ.ஓ அவளின் கன்னத்தை தட்டி தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பேனாவை பரிசளித்தார். தலைமையாசிரியருக்கோ மட்டன் பிரியாணியையே லெக் பீசோடு சாப்பிட்டது போல பரம திருப்தி.

     மாலை பின்னூட்டம் வழங்கும் கூட்டத்தில் வழிபாட்டுக் கூட்டம் நடத்தப்பட்ட விதத்தையும், பள்ளியையும், ஆசிரியர்களையும் வெகுவாகப் பாராட்டிச் சென்றார். அந்த பாராட்டிற்கு நந்நதினியும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.

     நந்தினி பத்தாம் வகுப்பிற்கும் வந்து விட்டாள். சற்று வளர்ந்திருந்தாள். ஆனால் அதே பட்டாம் பூச்சி படபடப்புடனான கண்கள், கல்கோனா மிட்டாய் அடக்கிய மழலைப் பேச்சு மட்டும் அவளை விட்டு நீங்க வில்லை.

     மதிய உணவு முடித்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட வந்த ஆசிரியர்களை அப்படியே நிறுத்தி ஒரு கூட்டத்தை நடத்தினார் தலைமையாசிரியர்.

     “சார் அடுத்த வாரம் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சிடுங்க. கடையில காசு கொடுத்து வாங்கி ரெடிமேட் எக்சிபிட் எதுவும் இருக்க கூடாது. முழுக்க முழுக்க நாமே செய்ததாக இருக்க வேண்டும். எக்சிபிட் எப்படி இருந்தாலும் அத ப்ரசெண்ட் பண்ற விதத்தில் தான் பரிசு வாங்க முடியும். அதனால நல்லா ப்ரசெண்ட் பண்ணக் கூடிய பசங்கள பாத்து தேர்வு செய்யுங்க“

     “சார் நான் மேத்ஸ் சார்பா ஒரு காட்சி வைக்கிறேன் சார்.“ இது கணித ஆசிரியர் சரவணன்.

     “வெரி குட் எல்லா வருசமும் கணக்குல எக்சிபிட் குறைவாத்தான் வருது சிறப்பா பண்ணுங்க நிச்சயம் பரிசோட வரலாம்”

     “சார் நான் குளோபல் வார்மிங் பற்றி ஒரு ஐடியா இருக்கு அத டெவலப் பண்ணிடறேன் சார்” இது அறிவியல் ஆசிரியை விஜி.

     அடுத்த நாள் அறிவியல் கண்காட்சி. கண்காட்சிக்கு தேர்வு செய்யப் பட்ட மாணவர்களை தலைமையாசிரியர் அழைத்து அவர்களை விளக்கச் சொல்லி ஒரு முறை கேட்டு திருப்தி அடைந்தார். உங்கள் யூகம் சரிதான். அறிவியலுக்கு நந்நதினி தான் செல்கிறாள்.

     விஜி மிஸ், குளோபல் வார்மிங் பற்றிய கண்காட்சியில் வெறும் விழிப்புணர்வு கருத்து மட்டும் தான் இருக்கு. அதனால நந்தினிக்கு எதாவது வித்தியாசமா காஸ்ட்யும் போட்டு விட்டு அந்த கருத்துக்களை சொல்ல வச்சா நல்லா இருக்கும்“

     “நல்ல ஐடியா சார், நிச்சயமா நல்லா இருக்கும் சார்”

     நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவங்குவதாக இருந்தது. பணி நிமித்தம் வர இயலாமையால் சி.இ.ஓ திறந்து வைத்தார். மாலை பரிசளிப்பிற்கு வருவதாக உறுதியளித்திருந்தார்.

     நந்தினி குறி சொல்லும் பெண் போல வேடமிட்டு வந்திருந்தாள். புருவத்திற்கு மையிட்டு சுற்றிலும் வண்ணப் பொட்டுகள், கோணலான குதிரை வால், அதற்கு மேலே மல்லிகை கனகாம்பரம் பூ, நேர்த்தியாக கட்டிய புடவை, கக்கத்தில் ஒரு கூடை அப்புறம் கையில் குறி சொல்லுபவர்கள் வைத்திருக்கும் சிறு கோல் என்று குறி சொல்லும் பெண்ணாகவே மாறி இருந்தாள்.

