Wednesday, September 30, 2020

புத்தகம் – குழந்தைகளின் நூறு மொழிகள்


 

புத்தகம் – குழந்தைகளின் நூறு மொழிகள்

ஆசிரியர் – ச.மாடசாமி

பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்

வகைமை – கல்வி சார்ந்த கட்டுரைகள்

சுதந்திரமான வகுப்பறைகள் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர் தான் தோழர் ச.மாடசாமி அவர்கள். ஆசிரியர் அவர்கள் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றியவர். மேலும் அறிவொளி இயக்கத்திலும் மிக முக்கிய களப்பணி ஆற்றி அந்த திட்டம் மற்ற மாநிலங்கள் மூக்கில் விரல் வைக்கும் வண்ணமாக மகத்தான வெற்றியை பெறக் காரணமாக இருந்தவர். அவரது பெரும்பாலான கல்விசார் கட்டுரைகளில் அறிவொளி இயக்கத்தில் கற்ற அனுபவப்பாடங்கள் அங்கங்கே வெளிப்படும்.

எனக்குள்ளும் கற்பித்தல் குறித்த எண்ணங்களில் மிகப் பெரிய மாற்றங்களை விதைத்தது அவரது பிரபலமான கட்டுரைத் தொகுப்பான “எனது சிவப்பு பால் பாய்ண்ட் பேனா”. சென்ற ஆண்டு நிஷ்த்தா பயிற்சியின் போது ஆசிரியர்கள் மத்தியில் புதிதாக பேச நிறைய விஷயம் கிடைக்க ஆசிரியரது அன்பென்பது தந்திரம் அல்ல, எனது சிவப்பு பால் பாய்ண்ட் பேனா போன்ற நூல்கள்தான் காரணம். (நமது குழுவில் ஏற்கனவே பதிவுகள் எழுதியுள்ளேன்.)

புத்தகத் தலைப்பான குழந்தைகளின் நூறுமொழிகள் என்பது தான் முதல் கட்டுரை.

ஒரு மருத்துவர் தேன் உண்பதால் ஏற்பவடும் விளைவுகளைத் தெரிந்து கொள்வது கற்றல்தான்.

தேன் – யாருக்கு? எவ்வளவு? எப்போது? என்ற நுட்பங்களை எட்டினால் தான் அவர் புரிந்து கொண்ட மருத்துவர் – என்கிற அரிஸ்டாட்டிலின் வார்த்தைகளில் தான் துவங்குகிறார். கற்றலுக்கும் புரிந்துகொள்வதற்குமான நுட்பம் விளங்கினால் தானே நல்ல புரிந்து கொண்ட மாணவர்களை உருவாக்க முடியும்.

ரெக்கியோ எமிலியா அனுகுமுறை என்ற ஒன்றை அறிமுகப் படுத்துகிறார். இத்தாலியில் உள்ள ரெக்கியோ என்கிற இடத்தில் இரண்டாம் உலகப் போரின் இறுதிகாலகட்டத்தில் இந்தப் பள்ளி 1945 ல் துவங்கப்பட்டுள்ளது.

இந்த முறையில் அனுபவம் மூலமாக மாணவர்கள் கற்றுக் கொள்ள துணைபுரிபவர் தான் ஆசிரியர். இது மாண்டிசோரியை ஒத்த முறை என்கிறார். நெகிழ்வுதன்மை உடைய பாடத்திட்டம், கூட்டாகச் செய்யும் ஆய்வுத் திட்டம் மற்றும் ஆவணப் படுத்துதல் என மாணவர்கள் மிக அழகாகவும் ஆர்வமுடனும் தானே செய்கிறார்கள். ”பூ எப்படி பூக்கிறது?” என்று குழந்தைகள் கேட்டால் அதற்கான பதில் வகுப்பறையிலா தோட்டத்திலா என்பதில் இருக்கிறது இந்த முறையின்  சூட்சுமம்.

பூனை நரிக்கதை தெரியுமா உங்களுக்கு. பல தந்திரங்களைக் கற்று வைத்திருக்கும் நரியும் ஒற்றை தந்திரம் கற்ற பூனையும் நண்பர்கள். ஒரு முறை வேட்டைக்காரர்களிடம் சிக்கியபோது நரி கற்ற அத்தனை தந்திரத்தையும் முயன்று தோற்று உயிரை விடுகிறது. ஆனால் பூனையோ தான் கற்ற மரம் ஏறுதல் என்கிற ஒற்றைத் தந்திரத்தால் பிழைக்கிறது. என்று முடிக்கிறார்கள். மரத்தில் ஏறிய பூனை மலைப் பாம்பிடம் மாட்டிக் கொண்டால் என்னாவது என்று யாரேனும் ஒரு சுட்டிப் பயல் கேட்கும் வரை தப்பித்தோம்.

