Friday, September 11, 2020

ஜனமைத்திரி– முழுநீள நகைச்சுவைப் படம் (கேப் விடாம சிரிக்கவைக்கிறாய்ங்கப்பா)

 

படம் – ஜனமைத்திரி


மொழி – மலையாளம்

வகைமை – முழுநீள நகைச்சுவைப் படம் (கேப் விடாம சிரிக்கவைக்கிறாய்ங்கப்பா)

வழக்கமாக இரவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விடியற்காலையை நெருங்கும் போது சற்று உறக்கம் தள்ள ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் விபத்துகளுக்கு வித்திடும் நேரம் அது தான். எனவே ஒரு ஜனமைத்திரி நாளில் மக்களிடம் இமேஜை உயர்த்திக் கொள்ள விடியற்காலையில் போலீஸ் காரர்கள் வாகன ஓட்டிகளுக்கு தேனீர் வழங்கி விபத்தை தடுக்கும் வகையில் ஒரு நல்லெண்ண நடவடிக்கையை எடுத்ததால் ஏற்பட்ட சுவாரசியமான விளைவுகள் தான் படம்.

காமெடிப் படங்களில் ”பிள்ளையார் பிடிக்க குரங்காய் போவது” தான் ஃபார்முலாவாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான்.

சம்யுக்தன் சிசிடிவி கேமரா மார்க்கெட்டிங் செய்பவர். ஆனால் முக்கி முக்கி முயற்சித்தும் ஒன்று கூட விற்கவில்லை. அம்புட்டு திறமையானவர். அவர் ஒரு நாள் இரவுப் பயணமாக கொச்சியில் இருந்து புறப்பட்டு வருகிறார். சரியாக விடியற்காலையில் பாரமேடு போலீஸ் நிலைய காவலர்கள் சப் இன்ஸ்பெக்டர் சிபு (இவரது தோரணையைப் பார்த்தாலே சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது) தலைமையில் நடத்தும் “ஒரு சாயாக்கு ஒரு ஜீவன்” திட்டத்தில் முதல் போணியாக சிக்குகிறார்.

போலீஸ்காரர் லாரன்ஸ் “அதோ முதல் இரை வருகிறது“ என்கிறார் அதற்கு சிபு,“இரை அல்ல அது ஒரு ஜீவன் வருகிறது” என்று திருத்தும் போதில் இருந்து ஆரம்பிக்கும் சிரிப்பு சரவெடி படம் முடியும் வரையில் தவுசண்ட் வாலாவாக தொடர்கிறது.

சம்யுக்தன் இரவு சாலையோர உணவகத்தில் வறுத்த சிக்கனோடு கூடிய இரவு உணவை ஒரு பிடிபிடித்து விட்டு வருகிறார். அவர் வேண்டாம் என்று கதறக் கதற விடாமல் அவரை அன்பால் இறுக்கி அணைத்து கட்டஞ்சாயாவும் பார்லே –ஜி பிஸ்கட்டும் கொடுத்து விடுகிறார்கள். சம்யுக்தனுக்கு வயிற்றுக்குள் உடனடியாக யுத்தப் பேரிகை முழங்க ஆரம்பிக்கிறது. அவர் தனது பரிதாபகரமான நிலையை கூறி உங்களால் தான் என்கிறார்.

ஜனமைத்திரி தினம் அல்லவா? எனவே அவரை அன்போடு கழிப்பறைக்கு அழைத்துச் செல்லவேண்டியது போலீஸ்காரர்களின் கடமையாகிறது. உடனடியாக அஷ்ரஃப் என்கிற கான்ஸ்டபிள் துணையோடு அருகில் தென்படும் வீடுகளில் கழிப்பறை பயன்படுத்திக் கொள்ள செல்கிறார்கள். சம்யுக்தனுக்கு எப்போது வேண்டுமானாலும் மடை திறந்து கொள்ளும் அளவுக்கு அவசரம்.