பூமிப் பந்தின் அருகே நின்று “நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது, ஜக்கம்மா சொல்றா” என்று தொடங்கி சுற்றுச் சூழல் மாசுபாடு விளைவு மற்றும் தவிர்க்க யோசனைகள் என அனைத்தையும் அழகாக ஜக்கம்மா பாஷையில் கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினாள்.

அவளிடம் குறி கேட்பதற்கென்றே அமுதவயல்ப் பள்ளி அரங்கில் மட்டும் கூட்டம் அலை மோதியது. நந்தினியும் சற்றும் உற்சாகம் குறையாமல் சிரித்த முகத்தோடு அனைவருக்கும் குறி சொல்லி அனுப்பினாள்.

மாலை பரிசளிப்பு விழாவுக்கு கலெக்டர் வந்திருந்தார். பரிசு அறிவிக்கப் பட்டது. நந்தினிக்கு சுற்றுச் சூழல் பிரிவில் முதல் பரிசு கிடைத்தது. அப்போது தலைமையாசிரியர் கலெக்டர் அருகே சென்று ஏதோ கூறினார். அதற்கு சிரித்துக் கொண்டே ஒப்புக் கொண்டார்.

பரிசு வாங்க நந்தினியோடு, விஜி மிஸ் மற்றும் தலைமையாசிரியரும் மேடைக்கு வந்தனர். அப்போது கலெக்டர் மைக்கில் “தற்போது பரிசு பெறுபவர் நந்தினி ஐ.ஏ.எஸ்” என்று புன்னகைத்தபடி கூறி கோப்பையோடு தலைமையாசிரியரால் அழகுற பைண்ட் செய்யப் பட்டிருந்த அவளது புத்தகத்தையும் வழங்கினார். இந்த ஆனந்த பேரதிர்ச்சியால் நந்தினி அழுதுகொண்டே தனது புத்தகத்தை வாஞ்சையோடு தடவினாள்.

அடுத்த ஆண்டு இன்னுமோர் அதிர்ச்சி காத்திருந்தது. பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்து விட்டிருந்தது. எல்லோரும் டி.சி. வாங்கி அங்கேயே மேல்நிலை வகுப்பும் சேர்ந்து இருந்தனர். நல்ல மதிப்பெண் எடுத்தும் நந்தினி மட்டும் டி.சி வாங்க வரவே இல்லை.

அப்புறம் கூப்பிட்டு அனுப்பிய பிறகு வந்திருந்தாள். பழைய சிரிப்பு, உற்சாகம் எதுவும் இல்லை. கண்களில் படபடக்கும் பட்டாம்பூச்சியும் காணவில்லை. வந்தவள் ஒரு லாங் சைஸ் நோட்டை வழக்கத்திற்கு மாறாக தாடைக்கு கீழே நிறுத்தி இருந்தாள்.

“என்னம்மா ஆளே வித்தியாசமா இருக்கே, டி.சி வாங்க இவ்வளவு லேட்டா வர்ர என்னாச்சு?” என்று தலைமையாசிரியர் பரிவோடு விசாரித்தார்.

“ஒண்ணுமில்ல சார்“ என்று முடித்துக் கொண்டாள் நந்தினி.

“முன்னெல்லாம் சாப்டியாம்மான்னு கேட்டாளே மூச்சு வாங்க முக்கா மணிநேரம் பேசுவ இப்போ இவ்வளவு சுருக்கமா பேசுற. சரி ஆபீஸ்ல போய் கையெழுத்து போட்டுட்டு டி.சி வாங்கிக்க. கூட யாரு வந்துருக்கா?”

“மாமா வந்துருக்காங்க சார்”

“பாக்க சின்னப் பையனா இருக்காரு இவருதான் உங்க மாமாவா?“

“ஆமா சார்“

“சரி வாங்கிக்கிட்டு போ. எங்க படிக்கப் போறம்மா?”