“வனத்தில திரிஞ்சாலும் இனத்தில் வந்து அடை” என்பது போல என்னதான் பல விஷயங்களை கற்றாலும் தேர்வு என்கிற ஒற்றைத் திறனில் கற்ற வித்தையை மொத்தமாக இறக்கி வைப்பதில் தானே நமது குழந்தைகளின் திறமைகளை மதிப்பிடுகிறோம்.

“உலகெங்கும் பள்ளித் தேர்வுகள் இளக்கம் பெற்று வரும் வேளையில் இந்தியாவிலி தேர்வுமுறை மென்மேலும் இறுகி வருகிறது” என்று ஆசிரியர் கூறுவது எவ்வளவு பொருத்தமாக உள்ளது.

ஆளுக்கொரு கிணறு என்கிற ஒரு கட்டுரையில் பச்சையம்மாள் என்கிற ஒரு பேராசியரியர் குறித்து பேசுகிறார். வேலைக்கு சேர்ந்த அன்று “ஏம்மா, ஏதாவது ஒரு வகுப்புக்கு போய் எதையாவது நடத்துங்கம்மா” என்று துறைத்தலைவர் கூற “அப்படி எல்லாம் செய்ய முடியாது சார், எனக்குன்னு வகுப்பு ஒதுக்கினால் போகிறேன்“ என்றிருக்கிறார் தடாலடியாக. இங்கிருந்து Refusal skill குறித்தும் பேசுகிறார். உண்மைதானே எப்போதும் தலையாட்டும் பொம்மைகளாகவே இல்லாமல் அவசியம் உள்ள சூழலில் மறுத்துப் பேசும் தைரியம் வேண்டும் அல்லவா? அது குறித்தும் கூட வகுப்பறைகளில் போதிக்க வேண்டும்.

அழுக்கடைந்த இடத்தை மாணவிகளை விடுத்து பேராசியரியர் பச்சையம்மாளே துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்வது.

விளாயாட்டு விழாவுக்கு சுடிதாரில் வருவது (90 களில்) என்றெல்லாம் புதுமையாக இருக்கும் பேராசிரியர்

“பசங்க எப்போ பாத்தாலும் தொத்திக்கிட்டே திரிகிறார்கள்“ என்று சக பேராசியரியர்கள் சீண்டியதற்கு கொதித்துப் போய் அழுகிறார். பிறகு ”கணினித்துறையில் உள்ள பேராசிரியர்கள் (எம்.இ முடித்த இளம் பொறியாளர்கள்) ஆணும் பெண்ணுமாக என்னமா கூத்தடிக்கிறார்கள்” என்று தனக்குள் இருக்கும் கிணற்றை வெளிப்படுத்துகிறார். இறுதியில் நூலாசிரியர் ’எனக்குள் இருக்கும் கிணறு என்னவென்று தேடவேண்டும்’ என்று கூறி முடிக்கிறார்.

முற்போக்கு பேசித்திரியும் பலபேரிடம் ஏதாவது பிற்போக்குத்தனம் ஒட்டிக் கொண்டே இருக்கிறது என்பது தான் இந்தக் கட்டுரையின் சாரம்.

“சார்“ ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்,

அனுப்பினேன்.

“சார்“

உடனே மற்றொருவன்

அதட்டினேன்

நொடிகள் நகர

உள்ளேயே ஈரம்

வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது

என் அதிகாரம்” –பழ.புகழேந்தி “கரும்பலகையில் எழுதாதவை”

இந்த கவிதையை முன்வைத்து வகுப்பறை அதிகாரம் குறித்த சுதந்திரமான ஒரு விவாதத்தை தொடங்கியது குறித்து கூறியுள்ளார்.

பயம் நாற்றத்துக்கு காரணமாகிறது. எதிராகப் பாயும் விமர்சனங்களைப் பதற்றம் இல்லாமல் சந்திக்கும் பக்குவப்பட்ட ஆசிரிய மனம் வகுப்பறையின் நறுமணத்திற்கு உத்திரவாதம் என்று அந்தக் கட்டுரையை முத்தாய்ப்பாக முடிக்கிறார்.

காந்தியார் வகுப்பறை என்கிற கட்டுரையில் பல புதிய தகவல்கள் கிடைத்தன. காந்தி போற்றிய சிந்தனையாளர் டால்ஸ்டாய்.

