Wednesday, October 7, 2020

கி.ரா வின் ருசியான கதைகள்

 புத்தகம்– ருசியான கதைகள்

ஆசிரியர்– கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் அவர்களின் படைப்புகளில் நான் முதலில் வாசித்தது ”கோபல்ல கிராமம்” அந்த நாவலின் நடையானது நமது தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்கும் ஒரு அலாதியான அனுபவத்தை தந்தது. அதற்கடுத்தாற்போல வந்த அரியலூர் புத்தக கண்காட்சியில் கிடைத்த அவரது படைப்புகள் அனைத்தையும் வாங்கி விட்டேன்.

கிராமங்களில் வளர்ந்த சிறுவர்களுக்கு பெரியவர்களிடம் கதை கேட்ட அனுபவம் நிச்சயமாக இருக்கும். நிலாக் காயும் பௌர்ணமி நாட்களில் வாசலில் சிறுவர்களாக படுத்துக் கொண்டு கதைகளை கேட்டதுண்டா? அந்த கதைகளில் ஏராளமான பகடிகளும் சோகங்களும் அரிதாக சில ஃபீல் குட் கதைகளும் அடங்கும். கதைகளின் முடிவில் “வாழ்ந்தாங்களாம் வாழ்ந்தாங்களாம் வாழமரத்தில சாஞ்சாங்களாம்” அல்லது “அவங்களுக்கு கல்யாணம் ஆச்சாம் நான் அங்கே சாப்பிட்டேனாம் நீ எல எடுத்தியாம்” என்பது போல முடிக்கும் போது புன்முறுவலுடனோ சிரிப்புடனோ முடிவது அவ்வளவு அற்புதமான அனுபவம். இந்த உணர்வுகளை எனக்கு மீண்டும் ஞாபகப் படுத்தியது கி.ரா அவர்களின் கதைகளே.

”வயது வந்தோர்களுக்கு மட்டும்” என்று ஒரு சிறுகதை தொகுப்பு உண்டு. முழுக்க முழுக்க பாலியல் சார்ந்த கதைகள் செவ்வியல் தன்மையோடும் இடக்கரடக்கலான வார்த்தைகளாலும் வார்க்கப்பட்டிருக்கும். தற்போது கூட அவரது 99 வது பிறந்த நாள் அன்று செய்தியில் பார்த்தேன். இதே போல மற்றொரு தொகுப்பை கையெழுத்து பிரதியாக தயார் செய்துள்ளார் என்று கூறியிருந்தார்கள். அந்த தொகுப்பில் உள்ள கதைகளை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். (ஹி…ஹி…). அதன் பிறகு அந்தப் புத்தகத்தைப் பற்றி நண்பர்களிடம் உதாரணங்களோடு சிலாகித்து பேசிய அன்று அந்தப் புத்தகம் இரவல் சென்றது தான் இன்னும் வீடு திரும்பவில்லை. (அதற்கு முன்பும் பல புத்தகங்கள் பற்றி பேசியிருக்கிறேன் ஒரு புத்தகமும் நகர வில்லை ஆனால் இது மட்டும்….)

வயது வந்தோருக்கு மட்டும் என்ற தொகுப்பில் இருந்து ஒரு கதை இந்த நூலிலும் இடம் பெற்றிருக்கிறது.

அதிதீவிர ஜோசிய சிகாமணி ஒருவன் தனக்கான சாந்தி முகூர்த்தத்தை மிக நுணுக்கமாக கணிப்பான். அதாவது ஆவணி இரண்டாம் தேதி நடுயாமத்தில் “அது“ வைத்துக் கொண்டால் உண்டாகும் பிள்ளை உலகாளும் சக்கரவர்த்தி ஆவான் என்பது அவனது கணிப்பு. அந்த நாளுக்கு ஒரு நாள் முன்பு அரசவையில் இருந்து இவனுக்கு ஜோசியம் கணிக்க அழைப்பு வரும். ஆகா ஜோசியம் அட்வான்ஸா பலிக்குதே என்று ஆற்றைக் கடந்து போவான்.

கெடுவாய்ப்பாக அடுத்த நாள் மழை பொத்துக் கொண்டு ஊற்றும். பரிசல் வர இயலா நிலை. இவனது தவிப்பை வெளியில் சொல்லாமல் மாலை வரைக் காத்திருக்கிறான் நீர் வடிந்தபாடில்லை. “ச்சே இப்படி ஆகிப் போச்சே“ என்று வருந்தும் வேளையில் ஒரு பெரியவர் வந்து கேட்க இவன் உண்மையை கூறுகிறான். கவலைப் படாதே இன்று என்பேத்தி பெரியவளாய் ஆகி இருக்கிறாள் அவளுக்கு மஞ்சள் கயிறைக் கட்டி மனைவியாக்கிக் கொண்டு இன்று உன்னுடைய ஜோசிய பலனை அடைந்து விடு என்கிறார். எல்லாம் முடிந்து அறைக்குள் போனால் அந்தச் சிறுமி கூச்சத்தில் துள்ளி ஓடுகிறாள். “அந்த“ நேரமும் முடிந்து விடுகிறது. இவனால் அவளை கட்டுக்குள் கொண்டு வந்து “வேலை“யை முடிக்க இயலவில்லை.