“தெரியல சார்” என்றபோது கண்களில் இருந்து களுக் கென்று கண்ணீர் விழுந்தது. யாரும் பார்ப்பதற்குள் லாவகமாக சுண்டிவிட்டாள்.

அதற்கு மேலும் தோண்டவேண்டாம் என்று விட்டு விட்டாலும் “என்ன பிரச்சினையா இருக்கும்?” என்று சிந்தனையில் ஆழ்ந்தார் தலைமையாசிரியர்.

“விஜி மிஸ் என்னாச்சு? ஏன் அழுதுகிட்டே வரீங்க?“

“சார்…“

“நிதானமா சொல்லுங்கம்மா, என்னாச்சு?”

“சார் நந்தினிக்கு அவங்க பேரண்ட்ஸ் மே மாசம் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களாம் சார்”

“என்னது, கல்யாணமா? அதான் கழுத்தை மறைச்சிக் கிட்டே நின்னாளா?“

“கூட வந்தப் பையன் தான் மாப்பிள்ளையாம் சார். ஏதோ சொத்து பிரியக் கூடாதுன்னு சொந்தத்துல கல்யாணம் செஞ்சி வச்சிட்டாங்களாம் சார்”

“என்னம்மா சொல்றீங்க?”

     “ஆமாம் சார், அவ மாமாவ அனுப்பிட்டு இவ்வளவு நேரம் என்னைக் கட்டிக்கிட்டு அழுதுட்டு போறா சார். இத உங்கக் கிட்ட கொடுக்க சொன்னா சார்”

     வெள்ளை பேப்பர் போட்டு பேக் செய்யப் பட்டிருந்த பார்சலை பிரித்த போது “நந்தினி ஐ.ஏ.எஸ்“ புத்தகம் எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரித்தது.

      

     .  

Wednesday, October 7, 2020

கி.ரா வின் ருசியான கதைகள்

 புத்தகம்– ருசியான கதைகள்

ஆசிரியர்– கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் அவர்களின் படைப்புகளில் நான் முதலில் வாசித்தது ”கோபல்ல கிராமம்” அந்த நாவலின் நடையானது நமது தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்கும் ஒரு அலாதியான அனுபவத்தை தந்தது. அதற்கடுத்தாற்போல வந்த அரியலூர் புத்தக கண்காட்சியில் கிடைத்த அவரது படைப்புகள் அனைத்தையும் வாங்கி விட்டேன்.

கிராமங்களில் வளர்ந்த சிறுவர்களுக்கு பெரியவர்களிடம் கதை கேட்ட அனுபவம் நிச்சயமாக இருக்கும். நிலாக் காயும் பௌர்ணமி நாட்களில் வாசலில் சிறுவர்களாக படுத்துக் கொண்டு கதைகளை கேட்டதுண்டா? அந்த கதைகளில் ஏராளமான பகடிகளும் சோகங்களும் அரிதாக சில ஃபீல் குட் கதைகளும் அடங்கும். கதைகளின் முடிவில் “வாழ்ந்தாங்களாம் வாழ்ந்தாங்களாம் வாழமரத்தில சாஞ்சாங்களாம்” அல்லது “அவங்களுக்கு கல்யாணம் ஆச்சாம் நான் அங்கே சாப்பிட்டேனாம் நீ எல எடுத்தியாம்” என்பது போல முடிக்கும் போது புன்முறுவலுடனோ சிரிப்புடனோ முடிவது அவ்வளவு அற்புதமான அனுபவம். இந்த உணர்வுகளை எனக்கு மீண்டும் ஞாபகப் படுத்தியது கி.ரா அவர்களின் கதைகளே.