தரம் ஒழுக்கம் – ராணுவக் கட்டுப்பாடு, நிறுவன விதிகள் பாடச்சுமை, பயம் உண்டாக்கும் தேர்வுகள், பரிசு, தண்டனை, ரேங்க் வழங்கி தரம் பிரித்தல் பன்முகங்களை அழித்து பள்ளிக்குப் பொருந்தும் ஒற்றை முகத்தை பிசைந்து வடித்தல் என்று ஸ்டீரியோடைப்பாக இருக்கும் கல்விமுறையில் “குழந்தைகளின் சுதந்திரம் கற்பனைத்திறன்“ என்ற கருத்துக்களை முன்வைத்து உருவாகும் டால்ஸ்டாயின் பள்ளியில் கற்பித்தல் – உரையாடல் ஆகிறது. கல்வியின் அடித்தளம் அனுபவம் ஆகிறது. கற்பதற்கான வழி சுதந்திரம் என்றாகிறது.

1859  ல் தொடங்கிய டால்ஸ்டாயின் பள்ளி இரண்டரை ஆண்டுகள் செயல்பட்டு பிறகு ஜார் மன்னரால் தடை செய்யப்பட்டது.

எப்போதும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்க்கும் காந்தியார் கூட பள்ளிக் கல்லூரிகள் குறித்து “அடிமைக் கோட்டைகள்“ என்று கூறியிருக்கிறார். (1920 இந்தியாவில்)

தென் ஆப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணையில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் நடத்திய அனுபவம் காந்திக்கு உண்டு. ஆம், அங்கே உள்ள குழந்தைகளுக்கு “தமிழ்“ பாடம் நடத்தி இருக்கிறார். அதற்கு “ஜி.யு.போப்“ அவர்களின் நூலைப் பயன்படுத்தினாராம்.

காந்தியார் அவர்கள் வலியுறுத்திய கல்விமுறை “உடலுழைப்போடு கூடிய கல்வி“ ஆகும்.

அகங்காரத்தமிழ் என்கிற கட்டுரையில் நான் “அட ஆமாம்ல?” என்று வியந்த விஷயம் உள்ளது.

”திணிப்பது தான் கல்வி” “கடினமாக இருப்பது தான் தரம்“ என்று நீட்டைப் பற்றி நீட்டிப் பேசும் காலம் இது. புத்தக வடிவமைப்பில் குழந்தைகளின் கை பிடித்து இழுத்து பக்கத்தில் அமர்த்தும் வண்ணமாக புத்தகம் இருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை புத்தகத்தைக் கண்டால் பயலுக பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் எடுப்பது ஏன்.

முதல் வகுப்பில் ஆத்திச் சூடி தேவையா? என்று ஒரு அரங்கில் ஆசிரியர் கேட்டபோது அனைவரும் “வேண்டும் வேண்டும்” என கோரஸ் பாடியுள்ளார்கள். அத்தோடு நில்லாமல் அறத்தை எளிமையாக குழந்தைகளிடம் சேர்க்க இதை விட்டா வேறு கதி என்ன சார்? என்று கேட்டுள்ளார்கள்.

“இயல்வது கரவேல்” என்பதில் “கரவேல்“ என்பதன் அர்த்தம் யாதோ?

”உடையது விளம்பேல்” என்பதில் விளம்பேல் என்பதன் அர்த்தம் என்ன?

இதேபோல் ஙப்போல் வளை என்பதன் பொருள்

”தையல் சொல் கேளேல்”(பொம்பள பேச்ச கேக்காதீங்கப்பா) என்பது சரியான அறம் என்று நினைக்கிறீர்களா?

முதல் மூன்று ஆத்தீ“சூடி“களுக்கு ஆசிரியர்களுக்கே அர்த்தம் சற்று கடினமாகத்தான் இருந்ததாம். அந்த கடைசி சூடி எல்லாம் இப்போ பொருத்தமற்றது என்பதை குழந்தைகளும் அறியும்.

இறுதியாக “தோல்வியின் நிழல்களாக வரும் பயம் , குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற மனக்குழப்பங்களில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதைத் தலையாய கடமையாக பல நாடுகளின் பள்ளிகள் ஏற்றுள்ளன. ஆனால் நாம்…..????”

தேர்வு மைய வகுப்பறைகள் மாணவர் மைய வகுப்பறையாக மாறும் போது தான் கற்றலில் இனிமை கைகூடும் என்பதே தோழர் ச.மாடசாமி அவர்களின் இந்த நூலின் சாராம்சம்.

இங்கே நான் முழுமையாக எல்லாவற்றையும் கூறவில்லை, பள்ளிக் கல்வி சார்ந்தவைகளையும் என்னை ஈர்த்தவைகளையும் மட்டுமே கூறியுள்ளேன். ஆனால் புத்தகத்தில் இன்னும் சுவாரசியமான பயனுள்ள பல விஷயங்கள் உண்டு. வாசியுங்கள் நண்பர்களே.

 

 

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...