சரி நமக்கு வாய்த்தது அவ்வளவு தான் என்று ஏமாற்றத்தோடு தம்பதி சமேதராக வீடு திரும்பும் அவனை அவனது மனைவி “ஜோசிய பலனை நீங்கள் இல்லாமலே வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டேன்“ என்று உற்சாகமாக கூறி வரவேற்கிறாள். இங்கே பாலியல் கதையை வார்த்தைகளில் பெரிதாக வடிக்காவிட்டாலும் அந்த இடைவெளிகளை நமது கற்பனை நிரப்பி விடுவதே இம்மாதிரிக் கதைகளின் வெற்றி.

தொகுப்பின் முதல் கதை ”தேள்கடி”. இதுவும் கூட ஒரு திருப்பத்தோடு முடியும் நகைச்சுவையான கதைதான். தேள்கடி மந்திரத்தை பிறருக்கு கற்றுத்தர மாட்டார்கள் அல்லவா. இறக்கும் தருவாயில் நம்பிக்கைக்கு உரியவருக்கு மட்டும் கற்றுத் தந்து செல்வார்களாம். அதனை தெரிந்து கொள்ள செய்யும் குயுக்தியும் தெரிந்த பின்பு வரும் வெடிச்சிரிப்புமே அந்தக் கதை.

சாதிமாறி வயதான ஒரு பிரம்மச்சாரி பெரியவரோடு காதலில் விழும்  தனது மகளை வேண்டாம் என்று நாசூக்காக தடுக்கும் தந்தையைப் பற்றிய கதைதான் ஒடுக்கம். இந்தக் கதையில் வரும் ”பனங்கருக்கு”(பனை மட்டையின் தண்டுப் பகுதியில் இருபுறமும் இருக்கும் ரம்பத்தின் பற்கள் போன்ற அமைப்பு) கொண்டு அரிவாள் போல ஆலம் விழுதை அறுத்து பல் துலக்கப் பயன்படுத்துவதை வாசித்த போது “அட“ என்று இருந்தது. அடுத்து பதனி சாப்பிடுவது, பனை ஓலையால் செய்த வாளி என்று பழைய விஷயங்களை நமது கற்பனையில் காட்சிகளாக விரிய விடுவார்.

“பொம்மைகளும் கிளர்ந்து எழும்“ என்கிற கதையில் கன்னிகழியா இளம் விதவைகளின் பாலியல் உணர்வுகள் புறக்கணிக்கப்படுவது குறித்து கவலைப் பட்டிருப்பார்.

”ஜடை” என்கிற கதையில் தன் மீது ஆசைப்படும் அத்தை மகன் மற்றும் மாமன் மகன் யாரையாவது ஒருவரைத் தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்கிற நிலை. அத்தை மகனோடு திருமணம் நடத்தி வைத்து விடுகிறார்கள். ஆனால் மாமன் மகனோ மிகுந்த ஏமாற்றம் அடைகிறான். அவனது ஏமாற்றத்தை தாங்காமல் அவனுக்கும் தனது அன்பை பகிர்ந்து கொடுக்கிறாள். மாமன் மகனும் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் அவளுடனே திருமணத்திற்கு வெளியேயான உறவைத் தொடர்வதாக முடித்திருப்பார்.

மொட்டைமலை என்கிற கதையில் தங்கைக்காக வாழும் பாவப்பட்ட அக்கா ஒருத்தி தங்கையாலேயே அவமானப் படுத்தப் படும் போது பொங்கி எழுந்து மண்ணை அள்ளி விடுவதால் ஏற்பட்ட மலைதான் அந்த மொட்டை மலை என்பார். இந்தக் கதை நமது கண்களை கசியச் செய்யும்.

“ஆடிக்கு அழைக்காத மாமனாரை

தேடிப்பிடித்து செருப்பாலேயே அடி” என்கிற அதிர்ச்சிகரமான சொலவடையோடு ஆரம்பிக்கும் ஒரு நகைச்சுவைக் கதை தான் “ஆத்தாடியோவ்”. ஆடி மாதம் விடாப்பிடியாக மனைவியை பார்க்க வந்த மருமகனை கோவிலில் படுக்க வைத்து விடுவார்கள். மனைவியோ மாலைக்கண் அம்மாவோடு “வெளிக்கி“ இருப்பதாக வந்து கோவில் அருகிலேயே கணவனைக் “கண்டுகொண்டு“ செல்வதாக முடிப்பார்.

எல்லா கதைகளையும் பதிவில் சொல்லிவிட இயலாது. அப்படியே சொன்னாலும் அந்த வாசிப்பு சுவையை இங்கே பகிர்ந்து விடத்தான் இயலுமா என்ன? எனவே நண்பர்களே கி.ரா வின் படைப்புகளை வாசியுங்கள். கிராமத்தில் பிறந்து வளர்ந்தோர் தங்கள் பால்ய கால இன்ப நினைவுகளை மீட்டிப் பார்க்க இயலும். நகரங்களில் பிறந்து வளர்ந்தோர் கிராம வாழ்வின் ரம்மியமான சூழலை எழுத்தின் வழி தரிசிக்க இயலும்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...