”வயது வந்தோர்களுக்கு மட்டும்” என்று ஒரு சிறுகதை தொகுப்பு உண்டு. முழுக்க முழுக்க பாலியல் சார்ந்த கதைகள் செவ்வியல் தன்மையோடும் இடக்கரடக்கலான வார்த்தைகளாலும் வார்க்கப்பட்டிருக்கும். தற்போது கூட அவரது 99 வது பிறந்த நாள் அன்று செய்தியில் பார்த்தேன். இதே போல மற்றொரு தொகுப்பை கையெழுத்து பிரதியாக தயார் செய்துள்ளார் என்று கூறியிருந்தார்கள். அந்த தொகுப்பில் உள்ள கதைகளை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். (ஹி…ஹி…). அதன் பிறகு அந்தப் புத்தகத்தைப் பற்றி நண்பர்களிடம் உதாரணங்களோடு சிலாகித்து பேசிய அன்று அந்தப் புத்தகம் இரவல் சென்றது தான் இன்னும் வீடு திரும்பவில்லை. (அதற்கு முன்பும் பல புத்தகங்கள் பற்றி பேசியிருக்கிறேன் ஒரு புத்தகமும் நகர வில்லை ஆனால் இது மட்டும்….)

வயது வந்தோருக்கு மட்டும் என்ற தொகுப்பில் இருந்து ஒரு கதை இந்த நூலிலும் இடம் பெற்றிருக்கிறது.

அதிதீவிர ஜோசிய சிகாமணி ஒருவன் தனக்கான சாந்தி முகூர்த்தத்தை மிக நுணுக்கமாக கணிப்பான். அதாவது ஆவணி இரண்டாம் தேதி நடுயாமத்தில் “அது“ வைத்துக் கொண்டால் உண்டாகும் பிள்ளை உலகாளும் சக்கரவர்த்தி ஆவான் என்பது அவனது கணிப்பு. அந்த நாளுக்கு ஒரு நாள் முன்பு அரசவையில் இருந்து இவனுக்கு ஜோசியம் கணிக்க அழைப்பு வரும். ஆகா ஜோசியம் அட்வான்ஸா பலிக்குதே என்று ஆற்றைக் கடந்து போவான்.

கெடுவாய்ப்பாக அடுத்த நாள் மழை பொத்துக் கொண்டு ஊற்றும். பரிசல் வர இயலா நிலை. இவனது தவிப்பை வெளியில் சொல்லாமல் மாலை வரைக் காத்திருக்கிறான் நீர் வடிந்தபாடில்லை. “ச்சே இப்படி ஆகிப் போச்சே“ என்று வருந்தும் வேளையில் ஒரு பெரியவர் வந்து கேட்க இவன் உண்மையை கூறுகிறான். கவலைப் படாதே இன்று என்பேத்தி பெரியவளாய் ஆகி இருக்கிறாள் அவளுக்கு மஞ்சள் கயிறைக் கட்டி மனைவியாக்கிக் கொண்டு இன்று உன்னுடைய ஜோசிய பலனை அடைந்து விடு என்கிறார். எல்லாம் முடிந்து அறைக்குள் போனால் அந்தச் சிறுமி கூச்சத்தில் துள்ளி ஓடுகிறாள். “அந்த“ நேரமும் முடிந்து விடுகிறது. இவனால் அவளை கட்டுக்குள் கொண்டு வந்து “வேலை“யை முடிக்க இயலவில்லை.

சரி நமக்கு வாய்த்தது அவ்வளவு தான் என்று ஏமாற்றத்தோடு தம்பதி சமேதராக வீடு திரும்பும் அவனை அவனது மனைவி “ஜோசிய பலனை நீங்கள் இல்லாமலே வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டேன்“ என்று உற்சாகமாக கூறி வரவேற்கிறாள். இங்கே பாலியல் கதையை வார்த்தைகளில் பெரிதாக வடிக்காவிட்டாலும் அந்த இடைவெளிகளை நமது கற்பனை நிரப்பி விடுவதே இம்மாதிரிக் கதைகளின் வெற்றி.

தொகுப்பின் முதல் கதை ”தேள்கடி”. இதுவும் கூட ஒரு திருப்பத்தோடு முடியும் நகைச்சுவையான கதைதான். தேள்கடி மந்திரத்தை பிறருக்கு கற்றுத்தர மாட்டார்கள் அல்லவா. இறக்கும் தருவாயில் நம்பிக்கைக்கு உரியவருக்கு மட்டும் கற்றுத் தந்து செல்வார்களாம். அதனை தெரிந்து கொள்ள செய்யும் குயுக்தியும் தெரிந்த பின்பு வரும் வெடிச்சிரிப்புமே அந்தக் கதை.