முதல் வீட்டில் அஷ்ரஃப் அனுமதிக் கேட்கிறார். வீட்டில் ஆண்கள் எவரும் இல்லை ஆதலால் முடியாது என கைவிரிக்கிறார்கள். சம்யுக்தன் அவஸ்தையில் நெளிகிறார். முடியாது என்ற பின்பும் அவர்களுடன் அரைமணிநேரம் கதையளக்கிறார் அஷரஃப்.

அடுத்த வீடு பூட்டியிருக்கிறது. அஷ்ரஃப் அசால்டாக காம்பவுண்ட் ஏறி குதித்து விடுகிறார். சம்யுக்தன் அப்படி ஏறினால் பொழப்பு நாறிடும் என்று தயங்கவே அவருக்கு கைகொடுத்து உதவுகிறார் அஷ்ரஃப். அந்த வீட்டில் ஒரு வழியாக அனுமதி கிடைக்கிறது. பிறகுதான் பெருமூச்சு விடுகிறார் சம்யுக்தன்.

திரும்பும் வழியில் ஒரு முகமூடித் திருடன் தென்படுகிறான். அவனை துரத்துகிறார்கள். அவன் ஒரு பேப்பர் காரனுடைய பைக்கை திருடிக் கொண்டு தப்பிக்கிறான். இதற்கிடையில் இவர்கள் கழிப்பறைச் சென்ற வீட்டில் மூன்று அண்ணன் தம்பி மார்கள் சேர்ந்து ஒரு காரை திருடிச் செல்கிறார்கள். அந்த வீட்டின் முகப்பில் இருந்த பூச்செடியையும் ஒடித்துச் சென்று விடுகிறார்கள்.

திருடிய பைக்கோடு முகமூடி அணிந்து வரும் திருடனை அன்போடு அழைத்து கட்டஞ்சாயா கொடுத்து வீடியோ எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறது எஸ்.ஐ சிபு குழு. அடுத்து வரும் கார் திருட்டுக் கும்பலையும் அன்போடு கட்டஞ்சாயா கொடுத்து உபசரித்து அனுப்புகிறது. அவர்கள் பிரதி உபகாரமாக ஒடித்து வந்த பூச்செடியை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க அதை பெருமிதமாக வீடியோ எடுத்து டிஎஸ்பிக்கு அனுப்புகிறார்கள். அவரோ “ஒரு சாயாக்கு ஒரு ஜீவன்” திட்டம் வெற்றி அடைந்ததாக என்னி புளகாங்கிதமடைந்து காவல்துறை முகநூல் பக்கத்தில் பகிர்கிறார்.

விடிந்தவுடன் கார்திருட்டுபோனது தெரிகிறது. நிருபர்குழு அந்த செய்தியை கவர் செய்கிறார்கள். அப்போது அதே காரில் சென்ற திருடர்கள் சிபு குழுவினருடன் தேனீர் அருந்தி அந்த வீட்டு பூச்செடியை அன்பளிப்பாக வழங்கிய வீடியோவை காணுகிறார்கள். அவ்வளவு தான் காவல்துறை பிடித்த பிள்ளையார் குரங்காகிப் போனதை எண்ணி பதறுகிறார்கள்.

சம்யுக்தன் அஷ்ரஃப் துரத்திச் சென்ற திருடனை பிடித்தார்களா?

கார்திருடர்கள் அகப்பட்டார்களா?

போலீஸ் இழந்த பெருமையை மீட்டார்களா?

அடுத்த நாள் காலை சம்யுக்தனுக்கு மற்றொரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அது என்ன?

என்பதை படத்தைப் பார்த்து சிரிக்க சிரிக்க தெரிந்து கொள்ளலாம்.

படம் அமேசான் ப்ரைமில் உள்ளது.

இரவு பனிரெண்டு மணிக்கு சத்தம் போட்டு சிரித்ததில் என் பையன் அருண் விழித்துக் கொண்டு என்னுடன் படம் பார்க்கத் துவங்கிவிட்டான். அவனும் விழுந்து விழுந்து சிரித்தான். என்னடா வென்றால், “அப்பா நீ சிரிக்கறதப் பாத்து தான்பா நான் சிரிக்கிறேன்” என்கிறான்.

 

 

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...