சாதிமாறி வயதான ஒரு பிரம்மச்சாரி பெரியவரோடு காதலில் விழும்  தனது மகளை வேண்டாம் என்று நாசூக்காக தடுக்கும் தந்தையைப் பற்றிய கதைதான் ஒடுக்கம். இந்தக் கதையில் வரும் ”பனங்கருக்கு”(பனை மட்டையின் தண்டுப் பகுதியில் இருபுறமும் இருக்கும் ரம்பத்தின் பற்கள் போன்ற அமைப்பு) கொண்டு அரிவாள் போல ஆலம் விழுதை அறுத்து பல் துலக்கப் பயன்படுத்துவதை வாசித்த போது “அட“ என்று இருந்தது. அடுத்து பதனி சாப்பிடுவது, பனை ஓலையால் செய்த வாளி என்று பழைய விஷயங்களை நமது கற்பனையில் காட்சிகளாக விரிய விடுவார்.

“பொம்மைகளும் கிளர்ந்து எழும்“ என்கிற கதையில் கன்னிகழியா இளம் விதவைகளின் பாலியல் உணர்வுகள் புறக்கணிக்கப்படுவது குறித்து கவலைப் பட்டிருப்பார்.

”ஜடை” என்கிற கதையில் தன் மீது ஆசைப்படும் அத்தை மகன் மற்றும் மாமன் மகன் யாரையாவது ஒருவரைத் தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்கிற நிலை. அத்தை மகனோடு திருமணம் நடத்தி வைத்து விடுகிறார்கள். ஆனால் மாமன் மகனோ மிகுந்த ஏமாற்றம் அடைகிறான். அவனது ஏமாற்றத்தை தாங்காமல் அவனுக்கும் தனது அன்பை பகிர்ந்து கொடுக்கிறாள். மாமன் மகனும் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் அவளுடனே திருமணத்திற்கு வெளியேயான உறவைத் தொடர்வதாக முடித்திருப்பார்.

மொட்டைமலை என்கிற கதையில் தங்கைக்காக வாழும் பாவப்பட்ட அக்கா ஒருத்தி தங்கையாலேயே அவமானப் படுத்தப் படும் போது பொங்கி எழுந்து மண்ணை அள்ளி விடுவதால் ஏற்பட்ட மலைதான் அந்த மொட்டை மலை என்பார். இந்தக் கதை நமது கண்களை கசியச் செய்யும்.

“ஆடிக்கு அழைக்காத மாமனாரை

தேடிப்பிடித்து செருப்பாலேயே அடி” என்கிற அதிர்ச்சிகரமான சொலவடையோடு ஆரம்பிக்கும் ஒரு நகைச்சுவைக் கதை தான் “ஆத்தாடியோவ்”. ஆடி மாதம் விடாப்பிடியாக மனைவியை பார்க்க வந்த மருமகனை கோவிலில் படுக்க வைத்து விடுவார்கள். மனைவியோ மாலைக்கண் அம்மாவோடு “வெளிக்கி“ இருப்பதாக வந்து கோவில் அருகிலேயே கணவனைக் “கண்டுகொண்டு“ செல்வதாக முடிப்பார்.

எல்லா கதைகளையும் பதிவில் சொல்லிவிட இயலாது. அப்படியே சொன்னாலும் அந்த வாசிப்பு சுவையை இங்கே பகிர்ந்து விடத்தான் இயலுமா என்ன? எனவே நண்பர்களே கி.ரா வின் படைப்புகளை வாசியுங்கள். கிராமத்தில் பிறந்து வளர்ந்தோர் தங்கள் பால்ய கால இன்ப நினைவுகளை மீட்டிப் பார்க்க இயலும். நகரங்களில் பிறந்து வளர்ந்தோர் கிராம வாழ்வின் ரம்மியமான சூழலை எழுத்தின் வழி தரிசிக்க இயலும்.

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...